பேராசிரியர் முரளி அவர்களின் நூல்களை வாசித்துள்ளேன். அவருடைய காணொளிகளையும் பார்த்து வருகிறேன். அவர் தத்துவ வகுப்புகள் நடத்தவிருப்பதாக அறிந்தேன். அவருடைய காணொளிகளின் ரசிகன் என்னும் முறையில் என் வாழ்த்துக்கள். நான் நீண்டதொலைவில் இருக்கிறேன். வரும் வசதி உடையவர்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு.
கிருஷ்ணன் மணி
அன்புள்ள கிருஷ்ணன்,
பேராசிரியர் முரளி அவர்களின் காணொளிகள் பலநூறு மணி நேரத்திற்கு கேட்கக்கிடைக்கின்றன. அவற்றுக்கும் இந்த வகுப்புகளுக்கும் என்ன வேறுபாடு?
அந்த காணொளிகள் பொதுவான வாசகர்களுக்குரியவை. ஆகவே தொடக்கநிலை அறிமுகங்கள். ஒரு தலைப்பில் அதிகபட்சம் ஒரு மணிநேரம். ஒருமணிநேரம் ஒரு காணொளியை கேட்பது -பார்ப்பது என்பது ஒரு தத்துவத்தரப்பை புரிந்துகொள்ள போதுமானது அல்ல. அது ஒரு தொடக்கம் மட்டுமே.பலமுறை கேட்டாலொழிய நம்மால் புரிந்துகொள்ளவும் முடியாது.
இது நேர் வகுப்பு. அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட, இதன்பொருட்டே வந்து அமர்ந்திருக்கும், மாணவர்களிடம் இவ்வகுப்பை நடத்துகிறார். ஐரோப்பிய சிந்தனையின் மூன்று அடித்தளக்கற்கள் பற்றி தொடர்ச்சியாக 20 மணி நேரம் வரை வகுப்புகள் நிகழும். அதாவது ஒரு மாதகாலம் தொடர்ச்சியாக ஒரு மணிநேரம் காணொளிகள் பார்ப்பதற்குச் சமம். ஒரு தலைப்பில். அதை பக்க அளவில் எழுதினால் 500 பக்க நூலுக்கு சமம்.
தத்துவம் பயில்வது என்பது எல்லா சிந்தனைகளுக்கும் தேவையான அடிப்படைகளைப் பயில்வதுதான். அதிலும் மேலைத்தத்துவம் பயில்வது என்பது இன்று நாம் கற்கும் எல்லாவற்றுக்குமான ஆதாரக்கட்டமைப்பை, தர்க்கமுறையை அறிந்துகொள்வது. இன்று இவற்றை இப்படிக் கற்றுக்கொள்ள இன்னொரு இடமோ அமைப்போ தமிழகத்தில் இல்லை.
சிந்தனைக்குச் சோம்பல்படுபவர்களே நம்மில் மிகுதி. ஆனாலும் ஆர்வம்கொண்ட சிலர் உண்டு என்பதே என் நம்பிக்கை. அவ்வகையில் இவ்வாய்ப்புகளை உருவாக்கி அளிக்கிறோம்
ஜெ
பேராசிரியர் முரளி நடத்தும் நேரடியான தத்துவ வகுப்புகள் அக்டோபர் 4,5 மற்றும் 6 (வெள்ளி சனி ஞாயிறு) தேதிகளில் நிகழவுள்ளன. ஆசிரியருடன் உடனமர்ந்து கற்றுக்கொள்ளும் வகுப்புகள் இவை.
இவ்வகுப்புகளில் மேலைத்தத்துவம் பற்றிய ஓர் ஒட்டுமொத்த அறிமுகத்துடன் , மேலைத்தத்துவத்தின் அடித்தளக்கற்களான சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடிலின் தத்துவங்கள் பற்றிய ஓர் அறிமுகத்தை அளிக்கவிருக்கிறார்.
ஆர்வமுள்ளவர்கள் இப்போதே விண்ணப்பிக்கலாம்
தொடர்புக்கு [email protected]