மரபின்மைந்தன் முத்தையா நடத்தும் தமிழ் மரபிலக்கியப் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன.அவற்றைப் பற்றி கேள்விகளும் எழுந்துகொண்டிருக்கின்றன. அவை ‘வகுப்புகள்’ என நிகழுமா? அவ்வாறு மரபிலக்கியத்தை பயிலமுடியுமா? பலருக்கு அவை கல்விநிலையங்களின் தமிழ் வகுப்புகளை நினைவூட்டுகின்றன.
(மரபின்மைந்தன் முத்தையா மரபிலக்கியப் பயிற்சி வகுப்புகள்:செப்டெம்பர் மாதம் 20 21மற்றும் 22 (வெள்ளி சனி ஞாயிறு) தொடர்புக்கு [email protected] )
இவை வகுப்புகள் அல்ல. நானும் முத்தையாவும் பேசிக்கொண்டிருக்கையில் டி.கே.சிதம்பரநாத முதலியாரின் வட்டத்தொட்டி என்னும் இலக்கிய நிகழ்வை நினைவுகூர்ந்தோம். மாதந்தோறும் இலக்கிய ஆர்வலர்கள் டி.கெ.சி வீட்டில் கூடி அமர்ந்து மரபிலக்கியத்தை வாசித்து ரசித்தனர். அவை இலக்கிய ரசனைக்கான வகுப்புகளாக அமைந்தன.
டி.கே.சி. செல்வந்தர் ஆகையால் வருபவர்களுக்கெல்லாம் உணவும் அளித்தார். ஆனால் அன்று அதற்கு மதுரை, தூத்துக்குடி என வேவ்வேறு ஊர்களில் இருந்து நீண்டதூரம் பயணம் செய்தெல்லாம் பங்கேற்பாளர் வந்தனர். டெல்லியில் இருந்து கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி வந்திருக்கிறார். சென்னையில் இருந்து நீதிபதி மகாராஜன், நீதிபதி மு.மு.இஸ்மாயீல், கல்கி ஆகியோர் வந்திருக்கிறார்கள். அந்த நிகழ்வு வழியாகவே தமிழில் மரபிலக்கியம் மீதான ரசனைப்பார்வை வேரூன்றியது.
அந்தவகையான ரசனையமர்வு இன்று நிகழமுடியுமா என்னும் உரையாடலின் விளைவே இந்தப் பயிற்சிகள். இவை மரபிலக்கியத்தை ரசிப்பதற்கான ஒரு முன்வடிவை அளிக்கும் நோக்கம் கொண்டவை. மரபிலக்கியத்தை இன்று நம் வாழ்வுடன் தொடர்புகொண்டுள்ள சில பாடல்கள் வழியாக அறியத்தொடங்குதலே சரியான வழி