அன்புள்ள ஜெ,
மரபிலக்கியம் பயில்வது பற்றிய உங்கள் அறிவிப்பைக் கண்டேன். மரபை நவீன முறையில் ரசிப்பது பற்றி எழுதியிருந்தீர்கள். திரு.மரபின்மைந்தன் முத்தையா அவர்கள் நடத்தும் வகுப்பைப் பற்றிய செய்தியையும் அறிந்தேன். உங்களுடைய சங்கசித்திரங்கள் நூலை வாசித்துள்ளேன்.
என் கேள்வி இதுதான். இப்படி நவீன வாசகனாக மரபிலக்கியத்தை வாசிப்பது சரியா? அது மரபிலக்கியத்தை பிழையாகப்புரிந்துகொள்வது ஆகாதா? மரபிலக்கியத்தை மரபான முறையிலேயே கற்றுக்கொள்வதுதானே சரியாக இருக்க முடியும்?
கந்த.கிருஷ்ணமூர்த்தி
மரபின்மைந்தன் முத்தையா நடத்தும் மரபிலக்கிய வகுப்புகள். செப்டெம்பர் மாதம் 20 21மற்றும் 22 (வெள்ளி சனி ஞாயிறு)
அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி,
மரபிலக்கியத்தை மரபான முறையில் வாசிப்பது என்று சொல்கிறீர்கள். அது என்ன? அப்படி ஒரு வாசிப்பே இல்லை. அவை எழுதப்பட்டபோது எப்படி வாசிக்கப்பட்டனவோ அப்படியே இப்போது வாசிப்பது என உத்தேசிக்கிறீர்கள் என்றால் அப்படி இன்று நம்மால் வாசிக்க முடியாது. நூறாண்டுகளுக்கு முன்பு அதை எப்படி வாசித்தார்களோ அப்படிக்கூட நம்மால் வாசிக்கமுடியாது. ஏனென்றால் நாம் வாழ்வது இந்தக் காலகட்டத்தில். இக்காலகட்டத்தின் வாழ்க்கைமுறை, இந்தக்காலகட்டத்தின் அறங்களும் நம்பிக்கைகளும், இக்கால மொழி நம்மை வடிவமைத்துள்ளது. இங்கு நின்றுகொண்டே நம்மால் வாசிக்கமுடியும். வேறு வழியே கிடையாது.
மரபான வாசிப்பு என பலர் சொல்வது சென்ற தலைமுறையினர் எப்படி வாசித்தார்களோ அதை அப்படியே தொடர்வது. சென்ற இரு தலைமுறைகளிலல்தான் மரபிலக்கியங்கள் அறிஞர்களால் மறுகண்டடைவு செய்யப்பட்டன. அவற்றில் பெரும்பகுதி அன்று முற்றிலும் புரிந்துகொள்ள முடியாத நூல்களாக இருந்தன. ஏனென்றால் தமிழிலக்கியத்தின் ஓட்டத்தில் அன்று ஒரு பெரிய விடுபடல், இடைவெளி உருவாகிவிட்டிருந்தது. அது வரலாற்றின் விளைவு. இரண்டு காரணங்கள் அதற்கு.
அ. பிற்காலச்சோழர், பாண்டியர் ஆட்சிக்காலத்தில் சைவ- வைணவப் பெருமதங்கள் ஓங்கின. சமண- பௌத்த மதங்கள் அழிந்தன. ஆகவே அந்த மதங்களின் நூல்கள் மெல்ல மெல்ல பயில்வாரின்றி ஆயின
ஆ. தமிழகத்தில் நாயக்கர், இஸ்லாமியர் என அயல்மொழியினர் ஆட்சி நடைபெற்ற இருநூறாண்டுகள் தமிழிலக்கியம் உரியமுறையில் பேணப்படவில்லை. சிறு நிலக்கிழார்களின் ஆதரவே எஞ்சியிருந்தது. ஆகவே பெருங்காப்பியங்கள் மெல்ல அழிந்தன. சமயநூல்களும், சிற்றிலக்கியங்களுமே எஞ்சின
இந்த இடைவெளியைக் கடந்து தமிழின் தொல்நூல்களை ஏட்டுச்சுவடிகளில் இருந்து மீட்டு அச்சேற்றுவதற்கு சி.வை.தாமோதரம் பிள்ளை, சௌரிப்பெருமாள் அரங்கன், உ.வே.சாமிநாதையர் போன்ற தமிழறிஞர்கள் பெருமுயற்சி எடுத்தனர். அவர்கள் அந்நூல்களுக்கு உரையெழுதினர். அக்காலகட்டம் மரபிலக்கியத்தை பொருளுணர்வதற்கான முயற்சிகளால் ஆனது. ஆகவே அந்தக்காலகட்ட அறிஞர்கள் அனைவருமே மரபிலக்கியத்தை பொழிப்புரை, பதவுரை,விருத்தியுரை என்னும் போக்கிலேயே அணுகியிருக்கிறார்கள்.
அந்தக் காலகட்டம் முடிந்துவிட்டது. தொன்மையான இலக்கியநூல்கள் ஏறத்தாழ முழுமையாகவே பொருளுணர்ந்து உரையெழுதப்பட்டு பதிப்பிக்கப்பட்டுவிட்டன. அவற்றை ரசிப்பதே அடுத்தகட்ட அறைகூவல். அதை அறிவித்தவர் முன்னோடியான டி.கே.சிதம்பரநாத முதலியார். கம்பராமாயணம், முத்தொள்ளாயிரம் உள்ளிட்ட நூல்களை ரசிப்பதற்கான ஒரு நவீனமனநிலையை அவர் உருவாக்கினார்.
டி.கே.சிதம்பரநாத முதலியாரின் மரபே கம்பராமாயணம் மீதான இன்றைய பார்வையை முழுமையாகவே உருவாக்கியது. எஸ். வையாபுரிப் பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை, மு. அருணாசலம் , வித்வான் கு.அருணாசலக் கவுண்டர், பி.ஸ்ரீ. ஆச்சார்யா, மீ.ப.சோமு,தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் , அ.சீனிவாசராகவன் என அவருடைய மரபினர் பலர். அவர்களே மேடைப்பேச்சு வழியாக நவீன நோக்கில் மரபிலக்கியத்தை ரசிக்கும் மனநிலையை பரப்பியவர்கள்.
இன்று இரண்டுவகை வாசிப்புகள் சாத்தியம். ஒன்று, ஆய்வு. இன்னொன்று, ரசனை. ஆய்வு என்பது பெரும்பாலும் கல்வித்துறை சார்ந்து இன்று நிகழ்கிறது. அதன் வழிமுறைகள் வேறு. இலக்கியத்தை வரலாற்றுக்கோணத்தில் ஆராயலாம். பண்பாட்டாய்வை நிகழ்த்தலாம். இலக்கண ஆய்வையோ ஒப்பிலக்கிய ஆய்வையோ மேலெடுக்கலாம்.
ரசனை என்பது முற்றிலும் இன்னொன்று. அரசனை என்பது வாழ்க்கையுடன் இலக்கியத்தை இணைத்துக்கொள்வதும், கற்பனையால் இலக்கியத்தை விரித்தெடுப்பதும், மெய்யான வாழ்க்கைக்கு நிகரான ஒரு அகவாழ்க்கையை கற்பனையால் அடைவதும்தான். எந்த இலக்கியமானாலும் நாம் செய்வது இதையே. நம்முடைய இன்றைய வாழ்க்கையுடன் மட்டுமே நம்மால் இலக்கியத்தை இணைத்துக்கொள்ள முடியும்.
ஆனால் பழைய இலக்கியத்தை அப்படி நவீன வாழ்க்கையுடன் இணைத்துக்கொள்ளுவது கடினம். ஏனென்றால் நம் இன்றைய வாழ்வுடன் நேரடியாகத் தொடர்பில்லாதது அது. மூன்று வகைகளில் அந்த தொடர்பை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்
அ. பழையகால வாழ்க்கையின் பண்பாட்டுக்கூறுகளை மரபிலக்கியங்களில் இருந்து புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, தமிழிலுள்ள திணைமரபை புரிந்துகொள்வது அன்றைய வாழ்க்கையை அறிய மிக உதவியானது.
ஆ. மரபிலக்கியத்தின் உருவகங்கள், குறியீடுகளை புரிந்துகொள்வது அக்கால உணர்வுகளை அறிய உதவியானது. உதாரணமாக, தலைவன் பிரிந்ததும் தலைவியின் கைவளைகள் கழல்கின்றன என்னும் உருவகத்தை ஒரு நடன அசைவாக, கலையுருவகமாகவே புரிந்துகொள்ள வேண்டும். பிரிவு பற்றிய படிமம் அது
இ. அன்று முதல் இன்று வரை இலக்கியத்தில் அடிப்படையாக உள்ள ஆதாரமான மானுட உணர்வுநிலைகளை அக்காலக் கவிதைகளில் இருந்து பிரித்து எடுத்துக்கொள்ளவேண்டும். உதாரணமாக, யானை இறந்துவிட்டபின் அது நின்ற தொழுவத்தின் வெற்றிடம் கண்டு அழும் பாகனைப்போல நான் கிள்ளியின் சாவுக்காக அழுகிறேன் என ஒரு கவிஞன் பாடுகிறான். அந்த உணர்வு காலம் கடந்தது
இவற்றை அடையாளம் காண ஓர் ஆசிரிய வழிகாட்டல், ஒரு சேர்ந்தமர்ந்து கற்கும் முறை இருந்தால் போதும். வாசல் திறந்துவிட்டால் நாம் செல்ல ஒரு பேருலகம் நமக்காக காத்திருக்கிறது.
ஜெயமோகன்