வகுப்புகளின் பொருட்டு கடலூரில் இருந்து பேருந்தில் வெள்ளிமலை வருவதும் போவதும், எனக்கு கிட்டத்தட்ட 9 மணி நேரம் பிடிக்கும் பயணம். அதிலும் ஈரோடு to கடலூர், அதே போல அங்கிருந்து இங்கே இரண்டு பயணமும் 6 மணி நேரத்தை கடந்து நீளும் பிரமாதமான டவுன் பஸ் பயணம். அப்படி இந்த இரவு திரும்புதலில் சேலம் to கடலூர் பயணத்தில் வாசித்த நூல், காலச்சுவடு வெளியிட்ட அ.கா.பெருமாள் அவர்கள் எழுதிய பூதமடம் நம்பூதிரி எனும் நூல்.
ஆசிரியரின் களப்பணி அனுபவங்களில் இருந்து தொடங்கி, நாட்டாரியலின் பல அலகுகளை தொட்டு விரியும் இந்த நூல், களப்பணிக்கு சென்ற இடத்தில் ஊராரால் சிலை திருடர்கள் என சந்தேகப் பார்வையில் சிக்கியது, கிராமத்தில் கிடைத்து, மாட சாமி உடன் நின்று பூசை பெரும் பெருமாள், இரும்பை தங்கமாக்கும் ரசவாத ரகசியம் சொல்லும் கல்வெட்டு போன்ற பல சுவாரஸ்யங்களுடன் அமைந்து, எல்லா நிலையிலும் அவரது முந்தைய நூலான வயல் காட்டு இசக்கி நூலின் தொடர்ச்சி என்றே சொல்லவேண்டும்.
வயக்காட்டு இசக்கி நூல் சார்ந்த வாசிப்பு அனுபவத்தை உங்களுக்கு முன்னர் எழுதியபோது, அதில் நான் எழுதாமல் விட்ட பிரதான விடுபடல் ஒன்றை, வாசித்து ஆனால் உள்ளே பதியாமல் போன ஒன்றை, வகுப்புக்கு வந்த பிறகு அந்த கல்வி அதற்கு முகம் அளித்த பின்னரே அறிந்தேன். வரலாற்றுக்கு முந்தைய காலம் தொட்டு எழுந்த பெரும் ஆள் எனும் கருதுகோள், புருஷன், அன்னம் போன்ற தத்துவங்கள் குறிப்பாக பலி எனும் சடங்கு மற்றும் புருஷ சூக்தம் இவற்றை விரிவாக ஒன்றுக்கு ஒன்று தொடுத்து அறிந்த பின்னரே அன்று அந்த நூலில் வாசித்த ஒரு சடங்குக்கு இன்று பிடி கிடைத்தது.
வயக்காட்டு இசக்கி நூலில், குமரி நிலத்தில் கடுக்கரை ஆயினூட்டு திருவிழா என்ற 12 வருடத்துக்கு ஒரு முறை நிகழும் விழா குறித்து (அடுத்த விழா 2027 இல்) ஆசிரியர் விரிவாக சித்தரித்திருக்கிறார். ஆசிரியர் கண்ட விழாவில், 55 பெரிய பெரிய பானைகளில் வெவ்வேறு வகை அரிசி கொண்டு வர பட்டு, குறிப்பிட்ட நாளில் ஒரு பெரிய களத்தில் மூன்று அடுக்காக இதர வெஞ்சினங்களுடன் மூன்று பதங்களில் வேகவைக்கப்பட்ட அரிசி கொட்டப்பட்டு, சுற்றிலும் வேலி கட்டி அதை ஒரு வடிவுக்கு உட்படுத்தி, அதற்கு மாலைகள் அலங்காரங்கள் செய்து, அதன் மத்தியில் எரியும் பந்தத்தை செருகி, ( அது எந்த சாமிக்கும் படையல் அல்ல, அதுவே ஒரு சாமி) சாமியாடி வந்து சடங்குகள் செய்ய, குறிப்பிட்ட நேரத்தில் மெல்லிய வெடிப்பொலியுடன் அன்ன சாமி பிளக்க, குரவை ஒலிகள் தாளம் உச்சம் கொள்ள, இப்படி வழிபாடு தொடங்கி தொடர்ந்து அன்னத்தின் ஒவ்வொரு பிடி பக்தர் எல்லோரும் எடுத்து உண்டு, அந்த அன்ன சாமி மொத்தமும் காலி ஆனதும் விழா நிறைகிறது. அன்றைய வகுப்பு முழுக்க அட இந்த சடங்கு இவ்வளவு காலாகீத தொடர்ச்சி கொண்ட ஒன்றா என்ற ஆச்சர்யம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
இந்த பூதமடம் நம்பூதிரி நூலில் பறக்கை மதுசூதன பெருமாள் கோயில் விழாவில் வருடா வருடம் கருடாழ்வாரை கண் திறக்க வைக்கும் குறிப்பிட்ட குலம் கொண்ட கதை வழியே, பஞ்சம் படையெடுப்பு சூழலில் பெருந்தெய்வங்கள் போலன்றி தாக்கு பிடித்து நின்ற சிறு தெய்வ வழிபாடு சார்ந்த கலாச்சார பின்புலம் ஒன்றை இணைந்து சிந்தித்து அறிந்தேன்.
மதுசூதன பெருமாளுக்கு கருட வாகனம் செய்கிறார் சிற்பி ஒருவர். கலை பூரணம் கண்டதால் அந்த கருடன் உயிர் பெற்று எழுந்து பறக்க துவங்கி விடுகிறது. சிற்பி உளியை எடுத்து வீச அது கருடன் கண்ணில் பட்டு கருடனின் ஒரு கண் ஊனமடைய, கருடன் மீண்டும் சிலை ஆகி விடுகிறது. பின்னமான சிலை கோயிலுக்கு ஏற்றது அல்ல என்ற நிலை வர, அந்த சிற்பி ஓவியம் வழியே கருடனுக்கு கண் வரைந்து தருகிறார். ஓவ்வொரு ஆண்டும் இது ஒரு சடங்காக, அதே சிற்பிகள் குலம் வழியே பறக்கை கோயிலில் நடைபெறுவதாக அ.கா.பெருமாள் தெரிவிக்கிறார்.
இதுதான் மைய்யப் புள்ளி, ஆலயங்களில் மூர்த்தம் சிதைந்தால் அது வழிபாட்டுக்கு உகந்ததாக இல்லாமல் போய் ஆலய பெருந்தெய்வ வழிபாடு கைவிட பட, இத்தகு நெறிகள் ஏதும் நாட்டு புற தெய்வங்களுக்கு இல்லாததால் அவை தொடர்ந்திருக்கிறது. உதாரணமாக மாட சாமி தலை உடைந்தால் அது தலை போன மாடசாமி என்ற புதிய பெயர் ஏற்று தொடர்ந்து வழிபாட்டில் நீடித்திருக்கிறது. மேல்நிலை ஆக்கம் என்ற பெயரில் பெருந்தெய்வ வழிபாட்டின் அதன் நெறிக்கு மாறி சிறு தெய்வ வழிபாடு அருகினால் என்ன நிகழும் என்று புரிந்தது.
நூலில் சமூக குழுக்கள் சார்ந்த முக்கிய இரண்டு பதிவுகளில் முதலாவது குமரி மாவட்ட தேவதாசிகள் குறித்தது. இந்தியா முழுக்க பக்தி காலத்தில் துவங்கிய தேவதாசி முறையின் தோற்றம் அதன் மாண்பு, வீழ்ச்சி, அதன் தொடர்ச்சியாக குமரி நிலத்தில் நிகழ்ந்த தேவ தாசி முறை, அதில் ஈடுபட்ட குலங்களை சேர்ந்த பெண்கள், சில ஆண்டுகள் முன்பு வரை இந்தியா முழுக்க ‘ரகசியமாக‘ ‘சட்ட புறம்பாக‘ தொடர்ந்த அந்த நிலை குறித்த கட்டுரையில் என்னை வியக்க செய்தது, இந்த சமூகம் சீரழிந்து, முற்றிலும் சுரண்ட பட்டுக்கொண்டிருந்த நிலையில், இந்த நிலை ஒழிய முதலில் குரல் எழுப்பியவர் அய்யா வைகுண்டர் எனும் செய்தி.
இரண்டாவது கொதுகுல பிராமணர் எனும் சமூகம் குறித்தது. மிகப் பின்னர் கொரண்டி, தெரிசனங்கோப்பு பகுதியில் வந்து குடியேறிய இந்த தமிழை தாய்மொழியாக கொண்ட பிராமணர்கள், 700 ஆண்டுகளுக்கு முன்பு தென் திருவிதாங்கூர் நிலத்தின் உயர் குடியாக வாழ்ந்தவர்கள். அரசனின் பொருட்டு தூது சென்றவர்கள், உளவு பார்க்க சென்றவர்கள், அமைச்சு மற்றும் நிதி நிர்வாக உயர் பதவிகளில் இருந்தவர்கள். அரசு பணி பொருட்டு புலம் பெயர்ந்து, பல சிக்கல்களில் உழன்று, திப்புசுல்தான் வழியே மதம் மாற்ற பட்டு, மீண்டு தாய் மதம் திரும்பி, சொந்த நிலத்துக்கே திரும்பி வந்தவர்கள். அரசன் இவர்கள் வாழ நிலம் அளித்து ஆதரித்தாலும், அமைந்து போன சமூக தொழில் அதிகார அடுக்கில் இவர்கள் துருத்தலாக, உதிரியாகவே இருந்திருக்கிரார்கள். இவர்கள் இப்படியே வாழ்ந்து மெல்ல மெல்ல பிற சமூக நிலைகளுடன் கலந்து பரவி முற்றிலும் மறைந்து போகும் சித்திரத்தை வாசிக்கையில், எப்போதும் என்னுள் கொதிக்கும் தமிழ் நில பின்நவீன புனைவுகள் கொண்ட கொண்ட உள்ளடக்கம் மீதான விமர்சனம் மீண்டும் ஒரு முறை உறுதி கண்டது. பின்நவீன அழகியல் வழியே தமிழ் நிலத்தில் இருந்து உலகின் முன் முன்வைக்க எத்தனையோ உள்ளடக்கம் இங்கே கொது குலம் போல நிறைந்து கிடக்க, அதைக்காணும் நுண்ணுணர்வோ எடுத்தாளும் திராணியோ இன்றி பின்நவீன புனைவுகள் என்ற பெயரில் லட்டீன் அமெரிக்கா, குழுப் புணர்ச்சி, மைய உடைப்பு, அறச் சிதைப்பு என்று என்னென்னவோ குப்பைகளைதான் இதுவரை எழுதிக் கொட்டி இருக்கிறோம்.
நூலினுள் ஆளுமைகள் குறித்த முக்கியமான இரண்டு பதிவுகளில் முதலாவது திவான் கேசவதாஸ் உடையது. ஒழுக்கமும் நேர்மையும் நிறைந்தவர். போர் சூழலில் எதையும் கையாளும் நிறைந்த மதியூகி. கேரள நிலத்தில் முஸ்லீம் படையெடுப்பை முறியடித்து விரட்டியவர். இவர் முதன் முதலாக ராஜாவின் பார்வையில் படும் விதமும், அதன் வழியே அரண்மனை பணியில் சேர்ந்து மெல்ல மெல்ல திவான் பதவி வரை உயர்வதும், இருதி காலத்தில் எதிரிகளால் பதவி இழந்து, பழி சுமந்து, தனிமையில் உழன்று நஞ்சூண்டு மடிவது வரை, ஒரு உயர் துயர நாடக வாழ்வு. வரலாற்றில் எங்குமே பதியப்படாத இந்த ஆளுமையை, ஒரே ஒரு முறை கூட பாடப்படாத குமரிமாவட்டத்தின் ஒரு வில்லுப் பாட்டு பிரதியில் இருந்து கண்டெடுத்திருக்கிறார் நூலாசிரியர்.
இரண்டாவது, ராவ் வம்ச சகோதரர்கள் குறித்தது. கேரளத்தில் இல்லாத நல்ல தங்காள்கதை, ராவ் சகோதரர்கள் வழியே நாடகத்தில் இருந்து தோல் பாவை கூத்துக்கு மாறுவதை, அது முடிந்து தமிழ் சினிமாவுக்கு சென்று அங்கிருந்து மலையாள சினிமாவுக்கு செல்வதை, ராவ் சகோதரர்கள் கொண்ட நாடக, தோல் பாவை கூத்து கலையின் வீழ்ச்சி சித்திரம் வழியே கட்டுரை விவரிக்கிறது. ஆம் உங்களது விளக்கு கதையின் பின்புலமேதான். விளக்கு கதையின் தீவிரம் இந்த கட்டுரை படித்த பின் இன்னும் கூடி இருக்குறது. இதில் அந்த கால நல்ல தங்காள் நாடக காட்சி ஒன்று குறித்த சித்தரிப்பு வருகிறது. மேடையில் நல்ல தங்காள் கிணற்றுக்குள் குதிக்கும்போது, ஊழியர்கள் மறைவில் இருந்து பார்வையாளர்கள் மேல் தண்ணீர் தெளிப்பார்களாம். அந்த கால முப்பரிமாண தொழில் நுட்பம். இதில் ராவ் சொன்னதாக அ.கா. பெருமாள் ஒரு உணர்ச்சிகரமான காதல் கதை ஒன்றை சொல்லி இருக்கிறார்.
உயர் சாதி சமூகத்தை சேர்ந்த ஒருவன், இளம் குறத்தி ஒருவளை காதலிக்கிறான். அவளுக்கும் இவன் மேல் காதல். பெண்ணின் குலம் ஆணின் குலம் இரண்டுமே எதிர்க்க, யுவன் பெண்ணின் தகப்பன் வசம் தனக்கு பெண் தர சொல்லி கேட்கிறான், அதன் பொருட்டு எதையும் செய்வேன் என்கிறான். தகப்பனும் நிறைய சட்ட திட்டங்கள் போடுகிறார். அனைத்தையும் செய்து பெண்ணை கரம் பிடிக்கிறான். படிக்கும்போதே தெரிகிறது அப்படியே முத்து பட்டன் கொண்ட காதலின் கதை. முடிவும் அதே துயர முடிவு. அந்த யுவன் நரிகுறவர் வாழ்வை வாழ இயலாது நோய் வந்து செத்து போகிறான். அந்த யுவதியோ பித்து பிடித்தவள் ஆகிறாள். நேர் எதிராக நூலாசிரியர் கண்ட வாழ்வு ஒன்றையும் சொல்கிறார். உயர் ஜாதி தம்பதி. வெளிஊர் போன கணவன் அங்கேயே இறந்து போக, தகவல் சொல்ல மனைவியை ஊருக்குள் தேடுகிறார்கள். அவர் சினிமா பார்க்க சென்றிருப்பது தெரிகிறது. அந்த காலத்தில் செல்போன் இல்லை. தியேட்டரில் ஸ்லைடு போட்டு அவரை வெளியே வரவழைத்து தகவல் சொல்கிறார்கள். மனைவி “சினிமா முடிஞ்சதும் வாறேனே” என்று கேட்டிருக்கிறார். ஆக வாழ்க்கை, வாழும் விழுமியம் ,நியதி சாதியில் மேலே போக போக அதுவும் மேலே போகும் என்ற எந்த உத்திரவாதமும் இல்லை.
நூலில் எல்லாவற்றிலும் சிறப்பு இதில் உள்ள யக்ஷி கதைகள். புலையர் முதல் பிராமணர் வரை எல்லா சாதி யட்சிகளும் வருகிறார்கள்.மயக்கி இழுத்து பலி வாங்குகிறார்கள். யாரோ வந்து அடக்கி, கொடை கொடுக்க சாந்தமாகி அமைகிறார்கள். இதிலும் நல்ல உணர்ச்சிகரமான கதை, மண்டைக்காடு கலவரத்தில் நடப்பது. மண்டைக்காடு கலவரத்தின் மூலமான இரண்டு எதிர் பிரிவுகளை சேர்ந்த யுவன் யுவதி. காதல் மணம் புரிந்து அதனால் ஊர் விட்டு வந்து, இங்கே கடை போட்டு வாழ்ந்தவர்கள். கலவரத்தில் இவர்கள் தாக்கப்பட்டு கடையும் சூறையாட பட, இருவரும் ஊர் விட்டு தப்பி ஓடுகிறார்கள். கர்ப்பமாக இருக்கும் மனைவியை சுமந்து செல்கிறான் கணவன். வழியிலேயே மனைவி இறந்து போகிறாள். வெறி கொண்ட கணவன் ஊருக்குள் புகுந்து கலவரத்தை இன்னும் பெரிதாக்குகிறான். கலவரத்தின் ஊடே என்ன ஆனான் எனும் தகவல் இன்றி காணாமல் போகிறான்.
கலவரம் ஓய்ந்து ஊர் இயல்புக்கு திரும்ப, இரவுகளில் தான் உயிர் விட்ட இடத்தில் அந்த பெண் அழுதபடி நிற்பதை ஊரார் பலர் அடிக்கடி காண்கிறார்கள். ஊர் கூடி பேசி, அங்கே கோயிலில் அவளை எப்படி கண்டார்களோ அப்படியே வரைந்து வைத்து, கொடை தந்து வணங்கி சாந்தி செய்கிறார்கள். அவள் குழந்தை அற்றவர்களுக்கு குழந்தை வரம் அருளும் தெய்வமாக மாறுகிறாள். அவள் ஓவியத்தை தேடி கண்டு அங்கிருந்து இந்த கதையை சொல்கிறார் ஆசிரியர். ஊரார் அவளுக்கு இட்ட பெயர் சுடிதார் யக்ஷி.
நூல் வாசித்து முடித்த கணம் மொபைலை இயக்கி, மதுரா அருங்காட்சியகத்தில் இருக்கும் கி மு 1 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த யக்ஷியை எடுத்து பார்த்தேன். இடது மூட்டு முழையின் அழகும், தொடைகளின் திரட்சியும், இடைக்கரவின் திணிவும், இடையின் குழைவும், முலைகளின் திமிரும், (அதில் எக்கணமும் திறந்து நோக்க தயாராக மூடி இருக்கும் கண்கள், முலைக்கண்கள்) அவள் நிற்கும் கோலத்தின் ஒயிலும், அனைத்துக்கும் மேலே, உன் இறுதி ரகசியம் வரை நான் அறிவேன் ஆனால் என்னில் ஒரு துளியும் நீ அறியாய் எனும் அந்த புன்னகையும், பார்க்க பார்க்க உன்மத்தம் எழுப்பும் இந்த யக்ஷியை இவ்விதம் ஏதோ ஒரு கலைஞன் நிறுத்திச் சென்றிருக்கிறான். கி பி 1982 இல் ஒரு சுடிதார் யக்ஷியை அ.கா.பெருமாள் வந்து எழுதி நிறுத்தி இருக்கிறார். அ.கா.பெருமாள் அன்றி வேறு எவரிடம் இருந்தும் இதயெல்லாம் அறிந்து கொள்ள முடியாது எனும்படிக்கான நமது கலாச்சார சிடுக்குகள் சார்ந்த தனித்துவமான வண்ணமயமான விஷயங்கள் அடங்கிய நூல். இதோ இதை எழுதும் இக்கணம் இதை எழுதுவதன் வழியாக ஆசிரியர் அ.கா.பெருமாள் அவர்களை பிரியத்துடன் நினைத்துக் கொள்கிறேன்.
கடலூர் சீனு