பெருங்கலையின் வருகை, கடிதம்

நூலகத்தை வாசிப்பவர்கள்

பெருங்கலையின் அறைகூவல்!

விஷ்ணுபுரம் பதிப்பகம்  Ph: 9080283887

ஜெ

பெருங்கலையின் அறைகூவல் என்னும் தலைப்பும் சரி, நூலகத்தை வாசிப்பவர்கள் என்னும் தலைப்பும் சரி அபாரமானவை. ஒன்று அறைகூவல். இன்னொன்று அதற்கான எதிர்க்குரல். இரண்டுமே தமிழில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதை வரலாறு பேசும்.

இத்தகைய பெருஞ்சாதனைகளை பொதுவாக சிறிய அளவில் இலக்கியத்திலும் அறிவியக்கத்திலும் செயல்படுபவர்கள் தவிர்த்துச்செல்லவே விரும்புவார்கள். ஏனென்றால் இது அவர்களின் எளிமையான செயல்பாடுகளை அர்த்தமில்லாததாக ஆக்கிவிடுகிறது. ஸ்கேல் திடீரென்று பிரம்மாண்டமாக ஆகிவிடுகிறது. அதேபோல எளிமையான, அன்றாடவிஷயங்களை வாசிப்பவர்களும் இதை தவிர்ப்பார்கள். இந்த பெரும் அறைகூவலை அவர்களால் எதிர்கொள்ள முடியாது. ஆனால் அதை தன்னிடமிருந்தே மறைக்க வேறு வேறு காரணங்களைச் சொல்வார்கள்

ஆனால் வாசகர்களின் எதிர்பார்ப்பும் தரமும் இதன் வழியாக மாறிவிடுகிறது. புதிய ஒரு வாசகர் அணியே இந்நாவல்களால் உருவாகி வந்திருப்பதை சமூகவலைத்தளங்களில் பார்த்தாலே தெரிந்துகொள்ள முடியும். வாழ்த்துக்களுடன்

ஆர்.கே.முருகேஷ்


 

1. இந்நாவல்களை வாங்குவதில் நடுத்தர வர்க்கத்தினருக்குச் சிரமம் உள்ளது என்பது உண்மை. வசதியுள்ளவர்கள் நூலகங்களுக்கோ முதியவர்களுக்கோ இத்தொகுதிகளை வாங்கி அன்பளிப்பாக அளிக்கலாம்.இந்த நூல்களை இலவசமாக இணையத்தில் வாசிப்பவர்கள் இம்முயற்சிக்கு உதவவேண்டும் என நினைத்தால் இதைச் செய்யலாம்.

2. சாதாரணமாக இந்நூல்களை வழங்குவதற்குப் பதிலாக இலக்கியப் போட்டிகள் ஏதாவது வைத்து அதில் தேர்ச்சிபெறுபவர்களுக்கு நூல்களை பரிசாக வழங்கலாம்

அன்புள்ள முருகேஷ்,

ஏற்கனவே பல நண்பர்கள் அவ்வாறு வெண்முரசு நூல்களை வாங்கி அளித்துக் கொண்டிருக்கிறார்கள். உளமிருப்போர் அதைச் செய்யலாம். வெண்முரசு நூல்களின் தனிச்சிறப்பு என்பது அவை எங்கிருந்தாலும் வாசிக்கப்படும் என்பதே. பெரும்பாலான பெருந்தொகை நூல்கள் வாசிக்கப்படுவதில்லை. குறிப்புதவி நூல்களாக நூலக அடுக்குகளிலே வாழும். வெண்முரசு இன்றுவரை எங்கும் அவ்வண்ணம் வாசிக்கப்படாமல் தேங்கிவிட்டதில்லை

இவற்றை நூலகங்களுக்கு ஏன் வாங்கவேண்டும் என்றால் தனிநபர்கள் அதிகம் வாங்க முடியாது. இங்குள்ள அரசு நூலகங்கள் என் நூல்களை வாங்குவதில்லை. கல்லூரி நூலகங்களும் பெரும்பாலும் தவிர்த்துவிடுகின்றன. தனியார் நூலகங்களுக்கு வாங்கினால்தான் உண்டு

ஜெ

முந்தைய கட்டுரைGANDHI AND SEX
அடுத்த கட்டுரையான் அறக்கட்டளை, ஒரு நகர்வு