அன்புள்ள ஜெ.,
‘அருள் வடிவே பரம்பொருள் வடிவே ‘ என்ற இந்த பாடலைக் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். பாடியவர்: கே.ஜெ.யேசுதாஸ், இசை: எல்.வைத்தியநாதன், இயற்றியவர்: தெள்ளூர் தருமராசன், படம்: வாழ்த்துங்கள் (1978)
அருள் வடிவே பரம்பொருள் வடிவே
ஆனந்தமே அருளே பொருளே புகழே
அருள் வடிவே பரம்பொருள் வடிவே
அவனன்றி வேறோர் அணு அசையாதே…….
அவனன்றி வேறோர் அணு அசையாதே
அருந்தவ மேலோர் நூல் பிழையாதே
வருவதை நீதான் அறிந்திடுவாயே
வழித்துணை நீயே காத்திடுவாயே
நினைவினில் நிறைந்திட நிதம் உனை தொழுவேன்
நீதி நீ ஜோதி நீ நெறிமுறை அருள்வாய்
அருள் வடிவே பரம்பொருள் வடிவே
ஆனந்தமே அருளே பொருளே புகழே
அருள் வடிவே பரம்பொருள் வடிவே
துணையென்று சேர்ந்தால் கணை தொடுத்தாரே…
துணையென்று சேர்ந்தால் கணை தொடுத்தாரே
அலை துரும்பானேன் ஆதரித்தாயே
உனையின்றி வேறோர் துணை இங்கு வேண்டேன்
கருணை இல்லாதார் தோழமை வேண்டேன்
மனை இருள் மறைந்திட தினம் உனை பணிந்தேன்
மாசிலா மாமணி மனங்கனிந்தருள்வாய்
அருள் வடிவே பரம்பொருள் வடிவே
ஆனந்தமே அருளே பொருளே புகழே
ஆனந்தமே…அருளே பொருளே புகழே
படத்தில் முருகன் கோயிலில் கதாநாயகன் பாடுகிற இந்தப்பாடலின் எந்த வார்த்தையும் குறிப்பிட்ட கடவுளையோ மதத்தையோ குறிப்பிடுவதில்லை என்பதே இப்பாடலின் தனிச்சிறப்பு. மதம்கடந்த ஆன்மீகத்திற்கான பக்திப்பாடலாக ஒலிக்கிற இதுபோல இன்னொரு பக்திப் பாடல் கேட்டதில்லை. கடவுள் கடந்த ஆன்மீகத்திற்கான பாடலும் தேடினால் கிடைக்கலாம். ஒருவேளை ரிக் வேதத்தின் ‘சிருஷ்டி கீதம்‘ தானா அது?
எல்.வைத்தியநாதன் ஆரம்பத்தில் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் பணிபுரிந்தவர், பின்னர் நிறைய மலையாள, கன்னடப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தமிழில் ஏழாவது மனிதன், கமல் நடித்த பேசும் படம் போல குறிப்பிடத்தக்க சில படங்கள். தந்தை லக்ஷ்மிநாராயணா புகழ்பெற்ற வயலின் கலைஞர். இவருடைய சகோதரர்கள் எல்.ஷங்கர், எல்.சுப்பிரமணியம் இருவருமே மேற்கத்திய இசையில் தடம்பதித்த புகழ்பெற்ற வயலின் கலைஞர்கள். எண்பதுகளின் இறுதியில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட ஆர்.கே.நாராயணின் ‘மால்குடி டேஸ்‘ தொடருக்கு இசை இவர்தான்.
புகழ்பெற்ற ‘மால்குடி டேஸ்‘ டைட்டில் பாடல்
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்