சென்ற டிசம்பர் விஷ்ணுபுரம் விழா முடிந்து கிளம்பியது. வாரம் 3 நாள் சேர்ந்தது போல வீட்டில் இருப்பதே அரிது எனும்படிக்கு சுற்றிக்கொண்டே இருக்கிறேன். உள்ளே ஏதோ சூறாவளி அது அடங்கினால் ஒழிய அமர்வது சாத்தியம் இல்லை.
நேற்று மாலை நண்பர் இதயத்துல்லா அவர் இதுவரை திருவக்கரை கல் மரங்களை பார்த்ததில்லை போய் வருவோமா என கேட்க, எடுய்யா வண்டியை என்று கிளம்பிவிட்டோம். மேகம் மூடிய 3 மணி வானின் கீழ், தென்றல் வீச ஏரிகள் நிறைந்த உள் கிராமத்து பாதையை தேர்வு செய்து, திருவக்கரை நோக்கிப் பயணமானோம்.
மாலை 4 மணிக்கு அரசு நிர்வகிக்கும் திருவக்கரை கல் மரத் தோட்டத்தின் வாயிலில் வந்து நின்றோம். “இந்த கல் மரம் எல்லாத்துக்கும் என்ன வயசு இருக்கும்னு நினைக்கிறீங்க” என்ற என் வினாவுக்கு “ஒரு ஐயாயிரம் வருடம்…” என்று இழுத்து ரொம்ப ஓவரா சொல்லிட்டமோ என்று தயங்கியபடி பதில் சொன்னார் இதயா.
உள்ளே, பரவாயில்லை எனும்படிக்கு பராமரிக்கப்பட்ட தோட்டத்தில், அருகே கிடைத்த கல் மரங்களை ஒரு ப்ரும்மாண்ட ஆலமரத்தை சுற்றி, சிறு நடை பாதையை இட்டு, அதன் இரண்டு பக்கமும் வரிசை கட்டி அமைதிருந்தார்கள். நண்பர் ஒவ்வொரு மரமாக சந்தேகமாக தட்டி கொட்டி எல்லாம் ஆராய்ச்சி செய்தார். பாதையின் முடிவில் அமைந்திருந்த செய்தி பலகையில் கண்ட சேதியை கண்டு,
” சார் இந்த கல் மரத்துக்கெல்லாம் வயசு ரெண்டு கோடியாம்” என்று ஆச்சர்ய குரலில் கூவினார்.
இங்கே அரியலூர் துவங்கி திருவக்கரை நெய்வேலி வரை உள்ள நிலம் வரலாற்று காலத்துக்கு மிக மிக முந்தியது. அரியலூர் நிலம் இமயமலை கடலின் கீழ் இருந்த போது அதுவும் கடலின் கீழ் இருந்த நிலம். டைனோசர்கள் வாழ்ந்த நிலம். நெய்வேலி பல கோடி ஆண்டுகள் முன் மண்ணுள் புதைந்த வனம் நிலக்கரியாக கிடைக்கும் நிலம். திரு வக்கரை நிலம் பல லட்சம் வருடம் முன்பு மண்ணில் புதைத்த மரங்கள் கல் என்றாகி புதை படிவம் என கிடைக்கும் களம். மண்ணின் கீழ் புதை படிவம் கிடைப்பது மிக மிக அபூர்வமான சூழல் வழியே நிகழ்வது. எந்த அளவு அபூர்வம் எனில் பண்டைய உயிர்களில் மண்ணில் புதைந்தவை 100 சதவீதம் எனில், இப்படி புதை படிமம் என மாறுபவை ஒரு சதவீதம் மட்டுமே.ஜூராசிக் யுகம் உள்ளிட்டு நாம் அறிந்த புவி உயிர்கள் பரிணமித்த பண்டைய யுகங்கள் யாவும் இந்த ஒரு சதவீத சாத்தியம் வழியேதான் நாம் அடைந்திருக்கிறோம்.
இணையம் சொன்ன இந்த நிலத்தின் புவி இயல் சார்ந்த தகவல்கள் மேலும் ஆச்சர்யம் அளித்தது. இங்கே கிடைக்கும் கல் மரங்கள் அருகே நதி வழியே அடித்து வரப் பட்டு இங்கே இந்த நிலத்தில் கரை ஒதுங்கி இவ்விதம் ஆனாவை. ஒவ்வொரு மரமும் சில நூறு வருடங்கள் வாழ்ந்தவை. இந்த மரங்களில் வேரும் இல்லை, கிளைகளும் இல்லை. அதாவது மரங்களின் நடுக்கண்டம் மட்டுமே ஆற்றில் அடித்து வரப் பட்டிருக்கிறது. அது எப்படி? விடை தெரியவில்லை.
இந்த மர்மம் உண்மையாகவே துனுக்குற வைப்பது. தோட்டம் சுற்றி முடித்து இந்த நில அமைப்பை சுற்றி பார்க்க, அந்த கிராமத்தை விட்டு வெளியே போனோம். இயந்திரங்கள் நிறைந்த குவாரி போல ஏதோ அமைப்புகள். அதன் முன் நிற்கும் லாரி வரிசை. லோடு ஏற்றி முனகி முனகி வெளியே செல்லும் லாரிகள் கடந்து ஊருக்கு வெளியே வந்தோம். இந்த நிலத்தை ஆய்வு செய்யவும், கண்காட்சி அமைக்கவும் மையம் ஒன்று அரசால் கட்டப்பட்டு கொண்டு இருந்தது. வாசலில் வண்டியை போட்டு விட்டு, அதன் பின்னால் விரிந்த செந்நிற திடலில் இறங்கி நடந்தோம்.
கூழாங்கற்கள் போன்ற காவி நிற சிறு சிறு உருண்டை கற்கள், இறுகிய செம்மண் திடலில் பதிந்து விரிந்த நிலம் மேகம் போர்த்திய அந்தி ஒளி ஏற்று செவ்வண்ணம் கொண்டு மயக்கியது. இன்னும் மேடு பள்ளம் நிறைந்த திடலை கடந்து உள்ளே நடக்க, சாக்லேட் வண்ணத்தில் அடுக்கிய ஸ்லேட் பலகைகள் போன்ற பாறைகள் கொண்ட திடலாக மாறி கொஞ்சம் கொஞ்சமாக குன்றென உயர்ந்தது.
குன்றின் மறு சரிவு நெடுக வேர் பின்னல் போல பல லட்சம் வருடம் முன்னர் தண்ணீர் ஓடி ஓடி அரித்து உருவான பாதைகள். உள்ளே குதித்தோம். பத்து அடி ஆழம். நான்கடி அகலம். பாதைக்குள் வளைந்து நெளிந்து நடக்க, உலகப்போர் நிலம் ஒன்றின் பங்கர் பாதை வழிகளில் நடப்பதை போல வினோதமாக இருந்தது. அந்த ஆழத்தில் சுவர் ஓரத்தில் புதைந்து கிடந்த நெடும் கல் மரம் ஒன்று திடுக்கிட செய்தது.
வெளியேறி கிராமம் வந்து தேனீர் அருந்திவிட்டு திருவக்கரை சந்திர சூடேஸ்வரர் கோயில் நோக்கி நடந்தோம். சன்னதி தெரு வழி நெடுக பரிகார பொருட்கள் விற்கும் கடைகள். எல்லாவற்றிலும் எலுமிச்சை மாலைகள். உள்ளே பிளந்த வாய் கொண்ட தலைகள். அதிலிருந்து ஓங்கி ஒலிக்கும் செருப்பை இங்கே விடுங்க எனும் மிரட்டல்கள். கடந்து சென்றால், பல்லவர் காலம் முதல் உள்ள தலம். திருஞான சம்பந்தர் பாடி இருக்கிறார். சங்கரர் இங்கே வந்து இங்குள்ள காளியை சக்கரம் பதித்து அதில் அவளை தளைத்து அவள் உக்கிரம் தணித்திருக்கிறார். ஆதித்த சோழன், உத்தம சோழன், ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் கோயிலை விரிவாக்கம் செய்திருக்கிரார்கள். செம்பியன்மா தேவி இக்கோயிலை கற்கோயில் என மாற்றி இருக்கிறார். வாயில் ஏழுநிலை கோபுரம் பிற்காலத்தையது. ஆதிட்டாணத்தில் உள்ள மச்சமுனி படிமை இக் கோபுரம் நாயக்கர் கால திருப்பணி என்பதன் சான்று.
உள்ளே போனால் ஆகம விதிக்கு உட்படாது ஒவ்வொன்றும் ஒவ்வொரு சன்னதியும் ஒவ்வொரு பக்கம் என வரிசை தப்பி கிடக்கும் கோயில். இது வக்கிராசுரன் சிவனை வழிபட்ட கோயிலாம். ஆகவே எல்லாமே இங்கே வக்கிரம் கொண்டுதான் கிடக்குமாம். சைவம் டாட் ஆர்க் சொல்கிறது. வக்கிராசுரனுக்கு வரம் அளித்து விட்டு சிவன் திண்டாட, அவனை அழிக்க கிளம்புகிறார் பெருமாள். அசுரனின் தங்கை அசுரனுக்கு உதவ, காளி அவளை வதம் செய்ய, பெருமாள் வக்கிராசுரனை வதம் செய்தார் என்பது இந்த கோயில் பின்னுள்ள புராணம்.
வக்கிராசுரன் வழிபட்ட வக்கிர லிங்கத்தை வணங்கிவிட்டு கோயிலை சுற்றி வந்தோம். வழக்கம் போல வண்ணமயமான கோயில். எங்கெங்கும் எவர் சில்வர் புதிர் வழிகள். பெருமாள் சன்னதியில் பெருமாள் வலது சுட்டு விரலில் சுதர்சன சக்கரம் சுழல நின்றிருந்தார். சகஸ்ர லிங்க சன்னதி, வக்ர சனீஸ்வரர் சன்னதி இடத்துபுரம் ஒரு மண்டபம் நிறைய, நிறைய எனில் நிறைய நிறைய நிறைய பாம்பு பின்னிய கல் சிற்பங்கள் குவிந்து அதில் மஞ்சள் குங்குமம் கொட்டி சுடர் விளக்குகள் எரிய தூப வாசனையுடன் அமானுஷ்யமாக இருந்தது.
கேட்டேன். பரிகாரமாம். உண்டு, கழித்து, உறங்கி, புணர்ந்து, பெருக்கி, மாயும் அற்ப மானிடர்கள். அற்பத்திலும் அற்பர்கள். அவர்கள் செய்த பாவத்துக்கு அந்த தெய்வமே வந்து பரிகாரம் அளிக்க வேண்டுமாம். கொட்டி கிடக்கும் பாவ மூட்டைகளையும், கேட்கும் பரிகார பிச்சைகளையும் பார்க்கும் போது, இந்து மதம் இன்று இதுவாக மட்டுமே அற்பர்கள் நெஞ்சில் எஞ்சி இருக்கிறது என்பதன் கூசச் செய்யும் சான்று இது.
விலகி நடந்தால் வலது பக்கம் நூறு கால் மண்டபம். சிம்மங்கள் தாங்கும் தூண்கள் கொண்ட மண்டபம். இரு புறமும் குதிகரைகள் இழுக்கும் சக்கரம் பொருந்திய தேர் வடிவ மண்டபம். அருகே அம்மன் சன்னதி உள்ளே கருவறைக்குள் அம்பிகை (ஆமாம் அவள் பெயர் என்ன?) சுடர் ஒளியில், கருங்கன்னங்களில் ஒளி மின்ன நின்றிருந்தாள்.
சந்திரசூடேஸ்வரர் சன்னதிக்கு முன்னே சிம்ம வாகனம் கொண்ட அழகிய துவார பாலகர்கள். சன்னதி சுற்றி வந்தால், ஸப்த கன்னியர், சண்டேசர், மகிஷாசுரமர்தினி போன்ற அழகிய சிலைகள். நடுவே குண்டலினி யோகி என்று ஒருவர். (யார் ஐயா நீங்கள்) வலது கால் உயர்த்தி வேறு நடனத்தில் நடராஜர், எல்லோரையும் சுற்றி வந்து பார்த்து விட்டு கருவறை கண்டால், பேரதிசயம் அரு உரு அமைதி கொண்டு அமைந்த லிங்க திருமேனி. தத் புருஷம், வாமதேவம் போன்ற நாற்றிசை முகங்கள் கொண்ட, சிவனார் முகம் கொண்ட லிங்கத் திருமேனி. அநேகமாக தமிழ் நிலத்தில் கருவறையில், வணங்க தக்க நிலையில் உள்ள முகம் கொண்ட லிங்க திருமேனி கொண்ட ஒரே கோயில் இதுவாக இருக்கலாம்.
வணங்கி மீண்டு, அடுத்த சன்னதியில் வக்ர காளி அம்மனை தரிசித்தேன். எட்டு அடி உயரத்தில் அட்ட புஜங்கள் கொண்ட அன்னை. முகம் தவிர வேறு எதுவுமே தெரியா வண்ணம் அலங்காரம். முகம் அத்தனை பேரழகு. அந்த புல்லாக்கு மூக்குத்தி,… நெடு நேரம் அன்னையை விழி விலக்காது நோக்கி நின்றிருந்தேன். காணக் காண உள்ளே பொங்கும் நூறு நூறு வெண் முரஸின் சித்திரங்கள். இவள் இவ்விதம் வந்து கொல்வாள் எனில் இனிதன்றோ அச்சாவு. என் வாழ்வில் என்னுடன் பிணைந்த எல்லோர் சார்பாகவும் வேண்டிக்கொண்டேன்.
எல்லாம் முடித்து ஊர் திரும்பும் போது கோடி கோடி ஆண்டுகளை கண்டுவிட்டோம் எனும்படிக்கான ஒரு பிரமிப்பு. நினைவாக அந்த செங்களத்தில் இருந்து, என் நூலக அலமாரியில் வைக்க கல் மரத்தின் துண்டு ஒன்றை எடுத்துக்கொண்டேன். இதுவும் சிவமே.