கோவை புத்தகக் கண்காட்சி, திரிச்சூர், சில நாட்கள்

கோவையில் இந்த நாட்களில் மிக இனிய காலநிலை. மழை இல்லை, ஆனால் எந்நேரமும் மழைக்கு முந்தைய குளிரும், காற்றும் ,மங்கலான ஒளியும் இருந்தன. நான் ஜூலை 18 மாலை வீட்டில் இருந்து கிளம்பி வாசிப்புப் பயிற்சி முகாம் நடத்துவதற்காக அந்தியூர் சென்றேன். 21 மாலை வரை ஜூலை குருபூர்ணிமா கொண்டாட்டம். அன்றே பெருந்தலையூர் ஜனநாயக வெற்றிவிழா. அன்றிரவு ஸூம் வழியாக குருபூர்ணிமா உரை. வெண்முரசு பற்றிய கேள்விபதில் அமர்வு.

ஜூந் 22 காலையில் கிளம்பி கோவைக்கு வந்தேன். காலையில் விஷ்ணுபுரம் அலுவலகம் சென்று வெண்முரசு நூல்களில் கையெழுத்திட ஆரம்பித்தேன். ஒருநாளில் 15 ‘செட்’ வரை கையெழுத்திட முடிந்தது. நண்பர் கொரியா சதீஷ்குமார் வந்திருந்தார். ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் உடனிருந்தார். இருவரும் கையெழுத்திடுவதில் உதவினர். ஏறத்தாழ ஒரு கிலோ எடையுள்ளவை வெண்முரசு நூல்கள் ஒருவர் நூலை எடுத்துத் தரவேண்டும். இன்னொருவர் வாங்கி வைக்கவேண்டும். நடுவே நான் கையெழுத்திடுவேன். இருவருக்கும் தோள் சலிக்கும் வேலைதான்.

மதிய உணவுக்குப்பின் சற்று ஓய்வெடுத்துவிட்டு கோவை புத்தகக் கண்காட்சியில் விஷ்ணுபுரம் அரங்குக்குச் சென்றேன். அங்கே வாசகர்களைச் சந்தித்து, நூல்களில் கையெழுத்திட்டு, புகைப்படம் எடுத்துக்கொண்டு எட்டரை மணி வரை. பெரும்பாலும் நின்றுகொண்டே இருந்தாகவேண்டும். ஸ்கெச்சர்ஸ் ஷூக்கள் நின்றுகொண்டிருப்பதற்கு மிக உதவியானவை என்று அரங்கசாமி 2022ல் வாங்கி அளித்தவை. இன்றுவரை அவற்றைத்தான் போட்டுக்கொண்டிருக்கிறேன்.

எங்கள் அரங்குக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வந்திருந்ததாக செந்தில் சொன்னார். தினமலரில் வெளிவந்த புகைப்படத்தில் அவர் கையில் எடுத்துப் பார்க்கும் புத்தகம் அஜிதனின் மைத்ரி. இந்த அரங்கில் அஜிதனின் நூல்களுக்காகவே வந்த ஒரு சிறு வாசகர்வட்டம் இருப்பதைக் காணமுடிந்தது. குறிப்பாக மருபூமி பலரை ஆழமாக கவர்ந்திருந்தது.

புத்தகக் கண்காட்சியில் கூட்டம் குறைவு என்று சொல்லிக்கொண்டனர். ஆனால் நான் இருந்த நாட்களில் எங்கள் அரங்குகளில் தொடர்ச்சியாகக் கூட்டமும் விற்பனையும் இருந்தது. நண்பர்கள் வந்துகொண்டே இருந்தனர். எங்கள் அரங்குகளுக்கு வரும் வாசகர்களில் பெரும்பாலானவர்கள் மனைவி குழந்தைகளுடன் வருபவர்கள். குழந்தைகளை அறிமுகம் செய்துகொண்டு கொஞ்சி அனுப்புவது என் வழக்கம். இந்த புத்தகக் கண்காட்சியின் உற்சாகமான விஷயம் என நான் எண்ணுவதே தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கும் விதவிதமான குழந்தைகள்தான்.

23 அன்று புத்தகக் கண்காட்சியில் பவா செல்லத்துரை பேசினார். நான் அரங்கில் தொடர்ச்சியாக வாசகர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தமையால் அவர் உரையைக் கேட்கமுடியவில்லை.  உரை முடிந்து பவா என்னைச் சந்திக்க கடைக்கு வந்தார். வழக்கம்போல கட்டித்தழுவல், உற்சாகமான உரையாடல்.

26 ஆம் தேதி காலையில் நான் திரிச்சூர் போவதாக இருந்தது. ஆற்றூர் ரவிவர்மா பேரில் ஓர் அறக்கட்டளை தொடங்கவேண்டும் என நண்பர்கள் முன்முயற்சி எடுத்துள்ளனர். மலையாளக் கவிஞர் அன்வர் அலி, பதிப்பாளர் கே.கே.ஜோணி ஆகியோர்  ஒருங்கிணைப்பாளர்கள். மூத்த கவிஞர் கே.சச்சிதானந்தன் தலைவர். கவிஞர் கல்பற்றா நாராயணன், கே.சி.நாராயணன், பி.பி.ராமச்சந்திரன், பி.ராமன், விம்.எம்.கிரிஜா, அனிதா தம்பி போன்றவர்கள் அறக்கட்டளை உறுப்பினர். அறக்கட்டளையின் முதல் கூட்டம் திரிச்சூரில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆற்றூர் ரவிவர்மாவின் நினைவுநாள் ஜூலை 26 . அன்று மாலை ஒரு நிகழ்வு. ஆற்றூர் நினைவுச் சொற்பொழிவு நான். ஆற்றூர் அறக்கட்டளைச் சொற்பொழிவு  வங்கமொழியாக்க நிபுணர் சம்பூர்ணா சட்டர்ஜி. நான் ரயிலில் செல்வதாக திட்டமிட்டிருந்தேன். 22 ஆம் தேதி கோவை வந்த கிருஷ்ணன் அவரும் வருவதாகச் சொன்னார். அதன்பின் சரசரவென ஆள் சேர்ந்தது. திருப்பூர் ஆனந்தகிருஷ்ணனின் காரில்  வழக்கறிஞர் ஈஸ்வரமூர்த்தி, மொழிபெயர்ப்பாளர் பாரி ஆகியோர் வந்தனர். கிருஷ்ணன் முந்தையநாளே வந்து என்னுடன் தங்கினார். 26 விடியற்காலையில் திரிச்சூருக்குச் சென்றோம்.

வாளையாறு எல்லைக்கு அப்பால் முற்றிலும் வேறொரு நிலம், வேறொரு வானம். மழை பெய்துகொண்டே இருந்தது. வான்முழுக்க முகில்திரள். கண்களை நிறைக்கும் அடர்பசுமை. அதில் காரில் பயணம் செய்வது ஒரு நிறைவூட்டும் அனுபவமாக அமைந்தது.அந்த நிலக்காட்சிக்காகவே அந்தப் பயணம். நடுவே காலையுணவு.  கேரளத்தின் ஆறுகள், நீர் நிறைந்து நின்ற வயல்கள். எனக்கு மலேசியாவிலும் ஜப்பானிலும் அதேபோன்ற முகில்நிறைந்த வான்கீழ் , நீரின் ஒளியில் கண்கூச பயணம் செய்த நினைவுகள் எழுந்தன

எனக்கு வைட் பேலஸ் என்னும் விடுதியில் அறை போடப்பட்டிருந்தது. என்னை அங்கே விட்டுவிட்டு கிருஷ்ணனும் கும்பலும் வாடானப்பள்ளி கடற்கரை, மற்றும் தேவாலயங்களைப் பார்க்கச் சென்றனர். என்னை பார்க்க ஜோணி வந்தார். ஜோணி திரிச்சூர் கரண்ட் புக்ஸ் பதிப்பாளர். என்னுடைய முதல் மலையாளநூலான நெடும்பாதயோரம் அவர் வெளியிட்டது.

மலையாளப் பதிப்புச் சூழல் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். மலையாளத்தில் மிக அதிகமாக விற்கும் நூல்களில் ஆடுஜீவிதம், நூறு நாற்காலிகள், யானைடாக்டர் போன்றவை உண்டு. ஆனால் அவை எல்லாமே ‘ஜுஜுபி’ என்றார் ஜோணி. ஒரு பெண் எழுத்தாளர் எழுதிய மென்பாலியல் காதல்கதை நான்கு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றிருக்கிறது. அதைப்போல மென்பாலியல்- காதல் கதைகள் எழுதும் பத்து பெண்களாவது இருக்கிறார்கள். எல்லா நூல்களுமே லட்சத்துக்குமேல் விற்பனை கொண்டவை. அந்த உலகமே வேறு என்றார்.

கீதா ஹிரண்யன் என் இலக்கியத் தோழி. 2002ல் புற்றுநோயால் மறைந்தார். அவருடைய முதல் நினைவுச் சொற்பொழிவை நான் ஆற்றினேன். கீதாவின் கணவரும் இலக்கிய விமர்சகரும் என் நண்பருமான ஹிரண்யன் அண்மையில் மறைந்தார். ஹிரண்யனின் நினைவுகளை, எனக்கும் அவருக்குமான சில தனிப்பட்ட உரையாடல்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். (வலியெழுத்துநினைவஞ்சலி : கீதா ஹிரண்யன், உடலிலக்கியம்   )

பத்துமணிக்கு ஆற்றூர் அறக்கட்டளையின் பொதுக்குழுக் கூட்டம். ஆற்றூர் நினைவாக வரும் ஆண்டுகளில் செய்யவேண்டிய பணிகளைப் பற்றி விரிவாகப் பேசி முடிவெடுத்தோம். அங்கேயே மதிய உணவு. நானும் கல்பற்றா நாராயணனும் அறையில் சிறிதுநேரம் ஓய்வெடுத்தோம். அதற்குள் கடலோரம் ‘தெண்டித்திரிஞ்ஞ’ கும்பல் திரும்பி வந்தது. என்னை கடுப்பேற்றுவதற்காக அவர்கள் பார்த்த மகத்தான காட்சிகளைப் பற்றிச் சொன்னார்கள். நான் செவிகொடுத்ததாக காட்டிக்கொள்ளவே இல்லை.

மாலை ஐந்து மணிக்கு திரிச்சூர் சாகித்ய அக்காதமியின் கூடத்தில் ஆற்றூர் நினைவு பொதுக்கூட்டம். கே.சச்சிதானந்தன் தலைமையுரை ஆற்றினார். நான் ஆற்றூர் நினைவாக 30 நிமிடம் நீண்ட ஓர் உரையை ஆற்றினேன். சம்பூர்ணா சட்டர்ஜி வங்காளத்தில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்வதிலுள்ள கலாச்சார முரண்பாடுகளைப் பற்றி விரிவான காணொளியுரை அளித்தார்.

 

சத்யஜித் ரேயின் தந்தை சுகுமார் ரே அபத்தக்கவிதைகள் வழியாக பெரும்புகழ் பெற்றவர். அவருடைய கவிதைகளை ஆங்கிலப்படுத்துவது என்பது இரு மொழிகளின் எல்லைகளை பரிசோதிப்பது. ஒரு மொழியின் அர்த்தத்தை மொழியாக்கம் செய்வதே சவால், அர்த்தமின்மையை மொழியாக்கம் செய்வது மாபெரும் சவால். சம்பூர்ணா அதில் வெற்றிபெற்றவர் என்று விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஏழு மணிக்கு திரிச்சூரில் இருந்து கிளம்பிவிட்டோம், இரவு பத்து மணிக்கு மீண்டும் கோவை வந்தேன். 27 அன்று நான் புத்தகக் கண்காட்சி செல்லவில்லை. வேறு சில பணிகள். அஜிதன் அன்றுதான் சென்னையில் இருந்து வந்து புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தான். நான் இல்லாதபோது  பி.ஏ.கிருஷ்ணன், போகன் சங்கர், சுகுமாரன் , எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் கடைக்கு வந்திருந்ததாக சொன்னார்கள். புகைப்படங்களைப் பார்த்தேன்.

ஜூலை 28 ஆம் தேதியுடன் புத்தகக் கண்காட்சி நிறைவு. நல்ல கூட்டம். நான் மதியம் ஒருமணிக்கே கடைக்குச் சென்றேன். அந்த பொழுதிலேயே ஏராளமான வாசகர்கள் வந்து கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். வெண்முரசு நூல்களும் விஷ்ணுபுரமும் கொற்றவையும் விற்றுக்கொண்டிருந்தன. இந்த புத்தகக் கண்காட்சியில் விற்பனையில் இரண்டாமிடம் ஆலம். அதன்பின் படுகளம். முதலிடம் எப்போதுமே அறம்தான்.

மதியம் இரண்டரைமணிக்கு அருகே உள்ள நெய்தல் என்னும் சிறப்பு உணவகத்துக்குச் சாப்பிடச் சென்றோம். கோவையில் மீன் உணவுக்கு அதுவே முதன்மையானது என்று ‘குவிஸ்’ செந்தில்குமார் சொன்னார். நான் ஒரு தனிச்சிறப்பு மீன்சுவைஞன் என்னும் தகுதியின் அடிப்படையில் மேற்படி கூற்றை நிரூபிப்பதற்காக அங்கே கூட்டிச்சென்றார்.

உரிமையாளர் அபிலாஷ் கிருஷ்ணன் வரவேற்று உபசரித்தார். மீனுக்கான எல்லா சமையல்முறைகளும் கொண்ட உணவகம். அங்குள்ல சிறப்புச் சமையல் என்பது நீரிலேயே போட்டு நீந்தவைக்கப்பட்டிருக்கும் மீனை உடனடியாக பிடித்துச் சமைத்துத் தருவது. நான்கு மீன்களை நான்குவகையாகச் சமைக்கச் சொல்லி சாப்பிட்டோம். மீன் மட்டும், ஒரே ஒரு ஆப்பம் மீனுக்குத் தொட்டுக்கொள்வதற்காக.

மெய்யாகவே ஓர் சுவைச்சாதனை. கேரள பாணியில் ‘பொள்ளிச்ச’ மீன், ஜப்பானிய பாணியில் ஆவியில் வேகவைத்து பூண்டுப்பசை பூசப்பட்ட மீன், பொரித்த மீன், வாழையிலையில் பொள்ளித்த மீன் என பலவகைகள். பொதுவாகவே உள்தமிழகத்தில் மீன் நன்றாக சமைக்கப்படும் உணவகங்கள் குறைவு. அசைவத்திற்கு பெயர்பெற்ற மதுரையில்கூட. இந்த விடுதியை தாராளமாக எந்த தேர்ந்த ‘மீன்மலையாளி’க்கும் சிபாரிசு செய்யலாம்.

மாலை முழுக்க விஷ்ணுபுரம் அரங்கில்தான். சு.வேணுகோபால் அரங்குக்கு வந்திருந்தார். அவருடன் அவருடைய கல்லூரி ஆசிரியர்களான துணைவர்களும் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் மருபூமி வாசித்துவிட்டு மிகச்சிறந்த கருத்து சொன்னதாகவும் வாசிக்கவிருப்பதாகவும் வேணுகோபால் சொன்னார். நாய்களைப் பற்றி நான் எழுதிய பின்தொடரும் பிரம்மம் என்னும் நூல் வெளிவந்துள்ளது. வேணுவிடம் கன்னி வகை நாய்கள் பற்றி பேசினேன்.

மாலையில் எஸ்.ராமகிருஷ்ணனும் அவர் மகன் ஹரிப்பிரசாத்தும் வந்திருந்தனர். அஜிதனின் மருபூமி பற்றி ராமகிருஷ்ணன் மிகவும் பாராட்டிச் சொன்னார். ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்கள், மருபூமி ஆகிய கதைகளிலுள்ள அசலான புனைவுலகம் மிகுந்த தனித்தன்மை கொண்டது என்றும், அதில் என்னுடைய சாயல் என ஏதுமில்லை என்பது ஆச்சரியமளிப்பதாகவும் சொன்னார். அஜிதனின் எழுத்தின் முதன்மைச் செல்வாக்கு பஷீர்தான் என்று நான் சொன்னேன்

எஸ்.ராமகிருஷ்ணனின் மகன் ஹரிப்பிரசாத்  இயக்கிய குறும்படம் பல திரைவிழாக்களில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செய்தியை அறிந்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. இவர்களெல்லாம் நான் பொடிப்பையன்களாக பார்த்தவர்கள். ஒவ்வொருவரும் தங்களை நிரூபித்துக்கொண்டு எழுகிறார்கள்.

இன்றுடன் புத்தகக் கண்காட்சி நிறைவு. நான் இன்னும் சிலநாட்கள் கோவையில் இருந்து வெண்முரசு கையொப்பங்களைப் போடவேண்டும். அதன்பின் இங்கிருந்து நேரடியாக மீண்டும் அந்தியூர் மலைக்கு . அடுத்த தத்துவ வகுப்பு.

 

முந்தைய கட்டுரைரா.வீழிநாதன்
அடுத்த கட்டுரைநவீனத்தின் பார்வையில் மரபிலக்கியம்