ஆழத்து அன்னை

அன்புள்ள ஜெ

கொற்றவை நாவலை படித்து முடித்தேன். வெண்முரசுக்குப் பின் கொற்றவை வாசிக்கிறேன். வெண்முரசில் நீங்கள் செல்லத்தக்க எல்லா உச்சமும் வந்துவிட்டன. தமிழ் நவீன இலக்கியத்தில் வெண்முரசுடன் ஒப்பிட மற்ற எல்லா படைப்புகளுமே ஒருவகையில் trivia என்றுதான் சொல்லத்தோன்றுகிறது- நான் அதனுடன் ஒப்பிடுவது மிகக்கடுமையாக உழைத்து வாசித்த In Search of Lost Time. அதிலும் பல ஆண்டுகள் பாரிஸில் வேலைபார்த்ததனால்தான் அதை வாசிக்க முடிந்தது. அதுக்கும் வெண்முரசுக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால என் மனதில் ஒன்றாகப் படிந்துவிட்டன. அதன் ஒற்றுமை என்பது பல நாவல்களை உள்ளடக்கிய நாவல் அது என்பதுதான். அதில் எல்லா வகை நாவல்களின் வடிவங்களும் உள்ளன.

ஆனாலும் கொற்றவை எனக்கு மிகப்பிடித்தமான படைப்பாக இருக்கிறது. இதன்  சுருக்கமும் அடர்த்தியும் இதை ஒரே பார்வையில் பார்த்துவிடலாம் என்று நினைக்கவைக்கின்றன. வடிவக்கச்சிதம் என்றால் கொற்றவை என்றுதான் சொல்லமுடியும்.அவ்வளவு நேர்த்தியான திட்டமிட்ட படைப்பு. அதை ஒரு காவியம் என்று சொல்லலாம். metaepic என்ற வார்த்தைக்கு வெண்முரசு சரியான உதாரணம் என்றாலும் அந்தவகையில் கொற்றவை ஒரு படி மேலே என்று நினைக்கிறேன். கொற்றவை என்றாவது ஆங்கிலத்தில் வெளிவரக்கூடும் என நினைக்கிறேன்.

கொற்றவையின் அந்தக் கனவுப்பரப்பை எவ்வாறு சென்றடைந்தீர்கள், இன்று அது எவ்வாறு உங்களுக்குள் உள்ளது என்று அறிய விரும்புகிறேன்.

ஜான் ஆனந்த்ராஜ்

அன்புள்ள ஜான்

உங்கள் வாசிப்புக்கு நன்றி.

நான் கொற்றவை எழுதிய காலங்களை நினைவுகூர்கிறேன். அண்மையில் அந்நினைவுகள் வந்துகொண்டே இருக்கின்றன. 1997ல் த்தில் நான் பத்மநாபபுரத்தில் குடியேறினேன். நாகர்கோயில் இலக்கியச்சூழலுக்கு அணுக்கமாகி அன்றாடம் என அறிஞர்களைச் சந்தித்துப் பேச ஆரம்பித்தேன். அ.கா.பெருமாள், எம்.வேதசகாயகுமார், குமரிமைந்தன், மா.சுப்ரமணியம், தெ.வே.ஜெகதீசன் என பலர் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தனர்.

2000த்தில் நாகர்கோயில் பார்வதிபுரத்தில் குடியேறினேன். அனைவரும் சந்திக்கும் பொதுவெளியாக என் வீட்டு மொட்டைமாடி இருந்தது. ஏராளமான இலக்கியச் சர்ச்சைகள். நான் நண்பர்களுடன் இணைந்து சொல்புதிது என்னும் சிற்றிதழை தொடங்கினேன். அதில் வரலாற்றாய்வு, பண்பாட்டாய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டோம். தமிழிசை, தமிழியம் சார்ந்து குமரிமைந்தன், வேதசகாயகுமார் ஆகியோர் அதில் எழுதினர்.

குமரிமைந்தன்

அக்காலத்தில் என்னை ஆட்கொண்டிருந்த ஓரு படிம உலகம் தமிழகத்தின் தொல்நிலம். கடல்கொண்ட தமிழகம். குமரிமுனைக்குக் கீழே கடலுக்குள் ஒரு மாபெரும் நிலநீட்சி இருப்பதாக சிலப்பதிகாரம், தொல்காப்பியத்துக்கு பானம்பாரனார் எழுதிய உரை ஆகியவற்றை மேற்கோள் காட்டி நூறாண்டுகளாக தமிழறிஞர்கள் பேசிவந்துள்ளனர். குமரி மலைத்தொடரும் , பஃறுளி ஆறும் இருந்த அந்த நிலத்தில் ஏழ்தெங்குநாடு, ஏழ்பனைநாடு ஆகிய நாடுகள் இருந்தன என்றும், அங்கே தென்மதுரை கபாடபுரம் ஆகிய நகரங்கள் இருந்தன என்றும், கடற்கோளால் அவை முழ்கியழிந்தன என்றும் கூறப்பட்டது.

அக்காலத்தில் சு.கி.ஜெயகரன் எழுதிய குமரி நிலநீட்சி என்னும் நூல் வெளிவந்தது. சு.தியடோர் பாஸ்கரனின் தம்பியாகிய சு.கி.ஜெயகரன் தமிழகத்தின் முக்கியமான நிலவியலாளர்களில் ஒருவர். அவர் எழுதிய ‘மூதாதையரைத் தேடி’ என்னும் நூல் மானுடப்பரிணாமத்தைப் பற்றிய குறிப்பிடத்தக்க நூல். அவர் நிலவியல் சான்றுகளின்படி தெற்கே இன்றுள்ள குமரிக்கடல் எல்லைக்கு அப்பால் கடலுக்குள் மூழ்கிய  நிலப்பரப்புகள் எவையுமில்லை என்று அந்நூலில் வாதிட்டிருந்தார்.

குமரிக்கண்டம் என தமிழறிஞர்கள் சொல்வது ஒரு மிகச்சிறிய நிலநீட்சி மட்டுமே என்றும், சம்ஸ்கிருதத்தின் தொன்மையை வட இந்திய அறிஞர்கள் முன்வைத்தபோது போட்டிக்காக தமிழறிஞர்கள் குமரிக்கண்டம் என்னும் கற்பனையை முன்வைத்தனர் என்றும் அவர் வாதிட்டார். தியோசபிகல் சொசைட்டியினர்   ‘அடித்துவிட்ட’ லெமூரியா என்னும் மூழ்கிய கண்டம் பற்றிய கற்பனையை குமரிக்கண்டம் என்னும் கற்பனையுடன் இணைத்துவிட்டனர் என்றும் நிறுவியிருந்தார்.

எனக்கு அன்றுமின்றும் சு.கி.ஜெயகரனின் தரப்பே அறிவியல்பூர்வமானது என்னும் நம்பிக்கையே உள்ளது. அது முழுமையான ஒரு தரப்பு என நான் நினைக்கவில்லை, ஆனால் அதன் அறிவியல் வினாக்கள் ஆணித்தரமானவை. அதன் மறுதரப்பு இன்னும் அறிவியல்நிரூபணத்தை முன்வைக்கவில்லை. ஆனால் அவர்கள் முன்வைக்கும் பண்பாட்டு விளக்கங்கள் புறக்கணிக்கத்தக்கவை அல்ல

வேதசகாயகுமார் சு.கி.ஜெயகரனின்  அதி தீவிர ஆதரவாளர். தமிழிலக்கியத்தின் தொன்மங்கள் பலவும் நிலவியல் அல்லது வரலாற்று யதார்த்தம் சார்ந்தவை அல்ல என்றும், அவை வெளியே இருந்து கதைகளாக வந்து சேர்ந்து உருமாற்றம் அடைந்தவை என்றும் வேதசகாயகுமார் வாதிட்டார். மணிமேகலையிலுள்ள ஆபுத்திரன் கதை, அமுதசுரபி, மணிபல்லவத் தீவு எல்லாமே சமணத்தொன்மங்கள். கடல்கொண்ட நிலமும் அப்படி வந்தமைந்ததே என்றார். ஆனால் குமரிமைந்தன் குமரிக்கண்ட ஆதரவாளர். அதனாலேயே தன் பெயரை குமரிமைந்தன் என வைத்துக்கொண்டவர். அவர் சு.கி.ஜெயகரன் தரப்பை மிகக்கடுமையாக எதிர்த்தார். அதை எதிர்த்து நீண்ட கட்டுரைக் கடிதங்களை காலச்சுவடு இதழுக்கு அனுப்பினார். அவர்கள் அதை வெளியிடவில்லை.

சு.கி.ஜெயகரன்

ஏனென்றால் பெரும்பாலான தமிழறிஞர்களைப்போல குமரிமைந்தனுக்கு ஆய்வு, மொழியரசியல், இனப்பற்று ஆகிய மூன்றும் ஒன்றே. அவரிடம் புறவயத்தன்மை மிகக்குறைவு. அவருடைய பார்வைகள் அவருடைய சொந்த தர்க்கங்கள் மற்றும் கற்பனையாலானவை. எதிர்த்தரப்பைச் சொல்பவர்கள் ‘தமிழ்எதிரிகள்’ என்றும், அவர்களின் தரப்பு  ‘தமிழருக்கு எதிரான சதி’ என்றும் மட்டும்தான் அவரால் சொல்லமுடியும். அது அவருடைய மனம் செயல்படும் வழி. அவரால் மிகக்கடுமையாக வசைபாடாமல், உணர்ச்சிக்கொந்தளிப்பு இல்லாமல் விவாதிக்க முடியாது. தமிழறிஞர்களில் பெரும்பாலானவர்கள் அப்படித்தான். குமரிமைந்தன் தேவநேயப் பாவாணர் மரபைச் சேர்ந்தவர்.

ஆனால் குமரிமைந்தனும் முக்கியமான ஒரு தரப்பு, அவருடைய வாதங்களும் முக்கியமானவை என நான் நினைத்தேன். ஆகவே சொல்புதிதுஇதழில் அவருடைய நீண்ட கடிதங்களை வெளியிட்டேன். பொடி எழுத்திலேயே அவை பல பக்கங்கள் வரும். குமரிமைந்தன் எனக்கு நெருக்கமானவர் ஆனார். குமரிக்கண்டம் பற்றி பேசிக்கொண்டே இருப்போம். இரவு முழுக்கப் பேசி விடிய வைத்திருக்கிறோம். குமரிமைந்தன் மொத்த தமிழிலக்கியத்தையும், மொத்த தமிழ்த்தொன்மங்களையும் தனக்கே உரிய தர்க்கமுறைப்படி வளைத்தும் நெளித்தும் தன் தரப்புக்கு சான்றாக்குவார். நம்பவே முடியாத கற்பனைவீச்சுடன் சொல்லாய்வு செய்வார்.

ஒரிஸா பாலு

சு.கி.ஜெயகரன் செய்வதுபோல ஒட்டுமொத்தமாக குமரிக்கண்டம் என்னும் கொள்கையை நிராகரிக்கும் அளவுக்கு போதுமான நிலவியல் ஆய்வுகள் நடத்தப்படவில்லை என்பது பொறியாளருமான குமரிமைந்தனின் தரப்பு. தெற்குக் கடலடியில் அன்று நிகழ்ந்த ஆய்வு என்பது மிகமிகப் பெயரளவுக்கே. கேளா ஒலியலைகளால்கூட ஆய்வுகள் செய்யப்பட்டதில்லை. வெறுமே கம்பிகளை கட்டி இறக்கி வெள்ளையர் செய்த கடலின் ஆழம் பற்றிய தரவுகள் மட்டுமே உள்ளன. மூழ்கிய நிலம் இருந்திருந்தால் ஆழம் குறைவாக இருந்திருக்கும் என்பது மட்டுமே நிராகரிப்பாளர்களின் வாதமாக உள்ளது. வேறேதேனும் காரணத்தால் நிலம் ஆழமாக நீரில் மறைய வாய்ப்புண்டா? மெய்யாகவே ஆழமில்லா நிலங்கள் கடலடியில் உள்ளனவா? அந்தவகை ஆய்வே தொடங்காத நிலையில் முடிவுகட்டிவிடலாகாது என்றார் குமரிமைந்தன்.

ஒரு மொழியின் தொன்மத்திலும், இலக்கியத்திலுமுள்ள சான்றுகளை வெறும் நிரூபணவாத தரவுகளைக்கொண்டு ஒரேயடியாக நிராகரிக்கமுடியாது என்றார் குமரிமைந்தன். அவை அப்படி ‘செயற்கையாக’ உருவாக்கப்படுவன அல்ல. அத்தனை சாதாரணமாக தலைமுறை நினைவுகளில் நீடிப்பவையும் அல்ல. ‘இப்போது தொன்மங்களை மூர்க்கமாக நிராகரிக்கும் நிரூபணவாதப்பார்வை ஓங்கியிருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் அவற்றை சான்றுகளாக விளங்கிக்கொள்வதற்கு அவசியமான ஆய்வுமுறைகள் உருவாகி வரும்” என்று குமரிமைந்தன் வாதிட்டார். அடுத்த இருபதாண்டுகளில் அவை உருவாகி வருவதை பார்த்தபின் உயிர்விடவும் அவருக்கும் வாழ்வு அமைந்தது.

ஞானி

குமரிமைந்தன் நெல்லையில் வாந்த வெள்ளுவன் என்னும் நண்பரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். வெள்ளுவன் இப்போது சோதிடநூலாக இருப்பவை பழைய தமிழரின் வானியல்நூல்கள் என வாதிட்டார். அவர் அந்நூல்களின் கணிப்புகளின்படி குமரிக்கு அப்பால் கடலில் மூழ்கிய பெருநிலம் உள்ளது என்று பல கணிதச்சான்றுகளுடன் வாதிட்டார். அக்கட்டுரைகளையும் சொல்புதிதில் வெளியிட்டோம்

அக்காலத்தில் ஒரிசா பாலு என்னும் நண்பர் என்னைப் பார்க்க வந்தார். அவர் ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக எண்ணைக்காக கடலடி ஆய்வு செய்துகொண்டிருந்தார். அப்போதுதான் ரிலையன்ஸ் கடலடி ஆய்வுகளை தொடங்கியிருந்தது. ஆழமில்லாத பல நிலப்பகுதிகளை ரிலையன்ஸ் கண்டடைந்திருந்தது. பல இடங்களில் பவளப்பாறைகள் மூடிய பாறையடுக்குகள் மனிதக்கட்டுமானமோ என்ற சந்தேகம் எழுப்பும்படி தெரிந்தன. ஒரிசா பாலு அவற்றை புகைப்படங்கள், காணொளிகளாக என் வீட்டு கணிப்பொறியில் போட்டுக் காட்டினார். கிளர்ச்சியூட்டும் காட்சிகளாக அவை இருந்தன.

ஒரிசா பாலு என்னை ரிலையன்ஸின் படகில் முட்டம் அருகே கடலுக்குள அழைத்துச்சென்றார். கடலுக்குள் எட்டு கிலோமீட்டர் தொலைவில் ஓர் இடத்தில் என்னை இடுப்பளவு ஆழத்தில் நிற்கச்செய்தார். (மணிபல்லவம் என்னும் கதை அதைச்சார்ந்து எழுதியுள்ளேன்)

சோதிப்பிரகாசம்

பின்னர் ரிலையன்ஸ் அந்தக் கடலடி ஆய்வுகளை அப்படியே புதைத்துவிட்டது என்றும், அச்செய்திகள் வெளிவந்தால் கடலடியில் எண்ணை எடுக்கும் பணிக்கு எதிர்ப்பு வரும் என்றும் ஒரிசா பாலு என்னைச் சந்தித்து சொன்னார். அதற்கு எதிராக அவர் ஆங்காங்கே உரைகளும் ஆற்றிவந்தார். ஆனால் அவர் முறையான தரவுகளை சேகரித்திருக்கவில்லை என்றும், முறையாக சர்வதேசக் கலாச்சார அமைப்புகளை அணுகவில்லை என்றும் அறிந்தேன். அவர்   உள்ளூர் தமிழியக்க அரசியல்வாதிகளையே சந்தித்தார். அவர்கள் வெறுமே உணர்ச்சியுரைகள்,வெறுப்புரைகள் ஆற்றிவிட்டு அப்படியே கடந்துசென்றனர். ஒரிசா பாலு ஒரு நல்ல ஆய்வேட்டைக்கூட உருவாக்கவில்லை என ஆய்வாளரான நண்பர் சொன்னார்.

நான் ஆய்வாளன் அல்ல, இத்துறையில் என்னால் ஒன்றும் சொல்லவும் முடியாது. ஆனால் எனக்கு அந்த காலகட்டத்தின் விவாதங்கள் பெரும் கனவுக்கொப்பளிப்பை உருவாக்கின. எங்களூரில் மூழ்கிய கடல்நிலம் பற்றிய செவிவழிக் கதைகள் ஏராளம். என் அப்பாவின் தோழரும் மீனவருமான ஸ்தனிஸ்லாஸ் மாமா விரிவாக அக்கதைகளைச் சொல்வார், ஒரே கதை ஒவ்வொருமுறையும் வேறுவேறாக இருக்கும். மூழ்கிய நகர் ஒன்றில் நீந்தியலைவது பற்றிய கனவு என் 5 வயது முதல் உள்ளது அக்கனவுகள் உக்கிரம் கொண்டன. அப்போது ஒருமுறை காய்ச்சல் வந்தபோது ஒரு வாரகாலம் நான் அக்கனவிலேயே வாழ்ந்தேன்.

சுமதி ராமசாமி

கொற்றவை எழுதும்போது தென்னிந்திய கடல்நிலம் சார்ந்த ஆய்வுநூல்களை தேடித்தேடி வாசித்தேன். ஜெயகரனிடம் கடிதத்தொடர்பில் இருந்தேன். சு.கி. ஜெயகரனின் தரப்பை மேலும் விரிவான களத்தில் விவாதித்து சுமதி ராமசாமி எழுதிய நூல் The Lost Land of Lemuria குமரிக்கண்டம் என்னும் கற்பனை எப்படியெல்லாம் ஆதாரங்கள் ஏதுமில்லாமல் வெறும் பண்பாட்டு உருவகமாகவே உருவாக்கப்பட்டது என நிறுவுகிறது. தமிழில் அதிகம் பேசப்படவில்லை என்றாலும் அந்நூல் இத்த ஆய்வுகளில் முதன்மையானது.

ஆனால் மெல்லமெல்ல அறிவியல்சார்ந்த மனநிலையில் இருந்து குமரிமைந்தன் உருவாக்கிய கனவுசார்ந்த மனநிலைக்குச் சென்றேன். அதில் மாதக்கணக்கில் திளைத்தேன். கோவை ஞானிக்கும், சோதிப்பிரகாசத்துக்கும் நீண்ட கடிதங்கள் எழுதிக்கொண்டே இருந்தேன். அவர்கள் இருவருமே குமரிக்கண்டத்தின் ஆதரவாளர்கள். சோதிப்பிரகாசம் நூல்கள், கட்டுரைகள் என அனுப்பிக் கொண்டே இருந்தார். என்னுடைய அதே கனவுநிலையின் மறுபக்கத்தில் இருந்தார். கோவை ஞானி அன்று மார்க்ஸியத்தில் இருந்து தமிழியம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். அவரும் என்னுடன் இருந்தார்.

அதுவே கொற்றவையின் அடித்தளம். அக்கனவை மீட்டி மீட்டி மொத்த தமிழ்வரலாற்றையும் இணைத்து ஒரு பின்னலை உருவாக்கிக் கொண்டேன். அதை இந்திய வரலாற்றில் பொருத்திக்கொண்டேன். ஆனால் அது ஒருவகையான அகவரலாறு. தொன்மங்களின் வழியாக, கற்பனையால் உருவாக்கப்படுவது. அதற்கு புறவயமான நிரூபணங்கள் தேவையில்லை. கற்பனை செய்வதற்கான முகாந்திரமே போதுமானது.

அன்று பலவகையான விமர்சனங்கள் வந்தன. சோவியத்ருஷ்யா வீழ்ச்சிக்குப்பின் தமிழியம் மீண்டும் அரசியல்தரப்பாக உருவாகி வந்துகொண்டிருந்த காலம் அது. நான் அன்று தமிழியர்களை ‘மகிழ்விப்பதற்காக’ அதை எழுதினேன் என்ற இடதுசாரி விமர்சனம் எழுந்தது. ராஜ் கௌதமன் நான் பீலா விட்டிருப்பதாக விமர்சனம் செய்தார். குமரிக்கண்டம் என்பதே வேளாளர்களின் ஒரு பகல்கனவு என்பது அவருடைய தரப்பு.

ஆனால் நான் அதை எழுதியது எனக்காக மட்டுமே. கொற்றவையின் கனவுவெளியில் என் ஆன்மிகப்பயணத்திற்குரிய  ரகசியப்பாதை. என் தாய்வழிச் சமூகத்தின் வேரில் இருந்து, என் அன்னையரில் இருந்து நான் அப்பயணத்தை மேற்கொண்டேன். என் குலதெய்வங்களை அந்தப் பயணத்தில் கண்டடைந்தேன். அது கடல் ஆழம் அல்ல என் ஆழம்தான்.

அந்தப்பயணம் வெண்முரசில் இளநாகனின், பீமனின், யுதிஷ்டிரனின், அர்ஜுனனின் பயணங்களாக விரிந்துகொண்டே செல்வதை வாசகர் காணலாம். இன்று நான் வரலாற்றுக்கு முந்தைய கற்காலத்தின் பண்பாட்டு எச்சங்கள் வழியாக அதே பித்துடன், அதே கனவுடன் சென்றுகொண்டிருக்கிறேன்.

ஜெ

 

முந்தைய கட்டுரைபிரமிளா பிரதீபன்
அடுத்த கட்டுரைஅஞ்சலி: அந்திமழை இளங்கோவன்