நான் வாசித்தல் பற்றிய உங்கள் இரு நூல்களை வாசித்திருக்கிறேன். எழுதுக என்னும் நூலையும் வாசித்தேன். இந்த நூல்கள் என் வாழ்க்கையில் அளித்த மாற்றம் மிக முக்கியமானது. நான் எழுத்தாளனாக ஆக முடியும் என நினைக்கவில்லை. அதேபோல ஓர் அறிவுஜீவி ஆகிவிடவேண்டும் என்னும் எண்ணமும் என்னிடம் இல்லை. ஆனால் என் வாழ்க்கையிலுள்ள வெறுமையை மீறிச்செல்லவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. வெறுமை என்பது எதனால் என்று எனக்கே தெரியும். நான் என் survival காக ஒரு வேலையைச் செய்கிறேன். குடும்பம் இருக்கிறது. எளிமையான அன்றாட வாழ்க்கை. ஓரளவு சேமிப்பு உள்ளது. வாழ்க்கை இப்படியே முடிந்துவிடும் என்பதும் தெரிகிறது. என் நண்பர்களே ‘இன்னும் பத்து வருசத்திலே சுகரோ பிரசரோ வந்திரும். அப்றம் அவ்ளவுதான் லைப்’ என்று அடிக்கடிச் சொல்வார்கள்.
நான் யானைடாக்டர் முதலில் வாசித்தேன். அதன்பிறகு அறம். அதன்பிறகு குமரித்துறைவி. வாசிப்பதில் எனக்கு பல சிக்கல்கள் இருந்தன. எழுதும் கலை என்ற நூல் எனக்கு வாசிப்பதற்கான பயிற்சியை அளித்தது. அந்த நூல் வழியாகத்தான் நான் சிறுகதை, நாவல் ஆகியவற்றின் வடிவம் பற்றிய உணர்வை அடைந்தேன். அத்துடன் வாசிப்பது எளிமையாக ஆகிவிட்டது. நிறைய வாசிக்கிறேன். வாசிப்பதைப்பற்றி கொஞ்சம் யோசிக்க முடிகிறது. நண்பர்களிடம் பேசவும் முடிகிறது. அது என் வாழ்க்கையிலுள்ள வெறுமையை இல்லாமலாக்கிவிட்டது. இன்று நான் இன்னொரு மனிதன்.
எழுதும்கலை போன்ற புத்தகங்கள் எழுத்தாளர்களுக்கு மட்டும் உரியவை அல்ல. அவை நாம் தெளிவாகப்பேச உதவுபவை. ஒரு சின்ன கடிதத்தையே தன்னம்பிக்கையுடன் எழுத நம்மால் முடிகிறது. இன்றைய சூழலில் புத்தகங்களை அறிமுகம் செய்வது எளிய விஷயம். அவற்றை எப்படிப் படிப்பது என்று சொல்வதற்குத்தான் நமக்கு ஆளில்ல்லை. ஏராளமானவர்களுக்கு புத்தகம் தேவைப்படுகிறது. அவர்களுக்கு வாசிக்கும் ஆசையும் உள்ளது.ஆனால் வாசிக்க முடிவதில்லை. புத்தகக் கண்காட்சிகளில் புத்தகங்களை ஆசையாக வாங்குகிறார்கள். ஆனால் கொஞ்சம் வாசித்துவிட்டு அப்படியே வைத்துவிடுகிறார்கள்.கொஞ்சம் கொஞமாக வாங்குவதும் நின்றுவிடுகிறது. அத்தாகையவர்களுக்கு இந்த புத்தகங்கள் மிகப்பெரிய உதவி
எந்த புத்தகத்தை வாங்கலாம் என்பது என்றைக்குமே நவீன இலக்கியத்துக்குள் நுழைபவர்களுக்கு மிகப்பெரிய கேள்விதான். புத்தக அறிமுகங்களும் இங்கே குறைவுதான். புத்தகப் பிரமோக்கள் நிறையவே நிகழ்கின்றன. அவற்றை நம்பி புத்தகம் வாங்க முடியாது. நமக்குத்தேவை தமிழில் உள்ள முக்கியமான நூல்களைப் பற்றிய அறிமுகங்கள். அந்தவகையில் எனக்கு உங்களுடைய நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் , கண்ணீரை பின்தொடர்தல் இரண்டுமே மிக முக்கியமான நூல்கள். அந்த இரு நூல்களிலும் தமிழில் ஒரு நல்ல இலக்கியவாசகன் வாசிக்கவேண்டிய நூல்களின் பட்டியலும் அவற்றை எப்படி வாசிக்கவேண்டும் என்ற வழிகாட்டலும் உள்ளது
நன்றி
கிருஷ்ண்ராஜ் வரதராஜன்