இலக்கியம்,அழகியல், வாழ்க்கை -ஒரு கடிதம்

விஷால்ராஜா

 

அன்புள்ள ஜெ,

நான்கு ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக நான் இலக்கியநூல்களை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நிறைய கதைகளை வாசிக்கிறேன். எனக்கு இலக்கியநூல்களை மதிப்பிடுவதில் பிரச்சினை உள்ளது. ஒரு கதை நன்றாக வந்துள்ளதா இல்லையா என்பதை என்னால் முடிவாகச் சொல்ல முடிவதில்லை. முதலில் நன்றாக இருப்பதாகத் தோன்றும் கதை பிறகு அந்த அளவுக்கு இல்லை என்ற எண்ணம் உருவாகிறது.

விஷால்ராஜாவின் திருவருட்செல்வி வாசித்தேன். அந்தக் கதைகள் வெவ்வேறு வகையில் அமைந்திருந்தன. எனக்கு அவை வாசிக்கும்போது பெரிய உணர்வுகளை அளிக்கவில்லை. ஆனால் நாலைந்து மாதமாகியும் நினைவில் உள்ளன.

பி.கே.பாலகிருஷ்ணனின் நாவலெனும் கலைநிகழ்வு வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவர் சொல்லும் பெரிய நாவல்கள் எவற்றையும் வாசித்ததில்லை. ஆனால் அவர் சொல்லும் இந்த வகையான சிந்தனைகள் எல்லாவற்றையும் அறிந்துகொண்டுதான் நாம் அவற்றை வாசிக்கவேண்டுமா என்ற குழப்பம் இருக்கிறது.

சரவணன் கிருஷ்ணசாமி

அன்புள்ள சரவணன்

ஓர் இலக்கியவாசகர் தேர்ந்த ரசனையுடன் இலக்கியத்திற்குள் நுழைய வேண்டும் என்று சொன்னால் அது எவ்வளவு அபத்தமாக இருக்கும். நுழைந்து, வாசிக்க வாசிக்க ஒருவர் விரிவடைகிறார். ஆகவே நீங்கள் அடையும் எல்லா குழப்பங்களும் ஒரு வாசகர் ஆற்றலுடன் உருவாகி வருவதற்கான சான்றுகள் மட்டுமே. உங்கள் தகுதியை நீங்கள் குறைத்து மதிப்பிடவேண்டாம்.

இலக்கியப்படைப்புகள் பலவகை. பல உத்திகள், பல அழகியல்கள். உணர்ச்சிகரமானவை உண்டு, உணர்ச்சியே அற்றவை உண்டு. கொந்தளிப்பான கதைசொல்லும் முறை கொண்டவை உண்டு. வேண்டுமென்றே செய்தியறிக்கை போன்ற அமைப்பை மேற்கொண்டவை உண்டு. அவற்றுக்கான இலக்கணங்கள் அமைந்துள்ளன. அவற்றை பின்னர் தெரிந்துகொள்ளலாம். ஆனால் முதல் அளவுகோல் ஒன்றே. நல்ல படைப்பு நம் நினைவில் நீடிக்கும். ஏனென்றால் அது நம் அகத்தை சீண்டி செயலூக்கம் கொண்டதாக ஆக்குகிறது. நம்மை யோசிக்கச் செய்கிறது. ஒரு படைப்பு வாழ்க்கையைப் பற்றி நமக்கு ஒரு சிந்தனையை உருவாக்குமென்றாலே அது இலக்கியமாக ஆகிவிடுகிறது. அதுவே முதல் தகுதி. விஷால்ராஜாவின் கதைகள் உங்களை என்னவகையில் யோசிக்கவைக்கின்றன என்று நீங்களே மதிப்பிடுங்கள். உங்களுக்குரிய இலக்கியப்பார்வை உருவாகும்.

ஓர் இலக்கியவாசகனின் முழுமைத் தகுதி என்பது அவன் ஒரு காவியத்தை வாசித்து முடிக்கையில் மட்டுமே அமைகிறது என்று சொல்லப்படுவதுண்டு. இலக்கியவடிவங்களில் அதுவே முதன்மையானது. காவிய அனுபவம் இல்லாதவன், எத்தனை புதிய படைப்புகளை வாசித்தாலும் குறுகலான இலக்கிய ரசனையையே கொண்டிருப்பான். இலக்கியத்திற்கு அப்பால் தத்துவம், வரலாறு, மெய்யியல் என விரியமுடியாதவனாக இருப்பான். வாழ்க்கையின் ஏதேனும் ஒரு பக்கம் சார்ந்து மட்டுமே பார்வை கொண்டிருப்பான்.

காவியங்களின் இடம் நவீன இலக்கியத்தில் மாபெரும் நாவல்களுக்கும் உண்டு, அத்தகைய பெருநாவல்களை வாசிப்பதன் அனுபவத்தையே பி.கே.பாலகிருஷ்ணன் எழுதியுள்ளார். மிகச்சுவாரசியமாக எழுதப்பட்ட இந்நூல் வெளிவந்து 70 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றும் மலையாளத்தில் வாசிக்கப்படும் ஒரு கிளாஸிக் இந்நூல். இது பி.கே.பாலகிருஷ்ணன் பெருநாவல்களை அணுகிய முறை. இப்படித்தான் நாமும் அணுகவேண்டும் என்பதில்லை. நாம் நமது பார்வையை அடைய பி.கே.பாலகிருஷ்ணனின் அணுகுமுறை உதவுகிறது.


பி.கே.பாலகிருஷ்ணன் பேசுவது வாழ்க்கைசார்ந்த விஷயங்களையே. வாழ்க்கையின் நுட்பங்களை, சிடுக்குகளை, பற்பல அடுக்குகளை. அவற்றைப் பேசும் களத்தை இந்தப்பெருநாவல்கள் அமைத்துத் தருவதையே அவருடைய நூல் காட்டுகிறது. நாவல்களின் பணி அதுவே. பேரிலக்கியங்களை வாசிக்கும் வழி இதுதான். ஒருபக்கம் வாழ்க்கை இன்னொரு பக்கம் அழகியல். அழகியல் வாழ்க்கையை விளக்கவேண்டும். வாழ்க்கை அழகியலை விளக்கவேண்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைஇஸ்லாம், கடிதம்
அடுத்த கட்டுரைமைத்ரி, ஒற்று, இலக்கணம்