கலை,கனவு, மெய்

கோவை புத்தகக் கண்காட்சி விஷ்ணுபுரம் அரங்கில் வாசகர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். ஓரிரு சொற்கள் பேசி , நூல்களில் கையெழுத்திடுகிறேன். மிக அரிதாக சட்டென்று ஓர் இலக்கிய விவாதம் உருவாகும். சுருக்கமாக நிகழவேண்டியிருக்கும், ஏனென்றால் சூழல் அப்படி. அவ்வண்ணம் ஒரு விவாதம். ஒரு வாசகர் “சார் விஷ்ணுபுரம் நாவலை எப்டி வாசிக்கிறது?” என்றார்.

“எதைக் கேக்கிறீங்க?” என்றேன். பொதுவாக  இலக்கியச் சூழலின் விவாதங்களுக்குள் ஈடுபடாத வாசகர்கள் அத்தகையப் பொதுக் கேள்விகளைத்தான் கேட்பார்கள். ஆனால் அக்கேள்வியை நாம் சற்று தொடர்ந்து சென்றால் உண்மையான வாசிப்புச் சிக்கல் ஒன்றை, பண்பாட்டுப் புதிர் ஒன்றைச் சென்றடைந்துவிட முடியும். ஆனால் சிற்றிதழ்சார் இலக்கிய உலகின் மொழியில் அல்லது முகநூல் இலக்கிய வம்பின் மொழியில் ‘சரியாக’ முன்வைக்கப்படுவது ஒரு ‘டெம்ப்ளேட்’ கேள்வியாக இருக்கவே வாய்ப்பதிகம்.

அந்த வாசகர் சொன்னார். “நான் விஷ்ணுபுரம் நாவலை இதுவரை மூணு காப்பி வாங்கியிருக்கேன். மூணும் கைய விட்டு போயிடுச்சு. நாலஞ்சு தடவை வாசிக்க முயற்சி பண்ணினேன்…முன்னாடி போக முடியலை”

“உங்களுக்கு என்ன பிரச்சினை?”

“அதிலே ஒரு தொடக்கசீன் வருது. ஒருத்தர் விஷ்ணுசிலை ஒண்ணை மணலிலே இருந்து தோண்டி எடுக்கிறார். ஆனா அப்றம் அதைப்பத்தி ஒண்ணும் வரலை. அடுத்த அத்தியாயங்களிலே ஒரு கோயில் பூஜை வருது… விஷ்ணுபுராணத்தோட தொடர்பு இருக்கும்னு நினைச்சேன். அந்த தொடர்பையும் காணமுடியலை”

நான் விளக்கினேன். “விஷ்ணுபுராணத்தோட விஷ்ணுபுரம் நாவலுக்கு நேரடியா தொடர்பு இல்லை. இதுவரை நீங்க வாசிச்ச எந்த புத்தகத்தோடயும் அதுக்கு தொடர்ச்சி கிடையாது. அது ஒரு புது உலகம். அப்டி நினைச்சாத்தான் உள்ளே போக முடியும்”.

அவருக்கு நான் சொன்னவை இவை. விஷ்ணுபுரம் இன்று வாசிக்கக் கடினமான நூல்தான். ஆனால் அது அவ்வாறு ஒரு கடினமான வாசிப்பை அளிக்கவேண்டும் என்னும் நோக்கம் கொண்ட படைப்பு அல்ல. இன்றையவாசகன் அதை அணுகுவதில் இருக்கும் மிகப்பெரிய தடை என்பது இன்று நமக்கு நம் மரபுடன் தொடர்பு அறுந்துவிட்டிருக்கிறது என்பதுதான். நம் ஊர்களில் எல்லாம் பேராலயங்கள் நின்றுள்ளன. அங்கே பல்லாயிரம் கலைப்படைப்புகள் உள்ளன. வழிபாட்டுச் சடங்குகளும் விழாக்களும் நிகழ்கின்றன. கலைநிகழ்வுகள் நடைபெறுகின்றன.

ஆனால் அவற்றின் அழகியல் நமக்குத் தெரியாது. அந்த மனநிலை அன்னியமானது. அவற்றுக்குப் பின்னாலுள்ள தத்துவம் அறிமுகமே இல்லை. இந்த அளவு தன் மரபுடன் தானே விலக்கம் கொண்ட சமூகங்கள் உலகிலேயே மிக அரிதானவை. பெரும்பாலும் ஆக்ரமிப்புகளால் அழிந்து, தன் மேலேயே நம்பிக்கையிழந்து, பல்வேறு அகக்குறுகல்கள் கொண்ட சமூகங்களே இப்படி ஓர் விடுபடலை அடையும். நாம் அப்படிப்பட்டவர்கள். அந்த அறுபட்ட தன்மையால்தான் முற்றிலும் மரபில் இருந்து உருவாகி வந்து, மரபை மறுவரையறை செய்யும் விஷ்ணுபுரத்திற்குள் நுழைவது கடினமாக உள்ளது.

ஒரு நவீன வாசகன் விஷ்ணுபுரம் வாசிக்கையில் தகவல்களுக்காகக் கொஞ்சம் முயற்சி செய்தால்போதும். ஒரு கலைச்சொல் வரும்போது இணையத்தில் அதை தேடி அது என்ன என்று பார்க்கலாம். தெரியாதவற்றைக் குறித்துக்கொள்ளலாம். மொத்தநாவலையும் கவனமாக வாசித்து அதன் அடுக்குகளை ஒரு மன வரைபடமாக ஆக்கிக்கொள்ளலாம்.  சற்று உழைக்கவேண்டும். ஆனால் அந்த உழைப்பு பயனற்றது அல்ல. சிக்கலான சில நவீன இலக்கியப் படைப்புகள் படித்து முடித்ததும் ஒரு சூதாட்டம் முடிந்த நிறைவையும் சலிப்பையுமே அளிக்கும். விஷ்ணுபுரம் அப்படி அல்ல. அது இந்த மண்ணில் நிகழ்ந்துகொண்டே இருக்கும் மெய்த்தேடலின் பல்வேறு உளப்போக்குகளை, படிநிலைகளை புரியவைக்கும். தேடல்கொண்ட ஒவ்வொருவரிலும் உருவாகும் அகப்பயணத்தை மேலும் துல்லியமாகப் பார்க்கச் செய்யும். விஷ்ணுபுரம் எல்லா வகையிலும் ஓர் மெய்யியல்பயிற்சியும் ஓர் ஊழ்கப்பயணமும்தான்.

கூடவே அது கலை அளிக்கும் களிப்பையும், கண்டடைதலின் உவகையையும் அளித்துக் கொண்டே இருக்கும். கலையினூடாக நிகழும் மெய்யியல் பயணம் அது. விஷ்ணுபுரம் படிக்க வேறு தத்துவநூல்களின் உதவி தேவை இல்லை. வேறெந்த மதநூல்களையும், ஆன்மிகநூல்களையும் படிக்கவேண்டியதில்லை. அந்நாவலை படித்துச்செல்லுந்தோறும் அதுவே தன்னைப் புரிந்துகொள்வதற்கான பயிற்சியை அளிக்கும். அதை படித்து முடித்தவர் இந்தியக்கலை, இந்திய மெய்யியல், இந்தியக் காவிய இயல் ஆகியவற்றைப் பற்றிய அடிப்படைப்புரிதலை அதிலிருந்தே அடைந்தவர் ஆகிறார்.

அதன் அமைப்பு ஓர் இலக்கியக் கட்டுமானம் என்றவகையில் பல அடுக்குகள் கொண்டது, சிக்கலானது. ஆனால் செயற்கையான சிக்கல் அல்ல. இங்கே நாம் ஒவ்வொருவரும் எப்படி நம் மரபை அறிந்துகொண்டிருக்கிறோமோ அப்படி, அதே சிக்கலுடன் அந்நாவல் அமைந்துள்ளது. இங்கே நாம் வாழும் மண்ணுக்கு அடியில் புதைந்த வடிவில்தான் நம் பண்டைய வரலாறும், நம் ஆன்மிகமும் உள்ளது. அதை நாம் ஒவ்வொருவரும் அகழ்ந்து எடுத்துக்கொள்கிறோம். நமக்கான உருவகம் ஒன்றை அடைகிறோம். அதையே அந்த முதல் அத்தியாயம் காட்டுகிறது.

நம் ஊரிலேயே இருக்கும் ஓர் ஆலயத்தை நாம் எப்படி அடைகிறோம்? அதன் இறந்தகாலம், அதன் நிகழ்காலம், அதில் உருவாகும் எதிர்காலம் என்னும் மூன்று காலமும் ஒரே சமயம் அதிலிருந்து நம்மை வந்தடைகிறது. அதுவே அந்நாவலின் கட்டமைப்பு. அது ஒரு நிகழ்காலத்தில் தொடங்குகிறது. அதிலிருந்து இறந்தகாலத்துக்கு செல்கிறது. அதன்பின் எதிர்காலத்தைச் சித்தரிக்க ஆரம்பிக்கிறது. நேற்று வாழ்ந்த புலிப்பாணி சித்தர் இன்று ஒரு ஐதீகமாக நம்மிடம் இருக்கிறார். நாம் இங்கிருந்து நேற்றுக்கு பயணம் செய்து அவரை உண்மையான கதாபாத்திரமாக அறியலாம். இன்று நம்மிடையே வாழ்ந்த யோகி ராம்சுரத்குமார் இருநூறாண்டுகளுக்கு பிறகு எப்படி இருப்பார் என்பதை முன்னால் கற்பனை செய்து சென்று அறியலாம். அந்த இரண்டு பயணங்களும்தான் விஷ்ணுபுரத்தில் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

விஷ்ணுபுரம் என்னும் கற்பனையான கோயில் நகரின் 800 ஆண்டுக்கால வரலாறு அந்நாவல். தோராரமாக பொயு 5 ஆம் நூற்றாண்டு முதல் பொயு 13 ஆம் நூற்றாண்டு வரை நிகழ்கிறது. ஆனால் அது வரலாற்றுக்கு அதிக அழுத்தம் அளிக்கவில்லை. ஞானவரலாற்றை மட்டுமே சித்தரிக்க முயல்கிறது. வைதிகம், பௌத்தம், சமணம், பக்தி இயக்கம் என வெவ்வேறு ஞானக்காலகட்டங்கள் எப்படி ஒன்றையொன்று வென்றும் ஒன்றில் இருந்து ஒன்றாக முளைத்தும் உருவாகின்றன என்று காட்டுகிறது. அந்த ஞானவரலாறு தனிமனிதர்களின் அகத்தேடல் வழியாக எப்படி நிகழ்கிறது என்பதை காட்டுகிறது. அதன்வழியாக மனிதனின் மெய்த்தேடலின் வெவ்வேறு முகங்களைக் காட்டுகிறது.

விஷ்ணுபுரம்  இந்தியாவின் ஓர் உருவக வடிவமும் கூட. அந்த கற்பனையையும் இணைத்துக் கொண்டால் நாவலின் தளங்கள் மேலும் விரிந்துகொண்டே செல்லும். நான் அந்த வாசகரிடம் கேட்டேன். “இத்தனை தளங்கள் கொண்ட ஒரு கதைப்பகுதியை 900 பக்கங்களில் சொல்வதென்றால் அதை சுருக்கமாகவும் செறிவாகவும் மட்டும்தானே சொல்ல முடியும்? ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்த கதைகள் வழியாகத்தானே அமைக்க முடியும்? கதைமாந்தரின் வாழ்க்கையில் மெய்ஞானத்துடன் தொடர்புடைய தருணங்களை மட்டும்தானே நாவலுக்குள் சொல்ல முடியும்? அதுதான் அந்நாவலின் வடிவம்”

அவர் நிறைவடைந்து என்னுடன் கைகுலுக்கினார். இன்னொரு பிரதி வாங்கிக்கொண்டார். நான் சொன்னேன். “ஒரு வாசிப்பில், ஒரு சில நாட்களில் முடிந்துவிடும் படைப்பு அல்ல. ஒரு வாழ்நாள் முழுக்க உடனிருக்கும் மிகச்சில படைப்புகளே தமிழில் உள்ளன. அவற்றிலொன்று விஷ்ணுபுரம். கண்டிப்பாக, அனைவருக்கும் உரிய படைப்பு அல்ல. அன்றாடச்சிக்கல்களும் அரசியலுமே பெரும்பாலானவர்களின் உலகம். அதைக் கடந்து ஏதோ ஒருவகையில் இவ்வாழ்க்கையின் ஒட்டுமொத்தத்தைப் பற்றித் தேடல்கொண்டவர்களுக்கு மட்டுமான ஆக்கம் அது. ஆகவேதான் நீண்டநாள் உடனிருக்கவேண்டும் என்பதற்காகவே அந்நூலின் அச்சும் அமைப்பும் வடிவமைக்கப்பட்டுள்ளது”

முந்தைய கட்டுரைபூந்தளிர்
அடுத்த கட்டுரைஇஸ்லாமிய தத்துவ வகுப்பு – கொள்ளு நதீம்