பெருங்கலையின் அறைகூவல்!

‘தமிழ்ப்பதிப்பு வரலாற்றின் மிகப்பெரிய பணி’ வெண்முரசு முழுத்தொகுதி வெளியீடு பற்றி முன்பு எழுதியிருந்தேன். அப்போது அவ்வளவாக அதை யோசிக்கவில்லை. இப்போது மீண்டும் ஒவ்வொரு பெரிய நூலாக எடுத்துப் பார்க்கிறேன். ஒட்டுமொத்தமாக வெளிவந்த நூல்களில், பக்க அளவில், இப்போது வெளிவரும் வெண்முரசு முழுப்பதிப்புதான் பெரியது என்பது மீண்டும் உறுதிப்படுகிறது.

ஆனால் இன்றைய நவீனத் தொழில்நுட்பக் காலகட்டத்தில் நடக்கும் பதிப்புப் பணியை முந்தைய கட்டை அச்சு காலகட்டத்துடன் ஒப்பிடவே முடியாதுதான். அன்று அச்சகங்களில் எழுத்தச்சுகள் குறைவாகவே இருக்கும். ஓரிரு ஃபாரம்கள் அச்சுக்கோக்கப்பட்டு, பிழைநோக்கப்பட்டு, அச்சிடப்பட்டபின் அந்தப் பக்கங்கள் சேமிக்கப்படும்.அதன்பின் அடுத்த ஃபாரம்கள். (ஃபாரம் என்பது 16 அல்லது 32 பக்கங்கள் கொண்ட காகித மடிப்பு) அவை அடுக்கடுக்காக அச்சகம் நிறைந்து இருக்கும். முழுமையாக அச்சிடப்பட்டு, அட்டையும் அச்சானபின் அவற்றை எடுத்து ஒன்றாகச் சேர்த்து தைக்கவேண்டும். காலிகோ அட்டை எனப்பது துணியட்டை போடவேண்டும். அதன்மேல் வண்ணக்காகித அட்டை.

இன்று அச்சுக்கோப்பு இல்லை. பிழைதிருத்தம் வரை கணினியிலேயே முடிந்துவிடுகிறது. பக்கவடிவமைப்பும் கணினியில்தான். அச்சும் மிக விரைவாக நிகழும். ஆனால் இன்றும் கெட்டி அட்டை நூல்களின் கட்டு மனிதக்கையால்தான். அதற்குத்தான் மிகப்பெரிய உழைப்பு செலவாகிறது. இப்போதும் பெரிய நூல்களை அச்சிட்டு அடுக்கி வைப்பதென்பது மிகப்பெரிய மானுட உழைப்பு தேவையாகும் பணியே.

முழுமையாகவே நான்கு பதிப்புகளுக்குமேல் வெளிவந்துவிட்டது. சில நூல்கள் ஐந்து ஆறு பதிப்புகள் வரை வந்துள்ளன. நாவல்தொடர் வெளிவர வெளிவர முதலில் நற்றிணை பதிப்பகமும் அதன்பின் கிழக்கு பதிப்பகமும் நூல்களை வெளியிட்டன. 300 பிரதிகள் வரை படங்கள் கொண்ட, கெட்டியட்டை செம்பதிப்பாக முன்விலைத்திட்டத்தில் வெளியிடப்பட்டன. எஞ்சியவை மக்கள் பதிப்பாக வெளிவந்தன. அவற்றில் ஒவ்வொரு நூலும் விற்றுத் தீரும்தோறும் மீண்டும் அச்சிடப்பட்டன.

ஆனால் முழுமையாக நூல்களை கேட்பவர்கள் இருந்துகொண்டே இருந்தனர்.முழுமையான சேகரிப்பு வேண்டும் என்பவர்கள் ஓரிரு நூல்களை தவறவிட்டு தேடி அலையவேண்டியிருந்தது. வெண்முரசு நூல்கள் மிகப்பெரிய அளவு கொண்டவை. ஆகவே எப்போதுமே அவை 600 பிரதிகளாகவே அச்சிடப்பட்டன. ஒரு நூல் அச்சாகி வெளிவந்து விற்பனையில் இருக்கையில் முந்தைய நூல்கள் விற்று முடிந்திருக்கும். எப்போதுமே ஏதேனும் ஒரு நூலுக்கான விசாரணை இருந்துகொண்டே இருந்தது. அத்துடன் நூல்களின் அளவிலும் வேறுபாடு இருந்தது.

ஆகவே அனைத்து நூல்களையும் முழுமையாக ஒரே தொகுதியாக வெளியிடலாம் என்று முடிவெடுத்தோம். முன்விலைத்திட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. 200 பிரதிகள் முன்விலையில் வாசகர்களால் வாங்கப்பட்டன. இந்த திட்டத்தில் மக்கள் பதிப்பு இல்லை. ஏனென்றால் இந்நூல்களை கேட்பவர்கள் எல்லாருமே ஷண்முகவேலின் ஓவியங்களுடன் கேட்கிறார்கள். தரமான கெட்டி அட்டைக் கட்டு, உயர்ந்த தாள் தேவை என்கிறார்கள். ஆகவே எல்லா நூல்களுமே செம்பதிப்புகள். சில நூல்களில் படங்கள் இல்லை.எஞ்சியவற்றில் ஷண்முகவேலின் வண்ணப்படங்கள் உண்டு.

ஜூலை இறுதிக்குள் நூல்கள் அனுப்பி வைக்கப்படும் என அறிவித்திருந்தோம். இருந்தாலும் ஜூலையில் கோவை புத்தகக் கண்காட்சிக்குள் நூல்கள் வெளிவந்தால் நல்லது என்னும் எண்ணமும் இருந்தது. ஜூலை 22 ஆம் தேதி நூல்கள் வந்து சேர்ந்தன.கோவை புத்தகக் கண்காட்சியில் (அரங்கு எண் 101) நூல்கள் கிடைக்கும்.

நூல்கள் வடவள்ளியில் விஷ்ணுபுரம் பதிப்பகம் கிட்டங்கியில் அடுக்கடுக்காக கூரையை தொட நிறைந்திருந்தன. நடுவே அமர்ந்து நான் கையெழுத்திட்டுக்கொண்டே இருக்கிறேன். 26 தொகுதிகள் 200 பிரதிகள் என்றால் ஐந்தாயிரம் கையெழுத்துக்கும் மேல். தினம் 15 ‘செட்’ கையெழுத்திடுவது என்பது இலக்கு. 12 சாத்தியமாகிறது. மூன்றுநாட்கள் கையெழுத்து போட்டுவிட்டேன். இன்னும் ஒருவாரம் போடவேண்டியிருக்கும் என தோன்றுகிறது.

நூல்களை அனுப்ப தனி அட்டைப்பெட்டிகள். பத்திரமாகக் கட்டி அனுப்புவதற்குண்டான பல்வேறு பொருட்கள். நடுவே வெண்முரசின் தொகுதிகள் புத்தகங்களால் ஆன சுவர் போல தெரிகின்றன. ஒவ்வொரு நூலும் அவ்வளவு எடை. இவற்றை முழுக்க வாங்கப்போகிறார்கள் என்னும் பிரமிப்பு நீங்காமல் இருந்துகொண்டிருக்கிறது.

இத்தனைக்கும் வெண்முரசு தொகுதிகள் அனைத்துமே மின்நூல்களாக உள்ளன. இலவசமாக என் இணையதளம் உட்பட இரண்டு இடங்களில் உள்ளன. எவரோ எல்லாவற்றையும் பிடிஎஃப் ஆக்கி சுற்றவும் விட்டிருக்கிறார்கள். அதற்குமேலும் இவை வாங்கப்படுவதற்கான காரணங்களில் முக்கியமானது இவற்றின் வாசிப்புத்தன்மைதான். வலுவான கதைமாந்தரும், உணர்ச்சிகரமான தருணங்களும், நிகழ்வுகளை கண்முன் காட்டும் சித்தரிப்புத்தன்மையும் கொண்டவை இந்நூல்கள்.

ஆகவே தேர்ந்த இலக்கியவாசகர்கள் முதல் மிக எளிய தொடக்கநிலை வாசகர்கள்கூட வாசிக்கிறார்கள்.  முதற்கனலின் சில அத்தியாயங்களை ஒருவர் வாசித்துவிட்டாரென்றால் அவர் முழுமையாக அத்தனை நூல்களையும் வாசிக்கும் உந்துதலைப் பெற்றுவிடுகிறார். தமிழில் வெண்முரசு தவிர எந்த நூலையுமே வாசித்ததில்லை என்று சொல்லும் வாசகர்களை கண்டுகொண்டே இருக்கிறேன். பல முதியவர்களுக்கு அவர்களின் முழுவாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாக ஆக்கும் ஒரு பெரிய உலகமாக அது உள்ளது. பெற்றோருக்கும் மூத்தோருக்கும் அளிக்கத்தக்க முதன்மையான பரிசாக வெண்முரசு உள்ளது. அதிகமான பிரதிகள் அவ்வாறுதான் விற்கின்றன

மொத்தத் தொகுதிகளின் விலை ஏறத்தாழ ஐம்பதாயிரம் ரூபாய். புத்தகத்திற்கு இத்தனை விலையா என மலைக்கலாம். ஆனால் ஒரு மலிவுவிலை செல்பேசியின் விலை. ஒரு சாதாரண மடிக்கணினியின் விலை. அப்பொருட்கள் அதிகபட்சம் மூன்றாண்டுகள் மட்டுமே உதவுபவை. வெண்முரசுத் தொகுதிகள் ஒரு வாழ்நாள் துணை என அமைபவை. அவற்றை வாசிப்பவர்களுக்கு அவற்றின் மதிப்பு தெரிகிறது. அவர்கள் வாங்குவதில் தயக்கம் கொள்வதில்லை என்பதையே காண்கிறேன்.

ஒரு நவீன இலக்கியவாசகனுக்கு இன்று வாசிக்கக்கிடைக்கும் முதன்மையான கலைப்படைப்புவெளி வெண்முரசு நான் ஐயமறச் சொல்வேன். நவீன இலக்கியத்தின் எல்லா வடிவங்களும், எல்லா புனைவுச்சாத்தியங்களும், எல்லா தேடல்களும் , எல்லா கண்டடைதல்களும் வெண்முரசில் பலமடங்கு பேருருவுடன் அமைந்துள்ளன. வெண்முரசின் உணர்வுத்தருணங்கள், அதன் முரண்முனைகள், அதன் உச்சங்கள் கிட்டத்தட்ட ‘முடிவற்றவை’. ஒருவர் தன் வாழ்நாளை அளித்து வாசிக்கவேண்டியவை.

இன்றைய சராசரி நவீன இலக்கிய வாசகனுக்கு வெண்முரசுக்குள் நுழைய அதன் பேருருவே தடை என எனக்குத் தெரியும். சிறிய அளவில்தான் அவனால் எதையும் உருவகிக்க முடியும், உள்வாங்க  முடியும். உணர்வுகளானாலும் தத்துவமானாலும், தரிசனமானாலும் எளிய அன்றாடமே அவனுடைய அளவுகோல்களை உருவாக்குகிறது. வெண்முரசு அந்த எளிய சராசரி வாசகனுக்குரியது அல்ல. வாசிப்பை ஓர் அறைகூவலென எதிர்கொள்ளும் அறிவாற்றல் கொண்ட வாசகர்களுக்குரியது. வாசிக்க வாசிக்க மேலும் மேலும் என உந்தி எழும் அகவிசை கொண்டவர்களுக்குரியது.

அத்தகைய இளம் வாசகர்களை ஒவ்வொருநாளும் சந்திக்கிறேன். இரண்டுமுறை முழு வெண்முரசையும் வாசித்த ஓர் இளம்வாசகரை நான் சந்திக்காத வாரமே இந்த ஆண்டுகளில் வந்ததில்லை. வெண்முரசு வினாடிவினாக்களில் அதன் இருபத்தாறாயிரம் பக்கங்களில் இருந்து ஒவ்வொரு சிறு கேள்விக்கும் உடனடியாகப் பதில் எழுவதை நான் ஒவ்வொரு முறையும் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். வெண்முரசு இணையக்குழுக்கள், விவாதக்குழுமங்கள், விவாத நிகழ்வுகள் அனேகமாக நாள்தோறும் நிகழ்கின்றன.

அண்மையில் குருபூர்ணிமா உரையில் ஒன்றைச் சொன்னேன். வெண்முரசின் மிகச்சிறந்த வாசகர்கள் கூடிய அவை அது. இன்றைய சூழல் குறைந்த கவனம் கொண்டவர்களுக்குரியது. நாளிதழ்க் கட்டுரைகள் இருநூறு வார்த்தைகளுக்குள் அடங்க வேண்டியிருக்கிறது. அவை ஒற்றைவரிச் செய்திகளாகவும் படங்களாகவும் மேலும் சுருங்கிவிட்டன. காணொளிகள் சுருங்கி ஒருநிமிட நீளம் கொண்டவை ஆகிவிட்டன. திரைப்படங்களில் ஒரு காட்சியின் நீளம் இரண்டு நிமிடத்திற்கு மேல் போகக்கூடாது என்று ஆகிவிட்டது. ‘யார் சார் படிக்கிறாங்க?’ என்னும் குரல் எங்கும் ஒலிக்கிறது.  அதுவே சராசரிகளின் உலகம்.

இந்தச் சூழலில்தான் இருபத்தாறாயிரம் பக்கம் கொண்ட நாவல்தொடர் வெளிவருகிறது. அதை பல்லாயிரம் பேர் படிக்கிறார்கள். பல்லாயிரம் ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள். பலநூறு பேர் பலமுறை படித்திருக்கிறார்கள். சராசரிச் சூழலுக்கு எதிரான ஓர் அறைகூவல் இது. பொதுத்தன்மைக்கு எதிரான மிகத்தீவிரமான ஓர் எதிர்வினை இது. இத்தகைய எதிர்வினைகளே இந்த பெருநுகர்வுச்சூழலில், பொதுக்கேளிக்கைச் சூழலில் கலையும் சிந்தனையும் ஒருபோதும் தோற்றுவிடாது என்பதற்கான சான்றுகள்.

முந்தைய கட்டுரைமயிலை சிவமுத்து
அடுத்த கட்டுரைIs knowledge possible setting aside one’s self?