குமுதம் நிறுவனம் ‘தீராநதி ‘ யை ஓர் இணைய இதழாக நடத்திய தொடக்க நாட்களில் அதன் துணையாசிரியராக இருந்த தளவாய் சுந்தரம் கேட்டுக்கொண்டதற்கிணங்க நான் ‘தமிழில் மொழிபெயர்ப்பு நாவல்கள்’ என்ற தொடரை அதில் எழுதினேன். இணையத்தின் வசதிக்கேற்ப மிகச்சுருக்கமான வடிவமே அதில் வெளிவந்தது. அக்கட்டுரைகளின் முழுவடிவம் இந்நூல்.
இதில் இருபத்திரண்டு இந்திய நாவல்களைப்பற்றிய கட்டுரைகள் உள்ளன. மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளில் அதிகமான நாவல்கள் என் கவனத்துக்கு வந்துள்ளன. இந்தி , மராட்டி நாவல்கள் அடுத்தபடியாக. பொதுவாக என் ரசனையை தூண்டியவை என்பதே என் அளவுகோலாக இருந்தது. நூல்வடிவத்துக்குக் கொண்டு வரும்போது பிரதிநித்துவம் குறித்தும் கவனம் கொண்டேன். ‘வனவாசி ‘ குறித்து எழுதியிருந்தாலும்கூட விபூதி பூஷண் பந்த்யோபாத்யாயவின் ‘ பாதேர் பாஞ்சாலி ‘ பற்றி எழுதியிருந்தமையால் இங்கு தவிர்த்துவிட்டேன். இவ்வரிசையில் வைக்க தகுதியற்ற தெலுங்கு, பஞ்சாபி நாவல்களையும் சேர்த்துக் கொண்டேன்
தெலுங்கைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும். நான் பதினொன்று தெலுங்குநாவல்களை பரிசீலித்தேன். ஒரு இலக்கியவாசகன் புரட்டிப்பார்க்கும் தகுதி பெற்ற நாவல்கள் ஒன்றுகூட இல்லை- இந்நூலில் உள்ள அற்பஜீவியை பொருட்படுத்தலாம், அவ்வளவே. தெலுங்கில் உண்மையிலேயே இலக்கியம் இல்லையா? நாம் காணும் சிரஞ்சீவி திரைப்படங்களின் தரம்தானா அவர்களின் ரசனை? ஒரு சமூகமே அப்படி ரசனையற்ற தடித்தனத்துடன் இருக்க இயலுமா என்ன? புரியவில்லை.
இந்த நாவல்களைப்படிக்கையில் சிலர் தமிழுக்கு மேலான இலக்கியங்களைக் கொண்டுவருவதையே தங்கள் வாழ்நாள்பணியாக செய்துவருவதைக் கவனித்தேன். துளசி ஜெயராமன், சு.கிருஷ்ணமூர்த்தி, பா.பாலசுப்ரமணியம், இளம்பாரதி , டி.பி.சித்தலிங்கய்யா ஆகியோரை எடுத்துச் சொல்லலாம். குறிப்பாக துளசி ஜெயராமன் இந்திவழியாக அசாமி ஒரியா குஜராத்தி உட்பட பல நூல்களை தமிழுக்குக் கொண்டுவந்துள்ளார். அவற்றில் ‘ வாழ்க்கை ஒரு நாடகம்’ [பன்னாலால் பட்டேல்] போன்ற பேரிலக்கியங்களும் உண்டு. சு.கிருஷ்ணமூர்த்தி வங்க இலக்கியங்களை தமிழுக்கு தொடர்ந்து கொண்டுவந்திருக்கிறார். த.நா.குமாரசுவாமி, த.,நா.சேனாபதி ஆகியோரின் பங்களிப்புக்கு இணையான சாதனை அது
தமிழில் சொல்லும்படி ஒருவரிகூட எழுதாதவர்கள் இலக்கிய அரசியலில் புகுந்து வசைகள் அமளிகள் மூலம் இதழ்களில் இடம்பெற்று வாசகனுக்கு தெரிந்தவர்களாக ஆகிறார்கள். இலக்கியத்திற்கு வாழ்க்கையை அர்ப்பணித்த இம்மொழிபெயர்ப்பாளர்களை நல்ல வாசகன் கூட நினைவுகூரமாட்டான் என்பதே நம் சூழலின் அவலம். இச்சந்தர்ப்பத்தில் ஒரு வாசகனாக இம்மொழிபெயர்ப்பாளர்களுக்கு என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
*
இப்போது என்னை ஆட்கொள்ளும் எண்ணங்கள் பல. இவையெல்லாமே பொதுவாக மானுட துக்கத்தின் கதைகளே. வீழ்ச்சியின் , இழப்பின் சித்திரங்கள். இந்திய விவசாயியின் இதிகாசத்தன்மை கொண்ட சமரை சித்தரிக்கும் பன்னாலால் பட்டேலின் வாழ்க்கை ஒரு நாடகமானாலும் சரி , ஒரு அதிகாரியின் ஆணவத்தைக் காட்டும் தகழி சிவசங்கரப்பிள்ளையின் ‘ஏணிப்படிகள்’ஆக இருந்தாலும் சரி. அது இயல்புதான், இலக்கியத்துக்கு எப்போதுமே துயரமே கருப்பொருளாகிறது. துயரக்கடலில் எழும் உதயமே அதனால் மானுட சாரமாக கண்டடையப்படுகிறது
ஆனால் இந்திய நாவல்களில் வரும் மகத்தான பெண் கதாபாத்திரங்களின் துயரமும் தியாகமும் அபூர்வமானவை என்று எனக்குப்பட்டது. இந்திய இலக்கியத்துக்கு என ஏதேனும் தனித்தன்மை இருக்க முடியுமெனில் அது இதுதான் — மண்னளவு பொறுமையும் கருணையும் கொண்ட சக்திவடிவங்களான பெண்கள். ஆதிகவி எழுதிய சீதையின் வடிவம் நம் பண்பாட்டில் ஆழ்படிமமாக உறைந்திருக்கிறது.
இந்தியச் சமூகமே குடும்ப அமைப்பின்மீது அமர்ந்துள்ளது. குடும்பம் பெண்களின் மீது. உறவுகளின் உரசலின் வெம்மையை பெண்களே உணர்கிறார்கள். குழந்தைகளைப் பெற்றவள் என்ற முறையில் இயற்கையின் குரூரத்தையும் முழுமையாக அவர்களே எதிர்கொள்கிறார்கள். மொத்தச் சமூகமே அவர்களின் இடுப்பில் குழந்தைபோல அமர்ந்திருக்கிறது.
எல்லா இந்தியப் படைப்பாளிகளின் நெஞ்சிலும் அவர்கள் அன்னையின் சித்திரம் அழியா ஓவியமாக உள்ளது. அவளுடைய பெரும் தியாகத்தால் உருவானவர்களாக அவர்கள் தங்களை உணர்கிறார்கள். அவர்களின் மிகச்சிறந்த கதாபாத்திரமாக அவளே பேரருளுடன் வெளிப்படுகிறாள். சிவராம காரந்தின் நாகவேணி [ மண்ணும் மனிதரும்] எஸ் எல் பைரப்பாவின் நஞ்சம்மா [ஒரு குடும்பம் சிதைகிறது] விபூதி பூஷன் பந்த்யொபாத்யாயவின் சர்வஜயா [ பாதேர் பாஞ்சாலி ] என உதாரணங்களை அடுக்கியபடியே செல்லலாம்.
மண்மகளான சிதையின் துயரமும் தியாகமும் விவேகமும் தோல்வியேயற்ற மகத்துவமும் இந்நாவல்களின் பெண் கதாபாத்திரங்களில் மீளமீள ஒளிரக் காண்கிறோம். ராஜி [ வாழ்கை ஒரு நாடகம்] பெரிய அண்ணி [நீலகண்டபறவையைத்தேடி] கௌரம்மா [ சிக்கவீர ராஜேந்திரன்] சுமதி [அண்டைவீட்டார்] கார்த்தியாயினி [ ஏணிப்படிகள்]. இவ்வனைவருமே இணையும் ஒரு புள்ளி உள்ளது, அதுவெ இந்திய இலக்கியத்தின் சாரம் என நான் எண்ணுகிறேன். வாசகர்கள் அதை கவனிப்பார்கள் என்றும் நம்புகிறேன்
காளிதாசன் ஆதிகவி வான்மீகியைப்பற்றிச் சொல்லும்போது ‘கண்ணீரைப் பின்தொடர்ந்தவன்’ என்கிறான். கிரௌஞ்சப்பறவையின் கண்ணீரை. சீதையின் கண்ணீரை. இந்திய நாவலாசிரியர்கள் அனைவருமே அப்படித்தான். அவ்வகையில் பார்த்தால் ஆதிகவியின் குரலின் ரீங்காரம்தான் நம் பேரிலக்கியங்களெல்லாம்.
*
தொடர்ந்து வியப்புடன் வாசகர்வட்டம் வெளியிட்ட நாவல்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் வைத்திருக்கும் எல்லா வாசகர்வட்ட நூல்களும் பழைய புத்தகக் கடைகளில் வாங்கியவை, முப்பது, நாற்பதுவருடம் பழையவை. அவற்றின் அட்டையும் கட்டும் இன்னும் உறுதியாகவே உள்ளன. நேர்த்தியான அச்சும் அமைப்பும் கொண்ட நூல்கள். வாசகர்வட்ட மொழியாக்கங்கள் எல்லாமே சிறப்பாக செப்பனிடப்பட்ட அழகிய மொழியில் உள்ளன. இந்த நேர்த்தியும் அர்ப்பணிப்பும் தமிழில் அபூர்வமானவை
வாசகர்வட்டம் லட்சுமி கிருஷ்ணமூர்த்தியை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவருக்கு இந்நூல் சமர்ப்பணம். தளவாய் சுந்தரம், மனுஷ்ய புத்திரன் ஆகியோருக்கு நன்றி
தமிழில் வந்த இந்திய நாவல்களின் முழுமையற்ற பட்டியல் ஒன்று பின்னிணைப்பாக உள்ளது. வாசகர்களுக்கு பயன்படுமென எண்ணுகிறேன்.