தமிழில் உண்ணிக்கிருஷ்ணன் முக்கியமான திரைப்பாடகராக உருவாகி வந்தபோது அந்தப் பெயர் சட்டென்று கவனம்பெற்றது. கேலிக்குரியதாகவும் ஆகியது. உண்ணி என்பதை உன்னி என்று தமிழில் பல இதழ்களில் எழுதினார்கள். அந்தப்பெயரின் பொருள் ‘குழந்தைக் கிருஷ்ணன்’ என்று சொல்லவேண்டியிருந்தது. மிகச்சரியாகச் சொல்லவேண்டும் என்றால் கைக்குழந்தை.
தமிழகத்திலும் குழந்தைத் தெய்வம் உண்டு. குறிப்பாக முருகன் இங்கே சிறுவனாகவே வழிபடப்படுகிறார். சுவாமிமலை, பழனி போன்ற சில ஊர்களில் சிறுவன் முருகனுக்கு ஆலயங்கள் உண்டு. கண்ணன் என்பதே தமிழில் சிறுவனைக் குறிக்கும் சொல்.எந்தச் சிறுவனையும் நாம் கண்ணா என அழைக்கிறோம். ஆனால் சிறுவனாகிய கண்ணனுக்கு தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களேதும் இல்லை.
இருந்தாலும் தெய்வத்தைக் கைக்குழந்தையாக வழிபடும் மனநிலை தமிழில் மிகக்குறைவு. கைக்குழந்தையாக வழிபடப்படும் ஒரே தெய்வம் கண்ணன்தான். குழந்தைக் கண்ணன் ஆலயம் தமிழகத்தில் எங்கும் இருப்பதாக நான் அறிந்ததில்லை. ஆனால் கேரளத்தில் நூற்றுக்கணக்கான குழந்தை கிருஷ்ணன் ஆலயங்கள் உள்ளன. கேரளத்தின் மிகப்பரவலான பெயர்களிலொன்றாக இருப்பது உண்ணிக் கிருஷ்ணன்தான்.
கேரளத்தின் குழந்தைக் கிருஷ்ணன் பெரும்பாலும் தவழும்குழந்தை. கையில் வெண்ணையுடன் அமர்ந்திருக்கும் சிறு சிலை. சிலசமயம் சிலை சற்று வளர்ந்த சிறுவனுடையதாக இருக்கும், கிஸோரகன் என்று சொல்வார்கள் (கிஷோர் என்பது அச்சொல்லின் இந்தி மருஉ)ஆனால் அங்கும் கண்ணனை கைக்குழந்தையாகவே பக்தர்கள் பாவிப்பார்கள், ஏனென்றால் அந்த மனநிலை அங்கே வேரூன்றிவிட்ட ஒன்று.
கேரளத்தில் குழந்தைக் கிருஷ்ணனுக்கு அலங்காரங்கள், உபச்சாரங்கள் எல்லாமே கைக்குழந்தைக்குரியவை. நைவேத்யம் (படையல்) கூட குழந்தைக்குரிய பால்பாயசம், பால்கஞ்சிதான். அவற்றில் அம்பலப்புழை ஆலயத்தின் பால்பாயசம் மிகப்புகழ்பெற்றது. அரிசியை வறுத்து, பாலில் வேகவைத்து, சில மருந்துகளுடன் சேர்த்து சமைக்கப்படுவது. வெண்ணை சார்த்துவது, வாகைச்சார்த்து எனப்படும் மலர் அலங்காரம் என ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறான சடங்குகள் உண்டு. கேரளப் பெண்களுக்கு மிகப்பிடித்த தெய்வம் கிருஷ்ணன் எனும் கைக்குழந்தைதான். குழந்தைகளுக்கு 28 ஆம் நாள் இடுப்பில் நாண் அணிவிப்பது, ஓராண்டு முடிந்தபின் முதல் அன்னம் ஊட்டுவது எல்லாமே குழந்தைக் கிருஷ்ணனின் ஆலயத்தில்தான் பெரும்பாலும் நிகழும்.
பக்தி இயக்கத்தின் காலகட்டத்திலேயே குழந்தைத்தெய்வம் என்னும் உருவகம் கேரளத்திற்கு வந்து நிலைகொண்டுவிட்டது.குலசேகர ஆழ்வார் ராமனின் அன்னையாகிய கௌசல்யாவாக தன்னை உருவகித்துக் கொண்டு பாடிய பாடல்கள் புகழ்பெற்றவை. பின்னர் வந்த மலையாளக் கவிஞர்கள் குழந்தைக் கிருஷ்ணனை பாடிப்பாடி ஒரு பெரும் கூட்டுப்பிரக்ஞையாக நிலைநிறுத்தினர். அவற்றில் முக்கியமானவை கிருஷ்ணகாதா (செறுசேரி நம்பூதிரி). நாராயணீயம் (மேல்பத்தூர் நாராயண பட்டதிரி).
என் இளமையில் எங்கள் வீட்டுக்கு அருகே இரண்டு உண்ணிக் கிருஷ்ணன் ஆலயங்கள் இருந்தன. இரண்டிலும் அனேகமாக தினமும் ஏதேனும் ஒரு குழந்தையின் பிறந்தநாளை ஒட்டி பால்பாயச நேர்ச்சை வழிபாடு இருக்கும். அரிதாக அப்படி இல்லாத நாட்களில் திரிமதுரம் என்னும் படையல். (கதலிவாழைப்பழம், பசுநெய், தேன் கலவை). நான் ஏதேனும் ஓர் ஆலயத்திற்குச் சென்று அன்றைய இனிப்பை சாப்பிடாமல் பள்ளிக்குச் சென்ற நாட்கள் குறைவு. என் பெயரே கிருஷ்ணனுடையதுதான். ஜயன் என்பதும் கேரளத்தில் பரவலான பெயர். ஜயகிருஷ்ணன்தான் கூடுதல். ஜயமோகன் என்ற பெயர் என் அம்மா எடுத்துக்கொண்ட சுதந்திரம்.
வெண்முரசின் கட்டமைப்பில் குழந்தைக் கிருஷ்ணனுக்கு இடமில்லை. இது மகாபாரதம், மகாபாரதக் கிருஷ்ணன் கோகுலத்தில் பிறந்து லீலை புரிந்த குழந்தை அல்ல. ஆட்சியை விரும்பிய இளவரசனாக அறிமுகமாகி அரசுசூழ்தல் வழியாக பேரரசை நிறுவிய மாமன்னன், தத்துவ ஞானி. பாகவத்த்தினூடாகவே கிருஷ்ணன் இந்தியாவில் குழந்தைத்தெய்வமாக நிறுவப்பட்டார். வெண்முரசு அதற்கு முந்தைய உலகைச் சித்தரிப்பது.
பாகவதம் முன்வைக்கும் பித்துநிலை பக்திக்கு மாறாக தெளிந்த வேதாந்த ஞானத்தையே கிருஷ்ணனின் அடையாளமாக முன்வைக்கிறது வெண்முரசு. இங்கே ஆற்றுவன ஆற்றி, ஆற்றும் செயல்களில் சற்றும் ஒட்டாமல் சென்று மறைந்தவன். அரசனும், மெய்ஞானியுமானவன். போகியும் யோகியுமானவன். முரண்பாடுகளினூடாக திரளும் ஓர் உருவம். அவிழ்க்க அவிழ்க்க சிக்கலாகும் பெரும்புதிர்.
ஆயினும் என்னால் என்னை ஆட்கொண்டிருந்த இளமைநினைவுகளில் இருந்து, அவை உருவாக்கிய கனவுகளில் இருந்து விலக முடியவில்லை. என்னைப் பொறுத்தவரை நம் பிரக்ஞைக்கு அப்பாலுள்ள ஆழ்நிலைகளுக்கு நம்மை ஒப்புக்கொடுத்தலே இலக்கியமென்பது. அதன் தர்க்க ஒழுங்கு ஒரு பொருட்டே அல்ல. நாம் எண்ணி எண்ணி அடுக்கும் ஒவ்வொன்றையும் கலைத்து ஊடுருவி நாம் சென்றடையும் இடங்களையே கலை என்கிறோம். ஆகவே முற்றிலும் மொழிக்கு, மொழி நிகழ்த்தும் உணர்வுகளுக்கும் கனவுகளுக்கும் என்னை அளித்து நீலம் நாவலை எழுதினேன்.
நீலம் முற்றிலும் வெண்முரசுக்கு நேர் எதிரான ஒன்றாகவே இன்றும் வெண்முரசு நூல்நிரையில் நின்றுள்ளது. ஞானத்தை அல்ல ’பிரதிபத்தி’யை அல்லது ‘சரணாகதி’யை மட்டுமே முன்வைக்கும் படைப்பு அது. தன் பெரும்பித்தால் ராதைதான் கிருஷ்ணனை உருவாக்கி எடுக்கிறாள். அந்தப் பீலி அவள் சூட்டியது, அந்த குழல் அவள் அளித்தது, அந்த பெயரே அவளிட்டதுதான்.
முற்றிலும் பிரக்ஞையற்ற நிலையில், முற்றிலும் தன்னைத்தானே அழித்து அழித்து மேற்சென்று, எழுதிய நாவல் நீலம். அதை எழுதிய நாட்கள் இப்போது யோசிக்கையில் கனவுபோல அழிந்து வெறும் வண்ணத்தீற்றல்களாகவே நினைவில் எஞ்சுகின்றன. மொழியை சொல்லிச் சொல்லி, சொற்சுவை வழியாக மட்டுமே முன்னகர்ந்து, எது அமைகிறதோ அதை அப்படியே முன்வைத்தேன். அதன் சொற்சேர்க்கைகளில் உள்ள கட்டற்ற தன்மையைக் காண்கையில் அது என் அகம் அல்ல என்ற கூச்சமும், உண்மையில் அதுதான் நானா என்னும் தடுமாற்றமும் ஒவ்வொரு முறையும் என்னைச் சூழ்கிறது.
வெளிவந்தபோது மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டவை ஷண்முகவேலின் ஓவியங்கள். இன்று திருட்டுப்பிரதிகளாக அவை இந்தியாவெங்கும் பரவியிருக்கின்றன. வெண்முரசு நூல்களில் மிக அழகியதும் நீலம்தான். ஓரு நீலமலர் போல, ஒரு நீலமணிச் சிற்பம்போல. மீண்டும் அதை அச்சில் காண்கிறேன். அதைத் தொடும்போது பேற்றின்போது கிட்டத்தட்ட உயிர்விடும் நிலைக்குச் சென்று மீண்ட அன்னை தன் குழந்தையைத் தொடும் உணர்வை அடைகிறேன்.
(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெண்முரசு 26 தொகுதிகளும் வெளிவந்துள்ளன. முழுத்தொகுப்பாக வாங்கக் கிடைக்கும். தனித்தனி நூல்களும் வாங்கக்கிடைக்கும்.
தொடர்புக்கு : [email protected]
Phone 9080283887)
நீலம்- வாசிப்பனுபவம்- மரபின் மைந்தன் முத்தையா.