அன்புள்ள ஜெ,
காடு நாவல் மீதான வாசிப்புகள் உங்கள் தளத்தில் மட்டுமே ஏராளமாக உள்ளன. காடு ஒரு அற்புதமான கனவு. ஒரு கனவை எப்போது நுணுக்கமாக, அணுக்கமாக பார்க்க முடிகிறது என்றால் அது மறைந்து நீண்டநாட்கள் கழித்து அதை நினைவுகூரும்போதுதான். காடு நாவலின் வடிவம் அப்படி நினைவுகூர்தலாக இருப்பதுதான் அதை அழகாக ஆக்கிவிடுகிறது. அந்தக் கனவு இனி மீளவே மீளாது என்று தோன்றிவிட்டபின் நாவல் தொடங்குகிறது. உடைந்த சிதிலங்களில் இருந்து அந்தக் கனவை கதைநாயகன் மீட்டுக்கொள்கிறான்.
நான் காடு நாவலை 2016ல் முதல் முறையாக வாசித்தேன். அப்போது ஒரு காதல்தோல்வி. (அதைப் பற்றி ஒரு கடிதமும் எழுதியிருந்தேன்) இன்றைக்கு திருமணமாகி, குழந்தைகளுடன் இருக்கிறேன். வாழ்க்கை வேறு திசைக்கு நகர்ந்துவிட்டது. எந்தக்குறையும் இல்லை. மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். இன்றைக்கு அந்தக்காதல் ஒரு வடுதான். காயம் ஆறி வலியெல்லாம் மறைந்த பிற்பாடு வடுவில் ஒரு சின்ன நமைச்சல் மட்டுமே இருக்கும் அல்லவா அதைப்போல.
தென்னைமரம் பற்றி ஒரு கவிதையை ஓர் உரையிலே சொல்லியிருந்தீர்கள். தென்னைமரத்தின் உடல் என்பதே வடுக்களால் ஆனது. வடுக்களைவைத்தே அதன் வயதை எண்ணுகிறார்கள் என்று. எத்தனை இலை உதிர்ந்தது என்பதுதான் கணக்கு. மானுட வாழ்க்கையும் அதேபோல உதிர்வுகளின் பட்டியல்தான். என் வாழ்க்கையும்தான். காதல் மட்டும் அல்ல. எனக்கு நெருக்கமாக இருந்த சகோதரிகள், நண்பர்கள் எல்லாருமே காலப்போக்கிலே விலகிச்சென்றுவிட்டார்கள். ஆனால் அது இயல்பானது என்னும் புரிதல் இப்போது உள்ளது.
மீண்டும் காடு நாவலை வாசித்தபோது தெரிந்த ஒவ்வொருவரையாக மீண்டும் சந்திப்பதுபோன்ற மகிழ்ச்சி. குட்டப்பனும் குரிசும் அந்தக்காட்டில் உரையாடியபடி வாழ்வது ஒரு பொற்காலம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த சுட்டகிழங்கு, கட்டன் காப்பி எல்லாமே அற்புதமான மணத்துடன் என் நினைவில் எழுந்து வந்தன. நான் காடு அளவுக்கு திளைத்து திளைத்து வாசித்த இன்னொரு நாவல் இல்லை.
இந்த நாவல் ஏன் இன்னும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படவில்லை?
கே.
அன்புள்ள கே
ஏற்கனவே ஒரு மொழியாக்கம் வெளிவந்தது, அது ஆங்கில வாசகர்களின் விருப்பத்திற்கு உகந்த சமகால ஆங்கிலப் புனைவுமொழியில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. என் இன்றைய மொழியாக்க நிபுணர்கள் எவராவது அதை மீண்டும் மொழியாக்கம் செய்தால் வெளியிடலாம்.
ஜெ
காடு அதிமதுரம் தின்ற யானை- அழகுநிலா
கீழ்மையும் ஜென்ம ஈடேற்றமும் – காடு விமர்சனம்