கதாநாயகி வாங்க
அன்புள்ள ஜெ
கதாநாயகி நாவலை வாசித்துவிட்டு இதை எழுதுகிறேன். கதாநாயகி ஒரு ’ஹாரர்’ நாவலாக தொடங்கி அப்படியே வரலாற்றுக்குள் செல்கிறது. ஹாரர் என்பது ஒரு வழக்கமான டெம்ப்ளேட்டாக இல்லாமல் இருக்கிறது. ஹாரர் அம்சம் இந்த பல அடுக்கு வரலாற்றுக்கதையை ஒன்றாக இணைக்கிறது.
ஹாரர் நாவல்களை நான் தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். ஹாரர் என்பது எதையெல்லாம் நாம் அஞ்சுகிறோமோ அவற்றைச் சார்ந்தது. நாம் அஞ்சுவது நம் தனிமையை. சரித்திரத்தையும் நாம் பயப்படுகிறோம். இரண்டும் சாவை நினைவூட்டுகின்றன. நல்ல ஹாரர் நாவல்களெல்லாம் தனிமை, சாவு இரண்டையும் நுட்பமாக உளவியல் பூர்வமாக நடத்துபவை. டிராக்குலாவே அப்படித்தான். எனக்குப் பிடித்த ஹாரர் எழுத்தாளர் எடித் வார்ட்டன். நீங்களே கூட அவரைப் பற்றி எழுதியுள்ளீர்கள்.
கதாநாயகி பெண்ணின் துயரை ரோமாபுரிக் காலம் முதல் சமகாலம் வரை ஒரே வீச்சில் காட்டுகிறது. ஏன் இந்த நாவல் பல அடுக்குகளாக இருக்கிறது? ஏனென்றால் இந்த எல்லா துயரங்களும் ஒன்றன்மேல் ஒன்றாகப் படிந்து இன்றும் அப்படியே உள்ளன. அழியாத ஒரு ரத்தக்கறை. அந்த ரத்தக்கறையை சுரண்டி நம் ஆய்வகத்தில் சோதனை செய்தால் நாலைந்து ரத்தங்களின் கலவை அது என தெரிகிறது. அதுதான் கதாநாயகி.
எம், சந்திரசேகர்
அன்புள்ள சந்திரசேகர்.
திகில்கதை, துப்பறியும் கதை, பேய்க்கதை, மிகுபுனைவுக்கதை என்னும் வடிவங்கள் உண்மையில் கதையின் உத்திகள் மட்டுமே. ஒவ்வொன்றும் தனக்குரியவகையில் மானுட வாழ்க்கையை, வரலாற்றை, ஆழுள்ளத்தை ஆராய்பவை. ஓர் அறுவைச் சிகிச்சையில் ஒவ்வொரு கருவியும் ஒவ்வொரு வகையில் ஊடுருவிச் செல்கிறது. ஒவ்வொரு இடத்தைத் தொடுகிறது. ஒன்று இன்னொன்றுக்கு மாற்று அல்ல. அதேபோலத்தான் இந்த வடிவங்களும். ஒரு திகில்கதை சென்று தொடும் சில இடங்களுண்டு, அவற்றை ஓரு யதார்த்தப்புனைவு தொட்டு விரிக்கமுடியாது.
இலக்கியம் என்பது தனிநபரின் அகவெளிப்பாடு (personal narrative) என்னும் மாயை நவீனத்துவ காலகட்டத்தில் இருந்தது. அந்த மாயை அகன்றதும் நிகழ்ந்த முதல் விஷயம் எல்லாவகையான புனைவையும் இலக்கியம் ஏற்றுக்கொண்டதுதான். யதார்த்தவாதம் என்பதே கூட ’உண்மைச் சித்தரிப்பு’ அல்ல ஒரு வகை புனைவே என அது கண்டடைந்தது. தனிநபர் அந்தரங்கமாக எழுதப்படுவன கூட புனைவுகளே. ஆகவே எல்லா புனைவுகளும் புனைவு என்னும் வகையில் ஒன்றே.
நாம் சில இடங்களுக்குச் செல்லும்போது சென்ற காலகட்டத்தை உணரமுடியும். நம் முதுகுக்குப் பின்னால் எவரோ நிற்பதுபோல. அவர்களின் மூச்சு நம் மீது படுவதுபோல. மெய்யான திகில் என்பது அந்த கால உணர்வுதான். அதையே கதாநாயகி சித்தரிக்கிறது.
ஜெ