அனைவருக்குமான அலைவு…கடிதம்

https://vishnupuram.com/  நாவல் பற்றிய பார்வைகளுக்காக
விஷ்ணுபுரம் வாங்க

விஷ்ணுபுரம் மின்னூல் வாங்க

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் நாவலைப் பற்றி நான் அறியவந்தது good reads இணையத்தளத்தில் விஷ்ணுபுரம் பற்றி எழுதப்பட்டிருந்த செய்திகளை வாசித்தபிறகுதான். ஆச்சரியமாக, அந்நாவலைப் பற்றி அங்கே மிகச்சிறந்த விமர்சனங்களும், வாசிப்பு வழிகாட்டுக் குறிப்புகளும் இருந்தன. அப்படிப்பட்ட குறிப்புகள் மிக அரிதானவை. ஆகவே மிகுந்த ஊக்கத்துடன் விஷ்ணுபுரத்தை வாங்கி இருபது நாட்களில் ஒரு வாசிப்பை முடித்தேன். ஆங்கில விக்கிப்பீடியாவிலுள்ள தகவல்களை மேலதிகமாக தேடிக்கொண்டு இன்னொரு வாசிப்பையும் முடித்தேன். ஒரு மாபெரும் மாஸ்டர்பீஸ் என்ற எண்ணம் வந்தது. (விஷ்ணுபுரம் குட்ரீட்ஸ் இணையப்பக்கம்)

நான் ஏற்கனவே இதைப்போல சிக்கலான நாவல்களை ஆங்கிலத்தில் வாசித்ததுண்டு. ஆனால் அவையெல்லாமே புதிர்போடும் நாவல்கள். சொல்லவந்ததை சுற்றிச்சுற்றிச் சொல்பவை. வேண்டுமென்றே மொழியை திருகுவது, நீளநீளமான சொற்றொடர்களை அமைப்பது, சம்பவங்களை முன்பின்னாகவோ தொடர்பில்லாமலோ சொல்வது என்று உத்திகளை கடைப்பிடிப்பவை. அவற்றை வாசிப்பது பேஷியன்ஸ் சீட்டு ஆடுவதுபோல. சுவாரசியம்தான். ஆனால் ஒரு கட்டத்தில் சலிப்பும் உண்டு.

விஷ்ணுபுரம் உண்மையிலேயே இந்த வாழ்க்கையிலுள்ள அடிப்படையான கேள்விகளைப் பற்றியது. அவற்றை வாழ்வா சாவா என்று கொண்டு மேலே செல்லும் மனிதர்களைப் பற்றியது. அத்தகைய மனிதர்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். எதற்காக இப்படி எல்லாவற்றையும் விட்டுவிட்டு வருகிறார்கள்? ஏன் இப்படி நடுத்தெருவில் அமர்ந்திருக்கிறார்கள்? எனக்கு எப்போதுமே ஆச்சரியம்தான். அந்த மனிதர்களின் உள்ளங்களுக்குள் புகுந்து எழுதப்பட்ட கதை. அதனாலேயே மிக உண்மையானது இது. உத்திச்சோதனை கதைகளிலுள்ள செயற்கைத்தன்மைக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை.

அந்த உண்மையான அடிப்படைதான் இந்நாவலை எல்லாரும் விரும்பி வாசிக்க வைத்திருக்கிறது .கால்நூற்றாண்டாக வெவ்வேறு தலைமுறைகள் இதை வாசித்துக்கொண்டே இருக்கிறார்கள். நானும்தான். எனக்குள்ளும் இந்த மனிதர்களின் அலைக்கழிப்பு இருந்துகொண்டிருந்திருக்கிறது.

இந்நாவலின் சிக்கல்களை எல்லாம் இந்திய வரலாற்றிலுள்ள சிக்கல், இந்திய தத்துவத்திலுள்ள சிக்கல் என்றுதான் நான் புரிந்துகொள்கிறேன். ஆகவேதான் இத்தனை முயற்சி எடுத்து இந்நாவலை வாசித்தேன்.

வாழ்த்துக்களுடன்

கிருஷ்ணசாமி மகாதேவன்

முந்தைய கட்டுரைவாசிப்பு, கடிதம்
அடுத்த கட்டுரைபிரமிளா பிரதீபன்