ஜெ,
நான் முழுமையறிவு அமைப்பால் யோகவகுப்புகள் அறிமுகப் படுத்தபட்ட போது, அதன் இரண்டாவது வகுப்பில் கலந்து கொண்டேன். இடுப்பு வலி பிரச்சனை இருந்தது. ஐந்து மாதங்கள் செய்துவிட்டு நிறுத்தி விட்டேன். அதற்கு பிறகு சில புது உடல் நல பிரச்சனைகள் வந்தன. யோகத்தை தொடர்ந்தேன், அவை சரியாகிவிட்டன. பிறகு யோக கொண்டாட்டம் அறிவிப்பு வந்தது. அதில் கலந்து கொண்டேன். அது யோகத்தை தீவிரமாக தொடர வேண்டும் என்ற உந்துதலை தந்தது. தினமும் யோகம் செய்து வருகிறேன்.
ஒரு நாள் தவறவிட்டால் கூட யோகத்தை தொடர்வது கஷ்டம் என்று நண்பர்கள் சொல்வார்கள். அது ஓரளவுக்கு உண்மை தான். சோம்பல், தீவிரமின்மையால் சில நேரம் தடைபடும். ஒரு தத்துவ மாணவனாக யோகம் குறித்து தொடர்ந்து படிக்கும் போது, அதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற உந்துதலை தக்க வைத்து கொள்ள முடிகிறது.
ஆனால் நான் உணர்ந்த இன்னொரு தடை உண்டு. அது குறித்த சந்தேகத்தை உங்களிடம் கேட்கவே, எழுதுகிறேன்.
நான் சிவகங்கை மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் வசிக்கிறேன். இங்கே நாட்டார் தெய்வங்களுக்காக நிகழும் திருவிழாக்களில் கலந்து கொள்ளும் போது அது கட்டற்ற, வன்முறையான உளநிலைகளை உருவாக்குகிறது. எங்கள் ஊர்ப்புறம் உள்ள கிராமங்களில் பொருளாதார வளர்ச்சியால், திருவிழாக்கள் தெய்வங்களுக்கு என்பது போய், தனி மனித போட்டிகள், பங்காளி சண்டைகள், உள்முரண்கள், அரசியல், குடி, ஆடம்பரம் என்றாகி விட்டது.
கிராமத்தில் நம்மால் அதை விட்டு ஒதுங்கவே முடியாத அளவுக்கு அதன் ஏதாவதொரு கண்ணியில் குடும்ப ரீதியாக நாம் பினைக்கப் பட்டிருப்போம். அதனால் அந்த திருவிழாக்கள், வழிபாடுகள், குறியீடுகள் மனதை கலைத்து போட்டு விடுகிறதோ என்ற எண்ணம் எழுகிறது. ஒரு திருவிழாவிற்கு பிறகு யோகத்தை தொடர்வதற்கு பெரும் ஆற்றலை கொடுக்க வேண்டியுள்ளது.
என்னுடைய கேள்வி, நாட்டார் தெய்வங்கள், திருவிழாக்கள், அது சார்ந்த சடங்குகள் யோகம், தியானத்திற்கு எதிரானதா?
பணிவன்புடன்,
வேலாயுதம் பெரியசாமி
தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் வாங்க
அன்புள்ள வேலாயுதம் பெரியசாமி,
தெய்வங்கள் என்பவை நாம் அறிபவை, நம் அறிவால் நாம் உருவாக்கிக் கொள்பவை, அப்பால் அவை எவை என்றும் எப்படிப்பட்டவை என்றும் நாம் கூறிவிடமுடியாது. நம் அறிவை மட்டுமே நாம் முன்வைக்கிறோம். தெய்வம் என்பது அறிவு மற்றும் அறிபடுபொருள் இரண்டும் கொள்ளும் ஓர் இணைவுப்புள்ளி. என்றுமே மர்மமானது, தற்செயலானது.
ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் தெய்வங்களை மாற்றிக்கொண்டேதான் இருக்கிறோம். தெய்வங்களில் இருந்து தெய்வங்களுக்குச் சென்றுகொண்டே இருக்கிறோம். சிந்தனையில் கருத்துக்களில் இருந்து கருத்துக்களுக்குச் செல்வதுபோல. சிந்தனை வளர்ந்ததும் ஆசிரியர்களிடமிருந்து ஆசிரியர்களுக்கு முன்னகர்வதுபோல.
ஒரு தெய்வம் உண்மை, இன்னொரு தெய்வம் பொய் என்று சொல்வது மடமை. ஒரு தெய்வத்தை விட இன்னொரு தெய்வம் ஆற்றல் கொண்டது என்று சொல்வதும் மடமையே. ஆனால் எல்லா தெய்வங்களும் ஒன்றே என்று சொல்வதும் பிழைதான். தெய்வம் என்பது நம் அறிதலின் வெளிப்பாடு. ஆகவே அது ஒரு படிமம். அந்த அறிதல் நிகழ்ந்த உள்ளம், அது நிகழ்ந்த தருணம் ஆகிய பலவற்றுடன் இணைந்தது அப்படிமம்.
நாட்டார் தெய்வங்கள் பொதுவாக மூன்று வகை. தொல்குடிப் படிமத் தெய்வங்கள் (Totem Gods) நீத்தார் தெய்வங்கள் , காவல் தெய்வங்கள். நாட்டார் தெய்வங்கள் தத்துவம் அல்லது தவத்தின் விளைவுகள் அல்ல. அவை வாழ்விலிருந்து இயல்பாக உருவானவை. சிந்தனைச்சுமையற்ற உள்ளங்களில் தோன்றியவை. ஆகவே அவை காலம்- இடம் சார்ந்தவை.
நாட்டார்த்தெய்வத்தை அவை உருவான காலகட்டம், அவை நிகழும் இடம் ஆகியவற்றில் இருந்து பிரிக்க முடியாது. பலசமயம் அவற்றை வழிபடும் மக்களிடமிருந்தும் விலக்கமுடியாது. ஏகவீரனை நாம் வழிபடுவதில்லை. வேட்டைக்கொருமகனையோ குளிகனையோ நாம் வழிபடுவதில்லை. அவை மகாராஷ்டிர நிலத்திலோ கேரள மண்ணிலோ வேரூன்றியவை.
நாட்டார்த் தெய்வத்திற்கும் பிற பெருந்தெய்வத்திற்கும் இடையேயான வேறுபாடு இதுதான்- கால இடத்துக்குக் கட்டுப்பட்டத் தன்மை. பெருந்தெய்வங்கள் கால- இடம் அற்றவை. அவற்றின் வர்ணனைகளிலேயே இந்த இரு அம்சங்களும் இருக்கும். எங்கும் திகழ்வது, காலத்துக்கு அப்பால் அழிவற்று திகழ்வது.
ஒரு நாட்டார்த்தெய்வம் தத்துவவிளக்கம் பெற்று, தவத்திற்கும் உரியதென ஆகிவிட்டதென்றால் அது நாட்டார்த்தன்மையை இழக்கிறது. அப்படி நாட்டார் மரபிலிருந்து பெருந்தெய்வமாகி நின்றிருக்கும் பல தெய்வங்கள் உண்டு, உதாரணம் சாஸ்தா. இன்று பல தெய்வங்கள் பெருந்தெய்வங்களாகிக் கொண்டிருக்கின்றன. உதாரணம், ஐயனார்.
எந்நிலையிலும் நாட்டார் வழிபாடு இந்தியாவில் இருந்து அழியலாகாது, எவ்வகையிலும் எவராலும் கைவிடப்படலாகாது என்பதே என் எண்ணம். இதை முப்பதாண்டுகளாக முன்வைத்து வருகிறேன். ஒரு பண்பாடு உருவாக்கிக் கொண்ட தெய்வங்கள் அப்பண்பாட்டின் மாபெரும் சொத்துக்கள். அப்பண்பாட்டின் அடித்தளம் அவை. அப்பண்பாடு உருவாகிவந்த தொல்குடி வாழ்வில் வேர்கொண்டவை. நம்மை கற்காலத்து மூதாதையருடன் இணைப்பவை அவை மட்டுமே. அவை அளிக்கும் ஆன்மிகம் என்பது நம்முடைய அறிவால் உணரத்தக்கது அல்ல.
ஆகவே ஒருவருக்கு குடித்தெய்வம், குலதெய்வம், காவல்தெய்வம் என அமைந்திருக்கும் மூன்றுவகை தெய்வங்களையும் அவர் வழிபட்டே ஆகவேண்டும் – அவர் இறைவழிபாடு செய்பவர் என்றால். அவற்றை வழிபடாமல் பெருந்தெய்வ வழிபாடுகளைச் செய்வது பயனற்றது என்றுதான் வைதிகச்சடங்குகள் செய்யும் அந்தணர்கூடச் சொல்வார்கள். அத்தெய்வங்கள் அளிக்கும் அகத்தொடர்பு இந்த நவீன யுகத்திலும், இனி வரும் அதிநவீன யுகத்திலும் தொடர்வது. நம்முடைய அகம் அத்தகைய ஆழ்படிமங்களின் வழியாகவே காலத்தினூடாக ஒற்றைத்தொடர்ச்சியாக நிகழ்கிறது. அவை இல்லாமலானால் அத்தொடர்ச்சி அறுபட்டுவிடும்.
இத்தெய்வங்கள் உருவான காலம், சூழல் ஆகியவற்றை நாம் கருத்தில்கொள்ள வேண்டும். அவற்றிலிருந்து இத்தெய்வங்களைப் பிரிக்கமுடியாது. பெரும்பாலான நாட்டார்த் தெய்வங்கள் பழங்குடிக்காலத்தில் உருவானவை. பழங்குடித்தன்மை கொண்டவை. அதாவது பழங்குடி இயல்பு அவற்றின் தோற்றம், அவற்றின் இயல்பு, வழிபாட்டுமுறை, அவற்றுடன் இணைந்த மனநிலைகள் ஆகியவற்றில் வெளிப்படும். அவை ஏன் முக்கியமானவை என்பதற்கான பதிலே இதுதான்.
பின்னர், இத்தெய்வங்கள் தொடர்ச்சியாக காலந்தோறும் மறுவடிவம் பெற்றுக்கொண்டே இருந்தன. புதிய தோற்றம் அளிக்கப்பட்டது. புதிய வழிபாட்டுமுறை உருவானது. புதிய கதைகள் உருவாயின. சமகால சரித்திரநிகழ்வுகளுடனும் சரித்திர நாயகர்களுடன் இணைக்கப்பட்டன. உதாரணமாக, மாடன் என்பது தொன்மையான பழங்குடித் தெய்வம். பழங்குடி வழிபாட்டில் அது அக்கணம் நிறுவி வழிபடப்படும் ஒரு கல்வடிவம் மட்டுமே. வேட்டைக்கு முன் ஓரிரு துளி குருதி பலிகொடுப்பார்கள்.
நாட்டார் மரபில் மாடன்கள் ஏராளமாக உள்ளன. சுடுகாடு காக்கும் சுடலைமாடன்கள் போன்ற காவல்தெய்வங்கள் உண்டு. கழுமாடன் போன்ற நீத்தார்த்தெய்வங்கள் உண்டு. தாசில்தார் மாடன் போன்று பெரியோர் தெய்வமாகி மாடன் ஆனதும் உண்டு. சில குடும்பங்களுக்கு மட்டுமே உரிய மாடன்கள் உண்டு. மாடசாமி வழிபாடு ஐம்பதாண்டுகளில் சைவ மரபு சார்ந்த வழிபாடாக மாறிக்கொண்டே உள்ளது.
நாம் இன்றுகாணும் நாட்டார்த்தெய்வங்கள் பெரும்பாலும் இன்றிருக்கும் வடிவை பொயு 15 ஆம் நூற்றாண்டுக்கு முன் அடைந்தவை என்பதைக் காணலாம். இவற்றுடன் இணைந்த கதைகளும் பொயு 15க்குப் பிந்தைய வரலாற்றுச்சூழலில் நிகழ்ந்தவையகவே உள்ளன. இதனால், இத்தெய்வங்கள் இந்தக் காலப்பகுதியில் உருவானவை என்று பொருளில்லை, இந்தக் காலப்பகுதியில் ஓர் மறுஉருவாக்கம் நிகழ்ந்துள்ளது என்றே பொருள்.
இந்தக் காலப்பகுதி தமிழ்ச்சூழலில் தொடர்ச்சியான போர்கள் நிகழ்ந்த காலம்.பல்வேறு அயல்குடியேற்றங்கள் நிகழ்ந்து புதிய குலதெய்வங்களும் குடித்தெய்வங்களும் இங்கே வந்து சேர்ந்த காலம். மரபான சொத்துரிமைகளும் கிராம உரிமைகளும் உருமாற்றம் அடைந்த காலம். பொயு 17 ஆம் நூற்றாண்டு முதல் இங்கே நிலையான பெரிய அரசுகள் இல்லாமலாகி கடும் அராஜகச்சூழல் நிலவியது. கொலைகொள்ளைகள் உச்சமடைந்தன. பெரும் பஞ்சங்கள் இரண்டு உருவாகி பலகோடிபேர் மாண்டனர், இடம்பெயர்ந்தனர்.
இச்சூழலில் மறுஉருவாக்கம் பெற்ற தெய்வங்களில் அந்த இயல்புகள் உள்ளன. நாட்டார்த்தெய்வங்கள் பலவும் போர்த்தெய்வங்களாக, வன்முறைத்தன்மை கொண்டவையாக உள்ளன. பல் தெய்வங்கள் கொடியமுறையில் கொல்லப்பட்டவை, ஆகவே பலிகள் வழியாக அமைதிப்படுத்தப்படவேண்டியவை.
நாட்டார்த்தெய்வங்களில் நீங்கள் குறிப்பிடும் உணர்வுநிலைகள் நிகழ்வது பெரும்பாலும் தவிர்க்கமுடியாது. ஏனென்றால் அவை ஊர், சாதி, குலம், குடும்பம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டவை. ஆகவே உரிமைப்பூசல்கள், முன்னுரிமைப்பூசல்கள் நிகழும். அணுக்கமான உறவுகள் சந்தித்துக்கொள்கையில் நீண்டகால பிரச்சினைகள் எழுந்து வரும்.
இன்று, நம் வாழ்க்கைமுறை மாறிக்கொண்டிருக்கிறது. சென்ற ஐந்தாயிரம் ஆண்டு வரலாற்றில் இன்று நாம் வாழ்வதுபோல் ஓர் அமைதிச்சூழல் என்றுமே இருந்ததில்லை. நம்மில் பெரும்பாலானவர்கள் அடிப்படை வசதிகள் கொண்டவர்களாக ஆகிவிட்டிருக்கிறோம். கணிசமானவர்கள் மூளையுழைப்பைச் சார்ந்து வாழத்தொடங்கியுள்ளோம்.
இன்று இத்தெய்வங்கள் நம் முன்னோருக்கு பொருள்பட்ட அளவுக்கு நமக்குப் பொருள்படுகின்றனவா? இன்று ஒரு உக்கிரமான போர்த்தெய்வம் நமக்கு அகவழிபாட்டுக்குரியதாக இருக்கமுடியுமா? இதுதான் உங்கள் வினா.
ஒருவர் தன் அகத்தெய்வமாக, அன்றாட வழிபாட்டுக்குரியதாகக் கொள்ளும் தெய்வத்தை தன் இயல்புக்கு ஏற்ப, தன்னுடைய ஆன்மிகப்பயணத்திற்குரியதாக தேர்வுசெய்யவேண்டும். அதை அவரே தன் அகத்தைப் பரிசீலனை செய்து தெரிவுசெய்யலாம். அல்லது அவருக்கான ஆன்மிக ஆசிரியர் வழிகாட்டலாம்.
எந்த தெய்வமும் எதிர்மறையானது அல்ல. ஆழமான அச்சம் கொண்டவர்களுக்கு உக்கிரமான தெய்வங்கள் அல்லது தெய்வங்கள் ஆறுதலை, பாதுகாப்புணர்வை அளிக்கின்றன.நரசிம்மர், அனுமார், காலபைரவன், காளி, துர்க்கை போன்ற தெய்வங்களாக இருக்கலாம். ஐயனார், முனியாண்டி, முத்தாலம்மன் போன்ற தெய்வங்களாக இருக்கலாம். கல்வி, செல்வம் போன்றவற்றால் செருக்கும் உயர்வுணர்ச்சியும் கொண்டவர்களுக்கு, அமங்கலமே உருவான ஜ்யேஷ்டை விடுதலையை அளிக்கலாம்.
அமைதிநாடுபவர்களுக்கு அவர்களுக்கான தெய்வங்கள் உள்ளன. யோகம் பயில்பவர்களுக்கு தட்சிணாமூர்த்தியோ, புத்தரோ, சாரதாதேவியோ உகந்த தெய்வமாக இருக்கலாம். அதை அவர்கள் தெரிவுசெய்யலாம். யோகத்திலமர்ந்த சாஸ்தா, யோகத்திலமர்ந்த ஐயனார் போன்ற தெய்வங்களும் உண்டு.
ஆனால் குலதெய்வம், குடித்தெய்வம் முழுமையாக கைவிடப்படலாகாது. பெரும்பாலான குலதெய்வங்களும் குடித்தெய்வங்களும் அன்றாட வழிபாட்டுக்குரியவையாக இல்லை. ஆண்டில் சிலநாட்கள் சில சடங்குகள் மட்டுமே அவற்றுக்குரியவை. அவற்றை தவிர்க்கக்கூடாது. அது ஓர் இந்துவின் கடமை. தவிர்த்தால் உள்ள இழப்புகள் பண்பாடு சார்ந்தவை ஒருபக்கம், தனிநபர் சார்ந்தவை இன்னொரு பக்கம்.
ஆகவே, எந்த அளவுக்கு வேண்டுமோ அந்த அளவுக்கு அவற்றை தொடரலாம். உங்கள் அகம் குலையாத நிலையே அளவு என்று கொள்க.
கடைசியாக ஒன்று. யோகத்திலமர்ந்த தெய்வமோ, முழுமையான மங்கலத்தோற்றம் கொண்ட தெய்வமோ ஒருபக்கம்தான். அவற்றை வழிபட்டு ஒழுகுபவர்களுக்குக் கூட எதிர்மறைப் பண்புகொண்ட தெய்வங்கள் அகத்தே தேவைப்படும். ஒரு சமநிலைப்படுத்தலுக்காக. ஏனென்றால் வழிபடுபவர்கள் பல மடிப்புக செறிந்த உள்ளம் கொண்ட மனிதர்கள்.
ஜெ