அறிவியலும் அறிதலும், கடிதம்

ஜெ

அறிவியல் சார்ந்த அறிதல்முறை பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்சிஸ் பேக்கன் உருவாக்கியது என்பதனை தங்களது விசும்பு அறிவியல் புனைகதைகள் மூலம் தெரிந்துகொண்டேன். இத்தனை நாள் வாசிக்க தவறவிட்டது எனது தவறு.  அதிலும் ஐந்தாவது மருந்து இங்கே ,இங்கேயே மற்றும் விசும்பு பிரம்மிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் நீங்கள் முழுமையறிவு பக்கத்தில் கூறும்  மனனம் , ஸ்வாத்யாயம் ,தியானம் என்ற முறையில் இதனை தொடர்புபடுத்தி என்னுள் நிலை நிறுத்தி கொள்கிறேன்.

விசும்பு போன்ற அறிவியல் புனைவு கதைகளை நம் மரபு சார்ந்த கதைகளாக மாற்றம் பெறுவதென்பது முற்றிலும் புதியது ,வரவேற்கத்தக்கது இங்கே அதனை மற்றவர்கள் அதனை தவற விட்டுள்ளனர் என்றே எண்ணத்தோன்றுகிறது. எப்படி உங்களுக்குள் இந்த ” ஐந்தாவது மருந்து ” என்ற கதைக்கரு தோன்றியது என்பது புரியவில்லை.நம்முள் இருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் உருமாற்றம் அடையும்பொழுது நாமும் செல் அளவில் மாற்றம்பெறுகிறோம். இருப்பினும் நுண்ணுயிர்களின் மாற்றப்பெருக்கம் பெரிதளவில் இருக்கிறது என்பது கொஞ்சம் பயமுறுத்தத்தான் செய்கிறது. மிக மிக ஆழமான கருத்துக்கள் அவை ,ஏறத்தாழ 13  வருடங்களுக்கு முன்னரே இப்படி ஒரு கதையினை எழுதி அதனை இன்று இருக்கும் கொரோனாவோடு தொடர்பு படுத்திக்கொள்ள முடிகிறது என்றால் நீங்கள் ஒரு ஆகச்சிறந்த படைப்பாளி என்பதனை எங்களால் உறுதியுடன் கூறமுடியும்.

இப்படி ஒரு  நோய் தாக்குதல் என்பதை  நம்மை கட்டுப்படுத்தும் இயற்கை சக்தி என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்கிற கருத்தினை எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியுமா?

மேலும் இதுபோன்ற கதைகளை உங்களிடம் எதிர்பாக்கலாமா ?

ராஜாமணி

விசும்பு, அறிவியல் புனைகதைகள் வாங்க

விசும்பு, அறிவியல் புனைகதைகள் மின்னூல் வாங்க

அன்புள்ள ராஜாமணி

விசும்பு தொகுதியில் உள்ள கதைகள் எல்லாமே அறிவியல் புனைவுகளை நம் சூழலில், நம் வாழ்க்கையில் வைத்து எழுதமுடியும், எழுதவேண்டும் என்னும் என்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தும்பொருட்டு எழுதப்பட்டவை. ஏனென்றால் இங்கே அறிவியல்புனைவு என்றாலே பேசும் கம்ப்யூட்டர், வேற்றுக்கிரகப் பயணம் என்றே எழுதிவந்தனர்.

இன்று நான் அதே அறிவியல்கதைகளை எழுத முடியாது. என் மனம் முன்சென்றுவிட்டது. அண்மையில் எழுதப்பட்ட அறிவியல்புனைகதைகள் நம்முடைய தத்துவமரபை அறிவியலைக்கொண்டு பரிசீலனை செய்பவையாக இருந்தன

எழுதவேண்டும், பார்ப்போம்.

ஜெ

முந்தைய கட்டுரைநம் மனம், நாம்
அடுத்த கட்டுரைஅழியாப்பசுமை, கடிதம்