முகில்களின் வழி, கடிதம்

மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்,

என் பெயர் அட்சயா, நான் தஞ்சாவூர் மாவட்டம்,கோவை குமரகுரு பன்முககலைமற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு உளவியல் பயின்று வருகிறேன்.தங்களின் புத்தகமான அந்த முகில் இந்த முகில் புத்தகத்தை நேற்று வாசிக்க ஆரம்பித்தேன் இன்று முடித்துவிட்டேன்.எனக்கு அந்த நாவல் வாசிக்க தொடங்கும் போது எவ்வளவு ஆர்வம் இருந்ததோ அதை முடிக்கும் போது கண்ணீர் துளிகளே மிஞ்சி இருந்தது நான் அழுதேன் ஏன் என்று தெரியவில்லை ஏதோ ஒரு கணம் ஏதோ ஒரு தாக்கம்.

நான் படித்து அழுத மூன்றாவது நாவல். முதலில் வெண்ணிற இரவுகள், இரண்டாவது கடலுக்கு அப்பால், மூன்றாவது அந்த முகில் இந்த முகில் ஆனால் அழுத முதல் நாவல் இதுதான் .என்னால் அந்த கடைசி வரியை படிக்க முடியாமல் மீண்டும் கடைசி வரிக்கு முந்திய பக்கத்தை இரண்டு மூன்று தடவை படித்தேன் என்னால் அழுகையை அடக்க இயலவில்லை.

ஶ்ரீபாலவை விட எனக்கு ராமராவ் வை நினைத்துதான் அழுகை பாவமும் இரக்கமும் வந்தது.இவை எல்லாம் ஒரு சேர எனக்கு அழுகையாக வந்துவிட்டது. நீங்கள் நாவலில் கூறியது போல காமத்தை விட இரக்கம் கொடியது (ஆபத்து) தான்.எனக்கு மிகவும் பிடித்திருந்தது இது ஒரு காதல் கதை ஆமாம் இது ஒரு இழந்த அல்லது இழக்கபடாத காதல் கதை எண்ணில் பாரத்தை உணரவைத்த கதை அருமை

உங்கள் இந்த படைப்புக்கு நன்றி.உங்களது படைப்புகள் மேலும் தொடர வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்.

இப்படிக்கு உண்மையுள்ள

க. அட்சயா,

குமரகுரு பன்முககலை மற்றும் அறிவியல் கல்லூரி

கோயம்புத்தூர்

அன்புள்ள அட்சயா,

கடிதத்திற்கு நன்றி.

சிறந்த கதைகள் எல்லாமே ஒருவகையில் வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத தன்மையைப் பற்றியவை. எளிமையாக அதை விதி என்று சொல்லிவிடலாம். ஆனால் நம் அடிப்படை இயல்புகள், நாம் பிறந்த சூழல், நம்மைச்சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கைகள், நாம் வாழும் வரலாற்றுக்காலம் எல்லாம் இணைந்து ஒரு பாதையை உருவாக்குகின்றன, வாழ்க்கை அதன்படி ஒழுகிச்செல்கிறது. அடைதல்கள் மற்றும் இழப்புகளின் வழியாகச் செல்கிறது வாழ்க்கை. அந்த தவிர்க்கமுடியாத தன்மையால்தான் நாம் படைப்புகளின் இறுதியில் ஒரு கையறுநிலையை,ஆழ்ந்த  துயரை உணர்கிறோம். எவரும் எதுவும் செய்துவிடமுடியாது என்னும் உணர்தலில் இருந்து எழுவது அது

ஜெ

அந்த முகில் இந்த முகில் வாங்க

அந்த முகில் இந்த முகில் மின்னூல் வாங்க


 

இரு முகில்களின் கதை, கடிதம்

அந்த முகில் இந்த முகில் வாசிப்பு

 

முந்தைய கட்டுரைIs there such a thing as ‘Hindu Religion’?’
அடுத்த கட்டுரைமணிபல்லவமும் பிறவும், கடிதம்