அண்ணா ஹசாரே, மீண்டும் இரு உரையாடல்கள்.

சற்று முன் டெல்லியில் இருக்கும் கேரள இதழாளரிடம் பேசிக்கொண்டிருந்தேன். ‘அண்ணா ஹசாரேவுக்குக் கிடைத்த ஆதரவு இந்து மனநிலையில் உள்ள மூத்தார்வழிபாட்டின் நீட்சி. அவருக்கு 76 வயதாகவில்லை என்றால் அவரை எவரும் கண்டுகொள்ளமாட்டார்கள் ’ என்றார்

நான் ‘ஆம்.  அதனாலென்ன? அதற்காக ஏன் வெட்கப்படவேண்டும்? அந்த அம்சம் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ இல்லை என்றால் அது அவர்களின் பண்பாடு. கீழைநாடுகளில் அது ஒரு பெரும் பண்பாட்டுக்கூறு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் மூத்தாரை வழிபட்டு வருகிறோம். அது நம் பண்பாடு. நாளையும் அதுவே தொடரவெண்டும்’ என்றேன் ‘இந்த இடத்தில் 76 வயதுப் பாட்டி வந்து அமர்ந்து உண்ணாவிரதமிருந்திருந்தால் இந்தியா இன்னும் கொந்தளித்திருக்கும். இதுதான் இந்திய உணர்வு’ என்றேன்

‘இது ஒரு பழங்குடி உணர்வு. மேற்கு இதைவிட்டு விலகி முன்னால் சென்றுவிட்டது’ என்றார் நண்பர். ‘விலகியிருக்கலாம், முன்னால் செல்லவில்லை’ என்றேன். ’இரட்டைக்கோபுரம் தாக்கப்பட்டபோது  ரத்தத்துக்கு ரத்தம் என்றார் புஷ். பின்லேடன் கொல்லப்பட்டபோது அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் நடனமாடினார்கள். அதெல்லாம் பழங்குடி உணர்வு அல்லவா?’

‘ஆம்’ என்றார். ‘ஆக, பழங்குடி உணர்வுகளில் எது மூர்க்கமோ அதை வைத்துக்கொண்டிருக்கிறார்ர்கள். மொத்த மேற்கத்தியப் பண்பாடும் வலியது வாழும் என்ற அடிப்படையில் கட்டப்பட்டிருக்கிறது. பழங்குடிப் பண்பாடுகளில் உள்ள உயர்ந்த விஷயங்களை, விவேகங்களை மட்டும் கைவிட்டிருக்கிறார்கள். அதை நாம் கைவிடாவிட்டால் நம்மைப் பின்தங்கியவர்கள் என்பார்கள் இலையா?’ என்றேன்

அவரால் ஒன்றும் சொல்லமுடியவில்லை ‘எதற்கும் ஒரு பதிலைச் சொல்லிவிடுகிறீர்கள். இதுதான் உங்களிடமுள்ள பிரச்சினை’ என்றார்

*

இன்னொரு நண்பர், வங்காளி, இணைய அரட்டையில் வந்தார். அவர் இடதுசாரி. ’அண்ணா ஹசாரே போராட்டம் மத்தியவர்க்க போராட்டம்’ என்றார். ’ஒட்டுமொத்த வங்காள மார்க்ஸியமே ‘ஃபத்ரலோக்’ என்னும் மத்தியவர்க்கத்தின் போர் தான் எனப்படுகிறதே?’ என்றேன்.

அவர் கடுமையான கோபத்துடன் ‘மார்க்ஸியத்தை புரலட்டேரியன்கள்தான் கீழ்மட்டத்துக்குக் கொண்டு சேர்க்கவேண்டும்’ என்றார்.’அப்படியானால் இப்போது அண்ணாவுக்காகத் திரளும் கூட்டத்தை ஏன் காந்திய புரலட்டேரியன்கள் என்று சொல்லக்கூடாது?’’ என்றேன்.

’ராம்லீலா மைதானத்தில் உண்மையில் இந்திய நடுத்தர வர்க்கம் மட்டுமா இருக்கிறது, உண்மையைச் சொல்லுங்கள்’ என்றேன். ’இல்லை பெருமளவு தலித்துக்கள்கூட இருக்கிறார்கள். அவர்கள் பல்வேறு தலித் அமைப்புகள் சார்பில் அம்பேத்கார் படங்கள் மற்றும் கொடிகளுடன் இருக்கிறார்கள்’ என்றார்.

ஆம் அதனால்தான் சில தலித் தலைவர்கள் பதற்றம் கொள்கிறார்கள். காந்தி இருக்கும்வரை இந்திய தலித்துக்கள் அவரையே நம்பினர். எழுபதுகளில் சஞ்சய்காந்தியின் அராஜகமே அவர்களை காங்கிரஸைவிட்டு விலக்கியது. இப்போதும் ஒரு காந்தியவாதி கிளம்பிவந்தால் அவர்கள் அவர் பின்னால்தான் செல்வார்கள். நானே அதை கிருஷ்ணம்மாள்-ஜெகன்னாதன் போராட்டத்தில் கண்டிருக்கிரேன். அவர்களுக்கு இருந்த ஆதரவுத்தளமே தலித்துக்கள்தான். அந்த ஆதரவு இன்றுவரை எந்த தலித் தலைவருக்கும் கிடைக்கவில்லை’ என்றேன்.

‘அண்ணாவின் போராட்டத்துக்கு ஆதரவு தலித் தரப்பில் இருந்தே வரும். ஆகவேதான் முப்பதாண்டுக்காலம் தலித்துக்கள் நடுவே பணியாற்றியவரும் தன் ஊரில் மிக வலுவான தலித் ஆதரவுத்தளம் கொண்டவருமான அண்ணா ஹசாரே ஒரு தலித் விரோதி என்ற அவதூறுப் பிரச்சாரம் திடீரென நாலைந்து நாட்களுக்குள் ஆரம்பித்துள்ளது’ என்றேன்

’ஆனால் இங்கே அனேகமாக முஸ்லீம்களே இல்லை’ என்றார். ’இன்றுவரை இந்த தேசத்தின் எந்த ஜனநாயக-அரசியல் போராட்டத்தில் முஸ்லீம்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்?’ என்றேன். ’தங்கள் மதம் தவிர வேறெந்த விஷயத்திலாவது அவர்கள் அக்கறை காட்டிப் பொதுவெளிக்கு வந்திருக்கிறார்களா? இந்திய மார்க்ஸிய இயக்கத்தில் எத்தனை முஸ்லீம்கள் கலந்துகொண்டார்கள்?’

அவர் ‘நீங்கள் விவாதிக்கும் முறை பிடித்திருக்கிறது. இப்போது ஒட்டுமொத்தமாக நம்மால் பார்க்கமுடியவில்லை. பிறகு பேசுவோம்’ என்றார்.

*

மீண்டும் மீண்டும் விவாதிக்கிறேன். ஆம், நம் அவநம்பிக்கைகளுடன் போராடுவதென்பது மேகத்துடன் மல்யுத்தம் செய்வதைப்போல.

ஜெ

முந்தைய கட்டுரைஅண்ணா -ஓர் உரையாடல்
அடுத்த கட்டுரைஅண்ணா ஹசாரே- இரு தரப்புகள்