அன்புள்ள ஜெ,
வணக்கம்.
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விழா கவிதை அமர்வு பதிவைக் கண்டேன்.
கவிமனம், கவிதை உருவாகிவரும் வழி என கவிதைச் செயல்பாடு குறித்த மிக முக்கியமான உரையாடல். கவிதைத் தருணங்கள் சொந்த வாழ்விலிருந்து எவ்வாறு எழுந்து வருகின்றன என உரையாடல் சென்றது நன்றாக இருந்தது. இருவருமே நன்றாகப் பேசினார்கள். இத்தகைய உரைகளை பதிவு செய்து வழங்கியமைக்கு விழாக்குழுவினருக்கும், ஸ்ருதி டிவிக்கும் நன்றி,
விஜயகுமார் சாமியப்பன்
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விழாவில் உங்கள் உரை கேட்டேன். ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது விழாவில் நீங்கள் கவிதை பற்றி ஆற்றும் உரைகள் கூர்மையான விமர்சன நோக்கு கொண்டவை. மொத்த கவிதைப்போக்கை ஒருவகையில் தொகுத்துச் சொல்கிறீர்கள். கவிதை சார்ந்து ஒரு பொதுப்புரிதலையும் முன்வைக்கிறீர்கள். கவிதை வாசகர்களுக்கு இந்த உரைகள் மிக முக்கியம் (பலசமயம் கவிஞர்களுக்குத்தான் நீங்கள் மதிப்பிடுவது புரிபடுவதில்லை)
உங்கள் உரைகளை வரிசையாகப் பார்த்தேன். முன்பு டச் ஸ்கிரீன் கவிதைகள் என ஓர் உரை ஆற்றினீர்கள். அந்த உரையில் இன்றைய கவிதையின் ‘மென்மையான தொடுகை’ பற்றி சொல்லியிருந்தீர்கள். அந்த உரையின் தொடர்ச்சிதான் இந்த உரை. இதில் நீங்கள் பேசும் ‘இனிமை’ என்பது அந்த மெல்லிய தொடுகையால் வந்த ஒன்றுதான்.
அருமையான உவமைகளும் உருவகங்களும் கொண்ட இந்த உரைகளே கவிதைகள் போல உள்ளன. கவிதையைப் பற்றி கவிதையால்தான் பேச முடியும்
கிருஷ்ணா முரளி