https://vishnupuram.com/ நாவல் பற்றிய பார்வைகளுக்காக
விஷ்ணுபுரம் வாங்க
அன்புள்ள ஜெ,
இந்த ஜூலையோடு விஷ்ணுபுரம் நாவலை நண்பர்களோடு சேர்ந்து வாசித்து முடித்து ஒரு வருடம் ஆகிறது. கடந்த வருடம் பிப்ரவரியில் ஒரு விஷ்ணுபுரத்தை மறுவாசிப்பு செய்யப்போவதாக நண்பர்களிடம் கூறினேன். அதில் தாங்களும் இணைவதாகக் கூறியவர்கள் அப்படியே செய்தியைப் பரப்ப சுக்கிரி குழுமத்தில் இருந்து இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு வாராவாரம் சில அத்தியாயங்களைப் படித்து இணையவழி உரையாடலில் எங்கள் வாசிப்பினைப் பகிர்ந்துகொண்டோம்.
இந்த விவாதங்களில் விஷ்ணுபுரத்தின் வடிவமும், தத்துவச் செறிவும் அனைவரிடமும் பெரும் தாக்கத்தையும், கேள்விகளையும் உண்டாக்கியபடியிருந்தன. வெள்ளிமலை தத்துவ வகுப்புகளுக்கு சென்றுவந்திருந்த நண்பர்கள் அந்த கேள்விகளுக்கு தகுந்த விளக்கங்களை அளித்தனர். ஒரு வகையில் மனதுக்குள் மீண்டும் உருவான விஷ்ணுபுரத்தின் உலகம் ஒவ்வொரு வாரமும் செறிவாகிக்கொண்டே வந்தது.
ஒட்டுமொத்த நாவலின் வாசிப்பும் முடிந்து கடந்த வருடம் ஜூலை மாதத்தில் ஒரு சிறப்பு உரையாடலோடு நிறைவு செய்யலாம் என்று முடிவெடுத்து கடலூர் சீனுவை அழைத்திருந்தோம். விஷ்ணுபுரத்தின் பாடலை உலகெங்கும் பாடித்திரியும் ஒரு நாடோடிப்பாணன் என சீனுவை மீண்டுமொருமுறை நாங்கள் உணர்ந்த நாள் அன்று. நிகழ்வின் துவக்கத்தில் ‘ஆயிரம் காதம் அக்கரையில் என்னுள் ஆழ்ந்து உறைந்திடும் விஷ்ணுபுரம்‘ என்ற விஷ்ணுபுரத்தில் இடம்பெற்ற கவிதையை ஜமீலா பாடிய பின்னர் விஜயலட்சுமியின் வரவேற்புரையுடன் உரையாடல் துவங்கியது.
புத்தகத் திருவிழாக்களில் கலந்துகொண்டு களைப்புடன் திரும்பியிருந்த சீனு, லேப்டாப்பில் இணையாமல் தன்னுடைய போன் வழியாக ஷூமில் இணைந்திருந்தார். எப்போது தீருமென்று தெரியாத குறைந்த பேட்டரி உள்ள போனில் இந்த உரையைத் துவக்கியது ஒருவகையில் விஷ்ணுபுரம் பற்றிய உரைக்கு பொருத்தமான கால அளவுதான் என்று முடிவில் உணர வைத்தது. நாவல்களின் பரிணாம வளர்ச்சியில் துவங்கி விஷ்ணுபுரத்தின் வடிவம், தத்துவம், கதைமாந்தர்கள், ஒட்டுமொத்த நாவல் உலகில் அதன் இடம் என கச்சிதமான ஒரு உரையை சீனு வழங்கினார். நண்பர்களின் கேள்வி பதில்களோடு நிறைவுற்ற அந்த இணைய உரையாடலை அனைவருக்கும் பகிர்வதற்காக இங்கு இணைத்துள்ளேன்.
இந்த வாசிப்புப் பகிர்வு துவங்கி நடைபெற்ற நாட்களில் ஒவ்வொரு வாரமும் ஒருங்கிணைத்தவர் காவல்துறையைச் சேர்ந்த நண்பர் சரவணகுமார். வாரம் தோறும் அத்தியாயங்களைப் பட்டியலிட்டும், தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரோடு தொடர்புகொண்டு அவர்கள் வாசிக்கவேண்டிய பகுதிகளை சரிபார்த்தும் முன்னெடுத்துச் சென்றார். ஒரு இலக்கிய வாசிப்பில் ஒரு போலீஸ்காரரின் பங்கு என்ன அனைவருக்கும் புரியச் செய்த அவரது நன்றியுரையோடு இந்த நிகழ்வு முடிந்தது. இந்தக்குழு தொடர்ந்து கரமசோவ், மண்ணும் மனிதரும், சோர்பா, கொற்றவை என நாவல் வாசிப்பைத் தொடர்கிறார்கள். (வாசிப்புகளில் இணைய விரும்பும் நண்பர்களுக்கு அவரது தொடர்பு எண் : +91 70105 07810)
மீண்டும் அழகானதொரு உரையை எந்த முன்தயாரிப்பும் இல்லாமல் வழங்கி கேள்விகளுக்கு பொருத்தமான விளக்கங்களை அளித்த இனிய சீனுவுக்கு எங்கள் நன்றிகள். இப்படியொரு வாசிப்பினை உடன் சேர்ந்து சாத்தியப் படுத்திய சுக்கிரி நண்பர்களுக்கும் என் நன்றிகள்.
விஷ்ணுபுர உலகோடு சேர்த்து அதை விவாதிக்க மனதுக்கு நெருக்கமான இலக்கிய நண்பர்கள் உலகையும் தோற்றுவித்த ஆசிரியர் உங்களுக்கும் என் நன்றிகள் ஜெ.
அன்புடன்,
ராஜேஷ்.