உங்கள் நண்பர் அரவிந்தன் கண்ணையன் முகநூலில் எழுதியது இது. அவரைப்போன்ற ஒருவர் அயல் மண்ணில் இருந்து வந்து இங்கே கால்பதித்ததுமே கண்ணில்படும் விஷயம் இது. ஆனால் இதை நம்மால் பொதுவெளியில் பேசக்கூட முடியாத நிலையை இன்று அரசாங்கக் கைத்தடிகளாக மாறிவிட்ட எழுத்தாளர்களும் முகநூல்பதிவாளர்களும் ஆக்கிவிட்டனர். இதை நானும் சொல்லியிருக்கிறேன். உடனே இங்கே எல்லாமே நன்றாகத்தான் இருக்கிறது, வடக்கே ஒப்பிட்டுப்பார் என்று திட்டுவார்கள். புத்தகமே தேவையில்லை, கல்லூரிப்படிப்பு போதும் என்பார்கள். இப்படி புத்தகம் படிக்கும் வழக்கம் இல்லை என்பதை மறைக்க எத்தனையோ சாக்குகள். புத்தகம்படிப்பதைப் பற்றிப் பேசுவதே மேட்டிமைப்பார்வை, ஏழைகளுக்கு எதிரானபார்வை என்றுகூட என்னிடம் ஒருவர் சண்டைபோட்டார்.
நீங்களும் ஏறத்தாழ இதையெல்லாம் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறீர்கள். உங்கள் பார்வைக்கு
ஸ்ரீனிவாஸ்
*
பாண்டி டூ சென்னை: எங்கே வாசகன்?
நேற்று பாண்டிச்சேரியிலிருந்து சென்னை வந்தேன், ஈ.சி.ஆர் சாலை வழியே. அழகழான கடைகள், உணவகங்கள். கட்டமைப்பெல்லாம் அமெரிக்கா மாதிரி தெரிந்தது. மெக்-டி பர்கர் கிங் கூட இருந்தது. ஆனால் மருந்துக்கு கூட ஒரு புத்தகக் கடை பார்க்க முடியவில்லை. அமெரிக்காவில் ஒரு சிற்றூரில் கூட புத்தகக் கடை இருக்கும். புத்தகக் கடை என்றால் கோனார் உரையும், டி.என்.பி.எஸ்.சி பரீட்சை கையேடும் விற்பவை அல்ல. ஆம் அமேஸானில் வாங்கலாம் என்பதெல்லாம் சரி அதற்காக இப்படியா?
இத்தனை கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் இருக்கும் ஊரில் இப்படியா? தயவு செய்து யாரும் அந்த நூற்றாண்டு நூலகம், இந்த நூற்றாண்டு நூலகம் என்று சொல்லாதீர்கள். அவை கிளார்க்குகளை தயாரிக்கும் பட்டறைகள். உண்மையில் இந்த சமூகத்தில் எந்த நம்பிக்கையில் எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள் என்றே தெரியவில்லை. விஜய் முதல்வர் வேட்பாளர் என்று ஆச்சர்யப்படத்தேவையில்லை, சந்தானம் கூட இங்கு முதல்வரானால் ஆச்சர்யமில்லை.
அரவிந்தன் கண்ணையன் (முகநூலில்)
அன்புள்ள ஸ்ரீனிவாஸ்,
அரவிந்தனின் ஆற்றாமையைப் புரிந்துகொள்கிறேன். நான் ஒவ்வொரு முறையும் உணரும் , கூறிக்கொண்டே இருக்கும் நிலைதான் இது.
தமிழகத்தில் பெருநகர்களில்கூட நல்ல புத்தகக்கடைகள் இல்லை. வாசிப்பவர்கள் இல்லை. இலக்கியநிகழ்வுகளே இல்லை. நம் படித்த நடுத்தர, உயர்நடுத்தர, உயர்வர்க்கத்தினருக்கு வாசிப்பு என ஒன்று உண்டு என்பதே தெரியாது. நான் புழங்கும் உயர்குடிச் சூழலில் எதையாவது எப்போதாவது படிக்கும் ஒருவரைக் கண்டடைவது அரிதினும் அரிதினும் அரிதான ஒன்று.
அமெரிக்கக் கல்விமுறை வாசிப்புக்கு ஆதரவானது, வாசிப்பைக் கட்டாயமாக ஆக்குவது. ஆகவே அங்குள்ள இளைஞர்களில் கணிசமானோர் வாசிக்கிறார்கள். ஆனால் அதற்கும் அரசியலுணர்வுக்கும் தொடர்புண்டா? அங்கே டிரம்ப் தான் பதவிக்கு வர வாய்ப்பு. சென்ற முறை அமெரிக்காவில் அலைந்தபோதே டிரம்ப் அலை உருவாகியிருப்பதைக் கண்டேன். டிரம்புக்கு விஜய் எந்தவகையில் குறைச்சல்?
வாசிப்புப் பழக்கம் பற்றி…
தமிழகத்தில் வாசிப்புப்பழக்கம் சென்ற இருபதாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் வீழ்ச்சியடைகிறது என்பது கண்கூடான உண்மை. ஆனால் இன்று தமிழகத்தின் சமூக, பொருளியல் சார்ந்து எவர் எந்த விமர்சனத்தை முன்வைத்தாலும் எழுத்தாளர்களும் இதழாளர்களும் முகநூலர்களுமான ஒரு பெருந்திரள் பாய்ந்து குதறவருகிறது. தமிழகம் அப்பழுக்கற்ற மாபெரும் வளர்ச்சியை அடைந்துகொண்டிருக்கிறது என்பதை மட்டுமே நாம் சொல்லவேண்டும், இல்லையேல் இவர்களின் வன்முறையைச் சந்திக்கவேண்டியிருக்கும்.
சில விஷயங்கள் சிலருக்கே முக்கியமானவை. புத்தகம் படிக்கும் ஒருவரின் கண் தான் புத்தகக்கடைக்காகத் தேடும். அவர்தான் அவை இல்லை என்பதை கண்டுகொள்வார். அவருக்குத்தான் வாசிப்பின் முக்கியத்துவம் தெரியும். வாசிப்பே இல்லாத அரசியல்தற்குறியிடம் சென்று அதை பேசிநிறுவலாமென முகநூலில் பலர் நம்புகிறார்கள். அதுதான் பிரச்சினை.
தமிழகத்தின் ஆச்சரியமூட்டும் ஒரு விஷயம், எழுத்தாளர்களுக்கு ஓர் அரசு சில சலுகைகளை, சில வாக்குறுதிகளை, சில்லறை ஆசைகாட்டல்களைச் செய்தால் போதும், அவர்கள் ஒட்டுமொத்தமாகவே அரசு ஆதரவாளர்களாக ஆகிவிடுவார்கள் என இன்றைய அரசு நிரூபித்திருக்கும் விதம். அரசெதிர்ப்பாளர்கள், அமைப்பு எதிர்ப்பாளர்கள், கலகக்காரர்கள் என்றெல்லாம் பல பாவனைகளில் முன்பு உலாவந்தவர்கள் எல்லாமே கட்சிகளின் கடைநிலைத் தொண்டர்களின் தரத்துக்கு கீழிறங்கிப் பேசிக்கொண்டிருப்பதை இப்போது காண்கிறோம். அவர்களுடன் இன்று ஓர் அறிவார்ந்த உரையாடலே சாத்தியம் இல்லை.
உண்மையான அக்கறையுடன் இதையெல்லாம் யோசிப்பவர்கள் சிலர் உண்டு என்று நான் நினைக்கிறேன். அவர்களுக்காக ஒரு விவாதமாக என் தரப்பை முன்வைக்கிறேன்
தமிழகத்தில் வாசிப்பு குறைந்துள்ளதா?
இதற்கு இரண்டுவகை பதில்களைச் சொல்லலாம். எனது நூல்களின் விற்பனை நன்றாகவே உள்ளது. பதிப்பகம் மிகச்சிறப்பாகவே செல்கிறது. ரூ 45000 விலை கொண்ட வெண்முரசு அனைத்துநூல் தொகையை வாங்கவும் வாசகர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் ஓரிரு எழுத்தாளர்களுக்கே இது யதார்த்தமாக உள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழ்நூல்களின் விற்பனை தொடர் சரிவிலேயே உள்ளது. நூல்கள் வெளிவருவதும், வெளியீட்டு விழாக்கள் நிகழ்வதுமெல்லாம் இலக்கியவாதிகளின் தணியாத ஆர்வத்தால்தான். உண்மையில் ஒருவருமே வாங்கி வாசிக்கவில்லை என்றாலும் இதெல்லாம் நிகழும்.
வாசிப்பு ‘குறையவில்லை’ தமிழகத்தில் எப்போதுமே புத்தகவாசிப்பு பெருமளவில் இருந்ததில்லை. கேளிக்கைக்காக வணிக இதழ்களை வாசிப்பது இருந்துள்ளது. ஆனால் அப்போதுகூட புத்தக விற்பனை மிகமிகமிகக் குறைவே. பெரும்பாலும் பள்ளி, கல்லூரி நூலகங்களை நம்பியே இங்கே நூல்கள் அச்சிடப்பட்டன. லாபம் ஈட்டிய நூல்கள் கல்விக்குரியவை. பலசமயம் அவற்றை கல்வியாளர்களே வெளியிட்டார்கள். வாசகர்கள் வாங்கி வாசிப்பது அரிதினும் அரிது. நூலகங்களில் வாசிப்பதும் குறைவு.
1995க்குப்பின் நம் சூழலில் இரண்டு மாற்றங்கள் நிகழ்ந்தன. ஒன்று சராசரிக் கல்வி பெருகி, கல்விகற்ற ஒரு தலைமுறை உருவானது. இரண்டு, பொருளியல் வளார்ச்சியால் வாங்கும் சக்தி பெருகியது. நுகர்வுப்பொருட்களில் மிகப்பெரிய விற்பனை அலை நிகழ்ந்தது. அதில் சிறுபகுதி நூல்விற்பனையிலும் தெரிந்தது. ஆனால் 2000த்தில் உருவான அந்த எழுச்சி 2010க்குப்பின் வடிந்து இன்று முடிவடையும் நிலையில் உள்ளது.
தரமான நூல்கள் வந்தால் வாசிப்பார்களா?
தமிழில் நல்லநூல்கள் இல்லை, இருந்தால் வாங்கி வாசிப்பார்கள் என்று ஒரு கும்பல் சொல்லிக்கொண்டே உள்ளது. அவர்கள் தரமான நூல்களை வாங்கி வாசிப்பவர்கள் என்றும் , நல்ல நூல்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தோன்றும். இது ஒரு அசட்டுத்தனமான முகநூல்பசப்பு மட்டுமே.
எந்த மொழியிலும் எல்லாவகையான நூல்களும் கலந்தே கிடைக்கும். பெரும்பகுதி சாதாரணமான நூல்களாகவும், பயனற்றவையாகவும் இருப்பதும் இயல்பே. இது சுவடிகளில் கவியெழுதிய காலத்திலேயே இப்படித்தான். ஆங்கிலத்தில் எதையாவது வாசிப்பவருக்கே தெரியும் ஆயிரத்தில் ஒரு நூலே வாசிப்புக்குரியது என. வாசகனுக்கு தேவையான நூலை கண்டடையத் தெரியும், வாசிப்பே அவனுக்கு வழிகாட்டும்.
தமிழில் ஒவ்வொரு ஆண்டும் முக்கியமான ஏராளமான நூல்கள் வெளிவருகின்றன. அவற்றில் முக்கியமான, தவிர்க்கவே முடியாத நூல்களும் ஏராளமாக வெளிவருகின்றன. மூன்று வகைகளில் முக்கியமான நூல்கள் வெளிவருகின்றன
இலக்கியப் படைப்புகள். புகழ்பெற்ற படைப்பாளிகள் முதல் தொடக்கப் படைப்பாளிகள் வரை. இலக்கியவாசகன் இலக்கியச் சூழலைக் கவனிப்பவன், அவனுக்கு எவை முக்கியமானவை என தெரியும்.
ஆய்வுநூல்கள். சமூகவியல், வரலாறு, பண்பாட்டாய்வுக் களங்களில் முக்கியமான நூல்கள் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகின்றன. பல ஆய்வுநூல்களை தமிழிலே மட்டும்தான் வாசிக்க முடியும். உதாரணம் இரண்டு சொல்கிறேன். தாணுமாலயன் ஆலயம் (அ.கா.பெருமாள்) கிறிஸ்தவக் காப்பியங்கள் (யோ. ஞானசந்திர ஜான்சன்) இரு நூல்களும் என் மேஜையில் கையெட்டும் தொலைவில் இப்போது உள்ளன. இவற்றை இன்று தமிழில் மட்டுமே வாசிக்கமுடியும். ஆங்கிலத்தில் வாசித்து நுரைதள்ளுகிறோம் என்று சொல்லும் அசடர்கள் தங்கள் பண்பாட்டைப் பற்றி முக்கால்வாசி அறியாமை கொண்டவர்கள். ஆங்கிலத்தில் அவர்கள் வாசிக்கும் நூல்களில் இருந்து பெற்ற பண்பாடு பற்றி மேலோட்டமான கிளர்ச்சிப்பார்வை மட்டுமே அவர்களிடமிருக்கும்.
மொழியாக்கங்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலம் மற்றும் மற்றமொழிகளில் இருந்து குறிப்பிடத்தக்க நூல்கள் தமிழாக்கம் செய்யப்படுகின்றன.
ஆனால் இந்நூல்களில் மிகச்சில தவிர எவையுமே வாசகர்களால் வாங்கப்படுவதில்லை. பெரும்பாலானவை குறைவான பிரதிகள் அச்சிடப்பட்டு அப்படியே ஏதாவது நூலகங்களில் சென்று தேங்குகின்றன. பல ஆண்டுகளுக்கு மறுபதிப்பே வெளிவருவதில்லை.
ஆங்கிலத்தில் வாசிக்கிறார்களா?
இங்கே சொல்லப்படும் இன்னொரு பதில் இன்றைய இளைஞர்கள் ஆங்கிலத்தில் வாசிக்கிறார்கள், ஆகவே தமிழில் வாசிப்பதில்லை என்பது. நான் தமிழகத்தில் உள்ள வாசிப்பின்மை பற்றிப் பேசும்போது சங்கடமாக உணரும் பலர் உடனே “எங்க பையனும் பொண்ணுமெல்லாம் இங்கிலீஷிலே நெறைய படிக்கிறாங்க” என்பார்கள். பரிதாபமாக இருக்கும். புன்னகை செய்து கடந்து செல்வேன்.
என்னுடைய 3 நூல்கள் ஆங்கிலத்தில் வெளி யாகியுள்ளன. ( மற்றும் Stories of the True ) அவற்றில் இரண்டு இந்திய அளவில் சென்ற ஆண்டுகளின் முதன்மை விற்பனைகொண்ட நூல்களின் வரிசையில் வந்தன, மறுபதிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன, பதிப்புரிமைத்தொகையும் வியப்பூட்டுமளவுக்கு கிடைக்கிறது. அதன்பொருட்டு நான் தொடர்ச்சியாக புத்தகவிழாக்களில் கலந்து கொள்கிறேன். அங்கே உரையாடல்களில் இருந்து கிடைக்கும் சித்திரம் திகைப்பூட்டுவது. அதை முன்னரும் சொல்லியிருக்கிறேன்.
ஆங்கிலப் பதிப்பாளர் சொன்னார், இந்தியநகரங்களில் ஆங்கிலநூல்களின் விற்பனை மிகக்குறைவாக இருக்கும் பெருநகரம் சென்னை. சென்னை மட்டுமே அவர்களின் வரைபடத்திலேயே உள்ளது. மற்ற தமிழக நகரங்கள் அவர்களின் தொடர்பிலேயே இல்லை. அங்கே அனேகமாக ஆங்கில நூல்களுக்கு வாசகர் என்பவரே இல்லை.
சென்னையை விட சிக்கிமின் கேங்க்டாக் அதிகமாக ஆங்கில நூல்களை விற்கும் நகரம் என்றார் பதிப்பாளர். நான் ஆச்சரியப்பட்டேன். ஆனால் பிரியம்வதா Stories of the True நூலை அங்கே ஒரு கடையில் இடுப்புயரம் அடுக்கி வைத்து கையெழுத்திடுவதைக் கண்டபோது நம்பத்தான் தோன்றியது. விற்பனையில் முதலிடம் டெல்லி, அடுத்து பெங்களூர், அடுத்து கல்கத்தா, அதன்பின் மும்பை. அந்த வரிசையில் மிகமிகமிக பின்னால்தான் சென்னை உள்ளது.
நமக்கே தெரியும், சென்னையில் ஆங்கிலநூல்கள் விற்கும் முக்கியமான பெரிய கடைகள் என எவையுமே இல்லை என. ஆங்கிலப் பதிப்பகங்களுக்கு நேரடியாக வினியோக மையங்களே சென்னையில் இல்லை. ஆங்கில நூல்களுக்கான நிகழ்வுகள் சென்னையில் அரிதினும் அரிது. இந்தியாவில் ஒரு சர்வதேச இலக்கியவிழா நிகழாத ஒரே மாநகரம் சென்னைதான். சென்னையில் இருந்து ஒரு முதன்மை ஆங்கில நாளிதழ் வெளியாகிறது, ஆனால் இங்கே ஆங்கில வாசிப்பு அனேகமாக இல்லை. எந்த வகை நூல்களுக்கும். பொதுவாக அதிகம் விற்கும் தன்னம்பிக்கை நூல்கள், குழந்தையிலக்கியம் கூட இங்கே விற்பதில்லை. தொழில்நுட்பக்கல்வி ஓங்கியிருக்கும் தமிழகத்தில் தொழில்நுட்ப நூல்களுக்கே விற்பனை இல்லை. அவற்றை விற்கும் புகழ்பெற்ற கடைகள் பெருநகர்களில் கூட இல்லை. இணையவிற்பனையிலும் தமிழகம் மிகமிகமிக பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.
தங்கள் பிள்ளைகள் ‘ஏராளமாக வாசிப்பதாக’ என்னிடம் சொல்லாத பெற்றோரே இல்லை. ஆனால் சமூக வலைத்தளங்களிலோ வேறெங்கிலுமோ நூல்களைப் பற்றி ஏதேனும் தமிழ் இளைஞர் பேசிப் பார்க்கவே முடியாது. ஆனால் சினிமா பற்றிய பேச்சுக்கள் லட்சக்கணக்கில் கண்ணுக்குப் படும். ஒரு சினிமா வெளியாகுமென்றால் அதி தீவிரமாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள். கொந்தளிக்கிறார்கள், கவலைப்படுகிறார்கள், தகவல்களை அடுக்குகிறார்கள், சண்டைபோடுகிறார்கள். நூல்களைப் பற்றிய விவாதக்களங்களைச் சென்று பாருங்கள் மிகமிக அரிதாகவே ஒரு தமிழ்ப்பெயர் தென்படும். நான் இந்த ‘ஆங்கிலத்தில் ஏராளமாக வாசிக்கும்’ மகன்களையும் மகள்களையும் முப்பதாண்டுகளாகத் தேடுகிறேன். எங்கே அவர்கள்?
இளையதலைமுறை ஏன் வாசிப்பதில்லை?
பொதுவாகவே உலகமெங்கும் இளையதலைமுறையினரில் வாசிப்பு குறைந்துள்ளது என ஜெய்ப்பூரில் நான் சந்தித்த அமெரிக்கப் பேராசிரியர் சொன்னார். அதைப்பற்றி நீண்டநேரம் ஒரு விவாதம் நடைபெற்றது. அங்கு கேளிக்கைக்காக, தகவல் அறிவுக்காக வாசிப்பவர்கள் இன்று காணொளிகள், இணைய ஊடகம் என சென்றுவிட்டனர். ஆனால் அறிவுத்தேடலுக்காக, கலையனுபவத்துக்காக வாசிப்பவர்கள் வாசித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
அமெரிக்கச்சூழல் அல்ல தமிழகத்தில். இங்கே மொத்தச் சமூகமே நான்கு ஊடகங்களில் மூழ்கிக்கிடக்கிறது.
- காட்சியூடகம். சினிமா, யூடியூப் வீடியோக்கள், துளிப்படங்கள்
- சமூக ஊடகங்கள். முகநூல். இன்ஸ்டாகிராம் போன்றவை
- விளையாட்டுச் செயலிகள்
- சூதாட்டச்செயலிகள்
இவை நான்குக்கு வெளியே இருப்பவர்கள் லட்சத்தில் ஒருவரே. அவ்வாறு ஒருவர் இருந்தால் அவர் சந்திக்கும் சமூக அழுத்தமும் மிகுவிசை கொண்டது. தாக்குப்பிடிக்கவே முடியாது. ‘நாலுபேருக்கு சமானமாக’ இருக்கும்பொருட்டு, கேலியை தவிர்க்கும்பொருட்டு ஆர்வமே இல்லாமலிருந்தால்கூட இளைஞர்கள் இவற்றில் ஈடுபடுவதாக காட்டிக்கொள்ளவாவது வேண்டும் என்பதே சூழல்.
இந்நான்கில் ஒன்று இன்னொன்றுக்கு இட்டுச்செல்லும். இறுதி இடம் சூதாட்டம்தான். பல லட்சம்பேர் அதில்தான் வாழ்கிறார்கள். இவர்களால் வாசிக்க முடியாது. இவர்களின் மனமும் புலன்களும் வாசிப்புக்கு நேர் எதிராக கட்டமைக்கப்பட்டுவிட்டன. இவர்களுக்கு பெற்றோர் 2 வயதிலேயே செல்பேசியை அவர்களே கையில் கொடுத்துவிடுகிறார்கள். குழந்தை செல்பேசியில் விளையாடுவதை அதன் தொழில்நுட்பத் திறன் என நினைத்து மகிழ்கிறார்கள். நான் ரயிலில். கடைகளில் சந்திக்கும் குழந்தைகள் எல்லாமே தலைநிமிராமல் செல்பேசியில் மூழ்கி அமர்ந்திருக்கின்றன. சினிமா அரங்கிலேயே படம் பார்க்கும்போதே செல்பேசி பார்க்கும் குழந்தையை அண்மையில் கண்டேன்.
இந்தவகையில் வளரும் குழந்தையால் வாசிக்கமுடியாது. கண் விரைவாக நகரப் பழகிவிட்டது. ஆகவே காட்சியூடகமும் கணம் கணமென மின்னிக்கொண்டே இருக்கவேண்டும். கண்வழியாக மட்டுமே தொடர்புறுத்தல் நிகழமுடியும். ஆகவே மொழிப்புலன் மிக மங்கலானது. அவர்களால் மொழிவழியாக எதையும் அறிய முடிவதில்லை. மொழிவழியாக தொடர்புறுத்தவும் முடியவில்லை என்பதை கண்கூடாகவே நாம் காணலாம்.
அதைவிட முக்கியமானது சென்ற இருபது ஆண்டுகளில் தமிழகத்தின் கல்விமுறை காரணமாக தமிழ் வாசிக்கத்தெரியாதவர்களாக இளையதலைமுறை உருவாகிவிட்டது. அவர்களுக்கு ஆங்கிலமும் நடைமுறை அளவுக்கு மேல் தெரியாது. ஆகவே எந்த மொழியிலும் அவர்களால் எதையும் வாசிக்கமுடிவதில்லை. இதுவே உண்மைச்சூழல்.
இந்த தலைமுறையில் இருந்து வாசகர்கள் உருவாகி வருவது மிகக்கடினம். ஆனால் அறிவு ஒரு சுடர். அது அணைந்துவிடாது. அது வந்துகொண்டேதான் இருக்கும். அதற்கான முயற்சிகள் ஒவ்வொன்றும் உடனடியாகப் பலனளிப்பதையும் ஒவ்வொரு நாளும் காண்கிறேன். என் வழி நம்பிக்கையின் ஒளி கொண்டது.
ஜெ