ஒரு அரசு பல்கலை கழக பேராசிரியர் வருடம் முழுவதும் ஏன் தன் ஆயுள் முழுவதும் ஒரு பாடத்தை தான் திரும்ப திருப்ப நடத்துகிறார் …ஒரு மண்வெட்டி வேலைக்காரரும் ஒரு வருடம் முழுவதும், ஏன் தன் ஆயுள் முழுவதும், ஒரே வெட்டை தான் மண் மீது போடுகிறார். அனால் முதலில் இருப்பவருக்கு மாதம் 2.5 லட்சம், ஆக தினம் 8000 ரூபாய் ஊதியமும் . இரண்டாம் மனிதருக்கு தினம் 800 ரூபாய் தின ஊதியமும் . ஏன் ? இது சரியா ..
இதில் அரசு அல்லாத இதே துறைகளில் வேலை செய்பவர்களுக்கும் மிக குறைவான ஊதியம் இது சரியா ? அரசு வேலைக்கு இவ்வளவு ஊதியம் ஏன் ? மேலும் உடல் பணிகள் செய்பவர்களுக்கு எல்லா கால கட்டமும் சொற்ப ஊதியம் ஏன் ? இது நியாமா ? இதில் எதோ சுரண்டல் இருப்பது போல் தெரிகிறது .அரசு வேலைகளுக்கு முயற்சி செய்பவர்கள்களிடம் பெரிய ஊதியம், நிரந்தர வேலை இதை தவிர அந்த துறை சார்ந்து ஏதவாது செய்து விடவேண்டும் என்ற எண்ணம் இருப்பது போன்றும் தெரியவில்லை .
எனக்கு கேள்வி கூட சரியாய் கேட்க தெரிந்ததாக தெரியவில்லை , அனால் இந்த கேள்வியின் சாரத்தை நீங்கள் புரிந்து இருப்பீர்கள் ..ஒரு விளக்கம் கொடுக்க முடியுமா ? எனக்குள் இப்படி ஒரு சிந்தனை வர காரணமம் , தங்க மலர் , சிறுவர் மலர் , குடும்ப மலர் , ராணி புத்தங்கங்களை படித்து கொண்டிருந்த என்னை ஒரு தக்கலை காரர் , ரப்பர் . காடு .அறம் பின் தொடரும் நிழலின் குரல் . வெள்ளை யானை ..ஊமை செந்நாய் ..மற்றும் உங்கள் கட்டுரை புத்தகங்கள் படிக்க வைத்ததின் விளைவே
அஜித்
அன்புள்ள அஜித்
நான் அரசுப்பணியில் இருந்த காலகட்டத்தில் வாரம் ஒருமுறை பொதுமக்களில் எவரோ ஒருவர் இக்கேள்வியைக் கேட்பார். விரிவாக விடையளிப்பேன். தொழிற்சங்கப் பணியாளர்கள் பெரும்பாலும் தெளிவான பதிலை இதற்கு அளிப்பார்கள்.
முன்பு சு.வேணுகோபால் ’கவர்மெண்ட் மாப்பிள்ளைகள்’ என ஒரு காரசாரமான கட்டுரையை தமிழினி மாத இதழில் எழுதி இதே கருத்தைச் சொல்லியிருந்தார், அவரிடமும் விளக்கினேன் என நினைவு.
*
ஊதியம் என்பது எந்தெந்த அடிப்படைகளில் அளிக்கப்படுகிறது?
- வேலையளிப்பவர் தன் ஊழியர்களின் தகுதி மற்றும் பங்களிப்பை கருத்தில்கொண்டு அவர்களுக்கு ஊதியத்தை முடிவுசெய்கிறது.
- வேலையளிப்பவருக்கும் வேலைசெய்பவருக்கும் நடுவே ஊதியம் சார்ந்து ஒரு பேரம் நடந்து இருவருக்கும் பொதுவாக ஊதியம் முடிவுசெய்யப்படுகிறது.
முதல் வகை ஊதிய நிர்ணயம் அரசுப்பணிகளிலும் பெருநிறுவனங்களின் பணிகளிலும் நிகழ்கிறது. வேலையளிக்கும் அமைப்பு ஊழியர்களை மதிப்பீடு செய்கிறது. அவர்களின் தகுதியும் பங்களிப்பும் கருத்தில்கொள்ளப்படுகிறது. ஊழியர்களின் தேவைகளும் சூழலும் அடுத்தபடியாகக் கருத்தில்கொள்ளப்படுகின்றன.
ஒரு கல்லூரியிலேயே பேராசிரியர், நிர்வாகி, குமாஸ்தா, தோட்டக்காரர் என நான்கு நிலை ஊழியர்கள் உள்ளனர். ஊதியவிகிதம் மாறுபடுகிறது. பேராசிரியரின் ஊதியத்தில் ஐந்திலொருபங்குதான் தோட்டக்காரருக்கு.
ஏன்? முதலில் கவனிக்கவேண்டியது பேராசிரியரின் தகுதி. அவர் குறைந்தது 20 ஆண்டுகள் படித்தால்தான் அப்பதவிக்கு வரமுடியும். அதில் எட்டாண்டுகளுக்கும் மேல் கல்லூரிப்படிப்பு. அப்போது அவர் ஏராளமாகப் பணம் செலவழிக்கவேண்டும். ஆண்டுக்கணக்கில் கடுமையாக உழைக்கவேண்டும். அந்தப் படிப்பினூடாக அவர் ஈட்டிக்கொள்ளும் தகுதிதான் அவருடைய ஊதியமாக ஆகிறது.
இரண்டாவதாக அவருடைய பங்களிப்பு. ஒரு கல்லூரியின் பணி கல்வியை அளிப்பது. மிகச்சிறந்த தகுதி கொண்ட ஒருவர்தான் மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றமுடியும். அப்படி ஆற்றினால்தான் அக்கல்லூரி நிலைகொள்ளும். அதாவது அந்தக் கல்வி உற்பத்தி செய்யும் பொருளியல் மதிப்பு அந்த பேராசிரியரின் பங்களிப்பால் உருவாவது. அதற்கு அவருக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.
கல்லூரிப் பேராசிரியர்களின் ஊதியம் அவர்கள் படிப்பதற்கும், ஆராய்ச்சிகள் செய்வதற்கும், பயணம் செய்வதற்கும் எல்லாம் சேர்த்துத்தான். உலகியல் கவலை இல்லாமல் அவர்கள் தங்கள் அறிவுப்பணியில் முழுமையாக ஈடுபட்டிருக்கவேண்டும் என்பதற்காகவே அந்த ஊதியம்.
நீங்கள் இதை வரலாறெங்கும் காணலாம். கடந்த காலகட்டத்திலும் அறிஞர்கள் அரசர்களாலும், நிலப்பிரபுக்களாலும், மடங்களாலும் இப்படித்தான் பேணப்பட்டனர். இலக்கியம், தத்துவம், மருத்துவம், தொழில்நுட்பம் என எல்லா துறைகளின் அறிஞர்களும் இதில் அடங்குவர். அறிஞர்கள் பேணப்படும் இடங்களில் மட்டுமே அறிவு வளரமுடியும். உலகமெங்கும் இன்றும் இதுவே நடைமுறை.
உடனே நீங்கள் கேட்கலாம், இன்றைய பேராசிரியர்கள் அப்படி இல்லையே என. அது நடைமுறை சார்ந்த வீழ்ச்சி. ஒரு நல்ல பேராசிரியர் அறிஞரின் வாழ்க்கையை வாழ்வதற்கான ஊதியமே வகுக்கப்படவேண்டும். அப்படி இல்லாத பேராசிரியர்கள் மேல் நடவடிக்கை எடுக்கலாம். எனக்கு பல அற்புதமான பேராசிரியர்களைத் தெரியும். வாழ்க்கையே அறிவுப்பணியாக ஆக்கிக் கொண்டவர்கள். வேலைசெய்யாத பேராசிரியர்களை அளவுகோலாகக் கொண்டு அத்தனைபேருக்கும் ஊதியத்தைக் குறைத்தால் வேலைசெய்யும் பேராசிரியர்களே முதன்மையாகப் பாதிக்கப்படுவார்கள். கொஞ்சநஞ்சம் எஞ்சியிருக்கும் அறிவுப்பணியும் இல்லாமலாகும்.
இன்று பல தனியார் கல்லூரிகளில் பேராசிரியர்களுக்கு மிகக்குறைவாக ஊதியம் அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் கல்வியின் தரவீழ்ச்சிக்கு முதன்மைக்காரணமே பேராசிரியர்களின் ஊதியம் குறைவாக இருப்பதுதான். உண்மையான தகுதி கொண்டவர்கள் பேராசிரியர் வேலைக்கு வருவதில்லை, வந்தால் நீடிப்பதில்லை. உண்மையான தகுதியுடன் பேராசிரியராக குறைந்த சம்பளத்தில் வேலைசெய்பவர்கள் உலகியல்நெருக்கடிகளால் எதையும் புதியதாக கற்க முடியாமலாகிறது. காலப்போக்கில் உளச்சோர்வடைந்து கற்பிக்கமுடியாதவர்கள் ஆகிறார்கள்.
அக்கல்லூரியின் நிர்வாகிக்கும் ஊதியம் மிகுதி. நிர்வாகப்பணிகளில் உழைப்பு அளவீடாகக் கொள்ளப்படுவதில்லை, பொறுப்புதான் அளவீடாகக் கொள்ளப்படுகிறது. நிர்வாகி பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். குறைந்த ஊதியம் பெற்று பணியாற்ற வருகிறார்கள் என பொறுப்பேற்காதவர்களை நிர்வாகிகளாக ஆக்கினால் அந்த ஒட்டுமொத்த கல்லூரியே காலப்போக்கில் அழியும். அவர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் எவ்வகையிலும் வீண் அல்ல.
நான் அண்மையில் நட்சத்திரவிடுதிகளில் இச்சிக்கலைக் காண்கிறேன். சென்ற இருபதாண்டுகளாக சென்னை நட்சத்திரவிடுதிகளிலேயே பெரும்பாலான நாட்களைச் செலவிடுபவன் நான். அவற்றின் எழுச்சி வீழ்ச்சிகளை அணுக்கமாகப் பார்ப்பவன். பல விடுதிகளில் செலவுக் குறைப்பின்பொருட்டு அதிக ஊதியம்பெறும் நிர்வாகிகளை நீக்கி குறைந்த ஊதியம் பெறும் நிர்வாகிகளை நியமித்தனர். ஆனால் சில ஆண்டுகளில் அந்த விடுதிகள் ஒட்டுமொத்தமாக வீழ்ச்சி அடைந்தன.
எனக்குத் தெரிந்த ஒரு விடுதி, எப்படியும் 300 கோடி ரூபாய் மதிப்புள்ளது. பத்தாண்டுகள் வரை சிறப்பாக இயங்கியது. அதன் நிர்வாகிகள் மாறிக்கொண்டே இருந்தனர். முன்பு அதன் நிர்வாகி மிகக் கம்பீரமாக, அந்த விடுதியை ஒட்டுமொத்தமாகக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவராக, நல்ல உரையாடற்காரராக இருந்தார். அப்போது விடுதி சிறப்பாக இருந்தது. பின்னர் அவருடைய ஊதியத்தில் முக்கால் பங்கைப் பெற்றுக்கொண்டு பணியாற்ற ஒருவர் வந்தார். அவருக்கு எல்லாவற்றிலும் பதற்றம். அவரால் ஊழியர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. விளைவு விடுதியில் பல சிக்கல்கள். நான் விடுதி மாற்றிவிட்டேன்.
பின்னர் ஒரு முறை சென்றபோது அங்கே இன்னொரு நிர்வாகி இருந்தார். அவர் இன்னும் திறமையற்றவர். இன்னும் குறைவான ஊதியம் பெறுபவர். விடுதியின் வருவாய் குறையக்குறைய செலவைச் சுருக்குகிறோம் என்று ஊழியர்களின் ஊதியத்தை குறைத்தனர், விடுதி நிர்வாகம் மேலும் வீழ்ச்சி அடைந்தது. கோவிட் காலத்தில் விடுதியை நடத்த முடியாமல் விற்றுவிட்டனர். குறைந்தது நூறுகோடி ரூபாய் குறைந்த விலையில். ஊழியர்களின் ஊதியத்தில் சில லட்சங்களை மிச்சப்படுத்தி மொத்த விடுதியே மதிப்பிழக்கச் செய்து கோடிக்கணக்கில் இழந்தனர்.
திறமை, பொறுப்பு ஆகியவற்றுக்கான ஊதியம் என்பது ஒரு முதலீடு. ஒரு வேலைக்கு குறைந்த ஊதியம் பெறும் ஒருவரை நியமித்தால் அந்த வேலையின் மதிப்பும் குறைகிறது என்றே பொருள். குறைந்த ஊதியத்துக்கு வேலைசெய்பவர் குறைந்த பங்களிப்பையே ஆற்றுகிறார். ஒருவரை குறைந்த ஊதியத்துக்கு வேலைக்கு எடுப்பது வேலைக்கு வைப்பவரின் சாமர்த்தியத்தைக் காட்டவில்லை, முட்டாள்தனத்தைக் காட்டுகிறது. ஒரு வேலைக்கு சரியான நபரை தேர்வுசெய்வதே சாமர்த்தியம், அவரை சரியானபடி பயன்படுத்திக் கொள்வது அடுத்தகட்ட சாமர்த்தியம். ஊதியத்தை அடித்துப்பேசிக் குறைத்து அவரை நம்பிக்கையுடனும் பொறுப்புடனும் தீவிரமாகச் செயல்பட விடாது செய்யும் தொழில்நிறுவனம் உண்மையில் நிர்வாகமென்றால் என்னவென்றே தெரியாத ஒன்று.
கடைசியாக உடலுழைப்புப் பணி. உடலுழைப்புப் பணிக்கு குறைவாக ஊதியம் உள்ளது என்பது உண்மை. ஏனென்றால் அதற்கு தனித்தகுதி தேவை இல்லை. அந்த வேலைசெய்பவர் அளிக்கும் பங்களிப்பின் பொருளியல் மதிப்பும் குறைவு. ஒரு மண்வெட்டித் தொழிலாளி ஒரு நாளில் பத்து வாழைக்கு தடம்வெட்டுகிறார். அந்தப் பத்து வாழைகளின் குலையின் சந்தைமதிப்பு ஐந்தாயிரம் ரூபாய் என்றால் அவருடைய ஊதியம் அதில் ஒரு பகுதியாகத் தானே இருக்க முடியும்? அவருக்கு எட்டாயிரம் ரூபாய் ஊதியம் அளிக்கமுடியுமா?
உடலுழைப்பை விட குறைவான ஊதியம் பெறுபவர்கள் உடலுழைப்பு குறைவான, ஆனால் தனித்தகுதியும் தேவையில்லாத ஊழியர்கள். கடை ஊழியர்கள் போன்றவர்கள். உடலுழைப்புப் பணிக்கு முன்பு நிறையபேர் வந்தனர், ஆகவே ஊதியம் குறைந்தது. இப்போது அதிகம்பேர் வருவதில்லை, ஆகவே ஊதியம் கூடிக்கொண்டிருக்கிறது. உடலுழைப்பாளர் தனித்திறன் ஈட்டிக்கொண்டார் என்றால் அவருடைய ஊதியம் கூடுகிறது. ஒரு சித்தாளை விட இருமடங்கு சம்பளம் கொத்தனாருக்கும் டைல்ஸ் பதிப்பவருக்கும் உள்ளது. ஆனால் கடை ஊழியர் சம்பளம் கூடுவதே இல்லை.
மேலே குறிப்பிட்ட இரண்டில், இரண்டாவது வகை ஊதியமே தனியார் நிறுவனங்களில் உள்ளது. அங்கே ஊதியத்தை முடிவுசெய்பவர் வேலைசெய்பவர். தன் தனித்திறனை வளர்த்துக்கொண்டு அவர் வேலை அளிப்பவரிடம் பேரம்பேசி ஊதியம் பெறுகிறார். ஒரு கணினி நிறுவன தொழில்நுட்ப ஊழியர் அரசு உயரதிகாரியை விட ஊதியம்பெறுபவர். ஒரு தொழில்நிறுவன நிர்வாகி அரசின் உச்சநிலை அதிகாரியின் ஊதியத்தைவிட பத்து மடங்கு ஊதியம்பெறக்கூடும். அதை ஒப்பிடவே கூடாது
ஆகவே வெறுமே உழைப்பு என்று பொதுவாகப் பார்த்து ஊதியத்தைப் பற்றிப் பேசுவது பிழையானது. ஊதியம் பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.
இனி, அரசூழியர் ஊதியம் பற்றி.
அரசூழியர்களின் ஊதியம் ஊதியக்குழு என்னும் நிபுணர் அமைப்பால் தீர்மானிக்கப்படுகிறது. அது ஓர் ஊழியரின் சராசரி வாழ்க்கைச்சூழலையும் பொதுவான பொருளியல் சூழலையும் கணக்கில் கொண்டு அதை முடிவுசெய்கிறது. ஓர் ஊழியரின் அவசியச் செலவுகள், சமூகப்படிநிலை ஆகியவற்றை அது கருத்திலெடுக்கிறது.
அவ்வாறு மத்திய அரசின் ஊழியர்களின் ஊதியம் முடிவுசெய்யப்படுகிறது. அது மத்திய அரசே ஒப்புக்கொண்ட ஓர் ஊதியம். ஆகவே மாநில அரசு ஊழியர்கள் அதை கோருகிறார்கள். அதை அவர்கள் அடைகிறார்கள். துணை அரசு நிறுவனங்களில் அந்த ஊதியம் அதன்பின் கோரி அடையப்படுகிறது. அதன்பின் தனியார் ஊழியர்கள் அந்த ஊதியத்தைக் கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக அடைகிறர்கள்.
அதாவது அத்தனை துறைகளிலும் ஊழியர்களின் ஊதியம் என்பதன் அடிப்படை அளவுகோல் என்பது அரசூழியர்களின் ஊதியமே. ஒவ்வொரு ஊதியப் பேச்சுவார்த்தையிலும் அதுவே முன்வைக்கப்படுவதைக் காணலாம். அரசூழியர்களின் ஊதியம் குறைந்தால் அதுவே அளவுகோலாகி அத்தனைபேரின் ஊதியமும் குறையும். இதுவே நடைமுறை உண்மை.
இரு துறைகளில் ஊதியம் குறைவாக உள்ளது. ஒன்று, சிறு தனியார்த்துறை. இரண்டு முறைசாரா உடலுழைப்புத்துறை. இரு துறைகளிலும் ஊழியர்களின் பேரம்பேசும் திறன் குறைவு. காரணம் ஒருங்கிணைந்த வலுவான சங்கங்கள் இல்லை. தொழிற்சங்கங்கள் அரசியல்மயமாகி, எல்லா அரசியல்கட்சிகளும் ஆளுக்கொரு தொழிற்சங்கம் அமைத்ததுமே இந்திய தொழிற்சங்க இயக்கம் நெருப்பணைந்து செயலற்றதாகிவிட்டது. அதன் இழப்பு ஊழியர்களுக்குத்தான்.
உலகிலேயே ஊதியம் குறைவான ஊழியர்கள் வாழும் நாடுகளிலொன்று இந்தியா. எல்லா துறைகளிலும் ஊதியம் பெருகவேண்டும் என்று எண்ணுவோம். உடலுழைப்புத் துறையில் தொழிலாளர்கள் இணைந்து ஊதியத்தை கூட்டிக்கொள்ளட்டும். ஊழியர்களின் பேரம்பேசும் ஆற்றல் மிகுதியாகிக்கொண்டே இருக்கவேண்டும். அதை நாடுவோம். அந்த பேரம்பேசும் தரப்புக்கு ஆதரவான முக்கியமான அம்சம் அரசே ஒப்புக்கொண்டு தன் ஊழியர்களுக்கு அளிக்கும் ஊதியம். அது ஒருபோதும் குறையலாகாது.
ஊழியர்களின் ஊதியம் அதிகரிப்பது பொருளியலை வளர்க்குமே ஒழிய எவ்வகையிலும் குறைக்காது என முதலாளித்துவப்பொருளியல் சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஏனென்றால் அந்த ஊதியம் வாங்கும்திறன் ஆக மாறி சந்தையைச் செழுமைப்படுத்துகிறது
அமெரிக்காவானாலும் சரி, சீனாவானாலும் சரி, அரசூழியர்களின் ஊதியமும் எண்ணிக்கை விகிதமும் மிகுதி. ஏனென்றால் அவர்கள் வழியாகவே அரசு செயல்படுகிறது. அவர்களுடைய பங்களிப்பு என்பது திறமை மற்றும் பங்களிப்பு ஆகியவற்றுக்கும் மேலாக பொறுப்புதான்.
அரசூழியர்கள் பொறுப்பேற்றுக்கொள்வதன் பயன் என்ன என்பதை கோவிட் காலத்தில் பார்த்திருப்பீர்கள். அத்தனை தனியார் மருத்துவமனைகளும் கேட்களை இழுத்து மூடிவிட்டன. பின்னர் லாபநோக்கம் கொண்டு வாசல்களை திறந்து லட்சக்கணக்கில் கட்டணம் வசூலித்தன. அரசு மருத்துவமனைகள் இருபத்துநான்கு மணிநேரமும், இரண்டு ஆண்டுகள், கிட்டத்தட்ட இலவசமாகச் செயல்பட்டன. எந்த ஊழியரும் விடுப்பு எடுக்கவில்லை. பலர் மாதக்கணக்கில் மருத்துவமனைகளிலேயே தங்கினர்
(இதெல்லாம் செவிச்செய்தியோ , சமூக ஊடகத்தகவலோ அல்ல. என் சொந்த அனுபவம். அந்தக் காலகட்டத்தில் என் பொருட்டும் என் வாசகர் பொருட்டும் அக்களத்தில் தீவிரமாகச் செயல்பட்டேன்)
சில ‘நவீனப்’ பொருளியலாளர்கள் அரசூழியர்களை குறைத்து, தனியார்த்துறையை உள்ளே கொண்டுவரவேண்டும் என்றும், ஒப்பந்த தொழிலாளர்களே போதும் என்றும் பேசுவார்கள். அப்படிச்செய்த நாடுகள் எல்லாம் கோவிட் காலத்தில் நிர்க்கதியாக நின்றன. சடலங்கள் தெருவில் கிடந்தன. உதாரணம், மேற்கு ஜெர்மனி. இந்தியாவை அந்த நெருக்கடியில் ஒருங்கிணைத்து நடத்தி மீட்டது இந்தியாவின் மாபெரும் அரசுத்துறையும் அதன் லட்சக்கணக்கான ஊழியர்களும்தான்.
அரசூழியர்களின் ஊதியம் பற்றி அவ்வப்போது ஒரு பேச்சு இங்கே திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. அது அரசுக்கு ‘சுமை’ என நாளிதழ்க் கட்டுரைகளில் அவ்வப்போது வரும். அதாவது வரிகட்டுவோரின் சுமை அது. ஆனால் அரசு என்பதே அரசூழியர்கள்தான். அவர்கள்தான் இந்தியா என்னும் தேசத்தை ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அரசு பல்வேறு திட்டங்களில் வீணடிக்கும் தொகையை விட அரசூழியர்களின் ஊதியம் மிகுதி அல்ல.
அரசுத்துறைகள் தனியார் மயமானால் ஊழல் குறையும் என்பது இன்னொரு மாயை. அண்மையில் விமானநிலையங்கள், மேம்பாலங்கள், பறக்கும் ரயில்கள் அமைப்பதில் நிகழும் ஊழல்களைப் பற்றி அகத்தகவல்களை அறியும்போது பேச்சிழந்து போகிறேன். இந்த அளவு ஊழல் அரசுத்துறையில் சாத்தியமே இல்லை, ஏனென்றால் பல்லாயிரம்பேர் தொடர்புகொண்ட செயல்களாகவும், பொதுவான கணக்காயர் கொண்டவையாகவுமே அவை அரசுத்துறையில் நிகழும். (ஆனால் அமெரிக்காவிலும் ஜப்பானிலும்கூட கட்டுமானங்களின் ஊழல் என்பது இதே விகிதத்தில்தான்)
1953 முதல் பொதுநலம்நாடும் ஓர் அரசு அமைந்திருக்கும் நாடு இந்தியா. கல்வி, மருத்துவம், போக்குவரத்து என பெரும்பாலான மக்கள்நலச் செயல்பாடுகள் அரசால் முன்னெடுக்கப்படுகின்றன. இங்கே அரசூழியர்கள் குறைந்தால் அந்த எல்லா மக்கள்நலத் திட்டங்களும் படிப்படியாக இல்லாமலாகும். அவை நிறுத்தப்படவேண்டும் என நினைப்பவர்களே அரசூழியர் குறைப்பைப் பற்றிப் பேசுகிறார்கள்.
அரசூழியர்கள் முறையாகப் பணியாற்றும்படி செய்யலம். அரசு நிறுவனங்கள் லாபத்தில் நிகழும்படிச் செய்யலாம். அரசு நிறுவனங்களில் ஊழலை, மெத்தனத்தை குறைக்கலாம். ஆனால் அரசூழியர்கள் அதிகம் இல்லாத ஒரு குறைந்தபட்ச அரசு இந்தியா போன்ற ஒரு மூன்றாமுலகில் உடனடியாக உருவாக முடியாது.
ஜெ