கற்காலத்து இரட்டையர்

அன்பு ஜெ

இரட்டையர், இரண்டு தலை கொண்ட பறவை போன்ற உருவங்கள் பாறைசெதுக்குகளில் உள்ளதைபற்றி முன்னர் எழுதியிருந்தீர்கள். இன்று Louise Milne என்பவர் எழுதிய Terrors of the Night என்ற நூலை வாசித்துக்கொண்டிருந்தேன்கலை, புராணம், கனவு பற்றிய கட்டுரைகளின் தொகுப்புநூல்

அதில் ஆசிரியர் இவ்விரட்டை(hybrid) உருவகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார். இவ்வகை உருவங்கள் ஆதிமனிதன் தன் கனவில் தோன்றியதை நனவில் பிறருக்கு தெரியப்படுத்த உருவாக்கிய ஒரு மொழி, மொழி என நாம் அறிந்தது தோன்றுவதற்கு முன்னான மொழி, என்று கூறுகிறார்

கனவு அல்லது கற்பனையில் தோன்றியவற்றை  நனவில் கூற கனவின் எல்லையிலிருந்து ஒரு கூறையும் (element) நனவின் ஒரு  கூறையும் இணைத்துக் கொள்கிறான். இதை edge sign என ஆசிரியர் பெயரிடுகிறார். சிங்க தலை கொண்ட மனிதன், மீன் வால் கொண்ட பெண், சிறகு முளைத்த பாம்பு போன்ற இரு உலகங்களின் கூறுகளும் கலந்த உருவங்கள் நம் நினைவுக்கு உடனே தோன்றுபவை

இதற்கு கிரேக்க மொழியில் adynata என்ற சொல்லை கொண்டு விளக்குகிறார். Adynaton என்றால்நடக்கவியலாது’ (impossibility) என்று பொருள்

இவ்வுருவகங்கள் எவ்வாறு குறியீடுகளாக மாறின என்பதற்கு இவர் தரும் விளக்கம் அருமை. இவ்வகை உருவகங்கள் மடித்துவைக்கப்பட்ட (folding) உருவகம் என்று கொண்டால் அதை பிரித்தால் (unfolding) தான் அதன் பொருள் நமக்கு தெரியவரும்இதில் உள்ள நுட்பம்: அந்த மடிப்பினுள் மறைக்கப்பட்ட சேதி, அந்த ஆதி மனிதனின் கனவு/கற்பனை மறைஞான செய்தியாக (occult), உள்மடிப்பு (infolding) செய்யப்பட்டுள்ளது. இவ்வகை உள்மடிப்பு செய்யப்பட்ட ஒரு உருவகம் மறைஞான செய்தி பொருந்தியது என கால போக்கில் நிறுவிவிட்டது. சிங்க தலை மனிதன், மெர்மைட், டிராகன், இரண்டு தலை பறவை போன்றவை இன்று நமக்கு மறைஞான உருவகங்களாகவே (occult symbols) கிடைக்கின்றன. இவ்வகை உருவகம் ஒரு ரெடிமேட் டிசைன் ஆக ஆன பிறகு அதன் மேல் மேலும் மேலும் குறியீடுகள் ஏற்ற பட்டு அது காலம் காலமாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இவை டெம்ப்லேட்டுகளாக ஆகிவிடுகின்றன. காலத்தில் அவ்வுருவகங்கள் மேல் பல மாற்றங்கள் நிகழ கூடும்: டிராகன் இரண்டு தலை கொண்டதாக ஆகலாம், மெர்மைட் வால் இரண்டாக பிளவு படலாம், நான்கு கை கொண்ட மனிதனின் கைகளில் சங்கும் சக்கரமும் கதையும் தாமரையும் தோன்றலாம். கற்பனை அளவிற்கே விரியும் கனவு

பல ஆண்டுகளுக்கு பிறகு, கனவிலிருந்து கற்பனையிலிருந்து எழுந்த அவ்வுருவம் நனவாக மட்டுமே நின்றுகொண்டிருக்கிறது. அதன் மறைஞான பொருள் புரிந்தவர்க்கு மட்டும் அந்த உருவம் அதன் உண்மையை காட்டும்கற்காலத்து கலைஞனின் கனவில் சென்று அமர நாமும் இக்காலத்தில் கலைஞனாக மாறி கனவு காண வேண்டும். இரட்டையரின் கனவு.

ஶ்ரீராம்

கற்காலத்து மழை1

கற்காலத்து மழை  6

முந்தைய கட்டுரைவிபாசனா, கடிதம்
அடுத்த கட்டுரைரா.வீழிநாதன்