கோவைமணி தூரன் விருது, கடிதம்

தமிழ்விக்கி- தூரன் விருது: முனைவர். கோவைமணிக்கு

அன்புள்ள ஜெ

நலம்தானே?

முனைவர் கோவைமணி அவர்களுக்கு தூரன் விருது செய்தி அறிந்தேன். தூரன் விருது இந்த ஆண்டு எவருக்கு என்று நானே சில கணக்குகள் போட்டிருந்தேன். இவரைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் அதில் ஆச்சரியமும் இல்லை. இங்கே ஆய்வுகள் பலவகை. சமகால அரசியலுடன் ஏதேனும் வகையிலே சம்பந்தப்பட்ட ஆய்வுகளும் ஆய்வாளர்களும் மட்டுமே கவனிக்கப்படுவார்கள். சாதியரசியலுடன் சம்பந்தப்பட்டவர்கள் கொண்டாடப்படுவார்கள். எந்தத் துறையிலும் உண்மையான ஆய்வுக்கும் ஆய்வாளர்களுக்கும் எந்த மதிப்பும் இல்லை.

கல்வெட்டியல் போன்ற துறைகளுக்காவது கொஞ்சம் கவனிப்பு உண்டு. அது வரலாற்றுடன் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு என்பதனால். சுவடியியல் என்பது ஒரு தலைமறைவான துறை. அதில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக சலிக்காமல் பணியாற்றியிருக்கிறார் கோவைமணி அவர்கள். தமிழ்ச்சூழலில் எந்த கவனிப்பும் மரியாதையும் இல்லாத பணி. ஆனால் மிகப்பெரிய பணி. மிகமிக அவசியமானது. இந்த காலகட்டத்தில் இதைச் செய்யாவிட்டால் நாம் சுவடிகளை இழந்துவிடுவதுகூட சாத்தியம்தான்.

அறியப்படாத உண்மையான ஆய்வாளர்களைக் கண்டடைந்து அறிமுகம் செய்கிறீர்கள். உங்கள் பணி போற்றத்தக்கது. வாழ்த்துக்கள் கோவைமணி அவர்களுக்கு.

என்.முத்துசாமி

மோ.கோ.கோவைமணி தமிழ் விக்கி

பெரியசாமித் தூரன் தமிழ் விக்கி

தமிழ் விக்கி

தமிழ் விக்கி தூரன் விருது

அன்புள்ள முத்துசாமி,

பெரியசாமித் தூரனேகூட அரும்பணி ஆற்றி அறியப்படாமல் மறைந்துவிட்டவர்தான். அவருடையபெயரால் வழங்கப்படும் விருதை அத்தகைய ஒருவருக்கே அளிக்கவேண்டும் என நினைத்துள்ளோம். இந்த விருது ஒரு சிறு வெளிச்சம்தான். ஆனால் தமிழ்ச்சூழல் நீங்கள் சொல்வதுபோல அதிகார அரசியலுக்கு அப்பாற்பட்ட எதையும் கவனிக்காமலாகி நீண்டகாலமாகிறது. சில அறிவுவட்டங்களிலாவது கோவைமணி கவனிக்கப்படுவாரென்றால் மகிழ்ச்சி.

ஜெயமோகன்

அன்பு நிறைந்த ஜெ.

வணக்கம். முனைவர்

கோவை மணிக்கு இந்த ஆண்டுக்கான தமிழ்விக்கி பெரியசாமித் தூரன் விருது அறிவிக்கப்பட்டுள்ளமை அறிந்து மகிழ்கின்றேன். கவனம்பெற வேண்டிய அவர்தம் பணிகள் இனி அனைவரின் கவனத்துக்கும் செல்லும்.

அவரை என் வலைப்பதிவு வழியாக(10.06.2024) அறிவுலகத்திற்கு நினைவூட்டியமை நினைத்து மகிழ்கின்றேன். தங்களுக்கும் விருதுக் குழுவினர்க்கும் என் அன்பார்ந்த வாழ்த்துகள். ஈரோட்டில் சந்திப்போம். –

மு.இளங்கோவன்,

புதுச்சேரி

அன்புள்ள இளங்கோவன்

அவருடைய பணிகள் உங்கள் இணையப்பக்கம் வழியாகவே தெரியவந்தன. நீங்கள் தமிழறிஞர்கள், ஆய்வாளர்களை அறிமுகம் செய்து எழுதும் குறிப்புகள் மிக அரியவை, பெருமதிப்பு கொண்டவை.

ஜெ

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு -கோவைமணி. இணையநூலகம்

 

முந்தைய கட்டுரைசாரதையின் தந்திரம்
அடுத்த கட்டுரைஒரு புதிய வரவு