காலம் கடந்துசெல்கையில் நினைவில் எவை எஞ்சுகின்றன? சில அரிய தருணங்கள். அவை வாழ்க்கையின் திருப்புமுனைகள், அல்லது சாதனைகள் அல்லது எய்துதல்கள். ஆனால் அத்தருணங்களில் உணர்வது ஒருவகை உளநிலைப்பை மட்டும்தான். ஒன்றும் தோன்றுவதில்லை. அசட்டுத்தனமான முகபாவனையுடன் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருப்போம். அல்லது கையை எப்படி வைப்பது என்று குழம்பிக்கொண்டிருப்போம்.
எனக்கு 1993ல் குர்அதுல்ஐன் ஹைதரிடமிருந்து சம்ஸ்கிருதி சம்மான் விருது பெற்றது அரிய தருணம். ஆனால் அந்நிகழ்வு முழுக்க நான் அவரை வெறுமே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் என்னிடம் பேசியவை எவையும் நினைவில்லை. அவருடைய சிவந்த தலைமயிர், நோயுற்றுக் களைத்திருந்த பளிங்குச்செதுக்கு முகம், அவ்வளவுதான் நினைவில்.
ஆனால் சின்னஞ்சிறிய மகிழ்ச்சிகளில் நம் உள்ளம் களியாட்டமிடுகிறது. அவை நம்மால் கையாளப்படக் கூடிய அளவுக்குச் சிறியவை. சிறிய அழகிய பந்துகள் போல. அவற்றில் திளைக்கையில் நாம் அவை அரியவை என அறிவதில்லை. அவற்றை நினைவில்கொள்வோமென்றுகூட நினைப்பதில்லை. அவை நம் வழியாகக் கடந்துசெல்கின்றன, பாறைமேல் நீரும் ஒளியும் காற்றும் கடந்துசெல்வதுபோல. பாறையை அவை மென்மையாக, நுட்பமாக செதுக்கிக்கொண்டிருக்கின்றன என அப்போது பாறை உணர்வதில்லை.
அத்தகைய சிறிய தருணங்கள் முக்கியமானவை என்று நான் என் இளமையிலேயே உணர்ந்தேன், மிகக்கடினமான அனுபவங்கள் வழியாக. இந்த வாழ்க்கையை எதன்பொருட்டும் கவலைப்பட்டு இழந்துவிடக்கூடாதென்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். என்னை நான் மனநோயின் விளிம்பு எனச் சொல்லத்தக்க உளச்சோர்வில் இருந்து என்னை மீட்டுக்கொண்டேன். அந்த விடுதலையில் இருந்தே நான் ஓர் எழுத்தாளனாக ஆனேன்.
சென்ற கால வாழ்க்கையில் இனிய தருணங்கள் குழந்தைகளுடன், பிரியத்திற்குரிய விலங்குகளுடன், இயற்கையின் மடியில், அணுக்க நண்பர்களுடன் இருந்தவை என இன்று எண்ணிக்கொள்கிறேன். அவைதான் நினைவில் சித்திரமென நீடிக்கின்றன. இன்று எண்ணும்போது அவற்றை இன்னும்கூட அள்ளிக்கொண்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது – ஆனால் உண்மையில் நான் அவற்றை திட்டமிட்டுப் பெருக்கி முடிந்தவரை திளைத்தவன், ஒரு தருணத்தையும் தவறவிடாதவன்.
அந்நினைவுகளில் மிக அரியது ஹீரோவுடனான நாட்கள். எட்டாண்டுகள் அவன் எங்களுடன் இருந்தான். கன்னங்கரிய லாப்ரடார். இன்றும் எங்கு கரிய லாப்ரடாரைப் பார்த்தாலும் நெகிழ்ந்து குதூகலமாகிவிடுகிறேன். எல்லா வகையிலும் அவன் ஒரு பண்பட்ட உயிர். எங்கும் அத்துமீறுவதில்லை. எந்நிலையிலும் தன் கௌரவத்தை விட்டுக்கொடுப்பதில்லை. இனிமையான அழகான துணையாக என் தனிமைப்பொழுதுகளிலெல்லாம் உடனிருந்தான்.
ஒரு பெரிய நிலக்கரித்துண்டு, அதிலெரியும் ஒரு துளி செந்நெருப்பு என அவனை நினைவுகூர்கிறேன். அந்தக் கரியதோற்றத்தாலோ என்னவோ அவன் என் கனவுகளில் பெரும்பாலும் மெல்லிய ஓசைகளாகவும், வாயின் மணமாகவும், மென்மையான குளிர்ந்த மூக்கின் தொடுகையாகவும்தான் வருகிறான். நாலைந்து மாதங்களுக்கு ஒருமுறை கனவில் தோன்றிவிடுவான்.
பலசமயம் ரயிலில் தூங்கிக்கொண்டிருப்பேன். நாகர்கோயில் வந்துவிடும். பெட்டிக்குள் நுழைந்து ஹீரோ என் காலை மூக்கால் உசுப்பி வௌ வௌ என்பான். என்னடா என எழுந்துகொள்வேன். ரயில் நின்றுவிட்டிருப்பதை உணர்வேன். ஒரு தருணத்தில் ரயிலில் என் போர்வை நழுவி விட்டது, குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தேன். கீழே நின்று ஹீரோ போர்வையை கவ்வி எடுத்து எனக்கு நீட்டினான்.
ஹீரோவுடன் நான் இருக்கும் பழைய படம் ஒன்று அவன் நினைவுகளை எழச்செய்கிறது. நாய்கள் நம்மிடம் தற்செயலாக வருவதில்லை. எந்த உறவும் தற்செயல் அல்ல. நாய்கள் நமக்காக அளிக்கப்படும் ஆசீர்வாதங்கள். நம்மீது எங்கோ எதுவோ நம்பிக்கையுடனிருக்கிறது என்பதற்கான சான்றுகள். ஹீரோ என்னை தேர்ந்தெடுத்தான். என்னை தூக்கிக்கொள் என ஆணையிட்டான். என் வாழ்க்கையை எட்டாண்டுகள் ஒளிபெறச்செய்து மீண்டான். நான் அவன் பொருட்டு நானறியா அனைத்துக்கும் நன்றி சொல்லவேண்டும்.