வெள்ளக்கோவில் புத்தக விழா

சிறு ஊர்களில் புத்தகக் கண்காட்சிகள் நிகழ்வது பற்றி புத்தகப்பதிப்பாளர்கள் வருத்தம்தான் தெரிவிப்பார்கள். ஏனென்றால் அங்கே அவர்கள் கடைபோடமுடியாது, அங்கே சென்று கடைபோட்டு விற்று அடக்கச்செலவைக்கூட ஈட்ட முடியாது. நூல்களை அங்கே கடைபோடும் விற்பனையாளர்களுக்கு அளிக்கவேண்டும், அவர்களுக்கு பெரிய தள்ளுபடி அளிக்கவேண்டியிருக்கும். அவர்கள் அதிக தள்ளுபடி அளிக்கும் நூல்களையே விரும்பி விற்பார்கள், அவை பெரும்பாலும் தரமில்லா நூல்கள் அல்லது பழைய நூல்கள்.

ஆனால் சிற்றூர்களிலுள்ள புத்தகக் கண்காட்சி காரணமாக பெரிய புத்தகக் கண்காட்சிகளில் விற்பனை குறைந்து அங்கு கடைபோடுவதும் இழப்பை ஏற்படுத்துவதாக அமையும். விஷ்ணுபுரம் பதிப்பகம் சார்பில் இவ்வாண்டும் ஈரோட்டு புத்தகக் கண்காட்சியில் கடை போடுவதாக இல்லை என முடிவெடுத்துள்ளனர். காரணம், அடக்கச்செலவுக்கே விற்பது கடினம்.

அதேசமயம் சிற்றூர்களில் நிகழும் ஒரே இலக்கியவிழா புத்தகக் கண்காட்சிதான். இளையதலைமுறை புத்தகக் கண்காட்சிகள் வழியாக அறிவியக்கத்தை அறிந்துகொள்கிறது. வாசிப்பு அறிமுகமாகிறது, எந்த வாசிப்பாக இருந்தாலும் தொடர்ச்சியாக வாசிப்பவர்கள் நல்ல இலக்கியம் நோக்கி வருவார்கள்.

இன்னொன்றுமுண்டு, பெருநகரங்களில் தமிழ் வாசிக்கத்தெரியாத இளைஞர்கள் மிகுதியாகிக்கொண்டிருக்கிறார்கள். (அவர்கள் ஆங்கிலமும் வாசிப்பதில்லை.அந்த அளவுக்கு ஆங்கிலப்புலமை இருப்பதில்லை) ஆகவே இன்றும் தமிழிலக்கிய வாசிப்புக்கு வருபவர்கள் பெரும்பாலும் சிற்றூர் இளைஞர்களே. சிற்றூர் புத்தகக் கண்காட்சிகள் அவர்களுக்கான திறந்த வாசல் போன்றவை.

வெள்ளக்கோயில் கரூர் அருகே உள்ள தொழில்நகரம், கலையிலக்கியத்தின் கணக்கில் சிற்றூர்தான். அங்கே மகாத்மா காந்தி அறக்கட்டளை சார்பில் ஒரு புத்தகக் கண்காட்சி நான்காண்டுகளாக நடைபெற்று வருகிறது. ராஜ்குமார் என்னும் தொழில்முனைவோர் மகாத்மா காந்தி அறக்கட்டளை யின் தலைவராக இருந்து புத்தகக் கண்காட்சியை முன்னெடுக்கிறார்.என்னை ஆதி என்னும் நண்பர் தொடர்புகொண்டு அதில் பங்கெடுக்கும்படி நான்காண்டுகளாகவே கேட்டுக்கொண்டிருந்தார். ஆதி புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர்.

நான் திறந்தவெளி பேச்சை விரும்புவதில்லை. பங்கேற்பாளர்கள் வந்து அமர்ந்துகொண்டும் எழுந்து சென்றுகொண்டும் இருந்தால் என் மனநிலை சலிப்பாகிவிடும். ஈரோட்டில் அவ்வண்ணம் ஒன்று நிகழ்ந்ததற்குப்பின் பெரும்பாலும் தவிர்ப்பேன். தவிர்க்கமுடியாமல் கலந்துகொண்ட விழா நெல்லை புத்தகக் கண்காட்சி. திறந்தவெளி நிகழ்வில் கலந்துகொள்ளலாகாது என்னும் எண்ணத்தை மேலும் வலுப்பெறச் செய்வதாகவே அதுவும் இருந்தது.

ஆனால் வெள்ளக்கோயில் நண்பர்கள் கேட்டுக்கொண்டே இருந்தனர். அவர்களின் பிரியத்துக்காக சென்ற ஆண்டுக்கு முந்தைய ஆண்டு ஒப்புக்கொண்டேன், ஆனால் அமெரிக்கா செல்ல நேர்ந்தமையால் முடியவில்லை. ஆகவே இவ்வாண்டு செல்வது என முடிவெடுத்தேன்.

ஜூன் 30 அன்று கோவை கட்டண உரை. மறுநாள் காலையில் நானும் கிருஷ்ணனும் நண்பர்களும் விஷ்ணுபுரம் அலுவலகம் சென்று திரும்பி வந்து மதியம் நண்பர் பிரபு (ஈரோடு) அவர்களின் காரில் வெள்ளக்கோயில் சென்றோம். நல்ல மழைக்குளிர் கொண்ட சூழல். அருமையான ஒரு பயணமாக இருந்தது. மாலை ஆறு மணிக்கு வெள்ளக்கோயில் சென்றோம்.

ராஜ்குமார் இல்லத்தில் சிறு தேநீர். நீண்ட இடைவெளிக்குப் பின் தேவிபாரதியைப் பார்த்தேன். அவரே புதுவெங்கரையாம்பாளையத்தில் இருந்து பைக்கில் வந்திருந்தார். உடல்நிலை மிக மேம்பட்டிருந்தது. உற்சாகமாக இருந்தார். அவசரநிலைக் காலம் பற்றிய அவருடைய நினைவுகளை பேசிச் சிரித்துக்கொண்டோம். ஈரோட்டில் இருந்து அந்தியூர் மணியும் ஈஸ்வர மூர்த்தியும் வந்திருந்தார்கள்.

புத்தகக் கண்காட்சியைச் சுற்றிப்பார்த்தேன். நாற்பது கடைகள். நண்பர் பாரதி இளங்கோ (ஈரோடு) கடை உட்பட. என் நூல்களுக்கான தனி கடை ஒன்று புத்தகக் கண்காட்சி சார்பில் போட்டிருந்தார்கள். பல வாசகர்களைச் சந்த்திதேன். பலர் என்னை அறிந்தவர்களாக இருந்தனர் என்பது மகிழ்ச்சி அளித்தது.

நிகவில் பெரும்கூட்டம் இருந்தது. எனக்குப் பின் பேசிய மதுரை ராமகிருஷ்ணன் புகழ்பெற்ற பேச்சாளர். தொலைக்காட்சி வழியாகவும் புகழ்பெற்றவர் என்றார்கள். என் உரையைச் சுருக்கமாக, முப்பது நிமிடங்களுக்குள் முடித்துக்கொண்டேன். ஆகவே பெரிய கலைசல் இல்லாமல் கூட்டம் கவனித்தது. ராமகிருஷ்ணன் பொதுமக்களைக் கவரும்படியாக உரையாற்றினார்.

நான் அன்றே கோவைக்குக் கிளம்பவேண்டியிருந்தது. மறுநாள் கோவையில் காலையில் ஒரு நிகழ்வு. ராஜ்குமார் இல்லத்தில் மாலையுணவு எனக்கும் நண்பர்களுக்கும். நள்ளிரவில் கோவை.

வெள்ளக்கோயிலில் அத்தனை புத்தகங்களையும் பொதுமக்களையும் பார்த்தது நிறைவாக இருந்தது. பொதுவாகத் தொழில்நகரங்களில் வாழ்பவர்களுக்கு இயல்பான ஓய்வான வாழ்வே இருக்காது. செல்வம் இருக்கும், ஆனால் அவர்கள் ஏணியில் ஏறிக்கொண்டே இருந்தாகவேண்டும். அருகே இன்னொருவர் ஒரு படி மேலே சென்று ஓர் அறைகூவலை விடுத்துக்கொண்டே இருப்பார். அத்தகைய ஓர் ஊரில் புத்தகங்களுக்கு ஒரு திரள் வருவது மகிழ்வுக்குரியது.

முந்தைய கட்டுரைலட்சுமிகாந்தன் கொலை வழக்கு
அடுத்த கட்டுரையோகத்தின் இன்றைய தேவை