கோவையில் கட்டண உரைக்காக வந்து தங்குவதாகச் சொன்னபோது நண்பர் நடராஜன் சொன்னார், “உங்களுக்கு மிகவும் பிடிக்கும். இங்கே கோவையில் காந்திக்காக ஒரு முக்கியமான நினைவகம் உருவாக்கப்பட்டுள்ளது. கோவையில் காந்தி வந்து தங்கிய இல்லத்தை ஜி.டி.நாயுடு அறக்கட்டளையும் கிருஷ்ணராஜ வானவராயரும் இணைந்து ஒரு நினைவு இல்லமாக புதுப்பித்துள்ளனர். நாம் ஒரு முறை செல்லவேண்டும்”
நான் அதை ஒப்புக்கொண்டேன். கட்டண உரையன்று காலையில் நடராஜன் சொன்னார், “வானவராயர் அவர்கள் கட்டண உரைக்காக வருகிறார். அப்படியே அவர் அங்கே இருக்கும்போதே நாம் காந்தி நினைவகத்திற்குச் சென்று வருவோம். உங்கள் நண்பர்களும் இருக்கிறார்கள். அனைவருமாகச் செல்லலாம். சும்மா சுற்றிப்பார்த்துவிட்டு வந்தால் போதும்”
ஆனால் நாங்கள் வருவதை அங்கே சொன்னபோது அவர்கள் ஒரு சிறு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துவிட்டார்கள். ஓரிரு வார்த்தைகள் பேசவேண்டியிருக்கும் என நடராஜன் சொன்னார். அங்கே ஏராளமான மாணவர்கள் ஓர் அரங்கில் கூடியிருந்தார்கள். குமரகுரு கல்விநிறுவனங்களின் தாளாளரும், பாரதிய வித்யாபவன் தலைவருமான வானவராயர் அவர்கள் என்னை வரவேற்றார்.
1934ல் காந்தி கோவைக்கு வந்தார். கோவை அய்யாமுத்து, வழக்கறிஞர் என்.எஸ்.ராமசாமி ஐயங்கார், வி.சி. வெள்ளிங்கிரி கவுண்டர், பி.எஸ்.ஜி. வெங்கடசுவாமி நாயுடு, தி.சு.அவினாசிலிங்கம் போன்றவர்கள் காந்திக்கு அணுக்கமானவர்கள். காங்கிரஸின் முதன்மை தலைவர்கள் காந்தியை வரவேற்றனர்.
அக்காலத்தில் போத்தனூர்தான் கோவையின் ரயில்நிலையம். காந்தியை வரவேற்று ஜி.டி.நாயுடுவின் அந்த இல்லத்தில் தங்க வைத்திருக்கிறார்கள். அக்காலக் கணக்குக்கு அது ஒரு பங்களாதான். அதில் அப்போது மின்சாரம் இல்லை. காந்தி அங்கே ஓர் அறையில் 1934 பிப்ரவரி மாதம் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் தங்கியிருந்தார். தன் மடியில் அட்டையை வைத்துக் கொண்டு அரிக்கேன் விளக்கொளியில் காந்தி கடிதங்களை எழுதினார் என பின்னர் நினைவுகூர்ந்தனர்.
நடுவே சிலகாலம் கவனிப்பாரின்றி கிடந்த அந்த இல்லம் ஜி.டி.குழுமத்தின் தலைவரான ஜி.டி.கோபால் மற்றும் பி.கே.கிருஷ்ணராஜ வானவராயர் முயற்சியால் ஒரு நினைவகமாக புதுப்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட நான்கு கோடி ரூபாய் செலவில் அந்த இல்லத்தை அப்படியே பழமை மாறாமல் புதுப்பித்துள்ளனர். ஜி.டி.நாயுடு அறக்கட்டளை அவ்வில்லத்தை நிர்வாகம் செய்கிறது. அதையொட்டி இப்போது ஏழை மாணவர்களுக்கு ஈருருளி பழுதுபார்த்தல், தையல் உட்பட கைத்தொழில்களை இலவசமாகக் கற்பிக்கும் ஒரு கல்விநிலையமும் செயல்பட்டுவருகிறது.
இந்த நினைவகத்தை 2022ல் காந்தியின் 153 ஆவது பிறந்தநாளில் காந்தியச் செயல்பாட்டாளர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் திறந்துவைத்தார். கோவை ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகி சுவாமி நிர்மலேஷானந்தர் விழாவில் பங்குபெற்றார். காந்தி அங்கே தங்கியிருந்தபோதுதான், அந்த இல்லத்தில் வைத்து, கோவை ராமகிருஷ்ண மடத்தின் கிளையை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அந்த இடம் உண்மையில் சபர்மதி ஆசிரமத்தின் அதே நெகிழ்வான மனநிலையை உருவாக்கியது. காந்தி இருந்த சிறிய அறை, அதில் இருந்த ராட்டை, அவர் பயன்படுத்திய எளிமையான உடைமைகளின் நகல்வடிவங்கள் என ஒவ்வொன்றும் காந்தியின் இருப்பை அங்கே நிறுவிக்கொண்டிருந்தன. மிக எளிமையாக, ஆனால் மிக உண்மையாக உருவாக்கப்பட்ட ஒரு நினைவிடம். காந்தி பற்றிய பழைய நூல்களின் பிரதிகள் அங்கே சேகரிக்கப்பட்டிருந்தன
காந்தியின் இளமைக்காலம் முதல் அவர் மகாத்மாவாக ஆகி சுடப்பட்டது வரை புகைப்படங்கள் வழியாகவே சித்தரிக்கும் ஒரு கண்காட்சியரங்கு அங்கிருந்தது. அக்கட்டிடம் மூலக்கட்டிடத்தின் அதே அழகியலுடன், பழமையானதாகவே, புதியதாகக் கட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு புகைப்படத்திலும் காந்தி வெவ்வேறாக தோன்றிக்கொண்டே இருந்தார்.
எனக்கு எப்போதுமே கிளர்ச்சியளிக்கும் படம் குழந்தை காந்திதான். அந்த சிறிய முகத்திலேயே பின்னாளில் அவரை உருவாக்கிய அந்த உண்மையின் தீவிரம் இருந்ததா என்ன? என் பிரமையாக இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி எண்ணிக்கொள்ள பிடித்திருந்தது. அந்தப் படங்கள் எல்லாமே நான் பலமுறை பார்த்தவை. ஆனால் அவருடைய காலடி பட்ட அந்த இடத்தில் அவை புதுப்பொருள் கொண்டன.
நினைவகத்தை ஒட்டிய சிற்றரங்கில் ஒரு சந்திப்பு. வானவராயர் ஓர் அறிமுக உரையாற்றினார். நடராஜன் என்னை வரவேற்றுப் பேசினார். நான் பேசும்படி கேட்டுக்கொள்ளப்பட்டேன். அங்கே வந்திறங்குவது வரை பேசும் எண்ணம் என்னிடமிருக்கவில்லை, கட்டண உரையில் இருந்து நான் மீளவுமில்லை. ஆனால் என் முன் அமர்ந்திருந்த இளைஞர்களைப் பார்க்கையில் பேசவேண்டும் போலிருந்தது. அந்தச் சூழல், அழகான அந்தச் சிறிய அரங்கு, அப்போதிருந்த இனிய பருவநிலை, வானவராயர் உட்பட முக்கியமானவர்கள் அமந்திருந்த அவை பேசும்படிச் செய்தது.
”நான் ஒரு சிற்றுரை ஆற்றவே கூறப்பட்டேன், ஆனால் ஒரு முக்கியமான உரையை இங்கு ஆற்றலாமென எண்ணுகிறேன்” என்று எண்ணியே என் உரையை தொடங்கினேன். முக்கியமான உரையாக அமையவேண்டும், ஆனால் மாணவர்களுக்கு அது புரியவும் வேண்டும். ஓரளவில் அதில் வென்றேன் என்றே தோன்றுகிறது. அது அச்சூழல் அளித்த ஊக்கத்தின் விளைவு.அத்துடன் அந்த சிந்தனைகள் வெவ்வேறு காலங்களிலாக நானே என்னுள் சிந்தித்து, தொகுத்துக்கொண்டிருந்தவை என்பதும் காரணம்.
அந்த அரங்கில் என் முன் அமர்ந்திருந்தவர்கள் அனைவருமே இளைஞர்கள். நான் ஜீன்ஸும் நவீனச் சட்டையும் அணிந்து சென்றிருந்தேன். ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள மூக்குக் கண்ணாடி அணிந்தவன். அசைவம் சாப்பிடுபவன். அவர்களிடம் நான் காந்தியைப் பற்றி என்ன சொல்லமுடியும்?
உண்மையில், காந்தியை அந்த அளவுக்கு தூரத்தை உருவாக்கிக் கொண்டால் மேலும் தெளிவாக முன்வைக்க முடியும். காந்தியை சென்றகால வரலாற்றில் இருந்து விலக்கிக் கொண்டேன். காந்திய ஒழுக்கத்தில் இருந்து விலக்கிக் கொண்டேன். காந்தியை ஒரு தத்துவ சிந்தனையாளராக மட்டுமே எடுத்துக் கொண்டேன். காந்தி தத்துவம் எழுதியவரோ, பேசியவரோ அல்ல. ஆனால் உலகமெங்கும் முக்கியமான தத்துவ நூல்களில் ஒரு தத்துவசிந்தனையாளராக அவர் முன்வைக்கப்படுகிறார். தன் செயல்களினூடாக ஒரு முழுமையான தத்துவதரிசனத்தை முன்வைத்தவர் அவர்.
அந்த தத்துவதரிசனத்தின் மூன்று முதன்மைக்கூறுகளைப் பற்றி நான் பேசினேன். கூடுமானவரை செறிவாகவும் கூடுமானவரை எளிமையாகவும். என் முன் அமர்ந்திருந்த இளைஞர்களின் கண்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்களின் உள்ளம் உடன்வருகிறதா என்பதே என் கவனமாக இருந்தது. உடனிருக்கிறார்கள் என்று தோன்றியது.
இளைஞர்களுக்குரிய காந்தி நேற்றைய வரலாற்றைச் சேர்ந்தவர் அல்ல, அந்த வரலாறு எவ்வளவு மகத்தானதாக இருந்தாலும் அவர்கள் அங்கே கற்பனையால் செல்ல முடிவதில்லை. அவர்களின் உள்ளம் இன்றில்கூட இல்லை, நாளையில் உள்ளது. ஆகவே நாளைய காந்தி என என் உரையின் தலைப்பை அமைத்துக்கொண்டேன். வரும் தொழில்நுட்ப உலகில், நவீன மேலாண்மையின் யுகத்தில் காந்தியின் பங்களிப்பு என்னவாக இருக்கமுடியும் என்று பேசினேன்.
பேச்சு மிகச்சிறப்பாக இருந்ததாக வானவராயர் சொன்னார். வழக்கமாக ஒரு கறாரான விமர்சனத்துக்காக நண்பர் கிரிமினல் கிருஷ்ணனிடம் கேட்பதுண்டு. கேட்பதற்குள்ளாகவே அவரும் அதையே சொன்னார். பின்னர் வீடு வந்து காந்தி இல்லம் தொடர்பான செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த திறப்புவிழாவில் வானவராயரும் ‘நாளைய காந்தி’ என்ற தலைப்பில்தான் பேசியிருக்கிறார் என அறிந்தேன்.
இன்னொருமுறை தனியாக அங்கே செல்லவேண்டும், அந்த அறையில் தனியாக சில நிமிடங்கள் அமர்ந்திருக்கவேண்டும் என எண்ணிக்கொண்டேன்.