எண்ணிப்பார்க்கையில் 2024 இப்போதுதான் தொடங்கியது போலிருக்கிறது, நாட்கள் விரைவாக ஓடிக்கொண்டே இருக்கின்றன. அஜிதனின் திருமணம் பிப்ரவரியில். அடுத்தடுத்து நிகழ்வுகள், பயணங்கள். ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் அம்மாதநிகழ்வுகளை முழுமையாகவே பட்டியலிட்டு வைக்கவேண்டிய நிலைமை இப்போது.
சென்ற 28 அன்று கோவை சென்றேன். 29 கோவையில் இருந்தேன். கட்டண உரைக்கு ஒருநாள் முன்னராகவே சென்று ஓய்வெடுக்கவேண்டும் என எண்ணினேன். மதியம் சாப்பிடுவதற்காக பி.ஏ.கிருஷ்ணன் அழைத்திருந்தார். அவரும் மனைவியும் ஆண்டில் சில மாதங்கள் மட்டும் அங்கே நானா- நானி என்னும் முதியோர் இல்ல வளாகத்தில் ஒரு வீட்டில் தங்கியிருப்பது வழக்கம்.
நான் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முதியோர் இல்லத்திற்குச் சென்றிருக்கிறேன். அதன்பிறகு இப்போது. நானா-நானி பெரும்பாலும் வசதியான பிராமணர்கள் தங்கும் இல்லத்தொகை. தூய்மையான, அழகான இடம். நடைசெல்வதற்கான பாதைகள். பாதுகாக்கப்பட்ட சூழல். அருகே மருதமலையின் பசுமைக்காட்சி. நான் செல்லும்போது மழைக்குப்பிந்தைய குளிர்ச்சூழல்.
நானா -நானியின் உணவுக்கூடத்தில் பி.ஏ.கிருஷ்ணனுடனும் மனைவியுடனும் சாப்பிட்டேன். சைவ உணவு, முதியவர்களுக்குரிய வகையில் காரம், புளிப்பு, உப்பு குறைவானது. ஆனால் சுவையாகவே இருந்தது. பலவகையான முதிய முகங்கள். ஒருவரோடொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர். ஒரு பிரம்மாண்டமான குடும்பம் போல தோன்றியது.
அங்கே பெரும்பாலும் எவருக்கும் என்னை தெரிந்திருக்கவில்லை. பி.ஏ.கிருஷ்ணனையும் ஓர் எழுத்தாளராக எவரும் அறிந்திருக்கவில்லை என தோன்றியது. ஒருவர் முன்பு சென்னையில் ஓர் இலக்கியச் சந்திப்பை நடத்தி வந்தவர், அவருடன் சிறிதுநேரம் பேசினேன். திரும்பும்போது ஒரு பெண்மணி வெண்முரசு படித்திருப்பதாகச் சொன்னார்.
மிகப்பெரும்பாலானவர்கள் உயர்நடுத்தர வாழ்க்கையில் இருந்தவர்கள். பெரும்பாலும் உயர் பதவிகளில் இருந்து ஓய்வுபெற்றவர்கள். அந்த வாழ்க்கைக்குரிய சராசரி அறிதல்கள், சராசரி ரசனைகள், சராசரி ஆன்மிகம், சராசரி பிரச்சினைகள், சராசரி உரையாடல்…. சராசரியில் சரியாகப் பொருந்துவதில் சராசரியல்லாதவர்களுக்கு பெரும் சிக்கல் உண்டு. அவர்களுக்கு அங்கே வாழ்வது பெரும் துன்பமாக இருக்கும்.
விஷ்ணுபுரம் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். வெண்முரசு நாவல் தொகை அச்சில் உள்ளது. வெண்முரசு பதிப்பகத்தார் எதிரில் ஒரு பெரிய கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து நூல்களை அடுக்கி வைத்திருந்தார்கள். பெரும்பாலும் என் நூல்கள். அவற்றை அப்படி ஒரு மாபெரும் அடுக்காகப் பார்க்க திகைப்பாக இருந்தது
ஜூலை இறுதியில் வெண்முரசு அனைத்து நூல்களும் ஒரே தொகுப்பாக அச்சாகி வரும். முன்விலைத்திட்டத்தில் 120 மொத்தநாவல் தொகுதிகள் விற்றுள்ளன. அவற்றில் நான் கையெழுத்திடவேண்டும். 12X 26= கையெழுத்துகள். மொத்தவிலை 45000 ரூபாய் என நினைக்கிறேன். 42 கிலோ. இரண்டு பெரிய பெட்டிகளிலாக அனுப்பப்படும். நானறிந்தவரை தமிழின் பதிப்பு வரலாற்றிலேயே மிகப்பெரிய பதிப்புப்பணி வெண்முரசுதான். இதற்கு முன் வெளிவந்த கலைக்களஞ்சியங்கள், சங்கநூல்தொகைகள், காந்தி நூல் தொகைகள் அனைத்தையும் விடப்பெரியது என நினைக்கிறேன்.
ஜூன் 30 அன்று காலை 9 மணிக்கு தயாராக இருக்கும்படி நடராஜன் சொல்லியிருந்தார். கட்டண உரையின் சூத்ரதாரி அவர்தான். உடன் தங்க 29 மாலை வருவதாகச் சொல்லியிருந்த ஈரோடு கிருஷ்ணன் தவிர்த்துவிட்டார். அன்று நிகழவிருந்த கிரிக்கெட் விளையாட்டை என்னுடன் அமர்ந்து பார்க்க விரும்பவில்லை. என்னுடன் இருந்தபோது அவர் பார்த்த கிரிக்கெட் ஆட்டங்களிலெல்லாம் இந்தியா தோற்றிருக்கிறது என்றார். காலையில் கூப்பிட்டு என் ராசியால் இந்தியா வென்றது என மகிழ்ச்சியாகச் சொன்னார்.
காலை 9 மணிக்குள் நான் குளித்து, உடைமாற்றி, தயாராக இருந்தேன். ஆனால் நினைத்த அளவுக்கு சாலையில் நெரிசலில்லாததனால் சற்று முன்னதாகவே சென்றோம். செல்லும் வழியில் ஒரு காப்பி குடித்தோம்.
விழா அரங்கில் ஏராளமான தெரிந்த முகங்கள். திருச்சி, பெங்களூர், சென்னை என பல ஊர்களில் இருந்து வந்திருந்தனர். ஐம்பதுபேர் வரை தொடர்ச்சியாக எல்லா கட்டண உரைகளுக்கும் வந்துகொண்டிருக்கிறார்கள். நெல்லையில் இருந்தும், தென்காசியில் இருந்தும், மும்பையில் இருந்தும்கூட வந்திருந்தார்கள். ஒருவர் அமெரிக்காவில் இருந்து இதன்பொருட்டு டிக்கெட்டை மாற்றிப்போட்டு வந்ததாகச் சொன்னார்
கோவையில் முதன்மை ஆளுமைகள் பலர் அரங்கில் இருந்தனர். கிருஷ்ணராஜ வானவராயர், இயக்காகோ சுப்ரமணியம், டி.பாலசுந்தரம், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன், சென்னை சில்க்ஸ் சந்திரன், மரபின் மைந்தன் முத்தையா, சௌந்தர்ராஜன் என பலர். சென்ற சில ஆண்டுகளாக அவர்களை என்னுடைய சுற்றமாகவே எண்ணத் தொடங்கிவிட்டிருக்கிறேன்.
முதல்முறையாக என் சம்பந்தி, அஜிதனின் மாமனார் ரமேஷ் வந்திருந்தார். அஜிதன் வரவில்லை, சினிமா வேலை. தன்யா மட்டும் உரைக்காக சென்னையில் இருந்து வந்திருந்தார். என் நண்பர் தங்கவேல் மகனுடன் சென்னையில் இருந்து வந்து உரை முடிந்த விசையிலேயே கிளம்பிச் சென்றார். காஞ்சீபுரத்தில் இருந்து சிவா உரைக்காகவே வந்திருந்தார். அப்படி பல முகங்கள்.
இத்தனை மேடைகளுக்குப் பிறகும் தொடக்கத்தில் ஒரு நடுக்கம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. உரையின் கருத்துக்களில் என் உள்ளம் சென்றபின்னர்தான் அந்த நடுக்கம் விலகுகிறது. இந்த வகை நீண்ட உரைகளின் முதன்மைச் சவால் என்பது அறுபடாத தொடர்ச்சி, ஒட்டுமொத்தமாக ஒரு கட்டமைப்பு ஆகிய இரண்டையும் தக்கவைப்பதுதான்.
பெரும்பாலான மேடைப்பேச்சாளர்கள் அவையிரண்டையும் கடைப்பிடிப்பதில்லை. அவர்களின் நினைவுக்குவந்தவற்றை, நினைவுக்கு வரும் வரிசையில் சொல்லிச் செல்வார்கள். உரையின் எல்லாப் பகுதியும் சுவாரசியமாக இருக்கவேண்டும் என்பதை மட்டுமே கவனத்தில் கொள்வார்கள். அவை பெரும்பாலும் பொதுரசனைக்குரிய உரைகள் என்பதனால் அந்த வழிமுறை இயல்பாகவே உள்ளது.
ஆனால் ஒரு தீவிரமான உரை அப்படி அமைய முடியாது. அதில் சுவாரசியம் என்பது நேரடியாக இல்லை. சுவாரசியத்துக்காக ஏதும் செய்யப்படுவதில்லை. கைத்தட்டல்கள், சிரிப்புகள் நிகழ்வதில்லை. தீவிரமான உரைகள் தாவிச்செல்வனவாக, கட்டமைப்பு இல்லாதவையாக இருக்குமென்றால் அவற்றை கவனித்து உள்வாங்கிக்கொள்ள முடியாது. நினைவில் நிறுத்தவும் இயலாது.
ஆனால் உறுதியான ஒரு கட்டமைப்பை உருவாக்கி, அதற்குள் சீராக கருத்துக்களை அடுக்கி உரையை தயாரித்துக்கொள்வோம் என்றால் உரை இயந்திரத்தனமாக ஆகும். அங்கே தன்னியல்பாக நிகழவேண்டிய ஒரு பறந்தெழல் இருக்காது. புதியவை பிறந்து வராது. நான் உரையாற்றுவதே அங்கே எனக்குள் ஏதேனும் நிகழவேண்டும் என்பதற்காகத்தான்.
ஆகவே மிக நெகிழ்வான ஒரு கட்டமைப்பை உருவாக்கிக்கொள்வது என் வழக்கம். முதல்பகுதி, இரண்டாம் பகுதி என ஓர் இரண்டடுக்குக் கட்டுமானம். மையப்பேசுபொருளை வகுத்துக்கொள்வேன். அதன்பின் நானே என் பேச்சை தொடுத்துக்கொண்டே செல்லும்போது அந்த கட்டமைப்பு சிதையாமல், தொடர்ச்சி அறுபடாமல் கவனித்துக்கொள்வேன்.
நான் கவனித்த வரையில், பேச்சின் தொடர்ச்சி அறுபடுவது இரண்டு காரணங்களால். ஒன்று, துணைக்கதைகள், உதாரணங்கள் தேவைக்குமேல் நீளமாகிவிடுவதனால். இரண்டு, மையக்கருத்தை விட்டு விலகி புதிய கருத்துக்குச் சென்றுவிடுவதனால். அவை நிகழ அனுமதிப்பதில்லை. துணைக்கதைகளை, உதாரணங்களை ஓரிரு வரிகளிலேயே அமைக்கிறேன். விளைவாக சில விஷயங்கள் வேகமாக கடந்துசெல்லப்பட்டுவிட்டதுபோலத் தோன்றும், ஆனால் இல்லையேல் வடிவக்குலைவு நிகழும்.
அதேபோல மையக்கருத்தை ஒட்டி வலுவான புதிய கரு உருவானால் அதைச் சொல்வதில்லை, அடுத்த உரையில் பார்த்துக்கொள்ளலாம் என ஒத்திவைப்பேன். இப்போதுகூட அப்படி ஒரு கருத்து உருவானது, ஆனால் தொடவில்லை.
பேச்சாளர்களுக்குரிய உச்சரிப்பு, குரல்வளம் என்னிடமில்லை. முக்கியமாக மேடையில் நடிப்பு கைவருவதில்லை. பெரும்பாலும் தீவிரமான உரைகளையே ஆற்றுகிறேன். ஆனாலும் உரைகள் விரும்பப்படுவது மகிழ்வளிக்கிறது. நடராஜன் மேடையில் சொன்னார். சி.என்.அண்ணாத்துரைக்குப் பின் கட்டணம் வைத்து உரை நிகழ்வது, அரங்குநிறைய கூட்டம் வருவதும் எனக்காக மட்டுமே என.
உரை முடிந்தபின் அங்கேயே உணவு. ஒவ்வொருவராக விடைபெற்றுச்செல்ல நானும் நண்பர்களுடன் என் விடுதிக்குச் சென்றேன். விடுதியறையில் கூடம் முழுக்க நிரம்பியமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். விடுதி ஊழியர் அத்தனைபேர் அப்படி ஓர் அறையில் கூட அனுமதி இல்லை என்றார். விஜய் சூரியன் சென்று பேசி அனுமதிபெற்று வந்தார். உரையை விவாதிக்கவில்லை, இலக்கியம் தத்துவம் என பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தோம். ஓர் உரை முடிந்தபின் வரும் நிறைவே பிறர் நினைவில் நிற்கிறது. உரைக்கு முந்தைய பதற்றமே எனக்கு நினைவாக எஞ்சுகிறது.