பனை மரம், கள்: ஒரு விண்ணப்பம்: காட்சன்

 

புதுக்கோட்டை மாவட்ட வேளாண் கூட்டமைப்பு செயலாளர் நடராஜன் அவர்கள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த பனை மர கள் நிபந்தனையின்றி விற்க அரசு அனுமதிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். சங்க காலம் துவங்கி, தற்போது வரைக்கும் கள் மருந்தாகவும் உணவாகவும் இருப்பதை அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சுரேஷ்குமார் அருள்முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் பாலசுந்தரம் அவர்கள் ஆஜராகி  சமீபத்தில் கள்ள சாராயம் குடித்த பலர் பலியாகியுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டி, இது போன்ற சம்பவங்களைத் தடுக்க பனை மர கள் விற்பனை செய்ய அனுமதிக்கவேண்டும் என வாதாடினார்.

இதையடுத்து நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கையானது அரசின் கொள்கை ரீதியான முடிவுகளுடன் தொடர்புடையது. எனவே இந்த வழக்கு குறித்து அரசு அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டனர். அடுத்த கட்ட விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

இந்த நான்கு வாரங்கள் பனை ஆர்வலர்களுக்கும் பனை சார்ந்து இயங்குகிறவர்களுக்கும் நல்ல ஒரு வாய்ப்பாக இருக்கும் என கருதுகிறேன். நம்பிக்கையுடன் நமது வாதங்களை முன்வைத்தால், கனிந்துவரும் இக்காலத்தில் மாபெரும் மாறுதல்கள் நிகழ வாய்ப்புண்டு. அரசு தனது கொள்கை முடிவினை மாற்ற மக்கள் ஒன்று திரள வேண்டும். மக்களின் கோரிக்கைகள் அரசிடம் மிக வலிமையாக முன்னெப்போதும் இல்லாதவைகையில் ஆதாரங்களுடன் எடுத்து வைக்கப்படவேண்டும். ஒரு குறிப்பிடத் தகுந்த அசைவை இந்த நான்கு வாரங்களுக்குள் நம்மால் உருவாக்க முடிந்தால், மிகப்பெரும் மாற்றத்திற்கு வித்திடுகிறவர்களாக இருப்போம். ஒரு பண்பாட்டு அசைவை நேரில் காணும் பெறும்பேறு கிட்டும்.

பனங்கள், மரபு

பனை மரக் கள் அல்லது பனங்கள் சங்க காலத்திலிருந்தே உணவாகவும் மருந்தாகவும் களிப்புண்டாக்கும் உற்சாக பானமாகவும் இருந்து வந்திருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில், தங்கள் வெளிநாட்டு மதுவை விற்பனை செய்வதன் மூலம் அபரிமிதமாக வரி வசூலிக்க முடியும் என நம்பினர். ஆனால், இவ்வித கடுமையான போதைக்கு பழகாத தமிழக மக்கள் ஆங்கிலேயரின் போதை வஸ்துக்களை விரும்பவில்லை. உற்சாகமளிக்கும் மருந்தான கள் கைவசமிருக்கையில் வெளிநாட்டு மதுவினை எவரும் சீண்டிக்கூட பார்க்கவில்லை. வரி வசூல் பாதிக்கும் என்ற ஒற்றைப் பார்வையில் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள், பனை மர கள் விற்பனையை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது.

இந்தியா சுதந்திர அடைந்த பின்பு, தமிழகத்தில் கழக ஆட்சியில் மீண்டும் இருமுறை கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டன. இம்முறை கள்ளுக்கடைகளுக்கு, பனை மரம் ஏறும் தொழிலாளர்கள் பதனீர் இறக்கி கொடுக்கவேண்டும் என்றும், பனையேறிகள் தாமே கள் இறக்க அனுமதியில்லை என்றும் கூறப்பட்டது. பனையேறிகளிடம் வாங்கும் பதனீரை கள்ளுக்கடையில் வைத்து “கள் உறை” ஊற்றி புளிக்கச் செய்து கள்ளாக்கி விற்பனை செய்யப்பட்டது. இக்கடைகளில் பல்வேறுவிதமான போதை அளிக்கும் தாவரங்கள் மற்றும் மாத்திரைகள் சேர்க்கப்பட்டன என்ற கருத்துக்கள் பரவலாக இருக்கின்றன. இப்படித்தான் கள்ளில் கலப்படம் உருவாகியது.

கள்ளுக்கடை என்பதை போதைக்கான ஒரு இடமாக சுவீகரிக்கும் போக்கு தமிழகத்தில் மேலோங்கியிருக்கிறது. அது உண்மைதான். இன்றும் டாஸ்மாக்கிற்கு எதிராக கள்ளுக்கடை திறக்கவேண்டும் என்பதும், கள்ள சாராயத்தை ஒழிக்க கள்ளுக்கடை திறக்கவேண்டும் என்பதும் இவ்வித நிலைப்பாட்டில் இருந்து வருகின்ற எண்ணங்களே. அவ்வித எண்ணங்களுக்கு சற்றும் பொருந்தா தொலைவில் இருப்பது பனை மரக் கள். பனை மரக் கள், கடைகளுக்கு வரும்போது அங்கே வருகின்ற “குடிகாரர்களை” திருப்திபடுத்தும் நோக்கில் போதையேற்றம் செய்யப்படுகின்றது. அப்படி போதையேற்றும் சூழலில் பலவித கலப்படங்கள் நிகழ வாய்ப்புகள் இருக்கின்றன. கள் விஷமாகிவிடும் நிகழ்வுகள் இப்படிப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட கள்ளுக்கடைகளிலேயே நடைபெறும். ஆகவே கள்ளுக்கடை என்ற ஒரு பிரம்மாண்ட தேவையற்ற, போலிகளை உருவாக்கும் வாய்ப்புள்ள கள்ளுக்கடைகளை திறப்பதை குறித்த தீங்கினை மக்கள் உணரவேண்டும்.

கள் இறக்குதல், பருகுதல் பகிர்ந்தளித்தல் – பனையேறியின் சுதந்திரம் .

தான்  இறக்கும் கள்ளினை தானே அருந்தவும் விற்பனையும் செய்ய இயலாத நாடு என்ன சுத்தந்திர நாடா? கருத்து சுதந்திரம் பேசுகிறவர்கள் உணவு சுதந்திரம் பேச முன்வராதது கொள்கை தடுமாற்றமன்றி வேறென்ன? ஒரு பனையேறிக்கு பனை மரத்தில் கள் கலயம் கட்டவும், அதிலிருந்து தனக்கு உரிய கள்ளை எடுத்துக்கொள்ளவும், எஞ்சியவற்றை விற்பனை செய்யவும் முழு உரிமை உண்டு.

பனைமரத்தடி கள் விற்பனை – சரியான எளிய முன்னுதாரணம்

பனை மரங்களில் ஏறி கள் இறக்கும் பனை தொழிலாளியே பனை மர கள் விற்பனையை செய்யும் அதிகாரம் பெற்றவர். அவரே அவரது கள்ளிற்கு பொறுப்பு. பனை மரத்தின் கீழ் கிடைக்கும் கள்ளில் வேறு போதை ஏதும் இடவேண்டிய அவசியம் ஒரு பனையேறிக்கு இருக்காது. விருப்பமுள்ளவர்கள் வந்து நேரடியாக வாங்கிச் செல்லுவார்கள். வீட்டில் ஆப்பத்திற்கும், கோழி குழம்பிற்கும் வேறு வகையான உணவுகள் தயாரிப்பதற்கும், சூட்டை தணித்து உடல் குளிர்ச்சிபெறவும், வயிறு மற்றும் தோல் சம்பத்தமான நோய்களுக்கு மருந்தாகவும் மக்கள் இதனை வாங்கிச் செல்ல வாய்ப்புகள் இருக்கிறது.

கள் – நகர்புற மக்களுக்கு வேண்டாமா?

கூழுக்கும் ஆசை மீசைக்கு ஆசை என்ற நிலை தான் இது. கள் வேண்டுமென்றால் பனை மரம் வேண்டும். பனை ஏறுகிறவர்கள் இருந்தாலே பனை மரக் கள் கிடைக்கும். நகர்புறத்தில் கள்ளுக்கடைகள் திறந்தால் அவை பனை மரக்கள்ளாக இருக்காது. மக்களை ஏமாற்றும் ஒரு போலி கடையாகவே இருக்கும். ஆனால் நகரங்களிலும், புறநகர்பகுதிகளிலும் ஏராளமாக பனை மரங்கள் இருக்கின்றன. கள் விற்பனை செய்ய அரசு எடுத்திருக்கும் கொள்கை முடிவு தளர்த்தப்பட்டால், இவ்வித மரங்களில் இருந்து பனங்கள் இறக்கி விற்பனை செய்ய முடியும்.

பனங்கள் – வேலை வாய்ப்பு பெருக்கும்

அரசு தன் கள் தடைச் சார்ந்த “கொள்கை முடிவினை” மாற்றினால். தமிழகம் முழுக்கவே சுமார் 10 லெட்சம் இளைஞர்களுக்கு உடனடியாக சுயதொழில் செய்ய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. தமிழகத்தில் தற்போது 5 கோடி பனை மரங்கள் இருக்கின்றன என வைத்துக்கொண்டாலும், நேரடி மற்றும் மறைமுகமாக பல்வேறு வாலைவாய்ப்புகள் பெருகும். குறிப்பாக அதிக பனை மரங்கள் ஏறும்போது, ஓலைகள் மற்றும் பனை நார் பொருட்களாலான தொழில்கள் புத்துயிர் பெறும். நெகிழி பிரச்சனிகளை கட்டுக்குள் கொண்டுவர இது முக்கிய காரணியாக இருக்கும்.

கள் – கட்டுப்படுத்தப்பட்ட விற்பனை

அரசு தற்போது பரிசீலிக்கவேண்டிய காரியங்கள்

  1. கள் இறக்க பனையேறுகிண்றவர்கள் அனைவரும் முறையாக லைசன்ஸ் வைத்திருக்கவேண்டும். (லைசன்ஸ் எளிமையாக கிடைக்க அரசு வழிவகை செய்யவேண்டும்)
  2. பனை மரம் ஏறுகிறவர், தான் கள் இறக்கும் பனைமரங்கள் இருக்குமிடங்களிலிருந்து 500 மீட்டர் தொலைவிற்குள்ளேயே விற்பனை செய்யவேண்டும்.
  3.  மணி நேர கள் விற்பனை: பனை மரத்திலிருந்து இறக்கிய கள் சுமார் இரண்டு மணிநேரம் மிக நல்ல தரத்தில் இருக்கும். ஆகவே, காலை 6 – 8 மணி வரைக்கும், மாலை 4 – 6 மணி வரைக்கும் என அந்தந்த மாவட்டத்திற்கு என உகந்த நேரங்களை தெரிவு செய்யலாம்.
  4. 100 நாள் கள் விற்பனை திட்டம்: ஒவ்வொரு மாவட்டமும் அவர்களுக்கு உகந்த 100 நாட்களை கள் விற்பனை நாட்களாக தெரிவு செய்யவேண்டும். இது காவல்துறை, பனையேறிகள் மற்றும் ஏனைய அரசு அதிகாரிகளுக்குமுள்ள உறவினை சீர்படுத்தும்.
  5. ஒருவருக்கு 1 லிட்டர் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி: பனையேறியிடமிருந்து ஒருவர் ஒரு லிட்டர் கள் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கவேண்டும். பனையேறி அல்லாதோரிடம் ஒரு லிட்டருக்கும் அதிகமான கள் காணப்பட்டால் அவர்களை முறைகேடாக கள் வைத்திருப்பவர்கள் என காவல்துறை கைது செய்யலாம்
  6. பனை ஏறுகின்ற ஒவ்வொரு பனையேறியும் அந்தந்த கிராம முன்னேற்றத்திற்கு என்று குறைந்தபட்ச தொகையினை நிர்ணயித்து அதனை முன்பணமாக செலுத்த ஊக்கப்படுத்தலாம்
  7. பனையேறி ஒருவர் விற்கும் கள்ளில் ஏதும் கலப்படம் செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், வாழ்நாளில் அவர் மீண்டும் பனைமரம் ஏறாதபடி தண்டனை வழங்கலாம். (இதைவிட பெரிய தண்டனை ஒரு பனையேறிக்கு கிடையாது)

1

மேலும் சில கருத்துக்கள்

அரசு கவனத்திற்கு

பனையேறிகள் என்பவர்கள் ஒற்றை ஜாதி கிடையாது. தமிழகம் முழுக்க எந்த ஜாதியைச் சார்ந்தவராகவும் ஒரு பனையேறி இருக்கக்கூடும். பனையேறிகளை கண்ணியத்துடன் நடத்தும் பொறுப்பு காவல்துறைக்கும் அரசுக்கும் உண்டு. உணவை பகிர்ந்தளிக்கும் உழவரைப் போன்று என ஒரு புரிதலுக்காக சொல்லலாம். அதற்கும் ஒரு படி மேல் நின்று பணி செய்கிறவர்கள் இவர்கள். பனையேறிகளை குற்றப்பரம்பரையினர் போன்று கையாளுகின்ற தன்மையினை காவல்துறை உடனடியாக கைவிடவேண்டும். பனையேறிகளுக்கு இழைத்த ஒட்டுமொத்த கொடுமைகளுக்கும் இழிவுகளுக்கும் பரிகாரமாக தற்போது ஆட்சியில் இருக்கும் தமிழக அரசு தன்னை சீர்தூக்கி பார்த்து செப்பனிட்டுக்கொள்ள வேண்டும். பொதுவெளியில் பனையேறிகளிடம் மன்னிப்பு கோருவது நன்று.

மக்கள் கவனிக்க

கள் எனபதை உணவு, மருந்து மற்றும் நம் உரிமை என பாருங்கள். பனையேறிகளை தேடிச்சென்று சந்தியுங்கள். அவர்களிடம் நேரடியாக எதையும் வாங்குங்கள். பனையேறிகளுக்கு பாதுகாப்பு அரணாக இருங்கள். பனையேறிகளின் பிரச்சனையில் ஓங்கி குரல் கொடுங்கள். இன்னும் நான்கு வாரத்தில் தமிழக மக்களின் தீர்ப்பே சிறந்த தீர்ப்பாக ஐக்கோர்ட்டு சொல்ல வாய்ப்பிருக்கிறது.

பனையேறிகளின்  கவனத்திற்கு

உங்கள் தொழில் உயர்வானது. நீங்கள் உயர்வானவர்கள். நீங்கள் உங்களை எவருக்காகவும் கீழிறக்கிக்கொள்ளாதீர்கள். கட்சிகளை கடந்து ஜாதிகளைக் கடந்து பனை சார்ந்த உறவுகளை கட்டியணைத்து அலையென புறப்படுங்கள்.

கள் நமது உணவு –

கள் என்பது தமிழர் உணர்வு
கள் நமது உரிமை
கள் உண்பேன் என்பது உரிமைக் குரல்
கள் விற்பேன் என்பது விடுதலை பயணம்

அனைத்து நலங்”கள்” பெற்றிட இதனை தவறாது பகிருங்கள்

பனை திருப்பணி.

காட்சன் சாமுவேல்

9080250653

காட்சன்

காட்சன் – பனைமரப்பாதை

காட்சன் சாமுவேல் எங்களுடன் கல்லூரியில்- லோகமாதேவி

பனைக் கனவு திருவிழா – 2022

தலையில் பனை

 

முந்தைய கட்டுரைஅன்னா சத்தியநாதன் 
அடுத்த கட்டுரைமாயங்களின் மறைவுப்பாதை