உருகி உருக் கொள்ளுதல்

அன்புள்ள ஜெ.,

உங்களுடையகசகிஸ்தான்சென்றதும் மீண்டதும்கட்டுரைத் தலைப்பைப் பார்த்தவுடனேயே ஏதோ விவகாரமாகிவிட்டது என்று மனதில் தோன்றியது. நான் நினைத்தது நீங்கள் அங்கு ஏதோ விபத்தில் சிக்கித் தப்பித்தது போல ஒரு சிறிய மயிர்கூச்செறியும் சம்பவம் மட்டுமே. நீங்களோ தஸ்தோவ்ஸ்கி போல விசாரணைக்கைதியாய் இருந்து மீண்டிருக்கிறீர்கள். காவலதிகாரியின் கண்களில் மண்ணைத்தூவி ஆங்கிலப்படங்களில் வருவதுபோல தப்பியோடி வந்திருக்கிறீர்கள். தப்பித்து வரும்போது பிடித்துவைத்திருந்தால் என்னவாகியிருக்கும்?

நல்லவேளையாக குடும்பத்துடன் செல்லாமல் இருந்தீர்களே என்றுதான் தோன்றியது. ஓரளவு அரசாங்கத் தொடர்புகள் உள்ள உங்களுக்கே இந்த கதியென்றால், சாமானியர்களைப்பற்றிச் சொல்லவேண்டியதில்லை. இந்த கசகிஸ்தான் (விமான நிலைய) பயணக்கட்டுரையே கூட முக்கியமானது. எந்த மாதிரி நாடுகளுக்கெல்லாம், எதனால் செல்லக்கூடாது என்று கூறுகிறீர்கள். பயண பிரியர்கள்/வெறியர்கள் கவனிக்கவேண்டியது இது. அந்தபாஸ்போர்ட்அச்சுப்பிழையை முடிந்தால் சரிசெய்து கொள்ளுங்கள்.

புறப்பட்ட நேரம் சரியில்லை என்று கூறியிருந்தீர்கள். அவ்வாறு தவிர்க்க முடியாமல் பயணம் போவதாக இருந்தாலும் ஒரு மாற்று ஏற்பாடு உண்டு. ஒரு துணியில் சிறிது அரிசி,பருப்பு முடிந்து கொண்டுபோகும் சாமான்களில் ஒன்றோடு நல்ல நேரத்தில் கொண்டுசென்று உங்களுக்குத் தெரிந்த வேறொரு இடத்தில் வைத்து விடவேண்டும். அதாவது உங்கள் பயணம் நல்லநேரத்தில் தொடங்கியாகி விட்டது. இப்போது நீங்கள் எப்போது கிளம்பினாலும் அங்குசென்று வைத்த சாமான்களை எடுத்துச் செல்லவேண்டியதுதான். அமெரிக்கா செல்பவர்கள் அப்படி என் வீட்டில் வைத்து எடுத்துச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். இந்தச் சடங்கிற்குப்பெயர்பரஸ்தானம்‘. ஆனால், இதெல்லாம் கசகிஸ்தானுக்கு பலிக்குமா தெரியவில்லை. நாடுகளுக்கே ஜாதகம் உண்டு என்கிறார்கள்.அது சரி, கசகிஸ்தான் ஊருக்குள் சென்றவர்கள் மீண்டுவிட்டார்களா?

பயணங்களில் நண்பர்களோடு சேர்ந்துகொண்டு மொட்டை மலைகளில் நீங்கள் ஏறிக்கொண்டிருப்பதைப் படிக்கும்போதே ஒரே  பதைபதைப்பாகத்தான் இருக்கும். அருமையான வரலாற்றுச் செய்திகளும் தொன்மங்களும் தாங்கிய நல்ல கட்டுரைகள் அதன் விளைகனிகள். மறுக்கவில்லை. ஆனால் நீங்கள் செய்து கொண்டிருக்கும் பணிகளை நினைத்துப்பார்க்கும்போது இந்தரிஸ்க்தேவையா என்றும் தோன்றுகிறது. இது போன்ற ஆபத்தான பயணங்கள் செல்ல வயதுவரம்பு எதுவும் மனதில் வைத்துக்கொண்டிருக்கிறீர்களா?எனக்கு வெள்ளிமலை போவதற்கே அப்படிஅட்வைஸ்கள் வந்து கொண்டிருக்கின்றன. உறவுகளைத் தளை என நான் உணரும்நேரம் அது.

உங்கள் பயணங்கள் குறித்து வீட்டார் எதுவும் கூறினால் உங்கள் நிலைப்பாடு என்னவாக இருக்கும்

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்  

கஸகிஸ்தான் சென்றதும் மீண்டதும்

அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்

எனக்கு இப்போது வயது 62 கடந்துவிட்டது. ஆனால் நான் இப்போதுதான் என் வாழ்க்கையின் மிக சாகசத்தன்மை கொண்ட இன்னொரு வாழ்க்கைக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறேன். என் உலகியல் கடன்களை முடித்துவிட்டால் இப்போதிருக்கும் சாவு குறித்த சின்ன அச்சத்தைக்கூட கைவிட்டுவிடலாம்.

விஷ்ணுபுரம் வாசிப்பவர்கள் ஒன்றை உணரமுடியும், அதில் ஞானத்தேடலும் சாகசமும் ஒன்றெனக் கலந்து உள்ளது. சங்கர்ஷணன், பாவகன், அஜிதன் என மையக்கதைமாந்தர்கள் எல்லாருமே ஞானம் நோக்கிச் சென்றுகொண்டே இருந்தவர்கள். மாபெரும் சாகசக்காரர்களும்கூட.  உலகம் முழுக்க செவ்வியல் படைப்புகளில் சாகசமும் மெய்த்தேடலும் ஒன்றென இணைந்தே காணக்கிடைக்கின்றன. சாகசம் மெய்த்தேடலின் உருவகமாகவும் சொல்லப்பட்டுள்ளது.

அதை எழுதும்போது நான் மிகத்தீவிரமான சாகசப்பயணங்கள் பலவற்றைச் செய்து முடித்திருந்தேன். அது பெரும்பாலும் தன் அனுபவங்கள் சார்ந்த சித்தரிப்பு தான். சாவின் விளிம்பு வரைச் சென்று மீண்ட பல தருணங்கள் எனக்கு அப்போது இருந்தன. பல தருணங்கள் நானே வலியத் தேடிச்சென்றவை. இமையமலைப்பாதையில் வழிதவறி 3 நாட்கள் உணவு இல்லாமல் நடந்திருக்கிறேன். கடும் காய்ச்சலுடன். பாதாள உலகம் என்றே சொல்லத்தக்க இருளுலகை நான் அறிந்த அளவுக்கு வாழ்ந்து அறிந்த இன்னொரு தமிழ் எழுத்தாளர் இல்லை. வைக்கம் முகமது பஷீரும், சிவராம காரந்தும் மட்டுமே அவ்வகையில் என்னுடன் ஒப்பிடத்தக்க வாழ்க்கை கொண்டவர்கள்.

சென்ற ஆண்டுகளில் என் வாழ்க்கை எப்போதுமே பயணங்களால் ஆனதாக, முன்பு நிகழாத ஒன்று எப்போதும் நிகழ வாய்ப்புள்ள ஒன்றாக மட்டுமே இருந்துள்ளது. அப்படித்தான் நான் என்னை தொடர்ச்சியாகப் புதிப்பித்துக் கொள்கிறேன். வெறுமொரு குமாஸ்தாவாக அல்லாமல் வாழ்ந்திருக்கிறேன். (தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரிய எல்லையே அது பெரும்பாலும் குமாஸ்தாக்களால் குமாஸ்தாக்களுக்காக எழுதப்படுவது என்பதுதான். மிகக்குறைவான அனுபவ உலகம் கொண்டவர்கள் அதைப்போன்ற அனுபவ உலகம் கொண்டவர்களுக்காக அந்த அணுவுலகின் எளிய பதற்றங்களையும் பகடிகளையும் எழுதுவதே இங்கு மிகுதியாக உள்ளது.)

சாகசங்களில் இரண்டு கண்டடைதல்கள் நிகழ்கின்றன. ஒன்று, நாம் புதியவர்களை , புதிய வாழ்க்கைத்தருணங்களைக் கண்டடைகிறோம். கஸகிஸ்தானில் நான் சந்தித்த போலி பாஸ்போட் வைத்திருந்த வியட்நாம் இளைஞன் சாதாரணமாக ரேடியோ கேட்டுக்கொண்டிருந்தான். இன்னொரு ஆசாமியிடம் இந்திய ரூபாயில் ஆயிரம் ரூபாய்க்குமேல் மதிப்பில்லாத உடைமைகளே இருந்தன. அவர்களை கண்ட நான் அந்த காட்சி வழியாகச் செல்லும் தூரம் மிகுதி. மறுபக்கம், நான் அத்தருணத்தில் எப்படி வெளிப்படுகிறேன் என நானே உணர்வது. நான் அந்த பதற்றத்தை எழுத்தினூடாக வென்று நிறைவாக இருக்க முடிந்தது (வியட்நாம் பையன் என்னை அவனைப்போன்றவன் என நினைத்திருப்பான்)

நாம் அறியுந்தோறும் இந்த உலகம் புதியதாகிறது. அப்படி அதை புதியதாக ஆக்கிக்கொள்பவனே நல்ல எழுத்தாளனாக ஆக முடியும். நான் என்னை உருக்கி உருக்கி மறுபடியும் வார்த்துக்கொள்கிறேன். நிலக்காட்சிகள் வழியாக, புதிய அனுபவங்கள் வழியாக. அண்மையில் வரலாற்றுக்கு முந்தைய குடைவுச்சித்திரங்கள், குகை ஓவியங்கள் வழியாக நான் அடைந்த அகம் முற்றிலும் புதியது

உபவாசமிருக்கும் புத்தரின் சிலையைப் பார்க்கும்போதெல்லாம் நான் நினைப்பதுண்டு. மாறா இளமையும் அழகும் கொண்ட புத்தர் அந்த நிலையில் இருந்தே எழமுடியும் என்று. அந்த உக்கிரத்தை கடந்தே அந்த மலர்வு இயல்வதாகும்.

ஜெ  

முந்தைய கட்டுரைஅறந்தை நாராயணன்
அடுத்த கட்டுரைபொற்குகை ரகசியம், உரைகள்