அரசியலின்மை எனும் தவம்

(PC: HENRY KOTULA)

 

அன்புள்ள ஜெ

நான் உங்களுடைய அரசியல் சம்பந்தமான வீடியோவை சமீபத்தில் பார்த்தேன். அரசியலை ஒதுக்கிவிடவேண்டும் என்ற உங்களுடைய கருத்தை நான் நண்பர்களிடம் பலவாறக மறுத்துப் பேசிக்கொண்டிருப்பவன். எனக்கு உறுதியான அரசியல் நிலைபாடு உண்டு. அரசியலைத்தான் மையமாகப் பேசியும் வருகிறேன். நம் வாழ்க்கையை அரசியல்தான் தீர்மானிக்கிறது என்பதுதான் நான் சொல்லும் மையக்கருத்தாக இருந்தது.

ஆனால் இந்த வீடியோவை கேட்கும்போது நான் கொஞ்சம் அயர்ந்த நிலையில் இருந்தேன். அண்மையில் நிகழ்ந்த கள்ளச்சாராயச் சாவுகளைப் பற்றிய செய்திகளை மிகுந்த மனச்சோர்வுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். ஏனென்றால் என்னுடைய மாவட்டம். நான் அடிக்கடிச் சென்று பார்த்த இடம். செத்துப்போன சிலர் எனக்குத் தெரிந்தவர்கள்.

அத்தனைபேருக்கும் உண்மை தெரியும். இதே கள்ளச்சாராயச் சாவு முன்பும் நடந்துள்ளது. அப்போதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதான் சொன்னார்கள். அதிகாரிகளை மாற்றினார்கள். ஒன்றும் மாறவில்லை. அப்போது கள்ளச்சாராயம் விற்ற அதே கூட்டம்தான் இந்த சாவுக்கும் காரணம்.

இது கள்ளச்சாராயம் அல்ல. மலைகளில் கள்ளத்தனமாகக் காய்ச்சப்படுவது அல்ல. இது மெத்தனால். தொழிற்சாலைக்குரிய ஆல்கஹாலை வரவழைத்து தண்ணீர்சேர்த்து சில்லறை விலைக்கு விற்றிருக்கிறார்கள். இதை ஒரு சிறிய கும்பல் செய்யமுடியாது. தொழிற்சாலையில் இருந்து சாலைவழியாக வரவழைப்பதற்கும், சில்லறைவிற்பனைக்கு பகிர்ந்துகொடுப்பதற்கும் மிகப்பெரிய நெட்வர்க் தேவை. அது அரசியல்பலம் இருந்தால் மட்டுமே நடக்கும்.

இப்படி பல சில்லறை விற்பனையாளர்கள் இருக்கிறார்கள். மொத்தவிற்பனையாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் வழக்கம்போல அந்த குறிப்பிட்ட சில்லறை விற்பனையாளரை மட்டுமே குற்றவாளியாக்கி வழக்கை முடித்துவிட்டார்கள். மொத்தவியாபாரி சிக்கப்போவதில்லை. இந்த சில்லறை வியாபாரியும் கொஞ்சநாளில் வெளியே வந்து மீண்டும் விற்பார். வழக்கு பல ஆண்டுகள் நடக்கும். தீர்ப்பு வந்து தண்டிக்கப்படுவார் என்பதற்கெல்லாம் எந்த உத்தரவாதமும் இல்லை.

இதை இன்னும் ஒரு வாரம் யாரும் நினைவு வைத்துக்கொள்ள மாட்டார்க்ள். இப்போதே மறந்துவிட்டார்கள். இதிலுள்ள எந்த அரசியல்வாதியும் தண்டிக்கப்பட மாட்டார்கள். அப்படி வழக்கமே இல்லை.

நான் வருத்தப்படுவதெல்லாம் இங்கே அரசியல் பேசிக்கொண்டிருந்த என்னைப்போன்றவர்களை எண்ணித்தான். வெறும் கட்சியரசியல் பேசுபவர்களை விடுவோம். அவர்களுக்கு அது ஒருவகை தொழில். ஆனால் சமூகவலைத்தளங்களில் அரசியல்பேசும் என்னைப்போன்றவர்கள் கொள்கை, இலட்சியம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் இந்தக் கள்ளச்சாராயச் சாவில் எவரும் வாய் திறக்கவில்லை. தந்திரபூர்வமான மௌனமே எங்கும் காணக்கிடைத்தது.

இந்தச் சாவு மட்டும் அதிமுக ஆட்சியில் நடந்திருந்தால் எவ்வளவு கொள்கைபேசியிருப்போம். ராத்திரியெல்லாம் தூக்கமே இல்லை என்று கவிதைகள் எழுதியிருப்போம். கட்டுரைகள் எழுதியிருப்போம். மறுபக்கம் பாஜக, அதிமுக எல்லாம் இந்தவகை வியாபாரங்கள் எதிலும் சம்பந்தமற்ற தூயவர்கள்போல பேசுகிறார்கள். திமுகவை மாட்டவிட காரணம் கிடைத்தது என்று நினைக்கிறார்கள். எந்த திருட்டுவியாபாரமும் எல்லா கட்சிக்கும் கொஞ்சம் ஷேர் போகாமல் நடக்காது , நடக்கமுடியாது என்று எல்லாருக்குமே தெரியும்.

இந்தச் சூழலில் கொள்கையரசியல் என்று சொல்வதெல்லாம் வெறும் ஏமாற்றுவேலை என்று தோன்றுகிறது. ஒரு ஈகோவுக்காகத்தான் இதிலெல்லாம் ஈடுபட்டிருக்கிறோம். சமூகவலைத்தளங்களில் ஒருவகையாகக் காட்டிக்கொள்வதற்காக இதையெல்லாம் செய்கிறோம். உங்கள் வீடியோ அதை அழுத்தமாகச் சொல்கிறது.

எம்.ஆர்.ராஜேந்திரன்

அன்புள்ள ராஜேந்திரன்,

நான் அரசியலை விட்டு விலகும்படி அனைவரிடமும் சொல்லவில்லை. நீங்களே சொன்னபடி பொழுதுபோகாதவர்கள், அடையாளம் தேடுபவர்கள் அதில் விழுந்து கிடக்கலாம். அவர்கள் அங்கிருந்து வேறெங்கும் வந்தால்தான் அந்த இடங்களில் அழிவு நிகழும்.கட்சிகட்டி சண்டைபோட்டு, மிகையுணர்ச்சி அடைந்து, சுயபாவனைகளில் திளைத்தால்தான் அவர்களால் வாழ்க்கையை உந்தி நீக்கமுடியும்.

நான் அரசியலுக்கு அப்பால் செல்லும்படிச் சொல்வது மூன்று தரப்பினரிடம். ஒன்று, கலையிலக்கியம் என அழகியல் சார்ந்த செயல்பாடு கொண்டவர்களிடம். இரண்டு, தத்துவ சிந்தனை மற்றும் மெய்யியல் ஈடுபாடுகொண்டவர்களிடம். மூன்று, மக்கள்சேவை ஆற்றவேண்டும் என்னும் எண்ணம் கொண்டவர்களிடம்.

கலையிலக்கியத்தின் நுட்பங்கள் எல்லாம் வாழ்க்கையின் உணர்ச்சிகள் மற்றும் உணர்தல்கள் சார்ந்தவை. அவை நிகழும்தருணங்கள் ,அவை வெளிப்படும் முறை ஆகியவையே கலையை தீர்மானிக்கின்றன. அவை முன்வைக்கும் கருத்தோ தரிசனமோ அவை நிகழ்ந்தபின் அறியப்படுபவை. அரசியலில் ஈடுபடுபவன் விடைகளுடன் தொடங்குகிறான். அவன் கலையை உருவாக்க முடியாது.

தத்துவம், மெய்யியல் ஆகியவை அன்றாட வாழ்க்கையில் தொடங்கி காலம்கடந்த பொதுமெய்மைகளை நோக்கிச் செல்ல முயல்பவை. அரசியல் அது நிகழும் காலம், இடம், சந்தர்ப்பம் ஆகியவற்றுக்குக் கட்டுப்பட்டது. ஆகவே அவையிரண்டும் அடிப்படையிலேயே வேறுவேறு.

சமூகப்பணியாற்றுபவன் அதன் வழியாக அதிகாரத்தை ஈட்டுவான் என்றால் அவன் அளிப்பதற்கு ஈடாக அதிகாரத்தை அடைகிறான். அது வணிகம், சேவை அல்ல. அதிகாரம் வழியாகச் சேவை செய்ய முடியாது. அந்த அதிகாரத்தை எந்தெந்த சக்திகளினூடாக அடைந்தானோ அவற்றுக்கே சேவை செய்யமுடியும். அதிகாரத்தை அடைவதும் தக்கவைப்பதுமே முழுநேரப்பணியாக அமையும்.

அரசியலின் அறுதிவிளைவு நீங்கள் சொல்வதுதான். உண்மையை அழுத்திப்புதைக்கவேண்டியிருக்கும். மனசாட்சியை ஒளித்துக்கொள்ள வேண்டியிருக்கும். அதைச்செய்யும்போது நமக்கே நம்மைப் பற்றிக் கண்டனம் உருவாகும். ஆகவே மேலும் மூர்க்கமடைவோம். மேலும் கூச்சலிடுவோம். படிப்படியாக அர்த்தமற்ற தகரடப்பாவாக ஆகி நிற்போம்.

இன்றைய சூழலில் அரசியலின்மை என்பது ஒரு தவம். எந்தத் துறையானாலும் மெய்யான சாதனைகள் தவமின்றி இயல்வதில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைஎஸ். தனபால்
அடுத்த கட்டுரைஇலக்கியத்தில் தனியனுபவத்தின் இடம்