அன்புள்ள ஜெ
அண்மையில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர்களை வைத்து இலக்கிய புத்தகங்களை மக்களிடம் – இளைய தலைமுறையினர் – சேர்ப்பதற்காக ஒரு திட்டம் தொடங்கியிருக்கிறோம் என தன் முகநூலில் பகிர்ந்துள்ளார்.
இவ்வகையான திட்டங்கள் அறிவு/புத்தகங்கள் சார்ந்த குறைந்தபட்ச மதிப்பு கூட இல்லாத நம் சூழலில் புத்தகங்கள் மீதும் அறிவு செயல்பாடு மேலும் ஒரு மதிப்பை உருவாக்கினால் நன்று தான்.
ஆனால் இன்றைய நுகர்வு யுகத்தில் பெரும்பாலான இன்ப்ளூயன்சர்கள் புத்தகங்களை விளம்பர பதாகையாக காட்டி தங்களுக்கு பேரும் பணமும் தேடி கொள்பவர்கள் மட்டுமே. அவர்களுக்கு மெய்யான அறிவு பரப்பு குறித்து அறிதல் இருப்பதாக தெரியவில்லை. இந்நிலையில் ஏற்கெனவே இருக்கும் நுகர்வு மனநிலையை ஊக்கப்படுத்தி புத்தகங்களை சந்தை பொருளாக மாற்றி விடுவார்கள் என தோன்றுகிறது. அது பதிப்பகத்திற்கு லாபம் தரலாம்.
ஆனால் முன்பு வணிக பத்திரிகை உலகம் அறிவியக்கத்தின் மேல் கொடுத்த எதிர்மறையான அழுத்தத்தை இன்று இவர்கள் உருவாக்க தொடங்கியுள்ளார்களோ என ஐயம் உள்ளது.
இந்த விஷயம் குறித்து தங்கள் பார்வையை பகிர முடியுமா ?
அன்புடன்
சக்திவேல்
மனுஷ்யபுத்திரன் பதிவு
உலகம் முழுக்க புத்தக விற்பனையில் சமூகவலைத்தளங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. ‘சோஷியல் மீடியா இன்ஃபளூயன்ஸர்‘கள் படைப்பாளிகளையும் படைப்புகளையும் பரவலாக எடுத்துச் செல்கின்றனர். சமீபத்தில் கேரளாவில் வெளிவந்த ‘ ஒரு புத்தகம் ‘சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்‘களால் இரண்டு இலட்சம் பிரதிகள் விற்றதாக நேற்று ஒரு மலையாள பதிப்பாளர் குறிப்பிட்டார்.
அத்தகைய இலக்கிய ரீதியான செல்வாக்கு செலுத்தும் ‘யூ ட்யூபர்‘கள், ‘இன்ஸ்டாக்ராமர்‘கள் தமிழிலும் இருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கையை பெருமளவு அதிகரிக்கவேண்டும் என்பதற்காகவும் இளைஞர்களிடம் நூல் வாசிப்பு ஆர்வத்தை ஊக்குவிக்கவேண்டும் என்ற சென்னை மாநகர நூலக வாசிப்புக்குழுவின் முயற்சிகளின் தொடர்ச்சியாகவும் நாங்கள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
மாணவர்கள் யூ ட்யூப், இன்ஸ்டாவில் கவிதை வாசிப்பு, நூல் மதிப்புரை, கதை சொல்லல் பயிற்சிக்காக முதல் கட்ட பயிலரங்கில் பங்கேற்றவர்களில் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துப்பேர் இன்று அழைக்கப்பட்டு அவர்கள் கவிதை வாசிப்பு, நூல் மதிப்புரைகள் எப்படி இலக்கியக் காணொளிகள் உருவாக்கவேண்டும் என்பது குறித்த சிறப்புப்பயிற்சி அளிக்கப்பட்டது.
மாணவர்கள் தங்கள் காணொளி பங்களிப்புகளை மிகச்சிறப்பான முறையில் வழங்கினர். அவை பதிவு செய்யப்பட்டுள்ளன. விரைவில் அவை பதிவேற்றம் செய்யப்படும்.
மாணவ மாணவிகளின் உற்சாகமும் ஈடுபாடும் இத்திட்டத்தை மிகவிரிவாக கொண்டு செல்வதற்கான உத்வேகத்தை தருகிறது. இதன் மூலம் இளைஞர்களை சிறந்த இலக்கிய பிரதிகளை வாசிக்கத் தூண்டலாம். அவர்களையே சமூக வலைத்தளங்களில் இலக்கியத்தை பரவலாக கொண்டு செல்லும் இலக்கியத் தூதர்களாகவும் மாற்றலாம். இன்று நாங்கள் மாணவர்களை வாசிக்கச்
செய்து பதிவு செய்த இலக்கியப் பிரதிகள் தமிழின் முக்கியமான படைப்பாளிகளுடையவை. எங்கள் குழு அவற்றை தேர்வு செய்து மாணவர்களுக்கு வழங்கியது. இத்தகைய தேர்வும் ஒழுங்குமே சீரிய இலக்கியப் பரவாக்கலுக்கு உதவும்.
இதை தொடர்ந்து செய்யப்போகிறோம். போதுமான resource இருந்தால் இதை ஒரு இயக்கமாக மாற்றலாம்.
ஒரு வருடத்தில் குறைந்தது இலக்கியம் சார்ந்து மிகச்சிறந்த நூறு சோஷியல் மீடியா ஃப்ளுயன்ஸர்களையாவது உருவாக்குவோம்.
மாணவர்கள் மட்டுமல்ல, இலக்கிய ஆர்வமுள்ள திறமை வாய்ந்த எவரும் எங்களுடன் இணைந்துகொள்ளலாம்.
புரவலர்களும் கூட துணை நிற்கலாம்.
– மனுஷ்ய புத்திரன்
தலைவர்
சென்னை மாநகர நூலக ஆணைக்குழு.
அன்புள்ள சக்திவேல்.
ஏதாவது ஒரு புதிய முயற்சி தொடங்கப்படும்போது எழும் ஐயங்களில், அச்சங்களில் ஒன்று அது இலக்கியத்தை, அல்லது மதத்தை, அல்லது விழுமியங்களை அழித்துவிடுமா என்பது. நம்மை நாம் இலக்கியம், மதம், விழுமியங்களின் காவலர்களாக எண்ணிக்கொள்வதனால் வரும் உணர்வு இது. அவை பொத்திப் பாதுகாக்க வேண்டிய கைக்குழந்தைகள் அல்ல. நாம் பிறப்பதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உருவாகி இங்கே நிலைகொண்டிருப்பவை. நாம் அவற்றின் பெரும்பரப்பில் சிறு துளிகள். நாம் அவற்றை கடைப்பிடிக்க, நம் பங்களிப்பை ஆற்ற மட்டுமே கடமைப்பட்டவர்கள். அவற்றின் பக்தர்கள், வழிபாட்டாளர்களே ஒழிய துவாரபாலகர்கள் அல்ல.
இலக்கியமோ, மதமோ, ஆன்மிகமோ, விழுமியங்களோ சிறுகாற்றில் அணைந்துவிடும் சுடர்கள் என்றால் அவற்றை நாம் ஒருவரால் காப்பாற்ற முடியாது. நம் தலைமுறை ஒட்டுமொத்தமாக நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. ஆகவே அந்த வகையான உளமயக்குகளிலிருந்து வெளிவருவதே நாம் செய்யவேண்டியதைச் செய்ய, செயலில் மகிழ்ச்சிகொள்ள ஒரே வழி. வீண் ஐயங்களும் அச்சங்களும் போல நம்மை ஆற்றலிழக்கச் செய்பவை பிற இல்லை. அவற்றில் திளைப்பவர்கள் பெரும்பாலும் செயலற்ற வாய்ப்பேச்சாளர்கள் மட்டுமே.
எந்த வகையிலானாலும் இலக்கியம் கொண்டுசெல்லப்படுவது நன்று. இன்றைய சூழலில் வாசிப்பைக் கொண்டுசெல்வதே அவசியமானது. எதையாவது வாசிப்பவர்கள் என்றாவது இலக்கியத்தை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கலாம். இன்று நம் கல்விச்சூழலில் அதற்கே வாய்ப்பில்லாமலிருக்கிறது. நம் சமூகவலைத்தளச் சூழலில் வாசிப்பு சார்ந்த ஓரிரு வரிகள் செவிகளில் விழுவதே அரிதாக இருக்கிறது. என்ன நடந்தாலும் நன்மைக்கே என்பதுதான் இதில் என்னுடைய நிலைபாடு.
நீங்கள் உத்தேசிக்கும் ’அபாயம்’ என்பது இதுதான் என நினைக்கிறேன். இந்த ’இன்ஃப்ளூயன்ஸர்கள்’ ஓர் இலக்கியச் சக்தியாக மாறி எவர் முக்கியம் என தீர்மானிக்க ஆரம்பித்துவிடுவார்கள்; ஆனால் அவர்களுக்கு இலக்கியவாசிப்பு பெரிதாக இருக்காது, ரசனையும் இருக்காது என்னும் நிலையில் தகுதியற்ற அன்னியர்கள் இலக்கியத்தை வழிநடத்தும் மையங்களாக ஆகிவிடுவார்கள். இதுதானே?
இந்த செல்வாக்குநர்கள் தொழில்முறையாளர்கள். ஆகவே பணம், அரசியல் பின்புலம் கொண்டவர்கள் இவர்களை எளிதில் விலைக்கு வாங்கலாம். அவர்களைக் கொண்டு தங்கள் நூலை முன்னிறுத்தலாம். அதன்விளைவாக அந்நூல்கள் மேலதிக ஏற்பு பெறக்கூடும். இது இலக்கிய மதிப்பீடுகளை அழிக்கும். நீண்டகால அளவில் இவர்களுக்குச் செலவிடும் தொகை இலக்கிய முதலீட்டில் ஒரு பகுதியாக ஆகிவிடக்கூடும். இதுதானே?
அப்படியெல்லாம் கற்பனை செய்யலாம். ஆனால் நாம் காணவேண்டியது வாசிப்பு என்னும் தரப்பில் உள்ள விசைகளை. வாசகனின் நுண்ணுணர்வும் அறிவுத்திறனும் முதன்மை விசைகள். கூடவே சமூகத்தின் ஒட்டுமொத்தமான அரசியல், சமூகவியல், வரலாற்று விசைகள். அவ்விரு சக்திகளுக்கு இடையேயான முரணியக்கமே உண்மையான ’தீர்மானிக்கும் சக்தி’யாக உள்ளது.
எல்லா காலகட்டத்திலும் நூல்கள், ஆசிரியர்கள் பல்வேறு வகைகளில் முன்வைக்கப் படுகிறார்கள். பரிந்துரைக்கப் படுகிறார்கள். உலகமெங்கும் படைப்பாளிகள் பிற படைப்பாளிகளைப் பரிந்துரைத்து, மேற்கோள்காட்டி, விமர்சித்து முன்வைத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். தங்களுக்கு முன்பிருந்தவர்களை முன்வைக்கிறார்கள். அடுத்த தலைமுறையை முன்வைக்கிறார்கள். (சில சமயம் உலகம் மறந்துவிட்ட ஒரு முந்தைய தலைமுறைப் படைப்பாளி ஒரு சமகாலப் படைப்பாளியால் மீட்டுக்கொண்டுவரப்படுவதும் உண்டு)
ஆனால் ஏற்பு என்பது வாசகர் என்னும் தரப்பால்தான் முடிவுசெய்யப்படுகிறது. அது எப்படி நிகழ்கிறதென்று வகுக்கவே முடியாது. முன் ஊகிக்கவும் முடியாது. ஒரு காலகட்டத்திலேயே பலவேறு நிலைபாடுகள் அதில் காணப்படும். ஊடும்பாவுமாக பல சக்திகள் செயல்படுகின்றன. சமகால ஏற்பு என்பது கசங்கலாக, தெளிவற்றதாகவே கண்ணுக்குப்படும். ஆனால் ஒட்டுமொத்தமாக அது நகர்ந்திருக்கும் திசையை ஒரு காலகட்டம் கடந்த பின் உணரமுடியும்.
எண்ணிப்பாருங்கள், சென்ற ஆண்டுகளில் இந்த ஊடகச்செல்வாக்குகள் இலக்கியத்தில் இல்லாமலா இருந்தன? மிகப்பெரும் செலவில், அரசியல் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் புடைசூழ நூல்கள் வெளிவந்ததில்லையா? மாபெரும் திருவிழாக்கள் போல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன அல்லவா? அவை உடனடியான கவனத்தைப் பெற்றனவே ஒழிய, இலக்கிய ஏற்பை அடைந்தனவா என்ன?
இதுவரை உள்ள சூழலையே கவனியுங்கள். பிரபலமான வணிக இதழில் தொடராக வெளிவரும் ஒரு நாவலுக்கும் தனி நூலாக ஒரு பதிப்பகத்தால் வெளியிடப்படும் நூலுக்கும் வெளிப்பாடு கொள்வதில் எவ்வளவு வேறுபாடு!. தமிழகமெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வெளியான தொடர்கதைகள் பெரும்பாலும் இன்று வாசிக்கப்படுவதே இல்லை. அச்சில்கூட கிடைப்பதில்லை. அன்று சிற்றிதழ்ச் சூழலில் மட்டும் வெளிவந்த படைப்புகள் மறுபதிப்புகள் வந்துகொண்டே உள்ளன.
காரணம் வாசகனின் தெரிவு. தன் அறிவுத்தேடலுக்கும் ரசனைக்கும் உரியவற்றை அவன் கண்டடைகிறான், முன்னிறுத்துகிறான், விவாதிக்கிறான், பரிந்துரைக்கிறான். என்றும் அதுவே இலக்கியத்தின் தீர்மானிக்கும் சக்தி. அதை நம்புவோம்.
இந்தவகை செல்வாக்குநர்கள் வாசிப்பின் அடித்தளத்திற்கு புதியவர்களை கொண்டுவந்து சேர்ப்பார்கள் என நம்பலாம். அவ்வாறு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிதுநாட்களில் வாசிக்காமலாகிவிடுவார்கள். ஒரு பகுதியினர் பொழுதுபோக்கு வாசிப்புடன் நின்றுவிடுவார்கள். சிலர் இலக்கியம் நோக்கி வருவார்கள். அவ்வாறு வருபவர்கள் ஏற்கனவே உள்ள இலக்கியமதிப்பீடுகளுடன் இணைந்தும் முரண்பட்டும் தங்கள் அளவுகோல்களை உருவாக்கிக்கொள்வார்கள்.
ஆகவே மனுஷ்யபுத்திரன் செய்துகொண்டிருப்பது ஒரு நல்ல முயற்சி என்றே நினைக்கிறேன்.
ஜெ