வே.நி.சூர்யா, விருது – கடிதம்

நிகழ்வு புகைப்படத்தொகுப்பு :அம்ரே கார்த்திக்

புகைப்படங்கள் தொகுதி 1

புகைப்படங்கள் தொகுதி 2

புகைப்படங்க்ள் தொகுதி 3

புகைப்படங்கள் தொகுதி 4 

புகைப்படங்கள் தொகுதி 5

அன்புள்ள ஜெ

இம்முறை குமரகுருபரன் விழாவிற்கு கிளம்பி வர தாமதமாகி விட்டது. ஒருவாரமாக மூக்கடைப்பு இருந்தது. எழுவதற்கு பிந்தியதால் சிறுகதை அமர்வை தவறவிட்டு விட்டேன். இப்போதெல்லாம் குமரகுருபரன் விழா அமர்வுகள் அத்தனையையும் சுருதி டிவி பதிவு செய்வது சாதகமான விஷயம். எனினும் அமர்வுகள் வருவதன் முக்கிய பலன் சென்ஸார் இல்லாமல் நேர் அனுபவம் பெறுகிறோம் என்பதும் மேடையில் இருக்கும் எழுத்தாளர், கவிஞர் உடல் மொழியை கவனிக்க முடிவதும் சக நண்பர்களால் சூழப்பட்டிருக்கும் ஒத்த மனநிலையும் முக்கியமானவை.

உரையாடல் அமர்விலும் மாலை உரையிலும் சரி செபாஸ்டின் அவர்கள் கூறியது ஒன்றை எனக்கென எடுத்து கொண்டேன். அது கவிஞன் காட்சி உலகத்தை காட்டுவதில்லை, தன் மொழியினூடாக ஒரு நிகர் உலகை உருவாக்குகிறான். அதனாலேயே அதனை சிருஷ்டிகரம் என்கிறோம் என்றது.

மாலை உரையில் ராமகிருஷ்ணரின் சிறுவயது கதை ஒன்றில் ராமகிருஷ்ணர் அடையும் அனுபவத்தை கூறி தொடங்கினார். அது ஒரு பிரமாதமான தொடக்கம். கவிதைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து கொண்ட ஒருவரின் சொல்லாக அதனை கேட்பது உத்வேகமூட்டும் ஒன்றாக அமைந்தது. கவிஞன் தெய்வத்தை காண வேண்டியவன். சௌந்தர்ய உலகத்தை பிரதிபலிக்கும் ஊடகமாக அமைய வேண்டியவன் என்றார். அதை கேட்கையில் ரிஷி அல்லாதவன் கவிஞன் அல்ல என்ற வரி நினைவில் எழுந்து மின்னியது.

ராமகிருஷ்ணரின் கதை விஷ்ணுபுரத்தில் வரும் வேததத்தனை நினைவுறுத்தியது. மொத்த விஷ்ணுபுரத்திலும் பரிபூரண ஞானத்தை அனுபூதியாக கொண்டவர்கள் சித்தனும் வேததத்தனும் மட்டுமே. சித்தன் தத்துவ ஞானி, எனவே அவன் கடுவெளியின் வெறுமையன்றி பிறிதில்லை. உணர்வுச்சங்களுக்கு அங்கே இடமில்லை. வேததத்தன் மண்ணில் வாழும் கவிஞன். தன் உணர்ச்சியினூடாக மட்டுமே விண்ணை ஆக்கும் பெருவிசையை சென்று தொட்டு விடுபவன். சித்தன் கழுகெனில் வேததத்தன் வண்ணத்துப்பூச்சி. வானமோ இரு மண்துகள்களுக்கு இடையிலும் உள்ளது என்பது தேவதேவனின் வரி.

செபாஸ்டியன் சாரின் உரைக்கு மறு எடையில் யதார்த்த உலகத்தின் ஈவிரக்கமற்ற தன்மையை கூறி அதிலிருந்து கவிஞன் சமைக்கும் உலகத்தின் சிறப்பை சொல்வதாக உங்கள் உரை அமைந்தது. உங்களுக்கே உரிய முறையில் படிமங்களாக தொட்டுத்தொட்டு சென்று முடித்தீர்கள். அதனூடாக தமிழ் கவிதையில் ஒரு காலக்கட்டத்தில் நிகழ்ந்த மாற்றத்தை குறித்த அவதானிப்பை முன்வைத்தீர்கள்.

வாழ்க்கை எத்தனை அழகுற இருந்தாலும் பிரிவு என்பது தான் அதன் யதார்த்தம். இருப்பிலிருந்து இன்மை வரையான முதிர்ந்து உதிர்ந்து போகும் பயணத்தையே வாழ்க்கை என்கிறோம். எனவே கவிதை எப்படி பார்த்தாலும் பிரிவு, துக்கம், வலி ஆகியவற்றை விட்டுவிட்டு அகன்று சென்றுவிட முடியாது. ஆனால் அந்த பிரிவை பிரபஞ்ச முழுக்க நிகழும் பெருநிகழ்வுடன் கவிதை தொடர்புப்படுத்தினால் ஒரு மாயம் நிகழ்ந்து விடுகிறது. அதன் பின் அதே துயரத்தை பார்த்து புன்னகைக்க நமக்கொரு வாய்ப்பு அமைகிறது. அந்த முழுமை சித்திரம் ஒரு நிறைவை அளிக்கிறது. உங்களின் இந்த சொற்களை கேட்கையில் வே.நி.சூர்யாவின் அலைகளை எண்ணுபவன் கவிதையில் வரும் தேயிலை பையென மாறிய சூரியனை எண்ணிக்கொண்டேன்.

அத்துடன் கவிதைகள் இதழில் வே.நி.சூர்யாவின் கவிதைக்கு எழுதிய உருகும் பனி என்ற குறிப்பை நினைவு கூர்ந்தேன். அக்குறிப்பில் வே.நி.சூர்யாவின் அந்தியில் திகழ்வது தொகுப்பில் திகழும் தன்னிலையை அந்திக்கு முன் வைக்கப்பட்ட உருகும் பனிக்கட்டி என்றும் கரைந்து கொண்டிருக்கும் தன்னிலை என்றும் வாசித்திருந்தேன். உங்கள் சொற்களின் மூலம் அதனை பன்மடங்கு விரித்து கொள்ள முடிந்தது. அலைகளை எண்ணுபவன் கவிதை புதிய வெளிச்சத்தில் திறந்து கொண்டது.

உப்புக்காற்றின் கண்காணா தோரணங்களினூடே 

கடற்கரைக்கு வருகிறான்

கோப்பையினுள் மீளமீள இட்டு எடுக்கப்படும் 

தேயிலைப் பையெனத் தொலைவில் 

அமிழ்ந்துகொண்டிருக்கிறான் சூரியன்

அலைகளின் சப்தத்தை மட்டும் விட்டுவிட்டு 

எங்கேயோ சென்றுவிட்டன மற்றெல்லா சப்தங்களும் 

ஈரமணலில் உட்கார்ந்து அலைகளையும் நுரைகளையும் வெறிக்கிறான்

பின்னர் எண்ணத்தொடங்குகிறான் 

ஒன்று.. இரண்டு.. தனிமை.. மூன்று.. நான்கு.. 

வந்துகொண்டே இருக்கின்றன அலைகள் 

மிகத்தனிமையான அலைகள்.

காணும் கதிரவன் முதல் காலூறும் கட்டெறும்பு வரை ஒவ்வொன்றும் கரைந்து கொண்டிருக்கும் அலைகளுக்கு மத்தியில் இருக்கும் அப்பெருந்தனிமையை என் கைக்கோப்பை தேநீரில் அமிழும் சூரியனாக காண்கையில் ஒரு விடுதலை நிகழ்கிறது. சூரியனுக்கும் நமக்கும் சில ட்ரில்லியன் ஆண்டுகள் மட்டுமே வயது வித்தியாசம். அழகனுபவம் அறிவியல் உண்மையுடன் இணைந்து பிரபஞ்சத்தை தொட்டு உள்ளிழுத்து மொத்த கவிதையும் ஒரு படிமமாக மாறி விடுகிறது.

அன்புடன்

சக்திவேல்

குமரகுருபன் விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்வு

குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விழா உரைகள்

குமரகுருபரன், விஷ்ணுபுரம் விருது விழா- உரையாடல் அரங்கு

குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விழா உரையாடல்: காணொளிகள்

 

முந்தைய கட்டுரைசரத்சந்திர எதிரிவீர- கடிதம்
அடுத்த கட்டுரைஜான் மர்டோக்