மாயங்களின் மறைவுப்பாதை

மண் சிறுகதைத்தொகுப்பு மின்னூல் வாங்க

மண் சிறுகதைத்தொகுப்பு வாங்க

திசைகளின் நடுவே வாங்க

திசைகளின் நடுவே மின்னூல் வாங்க

 

அன்புள்ள ஜெ

நான் கல்லூரியில் படிக்கும் காலகட்டத்தில் தற்செயலாக ஒரு புத்தகம் நூலகத்தில் கிடைத்தது. அட்டையில் பச்சைநிறமான ஓர் இலையின் படம் இருக்கும், அது புகைப்படம் அல்ல ஓவியம். ஆனால் அதன்பின்புலம் புகைப்படம். அந்த அட்டையின் தயாரிப்புத்தரம் அன்றைக்கு மிகச்சிறப்பானது. ஆகவே உடனே அதை எடுத்துக்கொண்டு வந்தேன். ஆனால் என்னால் அதை உடனே படிக்க முடியவில்லை. திரும்பக் கொடுக்கவும் முடியவில்லை. அதை கொஞ்சநாள் கையிலேயே வைத்திருந்தேன். திரும்பத்திரும்ப ரினியூ செய்துகொண்டிருந்தேன்.

ஆறுமாதம் கழித்து அதிலுள்ள மண் என்னும் கதையை வாசித்தேன். இன்றைக்கும் ஒரு பிரம்மாண்டமான ஹாலிவுட் படம்போல என் மனதில் பதிந்திருக்கும் கதை அது. இன்னொரு மொழியில் என்றால் இதற்குள் ஒரு மகத்தான சினிமாவாக வெளிவந்திருக்கும். (நீங்கள் சினிமாவிலே இருக்கிறீர்கள். இந்தக்கதையை எவரிடமும் சொல்லவில்லையா?)

அந்த தொகுப்பிலுள்ள பல கதைகள் என்னை ஆக்ரமித்த கதைகள். அதற்குப்பிறகுதான் திசைகளின் நடுவே தொகுப்பை வாசித்தேன். அதிலுள்ள பல கதைகள் புகழ்பெற்றவை. ஆனால் மண் தொகுப்பிலுள்ள கதைகள் கொஞ்சம் நீளமானவை. ஒரு திரைப்படம் போல உள்ளே சென்று ஒரு முழு வாழ்க்கையையும் வாழச்செய்பவை. என் இலக்கிய அறிமுகம் அதன் வழியாக நடைபெற்றதனால் அதன்பின் நான் உங்கள் நாவல்களையே அதிகமும் வாசித்துள்ளேன்.

மண் தொகுப்பை அதன் பிறகு இப்போதுதான் குமரகுருபரன் விருது விழாவில் பார்த்தேன். மறுபதிப்பாகி வந்துள்ளது. அழகான புத்தகமாக உள்ளது. அதிலுள்ள எல்லா கதைகளுமே மனப்பாடம். ஆனாலும் அதை வாங்கிக்கொண்டேன்.

 

ரா.மகாதேவன்

அன்புள்ள  மகாதேவன்

நன்றி

மண் முதற்பதிப்பு எனக்கும் முக்கியமானது. ஸ்நேகா பதிப்பகம் வெளியிட்ட அந்நூலின் அட்டையை அன்று வடிவமைத்தவர் வசந்தகுமார், அவர் அப்போது பதிப்பகம் தொடங்கியிருக்கவில்லை.

என்னுடைய தொடக்ககால நூல்கள் எல்லாமே மிகச்சிறப்பான வடிவமைப்புடனும் அச்சுடனும் வெளிவந்தன. முதல்நூலான ரப்பர் விதிவிலக்கு. ஆனால் அது அகிலன் விருது பெற்றதனால் கவனிக்கப்பட்டது.

என் முதல் சிறுகதைநூலான திசைகளின் நடுவே, அடுத்த நூலான மண், அதற்கு அடுத்த நூலான நாவல் (இப்போது நாவல் கோட்பாடு) அதற்கு அடுத்த நூலான ஆயிரங்கால் மண்டபம், தொடர்ந்து விஷ்ணுபுரம் எல்லாமே அன்றைய அச்சுத்தரத்தின் சிறந்த வெளிப்பாடுகளாக அமைந்தன. நாவல் நூல் தமிழில் கணினி எழுத்துக்களைப் பயன்படுத்தி அச்சிடப்பட்ட தொடக்ககால நூல்களில் ஒன்று. அந்த எழுத்துக்களில் இருந்த கூர்மை அன்று வியந்து பாராட்டப்பட்டது.

இந்த அச்சுத்தரம் என் மீதான வாசிப்பை எந்த அளவுக்கு மேம்படுத்தியது என்று நான் எண்ணுவதுண்டு. தீவிரமான, நவீனமான எழுத்து என்னும் உளப்பதிவை அவை உருவாக்கின என பின்னர் நான் சந்தித்த பல வாசகர்கள் சொல்லியிருக்கிறார்கள். உங்கள் கருத்தும் அதை ஊக்குவிக்கிறது. துரதிருஷ்டவசமாக பல முதல்பதிப்புகள் இன்று என்னிடமில்லை. எனக்கு இவ்வாறு பொருட்களைப் பாதுகாக்கும் வழக்கம் இல்லை.

ஒரு நூலின் அச்சும் தயாரிப்பும் மிக முக்கியமானவை என நான் நினைக்கிறேன். இங்கே நம் வாசகர்கள் நூல்களை ஒருவகையான கலைச்சேமிப்புகள் போலத்தான் வாங்குகிறார்கள். அவை வெறும் நுகர்பொருட்கள் அல்ல. அண்மையில் நாங்கள் கொற்றவை, விஷ்ணுபுரம் நாவல்களை விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக கொண்டுவந்தோம். புத்தகக் கண்காட்சியில் விற்பனையில் அவற்றைவிட விலை குறைவான வேறுபதிப்பக நூல்கள் இருந்தும் வாசகர்கள் இவற்றையே வாங்கினர். இவை கையிருப்பு தீர்ந்துவிட்டபோது அங்கே சென்று வாங்கும்படி நாங்கள் சொன்னோம். பரவாயில்லை, நாளை வந்து வாங்குகிறோம் என்றனர் வாசகர்கள்.

மண் நான் 1986 ல் என் 24 ஆம் வயதில் எழுதிய கதை. பல ஆண்டுகள் கையெழுத்துப்பிரதியாகவே இருந்தது. அன்றைய சிற்றிதழ்ச்சூழலில் அத்தகைய கதைகள் விந்தையான விலக்கம் கொண்டவை. அன்று மிகைக்கற்பனை (fantasy) வகை எழுத்துக்கள் தமிழில் அறிமுகமாகவில்லை. நவீன எழுத்துமுறைகளான மாயயதார்த்தவாதம் போன்றவை வந்து சேர்ந்திருக்கவில்லை. சோதனை முயற்சியாக புதுமைப்பித்தனிலிருந்து பிரமிள் வரை பலர் எழுதியிருந்தாலும் அவை ஒருவகை வேடிக்கைகளாகவே கருதப்பட்டன. தீவிர இலக்கியமாகக் கொள்ளப்படவில்லை. அவற்றின்மீதான வாசிப்புகள் உருவாகவில்லை.

புறவயமான யதார்த்தத்தை அப்படியே சொல்வது, அகவயமான யதார்த்தத்தை நேரடியான குறிப்புகளாகப் பதிவுசெய்வது இரண்டும்தான் நவீன இலக்கியம் என்னும் எண்ணம் அன்று மேலோங்கியிருந்தது. அவை நவீனத்துவ அழகியலின் வகைமாதிரிகள். அவற்றைச்சார்ந்த ஒரு குறுங்குழுப் பார்வை இலக்கியத்தில் இருந்தது. அன்றைய சிற்றிதழ்சார் இலக்கிய உலகமே மிகச்சிறியது. சிற்றிதழ்களே ஓரிரண்டுதான். அவற்றின் ஆசிரியர்களும் எழுத்தாளர்கள். தங்களுக்கென வலுவான நவீனத்துவ இலக்கியப்பார்வை கொண்டவர்கள்.

அன்று இளம்படைப்பாளியாக இருந்த நான் நான்கு வெவ்வேறு உலகங்களில் வாழ்ந்துகொண்டிருந்தேன். ஒன்று, என்னுடைய ஆன்மிகத்தேடல்களின் களம். யோகப்பயிற்சிகள், புராணங்கள், குறியீடுகள் வழியாக வெவ்வேறு வகையான அகப்பயணங்கள். இன்னொன்று, நானறிந்த நாட்டார்க்கதைகளின் உலகம். கேரளத்தில் காஸர்கோடு சென்று அங்கே கேரளநாட்டார்க் கதையுலகை நேர் அனுபவங்களாக அறியநேரிட்டபோது அது பெருகியது.

இரு வேறு வாசிப்புலகங்கள் எனக்கிருந்தன. ஒன்று என் அம்மா வழியாக வந்த பிரிட்டிஷ் இலக்கியம். நான் தாக்கரே, ஜார்ஜ் எலியட் என வாசித்துக் கொண்டிருந்தேன். (இன்றும் அந்த ஈர்ப்பு தொடர்கிறது).  இன்னொன்று நவீன ஐரோப்பிய இலக்கியம். அப்போதுதான் மார்க்யூஸ், போர்ஹெஸ் என வாசித்துக்கொண்டிருந்தேன். கேரளத்தின் முதன்மையான இலக்கியக் கோட்பாட்டாளர்களுடன் விவாதங்களிலும் இருந்தேன்.

அத்துடன் ஒன்றையும் சொல்லவேண்டும். நேரடியாக அனுபவக்குறிப்புகளை எழுதுவதுடன் ஏன் என்னால் இசைவுகொள்ள முடியவில்லை என்றால் என் அனுபவ உலகம் மிகத்தீவிரமானது என்பதனால்தான். சிற்றிதழ்ச்சூழலின் அன்றைய நவீனத்துவ எழுத்தாளர்களின் அனுபவ உலகம் மிகச்சிறியது. எளிய நடுத்தரவர்க்க அன்றடம் மட்டுமே கொண்டது. ஆகவே எளிய அனுபவத்துளிகளை எழுதி எழுதி பெருக்கிக்கொண்டனர். அவர்களுக்கு லௌகீகச்சிக்கல்கள் அன்றி உண்மையில் பெரிய துயர்களேதுமில்லை, ஆகவே இருத்தலியல் போன்ற செயற்கைத் துயர்களை உருவாக்கிக் கொண்டனர்.

மாறாக நான் தற்கொலைக்கும் வாழ்வுக்குமான விளிம்பில், மனப்பிறழ்வுக்கும் சிந்தனைக்குமான எல்லைக்கோட்டில் வாழ்ந்துகொண்டிருந்தவன். என் சொந்த அனுபவங்களை நேரடியாக எழுத முடியாது. என் அகநிகழ்வுகளையும் நேரடியாக எழுத முடியாது, அவை உருவகமாகவே வெளிவர முடியும்.  எநான் அன்றும் இன்றும் தொடர்பயணி. சாகசங்களினூடாக , எதிர்பாராதவற்றினூடாக வாழ்க்கையை கொண்டுவந்தவன். ஆகவே நான் புதிய எழுத்துமுறைகளை நாடினேன்.

விளைவாக நான் நவீனத்துவத்தின் மனநிலைகளை கடந்துவிட்டிருந்தேன். என் எழுத்துக்கு நவீனத்துவ முறைமை எவ்வகையிலும் உதவாது என்ற புரிதல் உருவாகியிருந்தது. ஆனால் பின்நவீனத்துவம் அன்று எங்கும் உருத்திரண்டிருக்கவில்லை. ஆகவே அதுசார்ந்த எந்த சிந்தனைகளும் என்னிடம் இருக்கவில்லை. நவீனத்துவத்தை என்னுடைய தனிப்பட்ட புனைவுத்தேவைக்காக, என்னுடைய அகப்பயணத்துக்காக, கடந்தேன். கோணங்கியும் அதேகாலகட்டத்தில் அதே நிலையில் இருந்தார்.

நான் இயல்பாகவே பின்நவீனத்துவக் கூறுகள் கொண்டதும், ஆனால் பின்நவீனத்துவ மனநிலைகளைக் கடந்ததுமான ஒரு புனைவுலகை உருவாக்கிக் கொண்டிருந்தேன் என இன்று நினைக்கிறேன். இன்று என் கதைகளை ஆங்கிலம் வழியாக வாசிக்கும் அமெரிக்க இலக்கியப் பார்வையாளர்கள் அவை நாற்பதாண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை, பின்நவீனத்துவம் உருவாவதற்கு முன் பின்நவீனத்துவ அம்சங்கள் கொண்டவையாக இருக்கின்றன என்பதை வியப்புடன் சொல்கிறார்கள். அண்மையில் எடிட்டரான ரோஹான் அதைச் சொன்னபோது அது பின்நவீனத்துவம் அல்ல, நவீனத்துவம் கடந்த ஓர் இந்திய அழகியல் என்று நான் சொன்னேன்.

நான் அன்று எழுதிய மண், மாடன் மோட்சம், படுகை, நிழலாட்டம், டார்த்தீனியம் போன்ற நாட்டார்த் தன்மையும் புராணத்தன்மையும் கலந்த மாயப்புனைவுக் கதைகளை சிற்றிதழ்கள் திருப்பி அனுப்பின. அசோகமித்திரன் மண் கதையை வாசித்துவிட்டு அக்கதையின் உலகை உள்வாங்க முடியவில்லை என எழுதினார். சுந்தர ராமசாமி அவை ‘கற்பனை’யாக உள்ளன என்றார். மூன்று ஆண்டுகள் அவை கைப்பிரதியாகவே இருந்தன.

அச்சூழலில் அன்று மார்க்ஸியக் கோட்பாட்டு இதழாக இருந்த நிகழ் கதைகளை வெளியிடத் தொடங்கியது. நான் ஏற்கனவே கோவை ஞானிக்கு அறிமுகமானவன் என்பதனால் முதலில் போதி என்னும் கதையை அனுப்பினேன். அது ஞானிக்கு உடன்பாடான பார்வை கொண்டதும்கூட. ஆகவே வெளியாகியது. அது யதார்த்தவாதக் கதை. அது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது

அதன்பின் படுகை கதையை அவருக்கு அனுப்பினேன், அவர் ‘இந்தக்கதையின் அழகியல் எனக்கு புதிதாக உள்ளது. ஆனால் அது அடித்தள மக்களின் அழகியலாக உள்ளது. ஆகவே வெளியிடுகிறேன்’ என்று சொல்லி வெளியிட்டார். ஆச்சரியமாக படுகை ஓர் அலையையே உருவாக்கியது. இந்திரா பார்த்தசாரதி உட்பட அன்றைய மூத்த படைப்பாளிகள் பலர் அதைப்பற்றி எழுதினர். தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுக்காலம் அதைப்பற்றிய வாசிப்புகள் வெளிவந்துகொண்டே இருந்தன.

அக்காலத்தில் அந்தவகையான யதார்த்தம் மீறிய கதைகளின் மீதான வாசிப்பு பற்றி தொடர்ச்சியாக நான் எழுதிக்கொண்டே இருந்தேன். கட்டுரைகள், கடிதங்கள் மட்டுமல்ல தனிப்பட்ட கடிதங்களும்கூட. இன்று யோசிக்கையில் தனிப்பட்ட கடிதங்கள் நூற்றுக்கும் மேல் இருக்குமென தோன்றுகிறது. அவ்வகையான கதைகளின் மீதான வாசிப்பை அவ்வாறு நாங்களே உருவாக்கிக்கொண்டோம்.

உண்மையில் அந்த விவாதம் வழியாகவே முந்தைய தலைமுறைப் படைப்பாளிகளின் கதைகளில் அன்றுவரை கவனிக்கப்படாத கதைகள் மீதான மறுவாசிப்பு நிகழ்ந்தது. உதாரணமாக அசோகமித்திரனின் புலிக்கலைஞன் அன்று கவனிக்கப்பட்ட கதை அல்ல, ஒரு தெருக்கலைஞனின் வாழ்வின் ஒரு பக்கம் என்றே அது வாசிக்கப்பட்டது. எவ்வகையிலும் முக்கியமானதாகக் கருதப்படவில்லை. அசோகமித்திரன் எழுதும் நடுத்தரவர்க்க, அடித்தள நகர்வாழ் மக்களின் அவலக்கதைகளில் ஒன்று என்றே எண்ணப்பட்டது. அக்கதை பேசுவது கலைஞனின் உருமாற்றக் கணம் பற்றி என்னும் வாசிப்பு என்னால் முன்வைக்கப்பட்டு தொடர் விவாதம் உருவாகியது.

தி.ஜானகிராமனின் கதைகளில் சிலிர்ப்பு, பாயசம் போன்றவை அன்று கொண்டாடப்பட்டவை. ஆனால் பரதேசி வந்தான் கதையே முதன்மையானது என்று நான் முன்வைத்தேன். ஜெயகாந்தனின் அக்னிப்பிரவேசம் ஒரு வணிகச்சீண்டல் கதை அல்ல, அதன் ஆழம் அப்பெண் மென்று கொண்டிருக்கும் அந்த சூயிங்கம் வழியாக இன்னொரு தளத்திற்குச் செல்கிறது என்று வாதிட்டேன்.

இந்த எந்த விவாதத்திலும் விமர்சகர்கள் என எவருமே இடம்பெறவில்லை. விதிவிலக்கு ராஜமார்த்தாண்டன். ஆனால் அவர் பெரிதாக ஏதும் சொல்லவில்லை, கவனித்துக் கொண்டிருந்தார். வேதசகாயகுமார் அன்று இலக்கியத்துறவில் இருந்தார். தமிழில் இலக்கியவிவாதங்கள் மற்றும் மாற்றங்களில் இலக்கியவிமர்சகர்கள் என்பவர்களுக்கு பங்கிருந்ததே இல்லை. அவர்கள் எளிய பொது அளவுகோல்களைக் கடக்கமுடிந்ததும் இல்லை. இந்த விவாதங்கள் வழியாக இலக்கியத்தில் மாற்றங்கள் நிகழ்ந்துவிட்ட பிறகுதான் எளிய மேற்கோள்களுடன் நம் இலக்கியக் கோட்பாட்டாளர்கள் களம்புகுந்தனர். அதன்பின்னரும் படைப்பிலக்கியவாதிகள் அவர்களை கண்டுகொள்ளவில்லை.

படுகை திறந்த வாசல் வழியாக தொடர்ச்சியாக மாடன் மோட்சம், ஜகன்மித்யை, மூன்று சரித்திரக்கதைகள், டார்த்தீனியம் என கதைகள் வெளிவந்து முற்றிலும் எதிர்பார்த்திராத தீவிரவாசிப்பைப் பெற்றன. சுந்தர ராமசாமியே திசைகளின் நடுவே கதையை வெளியிட நேர்ந்தது. அந்த வரிசையில் வெளிவந்த கதை மண்.

இக்கதைகள் 1986 முதல் எழுதப்பட்டவை. 1988 வரையிலான காலங்களில் வெளியானவை. மண் கதை நீளமானது, ஆகவே அதை ஞானி வெளியிடவில்லை. அது சுபமங்களா இதழில் 1992 ல் வெளியானது. இன்று நாற்பதாண்டுகளுக்குப் பின் அவை தமிழுக்கு வெளியே மொழியாக்கங்களாகச் செல்லும்போது முற்றிலும் புதிய படைப்புகளாக வாசிக்கப்படுகின்றன. மாடன் மோட்சம், படுகை போன்றவை ஆங்கிலம் வழியாக வாசிக்கப்பட்டு பல விமர்சகர்களால் பாராட்டப்படுகின்றன. டெய்லர் ரிச்சர்ட் அவர் வாசிக்கநேர்ந்த கதைகளில் முதன்மையாயனது என அதைச் சொன்னபோது அதன் ஆங்கிலப்பெயர் என் தலைக்குள் நுழையாமையால் மையமாகத் தலையாட்டினேன்.

மலையாளத்தில் மாடன் மோட்சம் ஒரு சிறு நூலாக விரிவான முன்னுரை, ஆய்வுரையுடன் டி.சி.புக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டு நான்காவது பதிப்பாக இருபத்தைந்தாயிரம் பிரதிகளை தாண்டி விற்றுக்கொண்டிருக்கிறது. 1987ல் பொன்.பொன் விஜயன் வெளியிட்ட சிற்றிதழான புதியநம்பிக்கையில் அது வெளியானது. புதியநநம்பிக்கை இருநூறு பிரதிகள் அச்சிடப்பட்ட சிற்றிதழ்.

அக்கதை வெளியானபோது பொன் விஜயன் அவர் நிதிநெருக்கடியில் இருப்பதாகவும் இருநூறு ரூபாய் அனுப்ப முடியுமா என்றும் கேட்டிருந்தார். அவர் ஒரு சிறு அச்சகம் நடத்திவந்தார். கட்டை அச்சு எனப்படும் ஈய அச்சுமுறை மறைந்துகொண்டிருந்த காலம் அது. நான் அன்று எளிய அரசூழியன், ஆனால் அந்தக் கதையை வெளியிட்டமைக்காக நன்றியுடன் இருநூறு ரூபாய் அனுப்பினேன். அன்று அத்தொகைக்கு மூன்று நல்ல சட்டைகள் எடுக்கலாம். காஸர்கோட்டில் என் நண்பர்கள் எழுத்தாளன் பிரசுரிப்பவனுக்கு பணம் அனுப்பியதைப் பற்றி கேலிசெய்து சிரித்தனர். அண்மையில்கூட பாலசந்திரன் அந்நிகழ்வை குறிப்பிட்டார்.

நாற்பதாண்டுகளுக்குப்பின் அந்த ஒரு கதை மட்டும் மலையாளத்தில் மூன்று ஆண்டுகளாக ஆண்டுக்கு தோராயமாக ஒரு லட்சம் ரூபாய் ராயல்டி ஈட்டித்தருகிறது. இன்று படுகை முதலிய கதைகளுக்காக ஆங்கிலப் பதிப்பகங்கள் லட்சக்கணக்கில் முன்பணம் தருகிறார்கள். இப்படி ஒரு சூழல் அமையும் என அன்று எண்ணியிருந்தால் அதுதான் உச்சகட்ட மிகைக்கற்பனையாக இருக்கக்கூடும்.

ஜெ

அழியா வினாக்களின் கதைகள்: மண் முன்னுரை

முதற்காலடி_ திசைகளின் நடுவே முன்னுரை

முந்தைய கட்டுரைபனை மரம், கள்: ஒரு விண்ணப்பம்: காட்சன்
அடுத்த கட்டுரைகவிஞரிடமிருந்து தியானம் பயில்தல்