அண்ணா ஹசாரேவுக்கு எதிராக தலித்துக்கள் திரும்பியிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
சரவணன்.எம்
அன்புள்ள சரவணன்,
இந்த மக்கள்போராட்டம் ஆரம்பித்த நாள்முதலே காங்கிரஸ் ஆதரவுக் குரல்கள் ஒரு விஷயத்தைத் திரும்பத்திரும்பச் சொல்லிவருகின்றன, இது மத்தியவர்க்கத்தின் இயக்கம் என.
எந்த இயக்கத்தையும் போலவே மத்தியவர்க்கம் மட்டுமே முன்னால் நிற்கிறார்கள், ஆனால் அவர்கள் மட்டுமே முன்னால்நிற்கிறார்கள் என்று எதைவைத்துச் சொல்கிறார்கள்? ராம்லீலா மைதானத்தை காமிரா காட்டும்போதெல்லாம் தெரிவது எல்லா மக்களும் அங்கே கூடியிருப்பதை தானே?
இந்தப் போராட்டம் நடப்பது டெல்லியில். அதற்கான ஆதரவுப்போர்கள் நடப்பது சென்னைபோன்ற நகரங்களில். அவை அனைத்துமே தன்னிச்சையான எழுச்சிகள். அமைப்புபலம் அற்றவை. ஆகவே சொந்தப்பணம்செலவழித்து வந்துகூடும் நடுத்தரவர்க்கமே அதிகம் வரமுடியும். கிராமப்புற மக்களை கிராமம் வரை ஊடுருவிய அமைப்புகள் பணம்செலவழித்து மட்டுமே திரட்டமுடியும் என்பதே இந்திய யதார்த்தம். இதெல்லாம் இந்த அரசியலாய்வாளர்களுக்கு தெரிந்திருக்கவிட்டாலும் நமக்கு தெரியும்.
அந்த சிக்கல்களையும் மீறி இத்தனைமக்கள் இயல்பான எழுச்சியுடன் வந்திருப்பதே இது ஒரு உண்மையான மக்கள் எழுச்சி என்பதற்கான ஆதாரம். கோடானுகோடி எளிய மக்கள் இதை கவனிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் இதில் மானசீகமான உணர்வெழுச்சியுடன் பங்கெடுக்கிறார்கள். ஐயமிருந்தால் வெளியே சென்று முதலில் நீங்கள் பார்க்கும் சாமானிய மக்களிடம் இதைப்பற்றிக் கேளுங்கள்.
இதை வெறும் நடுத்தர வர்க்க எழுச்சி மட்டுமே என்று சொல்வது அவதூறு. இதை ஒழித்துக்கட்டுவதற்காகச் செய்யப்படும் தந்திரம் மட்டுமே.
இத்தகைய மக்களெழுச்சி என்பது வர்க்க இன சாதி மத மொழி பேதம் உடையதல்ல. அண்ணா ஹசாரே மற்றும் இந்த அமைப்பைச் சார்ந்தவர்களின் இதுவரையிலான பணிகளும் பின்புலமும் எந்த மத இன மொழி வர்க்க அடையாளம் கொண்டதல்ல. இதுவரை அவர்கள் மேல் எந்த குற்றச்சாட்டும் அப்படி முன்வைக்கப்பட்டதில்லை – இப்போது அதைச் சொல்பவர்களால் கூட. மாறாக அவர்கள் வெளிப்படையாக ஆதரித்தே உள்ளனர்
இன்று, திடீரென இவர்கள் இப்படி கிளம்பியிருப்பதன் பின்னணி என்ன? அண்ணாவின் போராட்டம் உச்சத்தை அடைந்துள்ள இந்த தருணத்தில் மட்டும் திடீரென அவர் தலித் எதிரி இஸ்லாமிய எதிரி என்றெல்லாம் கட்டமைக்கப்படுவதன் ரகசியம் என்ன? எதையெல்லாமோ நுணுகி ஆராயும் நம் அறிவுஜீவிகள் இதை மட்டும் எப்படி அப்படியே விழுங்கிக் கொள்கிறார்கள்?
இந்த லோக்பால் கோரிக்கையில் எந்த இடத்திலும் எந்த வகையிலும் ஒரு வர்க்க இன மத மொழி பாகுபாட்டுத்தன்மை வெளிப்படவில்லை. இது கோருவது லோக்பால் அமைப்பை மட்டுமே. அதில் உறுப்பினர் நியமனம் எல்லாவகையான பிரதிநிதித்துவங்களுடனும் நிகழவேண்டும் என்று மட்டுமே. மக்களில் எல்லா பிரிவும் இயல்பாக அதில் தங்கள் இடத்தை அமைக்கும்படியே அது உள்ளது.
அதில் பிரதிநிதித்துவம் கோருபவர்கள் அது வருவதற்காக முதலில் அண்ணா ஹசாரேவுடன் ஒரே போராட்டத்தில் இணைவதும் வந்தபின் பிரதிநித்துவக்குரல் எழுப்புவதுமே முறை. வந்த பின் அதை மேம்படுத்தலாம். அல்லது தங்கள் சொந்த லோக்பால் வடிவுடன் அவர்களும் போராடலாமே. ஆனால் அது வராமலே தடுப்பதற்காக அண்ணாவை அவதூறு செய்து, அந்த போராட்டத்தை சிதைப்பதற்காக கொடும்பாவி எரித்துப் போராடுவது மோசடியானது. அது காங்கிரஸின் அரசியல் விளையாட்டு.
இன்று தலித்துக்களையும் இஸ்லாமியர்களையும் பிரதிநிதித்துவம் செய்பவர்களாகச் சொல்லிக்கொள்பவர்கள் எந்த அடிப்படையில் சொல்லிக்கொள்கிறார்கள்? அந்த உதிரித்தலைவர்களில் பலரின் பெயர்களையே அம்மக்கள் இப்போதுதான் கேள்விப்படுவார்கள். அண்ணா ஹசாரேவுக்கு மக்கள் பின்புலம் இல்லை என பக்கம் பக்கமாக எழுதும் அறிவுஜீவிகளால் இதை மட்டும் காண முடிவதில்லை.
மேலை ஊடகங்கள் மிக எளிதாக இந்தக் கூச்சல்களை ஏற்றுக்கொள்கின்றன. அமெரிக்க ஊடகங்களும் காங்கிரஸ் ஊடகங்களும் அண்ணா ஹசாரே இயக்கம் உயர்சாதி இயக்கம் என்று மீண்டும் மீண்டும் சொல்ல இதை பயன்படுத்திக்கொள்வதைக் காணலாம். மனசாட்சி இருப்பவர்கள் கொஞ்சம் கண்திறந்து சூழலைப் பார்க்கட்டும். அவருக்கு இன்று உருவாகியிருக்கும் ஆதரவுக்கு சாதி மத இன அடையாளம் உண்டா என.
கண்ணெதிரே காந்தியப்போராட்டம் ஒன்று எதிர்கொள்ளப்படும்போது தெரிகிறது காந்தி எதையெல்லாம் சந்தித்தார் என. காந்திமீதான அவதூறுகளின் ஊற்றுமுகம் எப்படி பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம் இதுவே.
ஜெ
அண்ணா இன்றைய பேச்சுவார்த்தைகள்
அண்ணா ஹசாரே-மீண்டும் ஒரு கடிதம்
அண்ணா கட்டுரைகள் ஆங்கில மொழியாக்கம்
அண்ணா ஹசாரே ஜனநாயகக் கேள்விகள்
அண்ணா ஹசாரே மக்கள் போராட்டத்தினால் ஆவதென்ன?
ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1
ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2