ஆலம், படுகளம்: கடிதம்

ஆலம் மின்னூல் வாங்க

ஆலம் நூல் வாங்க – விஷ்ணுபுரம் பதிப்பகம்

படுகளம் மின்னூல் வாங்க 

படுகளம் வாங்க

பெருமதிப்பிற்கும், பேரன்பிற்கும் உரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.

இருபதாண்டுகளுக்கு முன் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் எங்களுடன் பணியாற்றினார். கிட்டத்தட்ட பத்து வகுப்புகளுக்கு அவர் ஒருவரே சமூகஅறிவியல் ஆசிரியை. காலை முதல் மாலை வரை தொடர்வகுப்புகள். கடும் உழைப்பை அளித்து பள்ளியின் தேர்ச்சி விகிதத்தையும் உயர்த்திக் காட்டினார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான அவரது கணவரையும், சட்டம் பயின்று வந்த அவரது இரு மகன்களையும் ஓரிரு முறை சந்தித்திருக்கிறேன். பழகுவதற்கு மிகவும் இனிமையான குடும்பம்

அவர் பத்தாண்டு அரசுப்பணிக்குப் பிறகு ஓய்வு பெற்றார். பணிஓய்வுக்குப் பிறகு நான்கு மாதங்கள் கழித்து, கூலிப்படையை வைத்து சென்னையில் அவரது கணவர் வழியில் மிக நெருங்கிய உறவினரான ஒரு பிரபல நரம்பியல் மருத்துவரைக் கொன்ற வழக்கில் அவரது மொத்தக்குடும்பமும் கைது செய்யப்பட்டது. ( தனிப்பட்ட உரையாடல்களில் இந்தக் குற்றச்சாட்டை அவர்கள் மறுத்தார்கள்.அது மருத்துவரின் குடும்பத்துக்குள்ளேயே இருந்த உட்பூசல்கள் காரணமாக நடந்த கொலை என்றார்கள்.) கொல்லப்பட்ட மருத்துவருடனான நிலத்தகராறு வழக்கு ஒன்றுக்காக அவர் கணவரின் மொத்த சம்பளமும், ஓய்வுகாலப் பணப்பலன்கள் மொத்தமும் செலவிடப்பட்டது என்றும், வழக்கில் தோற்ற பிறகும் தங்கள் மகன்கள் இருவரையும் அந்த வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்காகவே சட்டம் படிக்க வைத்தார்கள் என்பதும் பிறகே தெரிய வந்தது. கொலைவழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அவரது கணவர், இரு மகன்கள் உள்ளிட்ட ஏழு பேருக்கு மரண தண்டனையும், ஆசிரியை மற்றும் மற்றொருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.(தற்போது மேல்முறையீட்டில் சில நாட்களுக்கு முன் உயர்நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை ரத்து செய்து அனைவரையும் விடுதலை செய்திருக்கிறது.) 

தன் முழுவாழ்க்கையையும், தங்கள் மகன்களின் வாழ்க்கையையும் பணயம் வைக்கின்ற அளவுக்கு வஞ்சம் ஒரு மனிதனை செலுத்துமா என்று அவர்களைப் பற்றி வியந்து கொள்வதுண்டு.அந்த வியப்புஆலம்நூலை படித்ததில் இருந்து தெளிவடைந்தது.     

 

குற்றங்கள், குற்றவாளிகள் பற்றிய பதிவுகள்,நவீனத்தொழில்நுட்பம், நாடளாவிய ஒருங்கிணைப்பு என அனைத்தும் கொண்ட காவல்துறையை வீரலட்சுமி தன் மகன் சண்முகத்தைக் காப்பாற்ற அணுகாமல், தன் குடும்பத்தில் நிகழ்ந்த கொலைகளுக்குக் காரணம் என அவர் சந்தேகிக்கும் சந்தானம் என்னும் ஒரு சாதாரண மனிதரைப் பற்றிய தகவல்களுக்காக வழக்கறிஞர் கோப்ரா குமாரசாமியை அணுகுகிறார். அவரோ, “உள்ளே போனால் சிக்கிக்குவோம்மனநிலை பதிலுடன் ஒதுங்குகிறார். அவர் வீட்டில் எடுபிடி வேலைகளை செய்து கொண்டிருக்கும் பதினேழாவது ஜூனியரான மாரி என்கிற சேது மாதவனுக்கோ இது ஒரு நல்வாய்ப்பு. துணிந்து இறங்கும் அவனுக்கு ஜூனியர்  கிருஷ்ணசாமியின் நிதானமான வழிகாட்டல்கள் உதவுகின்றன. கிட்டத்தட்ட காவல்துறையின் ஒரு தனிப்படை செய்ய வேண்டிய துப்பறிதல்களைச் செய்கிறான். தன் கண்ணெதிரில் கொலைகள் நடப்பதைப் பார்த்து முதலில் சந்தானத்தின் மேல் கொலைவெறியும், பின் அவருக்கு வீரலட்சுமியின் குடும்பத்தால் நிகழ்ந்த கொடுமையை அறிந்து அவர் மேல் பரிதாபமும் கொள்கிறான். ஆனால் ஒரு கட்டத்தில் இந்தத்தேடல் தனிப்பட்டதாக மாறி, “கேஸை எப்பவும் பர்சனலா ஆக்கிரக்கூடாதுஎன்ற கோப்ராவின் அறிவுரையையும் மீறுகிறது. அதுவே கிருஷ்ணசாமியைப் பிரியவும் வைக்கிறது. இறுதியில் அவனின் தனிப்பட்ட ஆர்வமும் , தேடலும் சந்தானத்தைக் கண்டுபிடிக்க வைக்கிறது. ஆனால் சந்தானம் கொல்லப்படுவதால்  சண்முகத்தைக் காப்பாற்ற முயலும் அவனது முயற்சிகள் தோல்வியடைகின்றன.தான் பாரில் சந்திக்கும் ஒரு நாகர்கோவில்  எழுத்தாளர் அனுமானிக்கும்நல்ல காலம்வர விரும்பும் மாரி இறுதியில் ஆலமென வளர்ந்து நிற்கும் வஞ்சத்தைத் தாங்கி நிற்கும் மற்றுமொரு விழுதாகிப் போகிறான். ( தனக்கு சந்தானத்தைப் பற்றி எதுவுமே தெரியாது என மறுக்கும் கோப்ரா, சந்தானத்தை யாருக்கும் தெரியாமல் சந்தித்து வேண்டிக்கொண்டதை அவரே சொல்கிறார். ஒருவேளை அவரும் இந்த கொலைப்பின்னலில் ஒரு கண்ணியாக மாறியிருக்கக் கூடுமோ?)

நூலின் உரையாடல்கள் இந்தியாவில் குடிப்பகைகள் உருவான விதம், பிரிட்டிஷ்  அரசு சட்டங்கள் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்திய முறைகள், சுதந்திரத்திற்குப் பிறகான இந்திய அரசுகள் நீதி பரிபாலனத்தைக் கையாண்ட முறைகள்  பற்றிய விரிவான சித்திரத்தை அளிக்கின்றன. ( “அது உண்மையிலேயே நாம வக்கீலுங்க பண்ற கொலை“/ “Plantiff is the primary liar”/ “Confusing is the best way of arguing”/ “ரொம்ப அப்பட்டமான கேஸ்னா கீழ்க்கோர்ட்டிலே கடுமையான தண்டனை கொடுப்பாங்க.அது நியூஸ்ல வந்தா பப்ளிக்கோட கான்சியஸ் நிறைவடைஞ்சிரும்.பிறகு அந்த கேஸை யாருமே ஃபாலோ பண்ணுறதில்லை. ஹைக்கோர்ட்லே அப்பீல் பண்ணி விடுதலை வாங்கிடலாம்.மொத்த கேஸ்லே அஞ்சு சதவீதம் குற்றவாளிகள் கூட கடைசியா தண்டனை அடையறதில்லை“/ “இங்கே நடக்கிற கொலையில முக்காவாசி நீதியமைப்பு பண்ற கொலை தான்.ஒழுங்கா விசாரிச்சு ஒரு வருஷத்துக்குள்ள கொலைகாரனை தூக்குக்கு அனுப்பினா அஞ்சு வருஷத்திலே இங்க கொலையே நடக்காம பண்ணிடலாம்“/ “இந்தத் திண்ணவேலிக்கு வந்த ஜட்ஜ்களிலே பாதிக்குப்பாதி மனசாட்சியுள்ளவங்களா இருந்தாக்கூட இந்த மண்ணு மனுசன் வாளுற ஊரா  ஆகியிருக்குமேநடக்கலியேஇன்னிக்கு வர நடக்கலியே“. ) 

பரபரப்பாக நகரும் காட்சிகள், துப்பறிதல்கள் என வாசிப்பவரை அடுத்து என்ன என்று ஆர்வத்தைத் தூண்டினாலும் நாவல் வேகப்புனைவு இலக்கியமாக நிலைபெறுவது கதாபாத்திரங்களின் நுண்ணுணர்வுகளால். குறிப்பாக வீரலட்சுமிராமசுப்பு இருவருக்கிடையேயான உறவுகோமதிசங்கர்சந்தானம் இருவருக்கிடையேயான தந்தை –  மகன் உறவு விவரிக்கப்படும் இடங்கள். உணர்வுகளின் உச்சகட்டத்தருணம், யாராலும் அணுக முடியாத சன்னதம் கொண்டெழுந்த  கொலைத்தெய்வமாக இருந்த சந்தானத்தை சேது , சண்முகத்தின் பரிதாபநிலையைப் பார்க்க வைத்து அவருக்குள் உறைந்திருக்கும் தந்தையைக் கண்டடைய வைக்கும் இடம்.               

( மாமலரில் சுக்ரரைச் சந்திக்கத் தன் மகன் கசனை அனுப்பும் பிரஹஸ்பதி சொல்லும், “அவன் அவருக்கு மைந்தனைப்போல. என் மாணாக்கனாக இங்கு இருக்கையில் அவனை தன் தோளில் தூக்கி வளர்த்தவர் சுக்ரர். அவருள் வாழும் தந்தை அவனை நோக்கிக் கனியாமல் இருக்க வாய்ப்பில்லைஎன்பதை எண்ணிக்கொண்டேன்.)

தளத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அத்தியாயமாக வந்த போது இப்படியெல்லாம் நடக்கிறதா என்ற பயத்துடனும், சந்தானத்தின் இழப்பைக் கண்ணீருடன் வாசித்ததையும், நாளிதழ்களில் கூலிப்படையினர் மாடி வீட்டில் குடியிருப்பவருக்குப் பதிலாக கீழ் வீட்டில் குடியிருப்பவரைத் தவறுதலாக வெட்டிக் கொன்றது , இருபதாண்டுகளுக்குப் பிறகு தந்தையின் மரணத்திற்குக் காரணமான சொந்த சித்தப்பாவைப் பழி வாங்குவதற்காக வெட்டிக் கொன்றது போன்ற செய்திகளைக் குற்றத்தில் திளைக்கும் ஆர்வத்துடன் வாசித்ததை  நினைவுகூர்கிறேன். “ஆலம்” – தீராவஞ்சம், கடுங்கோபம், பெருங்கொடூரம், பேரன்பு, பெருங்கருணை, மன்னித்தல் என வாசிப்பவரை இரு வேறுபட்ட மனநிலைகளில் ஒருசேரப் பயணிக்க வைக்கும் வாசிப்பனுபவம்.

சாமின்னா என்ன? அளவில்லாத கருணையும் சாமிதான். அளவில்லாத கொடூரமும் சாமிதான்“. ஆம், அதுபோன்றே  இருண்மையும்,மேன்மையும் இணைந்தவன் தானே மனிதனும்!

நன்றி ஜெ

அன்புடன்

சி.செந்தில்குமரன், பொள்ளாச்சி.

முந்தைய கட்டுரைWhat if Hinduism becomes extinct?
அடுத்த கட்டுரைபசுபதீஸ்வரர் ஆலயம்