செபாஸ்டியன் கவிதைகள் 4

அரசியல், சமூகப்பிரச்சினைகளை உரக்கக்கூவும் கவிதைகளுக்கும் மிகையுணர்ச்சிக் கவிதைகளுக்கும் முதன்மைக் கவனிப்பு நிகழும் மலையாளச் சூழலில் செபாஸ்டியன் அருவமான, உள்ளடங்கிய தொனிகொண்ட கவிதைகளை தொடர்ச்சியாக முப்பதாண்டுகளாக எழுதிவருகிறார். அவருக்கென ஒரு வாசகர் வட்டம் உண்டு. அவருக்கு கேரளத்தின் முதன்மையான இலக்கியவிருதுகளும் கிடைத்துள்ளன

23 ஜூன் 2024 அன்று சென்னையில் நிகழும் குமரகுருபரன் – விஷ்ணுபுரம் இலக்கிய விருதுவிழாவில் செபாஸ்டியன் கலந்துகொள்கிறார்.

செபாஸ்டியன் கவிதைகள்-2

செபாஸ்டியன் கவிதைகள் 1

செபாஸ்டியன் கவிதைகள்-3

 

முதற்கனி

 

தனியாக இருந்து

நான் என்னை துழாவும்போது

சென்ற வயதுகள் ஒன்ன்றன்பின் ஒன்றாக

கேலிசெய்து சிரித்தன.

“பளபளப்பெல்லாம் போச்சே, வயசாகிப்போச்சே!”

 

நமுட்டுச்சொற்கள் கோத்த தூண்டிலை வீசி

பிடிக்க முயன்றன அவை என்னை.

சீற்றத்துடன் ஒரு வசையுதிர்த்தேன்

அவை ஓடி ஒளிந்துகொண்டன

 

உதிர்ந்துபோன என் அப்பாவி ஆண்டுகளைகளை

ஒன்றொன்றாய் எடுத்துவைத்தேன்

பழைய வயதுகளில் முட்டிக்கொள்ளாமல்.

 

அப்போது என் சேகரிப்புகளில் சில

என்னை நோக்கி புன்னகைத்தன

அவற்றில்

மேலட்டை கிழிந்த கிழட்டு புத்தகம் சொன்னது

‘நான் பாடாத பைங்கிளி

என்னைத்தான் நீ முதலில் வாங்கினாய்’

இன்னொரு கிழடு சொன்னது

நான் டயல் 00003

உன்னை பரபரப்பில் நிறுத்தியது முதலில் நான்தான்

 

கருணை, கசப்புக்கொடி, வெள்ளைச்சாத்தான்

மாண்டிகிரிஸ்டோ டிராக்குலா இளம்பருவத்து தோழி

என உரிமைகோரி

ஒவ்வொருவராக எழுந்தனர்

 

திடீரென ஒரு பழைய நோட்டுப்புத்தகம்

நிமிர்ந்து எழுந்து சொன்னது

என்னில்தான் நீ முதலில் கவிதை எழுதினாய்

உன்னுடைய குறிப்புகளும் வெட்டும் திருத்தும்

எழுத்துப்பிழைகளும்

என்னில்தான்

 

சில நூல்கள் அன்புடன் முணுமுணுத்தன

’பழையதாகி தாள்கள் கிழிந்ததும்

தூக்கி வீசிவிட்டாயே எங்களை!’

 

சென்ற வயதுகளில் ஒன்று வந்து என்னிடம் முணுமுணுத்தது

’நாலாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த நீ

பள்ளிக்கூட முற்றத்தில்

பூத்த வாகை மரநிழலில் தனியாக அமந்து

மடியிலிருந்த உன் ஸ்லேட்டில்

மழலை எழுத்துக்களால்

எழுதிய முதல் கவிதை நான்’

 

’அந்த ஸ்லேட் எங்கே?

அதை மட்டும் காணோமே?’

 

’அதன் சில்லுகள்

மண்ணுக்கடியில் புதைந்து கிடந்து

உன் முதல் கனியை

மட்காமல் பார்த்துக்கொள்கின்றன’

 

உடனே

சிவந்த வாகைமலர்கள்

என் சென்ற வயதுகளின்மேல்

ஆண்டு முழுக்க

பெய்யத்தொடங்கின

 

குறிப்புகள்

  1. பாடாத்த பைங்கிளி முட்டத்து வர்க்கி எழுதிய காதல்நாவல். முதிரா இளமையின் வாசிப்புக்குரியது.
  2. 00003   பாட்டன் போஸ் எழுதிய திகில் நாவல். தொடக்கநிலை வாசிப்புக்குரியது
  3. கருணை: குமாரன் ஆசான் எழுதிய கவிதை
  4. கைப்ப வல்லரி: கசப்புக் கொடி. வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன் எழுதிய கவிதை
  5. வெளுத்த செகுத்தான்: வெள்ளைச்சாத்தான். துர்க்காபிரசாத் கத்ரி எழுதிய இந்தி திகில்நாவல். கேரளத்தில் அறுபதுகளில் புகழுடனிருந்தது.
  6. கௌண்ட் ஆப் மாண்டிகிரிஸ்டோ- அலக்ஸாண்டர் டூமா எழுதிய நாவல்
  7. டிராக்குலா: பிராம் ஸ்டாக்கரின் நாவல்
  8. பால்யகால சகி- வைக்கம் முகமது பஷீர் நாவல்

அடையாளங்கள்

வானில்

பாறையடுக்குகளுக்கு நடுவே

யாரோ ஒருவர் வசிக்கிறார்.

 

அங்கே ஒளிந்துவிளையாடும்

சூரியனைப் பிடித்து

அவ்வப்போது பூமியில் எறிகிறார்.

 

இருட்டின் முட்டையை உடைத்து

கீழே ஊற்றுகிறார்

 

விண்மீன்களையும் சந்திரனையும்

வானில் ஒட்டி வைக்கிறார்

 

பாறைகளுக்கு நடுவில் எழும் நீரூற்றை

அள்ளி பூமிமேல் ஊற்றுகிறார்

 

பருவங்களின் சக்கரங்களை திருப்பும்போது

அவருடைய கைகளுக்கு நல்ல தேர்ச்சி

வசந்தமும் வேனிலும் கூதிரும் தன் கைகளில்

உருவம் பெறுவதை பார்த்து மகிழ்கிறார்

 

அவர் மரக்கிளைகளை விரல்நீட்டி தொடுகிறார்

வசந்தம் பூமி எங்கும் தளிராகவும் மலராகவும் நிறைகிறது

 

சும்மா இருக்கும்போது

ஏதோ தோன்றி

அவர்

சம்சார சாகரத்தில்

தூண்டில் எடுத்து வீசுகிறார்

இரையை மாட்டித்தான்.

 

கொத்தும் மீன்களை

முடிவிலி நோக்கி வீசியெறிகிறார்

 

இலையசையாத அமைதியில் அவர்

ஞானமரத்தில் இருந்து

கொஞ்சம் மௌனத்தைக் கிள்ளி

மென்று தின்பார்

 

பின்னர் பூமிக்கு வந்து நடக்க ஆரம்பிப்பார்

மண்ணில் கால் படாமல்

 

இன்று வரை எவரும் அவரை கண்டதில்லை

எத்தனை தேடினாலும்

தாவரவியல் நூல்கள்

எந்த குறிப்பும் அளிக்கவில்லை

 

இலைப்பரப்புகளில் கிறுக்கல்போன்று தெரியும்

கைரேகைச் சான்றுகள்

எவருடையவை?

 

 

முந்தைய கட்டுரைமுதல்படி, ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஜெயந்தி நாகராஜன்