மலையாளக் கவிஞர் செபாஸ்டியன் கொடுங்கல்லூர் அருகே கோட்டப்புறம் என்னும் ஊரில் 19 டிசம்பர் 1961 ல் பிறந்தார். தந்தை குளத்தில் தேவஸ்ஸி, தாய் குஞ்ஞம்மா. 2006 ல் ’பாட்டுகெட்டிய கொட்ட’ (பாடல் கட்டிய குரை) என்னும் நூலுக்காக எஸ்.பி.டி. கவிதை விருது பெற்றார். 2009ல் இருட்டு பிழிந்து என்னும் நூலுக்காக யுவகலாசமிதி விருதும், 2011 ல் முல்லநேழி கவிதை விருதும் பெற்றார். 2014ல் செபாஸ்டின் கவிதைகள் என்னும் நூலுக்காக பெருமைக்குரிய பி.குஞ்ஞிராமன் விருது பெற்றார்.
23 ஜூன் 2024 சென்னையில் நிகழும் குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழாவில் செபாஸ்டியன் கலந்துகொள்கிறார்
செபாஸ்டியன் கவிதைகள்-2
செபாஸ்டியன் கவிதைகள்
நீர்வண்ணம்
ஆற்றின் சின்ன அலைகளுக்கு மேலே
பகலை மென்மையாக்கி வரைந்துகொண்டிருந்தது நாலு மணி
வழக்கம் போல அந்தி வந்தது
நிறங்களின் சில்லறை, மொத்த வியாபாரி.
அதை வாங்கி வரைந்தன பறவைகள்
பறந்து போகும் வழியெல்லாம்.
மூழ்கி எழும் சீனவலையில்
சிவந்த நிறத்தில்
மீனின் துள்ளல்களை வரைந்தது அந்தி.
திரும்பிப் போவதற்கு முன்பு
அக்கரையில் வரிசையாக நின்றிருக்கும்
தென்னைமர உச்சிகளில்
மறைந்திருந்து
எஞ்சிய அடர்மஞ்சளையும் சிவப்பையும்
அலைகள் மேல் உதறுகிறது வானம்
இனி சின்ன தோணிகளின் வருகை
இருட்டுக்கு வண்ணம் பூச.
அதோ ஒரு தனி மின்மினி
பறந்து எழுகிறது
கரிய வானில் விண்மீன்களை வரைய.
களஞ்சியம்
வாங்கிச் சேகரிக்க விரும்புகிறேன்
புதிய காலத்தின் ஓசைகளை
மென்மையான கடுமையான
சிறிய பெரிய
ஓசையின் பல மடிப்புகளை
விரிதல்களை
ஒவ்வொன்றாக பிரித்து வைக்கவேண்டும்
இது கிளி
இது காற்று, இது மழை
இது மேளம்,
யந்திரங்கள், வண்டிகள்
சிரிப்பு அழுகை.
ஒவ்வொன்றையும் தனித்தனியாக
எடுத்து வைக்கவேண்டும்
அவற்றுக்கான தனி பெட்டிகளில்.
மௌனத்தின் கடைசி மூச்சும்
அறுந்து போகும் அந்த காலங்களில் ஒன்றில்
நிமிடங்கள் முடிவில்லாமல்
அலறல்கள் மட்டுமாகி
பூமியை அதிரச்செய்யும்போது
ஒவ்வொன்றாக வெளியே எடுக்கவேண்டும்
வெறும் ஆர்ப்பரிப்புகளில்
முழங்காத கர்ஜனைகளில்
சேர்த்து ஒட்டிவைக்கவேண்டும்.
ஓசைகள் இப்படியும் இருந்தன முன்பு
என்று நிரூபிக்கவேண்டும்.
கடைசிப் பணிவிடை
மெலிந்து எலும்பும் தோலுமான
ஓர் ஆத்மா அது
அசைவில்லாமல் கிடக்கிறது.
சில எறும்புகள் அதை
தொட்டும் வருடியும் முகர்ந்தும்
சுற்றி நின்றிருக்கின்றன.
யார் விட்டுச்சென்றிருப்பார்கள் இதை?
கொஞ்சம் அசைவு வந்ததா?
முழு உயிரும் போகவில்லை என்று தோன்றுகிறது
சொற்கத்தின் குலமேன்மையும் பகட்டும்
இதை உள்ளே அனுமதித்திருக்காது.
நரகத்தின் நெரிசலில் சிக்கி
வெளியே வந்து விழுந்திருக்கலாம்.
வாழ்வெனும் பெருவெள்ளக் கொப்பளிப்பில்
நிலையழிந்து கவிழ்ந்த தோணியில் இருந்து
எப்படியோ கரைக்கு வந்து சேர்ந்ததாக இருக்கலாம்.
எப்படியோ போகட்டும்
இதற்குள் சில எறும்புகள்
அதை உரிமைகொண்டாடி
கவ்வி இழுக்க தொடங்கியிருக்கின்றன
அவை அறிந்த பல இடங்களுண்டு
பூமியிலும் பாதாளத்திலும்