லஞ்சமில்லா தேர்தல் – கடிதம்

ஜனநாயக சோதனை அறிக்கை – பெருந்தலையூர் 

அன்புள்ள ஆசிரியருக்கு,

வணக்கம்.

யான் அறக்கட்டளையின் செயல்பாடுகள் படித்தேன்.

அண்ணன் திரு.கிருஷ்ணன் அவர்களுக்கும் , வயதில் சிறியவர்களாக இருந்தாலும் அதில் பங்கெடுத்த மனு ஸ்ரீ  உள்ளிட்ட அனைத்து தங்கைகள் தம்பிகளுக்கும் , அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகளும் வணக்கங்களும்.

1967 முதல் 2016 வரை என் தந்தை யார் யாரின் கொள்கைகளுக்கோ முகமாக நின்று தேர்தல்களில் களப்பணியாற்றியவர்(ஆனால் அவரின் இறுதி ஆண்டுகளில் புரிந்து கொண்டார்  பிறருக்காக அரசியல் சார்ந்து அவர் தந்த  உழைப்பனைத்தும் விழலுக்கிரைத்த நீர் என) , நானும் என் பங்குக்கு 1996 முதல் நான் ஊரைவிட்டு சென்னைக்கு படிக்க செல்லும் வரை  பாயசம் காய்ச்சி, கேசரி கிண்டி , கும்பிடவே கூடாதவர்களை எல்லாம் கையெடுத்துக்  கும்பிட்டு , கிழவர்கள் கிழவிகள் கால்களில் விழுந்து சிறுவனாக வாக்கு சேகரித்திருக்கிறேன்(அப்போது பண விநியோகம் இன்று போல சூடு பிடிக்காத நாட்கள்..எங்களூரில்). அன்றெல்லாம் தேர்தல் என்பதும் , முடிவு அறிவிக்கும் நாளும்  எனக்கொரு திருவிழா போல . இவ்வளவுக்கும் எங்கள் குடும்பத்தில் இருந்து  ஞானோதயம் வந்தது கல்லூரி சென்றுதான்.

அந்த நாட்களையெல்லாம் இந்த கட்டுரையை படித்துவிட்டு அருவருப்புடன் மட்டுமே நினைக்கத் தோன்றுகிறது. யாரையும் (என்னை உட்பட ) குறை  சொல்லவில்லை இப்போது. அது அந்த நேரத்து நியாயம்(அப்படி நினைத்துக்கொண்டாலொழிய இப்போது நேர்மறையாக நம்மை கொண்டுசெல்ல முடியாது என்பது தாங்கள் எனக்கு அளித்த பாடம்).

வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் பஞ்சாயத்துகளான ஒரத்தநாடுகண்ணந்தங்குடி கிழக்கு & மேற்கு கிராமங்களில் இதை முன்னெடுக்கலாம் என நினைத்துள்ளேன்(மேலே நான் குறிப்பிட்ட எங்கள் செயல்களுக்கு பிராயச்சித்தமாக) . இன்றும் நியாயத்தை , பொது மக்கள் நலனை கருத்தில் கொள்ளும் எங்கள் ஊர் மக்களில் சிலரை துணைகொண்டு. அதற்கு தங்களின் ஆசியையும் அண்ணன் கிருஷ்ணன் மற்றும் யானின் வழிகாட்டுதல்களையும் வேண்டுகிறேன்.

அன்புடன்

கே.எம்.ஆர்.விக்னேஸ் 

முந்தைய கட்டுரைThe Dance of Being’Here’ and ‘There’.
அடுத்த கட்டுரைகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விழா உரைகள்