ஜனநாயக சோதனை அறிக்கை – பெருந்தலையூர் 

ஈரோடு யான் அறக்கட்டளை மாணவர்களுக்கு முறைசாராக் கல்விக்கு வெளியே இலக்கியவாசிப்பு, பொதுஅறிவு, களச்செயல்பாடு ஆகியவற்றில் பயிற்சி அளித்து வருகிறது. அவர்கள் சென்ற பாராளுமன்றத் தேர்தலில் ஒரு சோதனை முயற்சியை மேற்கொண்டனர். ஈரோடு அருகே இரு கிராமங்களை தேர்வுசெய்து அங்கே ‘தேர்தலில் வாக்களிப்பதற்கு பணம் பெற்றுக்கொள்ள மாட்டோம்’ என அம்மக்களே அறிவிக்கும்படிச் செய்ய முயற்சி எடுத்தனர்.

அண்மைக்காலமாக தேர்தலில் வாக்களிப்பதற்கு பணம் பெறுவதென்பது ஒரு பொது வழக்கமாகவே ஆகிவிட்டிருக்கிறது. ‘வாக்காளர் உரிமைத்தொகை’ என்றெல்லாம் அதை நையாண்டியாகவே சொல்ல ஆரம்பித்துவிட்டனர். களமறியாமல் அரசியல்பேசும் கும்பல், சினிமாக்காரர்கள் எல்லாரும் அதை வாக்காளர்களுக்கு உரிமையான பணம் என்று சொல்லிச் சொல்லி இயல்பாக்கம் செய்துவிட்டிருக்கின்றனர்.

ஆனால் இதன் விளைவாக தேர்தலில் நேர்மையானவர்கள் நிற்கவே முடியாத நிலை உருவாகி வந்துள்ளது. கோடீஸ்வரர்களுக்குரியதாக தேர்தல் ஆகிவிட்டிருக்கிறது. இந்த தேர்தலிலேயே நான் மிக மதிக்கும் சிலருக்கு கட்சியே கூப்பிட்டு வாய்ப்பளித்தாலும் பெரும்பணம் செலவிடுவதற்கு கையில் இல்லாமையால் அவர்கள் தயங்கிவிட்டனர். நீண்டகால அளவில் அரசியல் குற்றமயமாகவே இது வழிவகுக்கும். அதற்கு எதிராக ஒரு முயற்சி இது.

அதை ஒருங்கிணைத்து நடத்திய நண்பர் கிருஷ்ணன் , யான் அறக்கட்டளை தன் அனுபவத்தை விவரிக்கிறார்

 ஜனநாயகச் சோதனை- ஒரு கள அறிக்கை

 

ஒரு வீட்டை மாற்றுவதை விட எளிது ஒரு தெருவை மாற்றுவது

இது துவங்கியது குடியரசு நாளான  2024 ஜன 26 அன்று. முதலில் ஊரை தூய்மை படுத்துகிறோம் என துவங்கினோம். 20 பேர் கொண்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த  மாணவர்கள் குழு முன் வந்தது. இவர்கள் யான் அறக்கட்டளை மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் இணைந்து நடத்தும் உதவித் தொகையுடன் கூடிய அறக் கல்வி வகுப்பில் பயிலும் மாணவர்கள். இவர்கள் பல்வேறு சிந்தனைப் பயிற்சி வகுப்புகள், களப் பணிகள், பயிற்சி முகாம்களில் கடந்த  ஓராண்டாக பயிற்சி பெற்றவர்கள்.  கோபி கலைக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் அனு  ஸ்ரீ என்கிற மாணவியின் வீடு பெருந்தலையூரில் இருந்து சுமார் 50 கிமீ. அவர் பெருந்தலையூரில் தங்கி  பணிகளை ஒருங்கிணைப்பது என முடிவானது. இதே கல்லூரியில் படிக்கும் சிபி என்கிற இன்னொரு மாணவர் இந்த குழுவை பொதுவாக ஒருங்கிணைப்பது எனவும் முடிவானது.

இவர்கள் இந்த தூய்மையான பெருந்தலையூர் என்கிற பணியை இங்கு ஒரு ஆண்டு செய்வார்கள்.  யான் அறக் கட்டளை சார்பில் இந்த பணியில்  ஈடுபடும் மாணவர்களுக்கு தினப்படி, உணவு தேநீர், பயண செலவை  வழங்குவது எனவும் முடிவானது.  நான் திட்டமிடல் அதை  பல பகுதிகளாகப் பிரித்தல்  ஆகியவற்றில் மாணவர்களுடன் ஆலோசனையில்  இருந்தேன், கள பணிகளில் ஈடுபடவில்லை. அனு ஸ்ரீ  தன் பெற்றோரின் அனுமதியை பெற்று விட்டார். இது மற்ற மாணவிகளுக்கு தூண்டுதலாக அமைந்தது, ஏழு எட்டு மாணவிகள் இவரை காரணம் காட்டி பெற்றோர் அனுமதியை பெற்று விட்டனர். அனு ஸ்ரீ தினமும் அங்கு தங்கி கல்லூரி சென்று வருவது என்றும் பிற மாணவிகள்  சுழற்சி முறையில் அவருடன் தங்குவது என்றும் முடிவானது. கல்லூரி மாணவர்களும் தினமும் வந்து செல்வார்கள். இப்படித்தான் இந்த குழு நிலைபெற்றது

பெருந்தலையூர் என்பது ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் உள்ளது, அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உள்ளும், திருப்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உள்ளும் வருகிறது. சுமார் 3000 வாக்குகள் உள்ள கிராமம். சுமார் 550 வீடுகள் உள்ளன, மக்கள் தொகை சுமார் 5000. இங்கு 3 வாக்குப் பதிவு மைய்யங்கள் உள்ளன. தலைவர், ஒரு யூனியன் கவுன்சிலர் மற்றும் 8 வார்டு உறுப்பினர்கள் கொண்ட ஊராட்சி இது. வன்னியர் சமூகம் பெரும்பான்மையாக உள்ளார்கள், இங்கு  பா.ம.க வலுவான கட்சி. ஊராட்சித் தலைவரும், யூனியன் கவுன்சிலரும் பா ம க கட்சியை சேர்ந்தவர்கள். விவசாயம் பிரதான தொழில், இதை பின்தங்கிய கிராமம் என சொல்ல இயலாது. வறனுறா பவானியாற்றின் கூழாங்கல் மேவிய கரையில்மகிழீஸ்வரர் அருளில்  உள்ள வயல்வெளிகள் சூழ்ந்த அழகிய கிராமம் இந்த பெருந்தலையூர். இங்கு 75 ஆண்டு பழமையான நீர் பாலம் (aqueduct), ஒன்று உள்ளது  இப்போது செயல்பாட்டில் இல்லை.   இங்கு யான் அறக்கட்டளையின் அறங்காவலர் பிரதீப்பின் உறவினர்கள் உள்ளார்கள், அவர் இணைந்து பணியாற்றும் கன்னிமார் அறக்கட்டளை என்கிற கோயில் சார்ந்த வலுவான அமைப்பும் உள்ளது. அறக் கல்வி மாணவர்களுடன் இணைந்து ஒரு கிராமத்தை முன்மாதிரியாக மாற்றுவது என்கிற திட்டத்தை நான் முன் வைத்ததும் பிரதீப் இதை பெருந்தலையூரில் செயல்படுத்த அழைப்பு விடுத்தார். அப்படித்தான் இந்த கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊராட்சியில் பெருந்தலையூர், வெங்கமேடு, செரையாம்பாளையம், மேற்கு குட்டிபாளையம் என 4 பகுதிகள் உள்ளன. இங்கு தேர்தல் பணிகளை செய்வது என எனக்குள் முதலிலேயே எனக்கு எண்ணம் இருந்தது

 

பெருந்தலையூரில் உள்ள செரையாம்பாளையம் என்கிற சிறிய பகுதியில்  முதலில் 10 நாட்கள் கழிவறை தூய்மை செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவருவது, பழுப்பேறிய சுவர்களுக்கு வண்ணம் அடிப்பது, குப்பைகளை அகற்றி நிரந்தர குப்பை மேலாண்மை அமைப்பது, மண்டிக் கிடைக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது, குடிகாரர்களின் கூடாரமாக உள்ள இடுகாட்டை தூய்மை செய்வது  என ஊராட்சியுடன் இணைந்து பணியை  துவங்கினோம். மெல்ல மெல்ல பொது மக்களின் ஆதரவு மாணவர்களுக்கு கிடைத்தது, அங்கு வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்து அலுவலக பெயர் பலகை வைத்தோம். அனு ஸ்ரீ அங்கு பள்ளி மாணவர்களுக்கு இலவச டியூஷன் எடுக்க துவங்கினார். ஒரு நட்பு சூழலுக்குள் இந்த பகுதி வந்தது, இது எங்கள் திட்டத்தின் முதல் படி, முதல் வெற்றி.

இந்த சமயத்தில் நாம் தேர்தல் பணிகளில் ஈடுபடப் போகிறோம் என்பது மாணவர்களுக்கு தெரியாது. நான் கடந்த 15 ஆண்டுகளாக நண்பர்களுடன் இணைந்து சிறிய அளவில் இத்தகைய பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். இப்போது ஒரு மாணவர்கள் குழுவும் வலுவான நிதி ஆதாரம் கொண்ட அறக்கட்டளையும் உள்ளூரில் சில வலுவான தொடர்புகளும் கிட்டி உள்ளன, இதை தவற விடுவதில்லை என தீர்மானித்தேன்மார்ச் முதல் வாரத்தில் மாணவர்களை கூட்டி ஜனநாயக மதிப்புயர்த்தும் பணிகளை மாணவர்கள் மேற்கொள்ள கோரிக்கை விடுத்தேன், மாணவர்கள் சம்மதித்தனர். இப்படித்தான் இந்த திட்டம் உருவானது. 2024 மக்களவை தேர்தலில் வாக்களிக்கப் பணம் பெறாத கிராமம் பெருந்தலையூர் என்கிற திட்டம்.      ஜெயமோகனின்ஜனநாயக சோதனை சாலையில்”  நூலின் தாக்கம் எனக்குள்ளும் சில மாண்வர்களுக்குள்ளும் வலுவாக இருந்ததுஎங்கள் பிரச்சாரத்தின் தலைப்புமக்கள் எத்தகையவரோ ஆள்பவர் அத்தகையவர்(The people will get the government what they deserve).      

சராசரியாக 14 லட்சம் வாக்காளர்களை கொண்ட ஒரு மக்களவைத் தொகுதி என்பது பெரிய கட்சிகளுக்கே ஒரு பிரச்சாரச் சுமை. அரசியல் கட்சிகளால் ஒரு வாக்காளரை ஒருமுறை தான் சந்திக்க இயலும் ஆகவே அவர்கள் பிரச்சாரமும் ஒரு வரியாகத் தான் இருக்க முடியும். ஆனால் இது 3000 வாக்குகள் கொண்ட சிறிய கிராமம் என்பதால் மாணவர்கள் குறைந்தது 5 முறை ஒரு வாக்காளரை சந்திப்பார்கள், ஒரு வீட்டுக்கு குறைந்தது 3 முறை செல்வார்கள், எனவே சற்று விரிவான விளக்கங்கள் கொண்ட பிரச்சாரத்தை நாங்கள் செய்ய இயலும். வீடுவீடாக பிரச்சாரத்துக்கு சென்றால் அவர்களின் எதிர்வாதம் என்னவாக இருக்கும் என்பது எங்களுக்கு முன்பே தெரியும். இது அன்றைய  ரஜினிகாந்த் முதல் இன்றைய  விஜய் ஆண்டனி வரை உருவாக்கிய லஞ்ச ஆதரவு நிலைப்பாடு. அவர்கள் மக்களை விசிறிக் கொண்டே இருக்க வேண்டும், அப்போது தான் விசிறிகள் எண்ணிக்கை பெருகும்.ஊடகங்களும் இதை மறைமுகமாக ஆதரிக்கிறது. இதன் பலனாக இப்போது தமிழகத்தில்  கிட்டத்தட்ட 75% மக்கள் வாக்குக்கு லஞ்சம் பெறும் ஊழல் வாதிகளாக திகழ்கிறார்கள். இது பிற மாநிலத்துக்கும் பரவுகிறது.    

  •  இது எனது பணம் திரும்ப வருகிறது அதை பெறுவது தவறில்லை 
  •  எல்லோரும் தான் வாங்குகிறார்கள், நான் வாங்கவில்லை என்றால் இன்னொருவர் வாங்குவர் 
  •  நான் வாங்கவில்லை என்றால் அரசியல் முகவர் இதை வைத்துக் கொள்வார் 
  •  நான் அனைத்து கட்சிகளிடமும் பணம் பெறுவேன் ஆனால் சரியானவருக்கு தான் வாக்களிப்பேன் 
  • பணம் வாங்காதே என எங்களிடம் சொல்வதற்கு பதில் கொடுக்காதே என கட்சிகளிடம் சொல்லி நிறுத்துங்கள் 

என்பது தான் மக்கள் குரல் 

  • இது கொள்ளைப்  பணம், இதில் பங்குபெறுவது தீது, பணம் பெற்றால் நாம் தார்மீகம் இழப்போம் 
  • பணம் பெறுபவர் அல்ல, பெறாதவர் தான் மதிப்பு மிக்கவர், நம் முன் மாதிரி. பணம் பெறுவது அவமானம்
  • என்ன ஆனாலும் பணம் பெற மாட்டோம் என முடிவெடுக்கவேண்டும். இந்த ஊழல் வளையத்தை அப்போது தான் அறுக்க முடியும், இதை அறிந்து கொண்டு கட்சிகள் முகவர்களை அகற்றும் 
  • வாக்களித்தல் ஒரு புனிதமான சடங்கு இப்படி அனைவரிடமும் பணம் பெறுதல் நம்மை கறைபடுத்தும் செயல், பணம் பெறுவதால் நாமும் ஏமாற்றுக்காரர் ஆகிறோம்
  • இது இரு முனைகளிலும் நடக்கும் பிரச்சாரம், கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளோம். மக்கள் மாறுவதே பிரதானம்.    

என்பது எங்கள் பதில்

இது எதுவும் மக்கள் அறியாதது அல்ல. கைநீட்ட கூட்டாக ஏற்படுத்திக் கொண்ட சாக்குப் போக்கு  இது. இங்கு ஒரு அரசியல் அறிவியல் அவதானம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். எல்லா கட்சி முகவர்களும் கட்சி கொடுக்கும் வினியோக பணத்தில் 20 சதம் வரை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் இப்படி எடுத்துக் கொள்ள இயலாது என பொதுவெளியில் ஒரு கருத்து உள்ளது. பணம் வாங்கும் பொதுமக்கள் எண்ணிக்கையை நூறு சதம் எனக் கூறுவார்கள், ஆனால் கால்வாசி பேர் இன்றும் வாக்குக்கு பணம் பெறுவது இல்லை. இது முகவர்களின் கையிருப்புக்கு செல்கிறது. இது அனைத்து கட்சி பண விநியோக முகவர்களும் கூட்டாக ஏற்படுத்திய கருத்துரு. அப்போது தான் அவர்கள் தொழில் நடக்கும். இது போக பண விநியோகம் செய்வதாலேயே இவர்களுக்கு அதிகாரமும் சில்லறை மரியாதையும் கிட்டுகிறது, இந்த பண விநியோக முகமையை எடுக்க கட்சிக்காரர்கள் இடையே கடும் போட்டி உள்ளதுதேர்தலுக்கு தேர்தல் இந்த முகவர்கள் கட்சி மாறுவார்கள். இவர்களுக்கு கீழ் பெட்டிக் கடை வைத்துள்ள பகுதி நேர முகவர்களும் உண்டு. தமிழகத்தில் இவர்களால் ஆன நரம்பு மண்டலம் ஒன்று உள்ளது. இந்த அரசியல் பண விநியோக முகவர்கள் இந்தியாவின் சாபக்கேடு. இப்படி பணம் பெரும் வாக்காளர்கள் இந்தியாவின் வெட்கக் கேடு.     

அரசியல் காட்சிகளை விட முன்பே பிரச்சாரத்தைத் துவங்க வேண்டும் என்றும் அவர்களை விட தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் திட்டமிட்டோம். இது எங்கள் திட்டப் பணிகள் பட்டியல் 

  1. நேரில் துண்டறிக்கை, ஒன்றரை மாத தொடர் பிரச்சாரம் 
  2.  ஆட்டோவில் அறிவிப்புகள்
  3. அனைத்து  இந்த வீட்டில் ஓட்டுக்கு லஞ்சம் பெற மாட்டோம் என சுவரொட்டிகள்
  4. தெரு முனைகளில் இந்தப் பகுதியில் வாக்களிக்க பணம் பெறமாட்டோம் என 15 இரும்பாலான அறிவிப்பு பலகைகள்,
  5. வாக்களிக்க பணம் பெறமாட்டேன் என மக்களிடம் உறுதிமொழி கையொப்பம்,
  6. நேர்மையான தேர்தலை  நோக்கி பெருந்தலையூர் என்கிற இரும்பாலான நுழைவாயில்.
  7. ஊரை இணைக்கும் சாலைகளில் வாக்களிக்க பணம் பெறுவது அவமானம் என எழுதுதல்
  8. பிரதான இடங்களில் நம் பிரச்சார வாசகம் எழுதிய பெரிய அளவில் ஆன 8 பிளக்ஸ்
  9. மின் கம்பங்களில் 25 சிறிய அறிவிப்பு பலகைகள்
  10. அரசியல் சார்பற்ற உள்ளூர் மக்களை தேர்வு செய்து வாக்குக்கு பணம் பெறமாட்டேன் என அறிவிக்கும் 5 ஆள் உயர கட் அவுட்  
  11. மக்களிடம் இணக்கத்தை உருவாக்க சிறு சிறு நிகழ்வுகள் நடத்துவது  
  12. உள்ளூர் தலைவர்கள் உடன் அனைத்து கட்சி கூட்டம் 
  13. அனைத்து முக்கிய வேட்பாளர்களையும் சந்தித்து வேண்டுகோள் கடிதம் கொடுப்பது 
  14. வாங்கிய பணத்தை திரும்ப செலுத்த பொது இடத்தில் உண்டியல் வைப்பது    

மேலே கண்ட அனைத்தையும் உரிய காலத்தில் செய்து முடித்தோம். முதலில் ஒரு திரைப்படம் திரையிடுவதாக செரையாம்பாளையத்தில் ஊர் கூட்டத்தை கூட்டினோம். சுமார் 70, 80 பேர் வந்திருந்தனர். அங்கு தான் முதலில் நாங்கள் ஊரை தூய்மை செய்ய மட்டும் வரவில்லை எங்கள் பிரதான நோக்கம் மக்களை நேர்வழிப் படுத்துத்துவது தான் என மாணவர்கள் அறிவித்தார்கள். வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் யாரும் பணம் பெறாமல் வாக்களிக்க வேண்டும் எனவும் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களை பற்றியும் நாமே முயற்சி எடுத்து அறிந்து கொள்ள வேண்டும் எனவும் இந்த இரண்டு கொள்கைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்ய இருக்கிறோம் எனவும் அறிவித்தோம். “The Bucket list ” திரைப்படம் முடிந்தது.  அங்கேயே சலசலப்பு ஏற்பட்டது, பணம் பெறுவோர் பெறாதோர் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆனாலும் எதிர்பார்த்த விளைவு இது. ஊரை சமாதானம் செய்து கலைந்து செல்ல வைத்தோம்.

துவக்கத்தில் இருந்தே நாங்கள் ஊர்மக்கள் முன் பணிந்து நடந்து கொள்ளவில்லை, தம்மை தாழ்த்தி மக்களை உயர்த்தும் ஒரு சமூக சேவையாளனின் “சிறியோரை வியத்தல்”  என்கிற சராணாகதி வழிமுறையை கைக்கொள்ளவில்லை. மக்களின் குறைகளை சுட்டிக் காட்டி நேர்வழியில் நடக்க வலியுறுத்தினோம். எங்கள் மதிப்பை மக்கள் ஈட்ட வேண்டும் என்கிற நெருக்கடியை அவர்களுக்கு உருவாக்கினோம். துண்டறிக்கை விநியோகம்  துவங்கிய நாளில் இருந்தே நம்பிக்கை துளிர்க்கத் துவங்கியது இறுதி கட்டத்தில் அது வலுவாக நின்றது. பொது மக்களிடம் பரவலான ஆதரவு இருந்தது. பணி முடியும் வரை எவ்வித நேரடி மறைமுக தடையோ அச்சுறுத்தலோ எம்முனையிலும் இல்லை. நம் மாணவர்களை ஊர்மக்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளாக பாவித்தனர்.நாட்கள் செல்ல செல்ல ஒரு உணர்வு ரீதியான பிணைப்பு இரு தரப்புக்கும் இடையே உருவானது

வீடு வீடாக ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் மக்களின் சில மனநிலைகள் தெரிந்தது. எப்போதும் பணம் வாங்கியதில்லை என ஒரு 10 சதம் கூறினார்கள். நீங்கள் கூறுவதால் இந்த தேர்தலில் நாங்கள் பணம் வாங்க மாட்டோம் என 95 % கூறினார்கள். மொத்தமுள்ள 550 வீடுகளில் சுமார் 500 வீடுகளில் ஸ்டிக்கர் ஓட்ட அனுமத்தித்தனர்சுமார் 15 வீடுகளில் நாங்கள் பணம் வாங்கப் போகிறோம் ஆகவே இங்கே ஓட்டாதீர்கள் என சிலரும், நாங்கள் தான் பணம் விநியோகம் செய்யப் போகிறோம் என பெருமையாக சிலரும் கூறினார்கள். 20 நாட்கள் இடைவெளியில் ஒவ்வொரு வீட்டிலும் இருமுறை ஸ்டிக்கர் ஒட்டினோம்

வாக்களிக்கப் பணம் பெற மாட்டோம் என்கிற கொள்கையை முன்வைத்து ஒரு கோலப் போட்டி நடத்தினோம். முன்பு ஒரு வீட்டில் ஒரு பெண் தான் பணம் பெறப் போவதாக ஸ்டிக்கர் ஒட்ட அனுமதிக்கவில்லை. ஆனால் அவர் ஒரு கோலம் வரைதல் ஆர்வலர் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வென்றிருக்கிறார். பல்வேறு விதமாக கோலங்கள் வரைந்து ஒரு கையேடு உருவாக்கி இருக்கிறார். அவருக்கு இதில் பங்கு பெற பெரு விருப்பம், ஆனால் வாக்குக்கு பணம் பெறுதல் சரி என்கிற கொள்கையில் உறுதியாக இருந்தார். நாளாக ஆக எல்லோரும் பங்குபெற பெயர் அளித்தனர் .அவர் தெருவில் பல பெண்கள் பெயர் பதிவு செய்து விட்டனர். அவரது உறுதி குலையத் துவங்கியது. குறித்த நாள் நெருங்கியதும் நம் மாணவர்கள் மீண்டும் அவரிடம் வேண்டுகோள் விடுத்தனர், கலை வென்றதுஸ்டிக்கர் ஓட்ட அனுமதித்தார், அவர் பெயர் அளித்தார் போட்டியில் பங்கு பெற்றார் ஆறுதல் பரிசும் பெற்றார். இப்போது மாணவிகளின் சகாக்களில் அவரும் ஒருவர்.

உள்ளூர் திருவிழாவை ஒட்டி மூன்று பகுதிகளில் இந்த போட்டி  நடத்தினோம். பெருவாரியாக கலந்துகொண்டு நம் கொள்கையை விளக்கி கோலமிட்டனர், அப்போதே நம் முயற்சி வெற்றி என்கிற நம்பிக்கை மாணவர்களுக்கு வந்துவிட்டது. பரிசளிப்புக் கூட்டத்தில் மீண்டும் நம் பிரச்சாரம். பல்வேறு முறைகளில் நம் பிரச்சாரம் திரும்பத் திரும்ப நிகழ்வதால் மக்களிடையே ஒரு சலிப்பை உருவாக்கிவிட்டது. மாணவர்களின் குழு பிரச்சாரத்தை மக்கள்  திரும்ப பாடி கேலி செய்ய துவங்கினர். சில பாட்டிகள் செல்லமாக சண்டைக்கு வந்தனர். போனால் போகட்டும் என்று  மூன்று நாட்கள் மக்களுக்கு ஓய்வு அளித்தோம். மார்ச் 8 முதல் ஏப்ரல் 18 வரை நிகழ்ந்த பிரச்சாரத்தில் இந்த மூன்று நாட்கள் மட்டும் தான் ஓய்வு.

அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவர் உட்பட ஆச்சர்யப்படத் தக்க வகையில் அனைத்து கட்சிகளும் பங்கேற்றனர். இவர்கள் அதிகாரம் அற்ற உள்ளூர் பிரதிநிதிகள், மாவட்ட தலைமையின் கீழ் இயங்குபவர்கள். சுமார் 50 அரசியல்வாதிகள் வந்திருந்தனர். ஒரு கட்சியைத் தவிர அனைத்து கட்சிகளும் இது நடைமுறை சாத்தியம் இல்லை என்றனர். குறைந்தது மூன்று தேர்தல்களில் பணியாற்றினால் தான் இது சத்தியம், மக்கள் மெல்ல மெல்ல தான் மாறுவார்கள் என்றனர். பணம் வழங்கவில்லை என்றால் எங்களை சந்தேகப்படுவார்கள் என்றனர்.

அடிப்படை அலகில் பணியாற்றும் அரசியல் கட்சிக்காரர்களின்  அரசியல் அறிவு மீதும்அவர்கள் முன்வைக்கும் மக்களின் மனப் போக்கின் கணிப்பு மீதும், கட்சிப் பணிகளில் அவர்களின் தீவிரம் மீதும் முன்பு எனக்கு ஒரு வியப்பு இருந்தது. ஆனால் இப்போது இல்லை, இது ஒரு மாயை.ஒரு தெருவில் யார் யார் யாருக்கு வாக்களிப்பார்கள் எனபதை இவர்கள் கணித்து விடுவார்கள் என பொதுவாக கூறப் படுவதை நாம் அறிவோம். உண்மையில் அப்படி கணிக்கும் திறன் கொண்ட ஒருவரை நாம் யாரும் பார்த்திருக்க மாட்டோம். அப்படி அடித்த தள தொண்டர்களால் இயலாது, தங்கள் இருப்பை தக்க வைக்க இப்படி ஒரு திறன் உள்ளதாக கூட்டாக பரப்புகிறார்கள்.   அவர்கள் அறியாமையின் முடக்கில் இருக்கிறார்கள், கால மாற்றம் பற்றி எந்த ஒரு புரிதலும் இல்லை, ஒருவருக்கு ஒருவர் தாம் அறிந்த பழைய தகல்வளை பரிமாறி  “அரசியல் என்பது விவசாயம் போல ……” என துவங்கும் பழைய சொலவடைகளை உதிர்த்துக் கொண்டு ஒரு கூட்டு மயக்கத்தில் இருக்கிறார்கள். அனுபவத்தை அறிவாக்கும் திறன் இந்த கடைநிலை அரசியல் சக்திகளுக்கு  இல்லை.இவர்களால் தலைமைக்கு எவ்வித அறிவு லாபமும் இல்லை. இவர்களின் தீவிரமும் படு மட்டு. சோம்பி இருப்பவர்கள் தான் அரசியலுக்கு வருகிறார்கள். எந்த கட்சியின் பிரச்சாரமும் இங்கு தீவிரமாக இல்லை. இவர்களிடம் இளைஞர்கள் இல்லை, இளம் பெண்கள் இல்லை.பெயரளவுக்கு நோட்டீஸ் கொடுக்கிறார்கள், மாவட்டத் தலைமையின் வாகனம் வந்தால் மட்டும் உடன் வருகிறார்கள்கடைநிலையால் தலைமைக்கு பலன் என்கிற நிலை மாறி தலைமையால் கடைமட்டத்துக்கு  மட்டுமே பலன் என்கிற நிலையில் அரசியல் கட்சிகளின் கட்டமைப்பு  உள்ளது போல தெரிகிறது. விரைவில் இவர்கள் வெற்றுச் சுமை என்பதை உணர்ந்து விருப்ப ஓய்வு திட்டத்தை கட்சிகள் அறிவிக்கும், டிஜிட்டல் பிரிவு இவர்களை பதிலீடு செய்யும்.  

மேற்கு குட்டிபாளையம் பகுதியில் ஒரு மௌன ஊர்வலத்தை துவக்கி பெருந்தலையூரில் முடித்தோம். இதற்கு மக்களிடம் ஓரளவு ஆதரவு இருந்தது. முடியும் இடத்தில் வந்து 50 பெண்கள் பங்கேற்றனர்இந்த குட்டிப் பாளையம் பொருளியல் ரீதியாக சற்று பின் தங்கிய பகுதி. இங்கு நுழைந்த  முதல்  நாள் எதிர்ப்பு இருந்ததுநம் மாணவிகளை பிள்ளை பிடிப்பவர்கள் என எண்ணி தடுத்தனர். அப்படி ஒரு சம்பவம் சில ஆண்டுகளுக்கு முன் இங்கு நிகழ்ந்ததாக கூறினார்கள். செரையாம்பாளையத்தில் சாரல் பொது நல  இயக்கம் எங்களுக்கு உதவியது என்றால் இங்கு திருவள்ளுவர் கலை இயக்கம் எங்களுக்கு உதவியது. பின்னர் உண்மை அறிந்த மக்கள் மாணவர்களை வரவேற்றனர். வீடுகளில் அனுமதித்து ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டனர். இங்கு ரூபாய் எட்டாயிரம் மதிப்பில் ஒரு 2000 லிட் தண்ணீர் டேங்க் வாங்கித் தர வேண்டுகோள் விடுத்தனர். ஊர் கூட்டம் கூட்டி உறுதியளித்தோம், 1000 லிட் டேங்க் ஒன்றை தற்காலிக அடிப்படையில் வாங்கி பார்வைக்கு வைத்தோம்பதிலுக்கு மக்கள் அளித்த வாக்கில் உறுதியாக நிற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தோம், தேர்தல் முடிந்ததும் 2000 லிட் டேங்க் அமைப்போம் என உறுதி அளித்தோம்

கூட்டத்தில் இவ்வாறு தொடர் பிரச்சாரம் செய்து நல திட்டங்களையும் செயல் படுத்துவதில்   உங்கள் அறக்கட்டளைக்கு என்ன லாபம் என சபையில் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர்  மாணவர் ஒருங்கிணைப்பாளர் அனுஸ்ரீ- யிடம் கேள்வி எழுப்பினார். “பொதுவாக எல்லா செயலிலும் லாபம் கருதி உங்களை போல செயல்படுபவர் பெரும்பான்மை ஆனாலும் அப்படி எவ்வித லாபமும் இன்றி சமூக அக்கறையுடன் சிலர்  செயல் படுகிறார்கள்  அந்த பட்டியலில் தான் நாங்கள் உள்ளோம். பெருந்தலையூர் ஒரு முன் மாதிரியாக நிற்க வேண்டும் என்கிற நோக்கம் மட்டும் தான் எங்களுக்கு உள்ளதுஎன துளியும் தாமதிக்காமல் பதில் அளித்தார். மக்களின் ஏகோபித்த கரகோஷம் அனு ஸ்ரீ க்கு  கிட்டியது. அப்போதே வெற்றிப்  படியில் ஒரு கால் வைத்துவிட்டோம் என உணர்ந்தோம். இப்போது 2000 லிட் டேங்க் அமைக்கும் பணி துவங்கி விட்டது. உறுதியளித்ததிற்கும் மேலே சில நல திட்டங்களை இங்கு செய்வதாக உத்தேசம்.     

பெருந்தலையூரும் பி. மேட்டுப் பாளையம் தேர்வு நிலை பேரூராட்சியும் அருகருகே உள்ளது. “இந்தப் பகுதியில் வாக்களிக்க பணம் பெற மாட்டோம்என்கிற அறிவிப்பு பலகை ஒன்றை எல்லை தெரியாமல் பி மேட்டுப் பாளையம் பகுதியில் நட்டு விட்டோம். அங்கிருந்து புறப்பட்டு வந்த பெண்கள் நம் மாணவிகளை பார்த்து இதை அகற்றி விடுமாறும், இதை பார்த்து பணம் தர வராமல் போய் விடுவார்கள் என சண்டைக்கு வந்தனர். இப்போதுவரை மாணவர்களுக்கும் அவர்களுக்கும் நல்லுறவு இல்லை. தேர்தலில் உறுதியளித்தபடி பெரும்பாலான மக்கள் பணம் பெறாமல் வாக்களித்தால் என்கிற 22 அடி உயர இரும்பாலான அலங்கார நுழைவை அமைத்து தருகிறோம் என மக்களிடம் கூறினோம்முதல் கட்டமாக 12 அடியில்  “2024  நேர்மையான தேர்தலை நோக்கி பெருந்தலையூர்என குறிப்பிட்டு அலங்கார நுழைவின் ஒரு பகுதியை பார்வைக்கு நட்டு வைத்தோம். இப்போது இந்த அலங்கார நுழைவை பூர்த்தி செய்ய உள்ளோம். என்ன வாசகம் எழுதுவது என்பது பரிசீலனையில் உள்ளது.

நான் வாக்களிக்க பணம் பெறமாட்டேன் போன்ற வாசகங்கள் அடங்கிய உறுதிமொழி கடிதத்தில் கையெழுத்து இட்டு தருமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தோம். பெரும் ஆச்சர்யம் நிகழ்ந்தது. இங்குள்ள சுமார் 600 வீடுகளில் 500 வீடுகளுக்கு மேல் கையெழுத்து இட தயார் என கூறினார்கள். நிகழ்வை சற்று ஆறப் போட்டு கட்சிக் காரர்கள் பணம் வழங்க வரும் நாளுக்கு முந்தைய நாட்களில் அதாவது ஏப்ரல் 15 வாக்கில் கையெழுத்து வாங்குவது என முடிவு செய்தோம். எதிர் பார்த்தபடி 20 சத மக்கள் தயக்கம் காட்டினார்கள். சிலர் பணம் பெற முடிவு செய்து விட்டார்கள் கையெழுத்து செய்ய மறுத்தது விட்டனர், சிலர் கையெழுத்து செய்ய பொதுவாக அஞ்சினார்கள், சில குடும்பங்களில் உங்களுக்காக ஒருவர் மட்டும் கையெழுத்து செய்கிறோம் என கணவனோ மனைவியோ கையெழுத்து செய்தனர். ஒருவர் மட்டும் தனது பங்குத் தொகையை விட்டுத் தருவதாக கூறினார்கள். ஆனாலும் பெருவாரியாக கையெழுத்து செய்ய முன் வந்தனர்

மாணவர்களின் தேர்வு தொடங்கி விட்டது அவர்களின் வருகை குறைந்து வந்தது. எஞ்சிய மாணவர்கள் குழு பாதி வீடுகளில் கையெழுத்து பெற்றது. அப்படி வீடுவீடாக கையெழுத்து பெறும் அதே சமயம் கட்சிக்காரர்கள் பின்னாலேயே பணப் பையுடன் வீடுவீடாக படியேறினார்கள். ஒரு மறைமுக யுத்தம் இரு தரப்புக்கும் இடையே நிகழ்ந்தது. இப்போது விசாரித்ததில் பெரும்பாலும் பணம் பெற மறுத்துவிட்டார்கள் என அறிந்து கொண்டோம். தேர்தலுக்கு 2 நாட்கள் முன் வழக்கமான பிரச்சாரத்தில் இருந்தபோது 20 வீடுகள் கொண்ட ஒரு தெருவில் அனைவரும் பணம் பெற்று விட்டனர் என்கிற தகவல் மாணவர்களை சற்று சோர்வுற செய்தது, ஆனால் அதே சமயம் மேற்கு குட்டிபாளையத்தில் பணம் வழங்க வந்தவர்களை திருப்பி அனுப்பி விட்டனர் என்கிற செய்தி உற்சாகத்தை அளித்தது. விசை கொண்டு மாணவர்கள் பணியாற்றினர். பணம் பெற்றதாக சந்தேகப் படும் பகுதி உட்பட அனைத்து பகுதிகளிலும் பொதுவாக ஒரு அறிவிப்பு செய்து கோவில்களில் ஒரு உண்டியல் வீதம்வைத்தோம், பணம் பெற்றவர் அதை அங்கு இடலாம். ஒருவர் பெற்ற பணத்தை திரும்ப கட்சிக்காரரிடம் ஒப்படைத்தார். ஆனால் உண்டியலில் பணம் விழவில்லை.   

சாமான்ய மக்கள் சக்தி பெறுவதும் இந்நாட்டு மன்னர் என  உணர்வதும் இந்த தேர்தல் நாட்களில்தான். இறுதி நகர்வாக பெருந்தலையூரில் வாழும்  அரசியல் சார்பற்ற ஐந்து சாமான்ய வாக்காளர்களை தெரிவு செய்து அவர்களுக்கு ஊர் நடுவே ஆள் உயர உருவப் படம்  வைத்தோம். “நான் சுய மதிப்பு மிக்கவள், எனது வாக்கு மதிப்பு மிக்கது அது விற்பனைக்கு அல்லஎன இவர்கள் கூறுகிறார்கள்இது எதிர்பார்த்ததை விட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தங்களில் ஒருவர் இப்படி நிமிர்ந்து நின்று கூறுவது ஜனநாயகத்தின் மதிப்பை உயர்த்துகிறது.  இவர்களின் சொல்லுக்கு தாக்கம் இருந்தது, அது உடனேயே பிரதிபலித்தது. இந்த ஐந்து பேரும் மக்கள் எவ்வாறு  வாக்களிக்கிறார்கள்  என்பதை கண்காணிக்கும் நடுவர் குழுவில் உள்ளார்கள். முக்கிய வேட்பாளர்கள் அனைவரையும் சந்தித்து நம் கோரிக்கையை வைப்பது என துவங்கினோம். பாஜக வேட்பாளர் திரு முருகானந்தம், திமுக /கம்யூனிஸ்ட் வேட்பாளர் திரு சுப்பராயன், அதிமுக வேட்பாளர் திரு அருணாச்சலம் மற்றும் நாம் தமிழர் வேட்பாளர் திருமதி சீதாலட்சுமி ஆகியோரை மாணவர்கள் சந்தித்தனர்கொள்கையளவில் வேட்பாளர்கள் ஆதரவு அளித்தார்கள்.இவர்களை சந்திக்க பாரியும் ராஜமாணிக்கமும் உதவினார்கள். மாவட்ட ஆட்சியரையும் உதவி தேர்தல் அதிகாரியையும் சந்தித்து நம் பிரச்சாரம் பற்றி விளக்கினோம்இதற்கு ராம் குமார் உதவினார். அந்தியூர் உதவி தேர்தல் அலுவலரிடம் கட்சிகளுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை எங்கள் அமைப்புக்கு வேண்டாம் என வேண்டுகோள் கடிதம் அளித்தோம். எங்களுக்கு பல தளர்வுகளை அமைத்து பிரச்சார விளம்பரங்களை நிரந்தரமாக பல இடங்களில் பொருத்திக் கொள்ள அனுமதி அளித்தார். ஒரு நாள் தேர்தல் கமிஷன் அதிகாரிகளும் எங்களுடன் பிரச்சாரத்துக்கு வந்து எங்கள் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். எங்கள் முயற்சி வெற்றி பெற இந்த சிறப்பு அனுமதியும் ஒரு காரணி

ஊடகத்தை பொறுத்தவரை எங்கள் முயற்சிக்கு சிறப்பான ஆதரவை அளித்தது. இந்த முயற்சிக்கு செய்தியாளர்களுக்கு பணம் வழங்குவது இல்லை என்பது முதலிலேயே தெரிவித்தோம். அதனால் உயர் பொறுப்பில் உள்ள திறன்வாய்ந்த நிருபர்கள் மட்டும் எங்களை நோக்கி வந்தனர்காலைக் கதிர், தின மணி, ஆங்கில தமிழ் ஹிந்து, தின மலர் ஆகியவை பெரிய அளவில் வெளியிட்டன. தினமலர் கவுந்தப்பாடி  பாமர செய்தியாளர் மூலம்  இதை ஒரு கேலியாக முதலில் செய்தி வெளியிட்டது, மறுப்புக் கடிதம் கொடுத்தவுடன் அசலான நிருபர் எங்களை அணுகினார், பின்னர் இருமுறை சரியான ரீதியில் செய்தி வெளியிட்டு எங்களுக்கு  தினமலர் ஆதரவு அளித்தது.   கிட்டத்தட்ட அனைத்து காட்சி ஊடக அலைவரிசைகளை நிகழ்விடத்துக்கு வந்து மாணவர்களை சந்தித்து பேட்டி கண்டு பிரச்சாரத்தை பதிவு செய்தன, மக்களிடமும் பேட்டி எடுத்தன. ஆனால் அவர்கள் மட்டும் அறிந்த காரணத்தால் எந்த காட்சி ஊடகமும் இதை வெளியிடவில்லை.    முத்துக் குமரன் போன்ற இன்ஸ்ட்டா பிரபலங்களும் ஆதரவு அளித்தார்கள். தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பே நமது ஊர் கவனிக்கப்பட்டு விட்டது என்கிற உணர்வை பெருந்தலையூர் மக்கள் அடைந்து விட்டனர். இதில் ஊராட்சி  பொறுப்பில் இருப்போருக்கு சற்று கூடுதல் பெருமை கிடைத்தது. ஆகவே பிரச்சார ஆதரவு அலை முன்பே எங்களை நோக்கி திரும்பத் துவங்கி விட்டதுஎங்கள் முயற்சி வெற்றி பெற இந்த செய்தி ஊடக ஆதரவும் ஒரு காரணி

தேர்தலுக்கு மறுநாள் 15 மாணவ மாணவிகளுடன் கோவை பாலு பண்ணை இல்லம் சென்றேன், லோகமாதவியும் வந்திருந்தார். அங்கு மாணவர்கள் தங்கள் பிரச்சார அனுபவங்களை சொன்னார்கள். ஊரில் பணியாற்றும் முன்  முதலில் தங்கள் வீடுகளில் பணம் பெறுவதை நிறுத்த  வேண்டும் என முடிவு எடுத்தோம். சில வீடுகளை தவிர அனைவரும் ஒப்புக்கொண்டனர். ஆனால் இது எளிதாக இருக்கவில்லை. பெரும்பாலான மாணவர்கள் கலங்கிப் போயினர், கிட்டத்தட்ட வாழ்வின் அசல் எதிர்மறை அனுபவங்களை சிலர் முதல்முறை சந்தித்தனர். வாங்க மாட்டோம் என பிள்ளைகளிடம் உறுதியளித்து பின்னர் ரகசியமாக சிலர் வாங்கினார். திரைப்படத்தில் காட்டுவது போல தார்மீகமாக உணர்ச்சிகரமாக பிள்ளைகளுக்கு ஆதரவாக பேசிவிட்டு பின்னர் சிலர் பணம் பெற்றனர். இந்த பெற்றோர் மாணவர்களின் நன் மதிப்பை இழந்தனர். சில வீடுகளில் பிள்ளைகள் பெற்றோர் உறவு என்றென்றைக்குமாக சிதைந்தது. இந்த விஷயத்தில் சில மாணவர்கள் தம்மை பெற்றோர் கைவிட்டதாக உணர்கிறார்கள். இதுபோன்ற நடத்தையால் பெற்றோர் மீது பிள்ளைகள்  கொண்டுள்ள மதிப்பு பெரிய அளவில் தேய்ந்து போகிறது, சமூகமும் நம் பெற்றோர் போலத்தான் என ஒருவன் உணரத் துவங்குகிறான்

குழந்தை வளர்ப்பு பற்றி நம்மிடையே பெரிதும் பேசப் படுகிறது, குழந்தைகளை ஒருமையில் அழைக்கக் கூடாது, செல்லமாக கூட கண்டிக்கக் கூடாது போல பல வழிகாட்டுதல்கள். ஆனால் பெற்றோர் நடத்தை இங்கு பேசப் படுவதே இல்லை. அளித்த வாக்கு படி நடக்கவில்லை என்றால் பிள்ளைகள் அடையும் ஏமாற்றமும் அது இழைக்கும் வடுவும் மிக ஆழமானது. எஞ்சியிருக்கும் 50 ஆண்டுகள் உறவு  இந்த சில நடத்தை தீர்மானிக்கும். ஆனால் பல மாணவர்கள் வீடுகளில் வெற்றிக் கதை உள்ளது, பணம் வினியோக முகவராக  இருந்த ஒரு தந்தை அதை கைவிட்டார், பணம் பெற்றவர் அதை திருப்பி அளித்து மகனிடம் மன்னிப்பு கோரினார். இந்த கூடுகை ஒருவகையில் தீவிர இலக்கிய பக்கங்களை வாசிப்பது போல இருந்தது. உச்சி வெய்யிலில் கல் தடத்தில் கோயிலை சுற்றுவது போல. கால் சுட்டாலும் இறுதியில் வரம் கிடைத்தது. தனி நபராக ஒரு வீட்டை மாற்றுவதை விட எளிது கூட்டாக வீடுவீடாக சென்று ஒரு பகுதியை மாற்றுவது. எண்ணிக்கைக்கும் தார்மீகத்துக்கும் நேரடி தொடர்பு உள்ளது. தனியாக ஒரு வீடு மறுவதை விட எளிது கூட்டாக ஒரு ஊர் மாறுவது. இறுதியில் மாணவர்கள் மேற்சொன்ன மேற்கோளை கூறினார்கள்ஒரு வீட்டை மாற்றுவதை விட எளிது ஒரு தெருவை மாற்றுவது“.                             

தேர்தலுக்கு பின்னர் மொத்தம் உள்ள 550 வீடுகளில் சுமார் 450 வீடுகளில் மாணவர்கள் சர்வே எடுத்தனர். வாக்களிக்க உங்கள் தெருவில் 10 க்கு எத்தனை வீடுகளில் பணம் பெற்றார்கள், வாக்களிக்க பணம் பெற மாட்டோம் என ஸ்டிக்கர் ஒட்டி, உறுதி மொழி கடிதத்திலும் கையெழுத்து செய்துவிட்ட்டு அவரே பணம் பெற வாய்ப்பு உண்டா என்பது போல 5 கேள்விகள். குறைந்தது 75 %  பேர் பணம் பெறாமல் வாக்களித்தனர் என அறிய முடிகிறது. பதில் அளிப்போரின் நிலை வெளிப்படுத்தப் படாது என உறுதியளித்தோம், மாணவர்கள் முகம் பரிச்சயம் ஆனது என்பதால் நம்பிக்கையுடன் மக்கள் பதில் அளித்தார்கள். தேர்தலுக்கு முன் கிட்டத்தட்ட 95% பணம் பெறாமல் வாக்களிப்பேன் என உறுதி கூறினார்கள் அது பணத்தின் முன் கிட்டத்தட்ட 20% சரிந்து விட்டது. ஸ்டிக்கர் ஒட்டியும், உறுதிமொழி கையெழுத்து இட்டும் 15% பணம் பெற்றனர்.

ஆனாலும் இது பெரு வெற்றி. தேசிய மாநில காட்சிகள் இந்த தேர்தலில் 500 ரூபாய்க்கு கீழ் என வாக்குக்கு மலிவாக பணம் அளித்தது ஒரு புறம், குறிப்பிட்ட ஒரு சமூகம் பெரும்பான்மையாக வாழும் பகுதி, அவர்கள் ஆதரிக்கும் குறிப்பிட்ட ஒரு கட்சி என்பதால் அவர்களை ஒப்புக்கொள்ள வைப்பது எளிது என்கிற நிலையான் அறக்கட்டளை செய்து கொடுத்த சில நல திட்டங்கள்ஊரில் மாணவர்கள் 3 மாதங்கள் செய்த தூய்மைப் பணி மற்றும் ஒன்றரை மாத தொடர் பிரச்சாரம், மக்களுக்கு அவர்கள் மீதுள்ள இரக்கம், ஊடகத்தின் ஆதரவு  போன்ற காரணிகள் மறுபுறம் இவை அனைத்தும் இந்த முயற்சி வெற்றி பெற ஏதுவாக அமைந்தது.

இந்த அலங்கார நுழைவை நிறைவு செய்ய உள்ளோம் , முன்பே கூறியது போல உங்களையும் திரு விபிஜி யையும், அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து விரைவில் திறப்பு விழா நடத்த உள்ளோம். அழைப்பிதழ் பின்னர் வெளியிடப்படும்

கிருஷ்ணன் ஏ.எஸ்

யான் அறக்கட்டளை

ஈரோடு

DINAMANI E-MAGAZINE:

https://www.dinamani.com/elections/loksabha-election-2024/election-special-news/2024/Apr/09/we-will-not-get-money-for-voting-perundalaiyur-villagers

THE HINDU:

https://www.thehindu.com/news/cities/Coimbatore/lok-sabha-polls-erode-based-ngo-on-a-campaign-to-ensure-residents-vote-without-accepting-cash/article68061297.ece

NATIVE NEWS TAMIL:

https://www.nativenews.in/tamil-nadu/erode/our-vote-is-not-for-sale-the-erode-yan-foundation-draws-attention-1305493

முந்தைய கட்டுரைஅரங்க இராமலிங்கம்
அடுத்த கட்டுரைமதத்தில் இருந்து தத்துவத்தைப் பிரிக்கமுடியுமா?