இந்திர நீலம் – இளமையின் மணிமுடியும் இமைக்கா பீலிவிழியும் : கலைச்செல்வி

 வெண்முரசு அனைத்து நாவல்களும் ஒன்றாக ஜூலையில் வெளிவரும். தொடர்புக்கு

நகரக் கட்டமைப்பு தீவிரப்பட தொடங்கியிருந்தது. காவியம் இயற்றுவதும் அழகான நகரொன்றை அமைப்பதையொத்ததே. மனிதர்கள் இருப்பதும் நகர்வதும் இயல்பு. காவியமோ நகரோ அமைத்தவரின் பெயரை பறைச்சாற்றி காலத்தை பொய்யாக்கி விடும். வியாசரும் வால்மீகியும் ஆயிரமாயிரம் ஆண்டுகளை கடந்தும் இன்றும் நம்மிடமிருந்து அகன்று விடவில்லை. துவாரகையும் அந்நோக்கில்தான் திட்டமிடப்பட்டு எழுந்து வந்துக் கொண்டிருந்தது. இந்திரபிரஸ்தம் எழ தயாராகிக் கொண்டிருந்தது. திரௌபதி நிகழ்காலத்தை வென்று எதிர்காலத்தை கையாளப்போகிறோம் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டவள். நகரை அமைப்பதன் வழியே தன் கனவை புனையத் தொடங்கியவள். செந்நிறக் கோடுகளாலும் நீலநிறப்புள்ளிகளாலும் வெண்ணிற வட்டங்களாலும் ஆன இந்திரபிரஸ்த நகரின் வரைபடம் எழுத்தாளரின் பெருங்கனவு போன்றது. கனவை விரித்து விரித்து நகருண்டாவதுபோல புனைவை விரித்து விரித்து காவியம் உண்டாகிறது. இரண்டிலும் எண்ணிங்களினால் எழுந்து முடிந்தவையே பின்னர் பருவடிவுக் கொள்கின்றன.

அவள் பாகீரதி போன்றவள். பாயுமிடமெங்கும் தடம் பதிப்பவள். பாஞ்சாலத்தை நிமிர்வாலும் செருக்காலும் நிறைத்தவள் அஸ்தினபுரியில் பேரரசியெனும் உயர்வாலும் உணர்வாலும் நிறைகிறாள். அரண்மனையே மாற்றம் கொள்கிறது. இளமையும்  புத்தாற்றலும் சுண்ணம் பூசிய சுவரென பளீரிடுகிறது. அவளின் ஒற்றர்கள் பெருகுகின்றனர். அங்கு அதிகாரமென்னும் அரிதாரம் பூசிக் கொண்டு நளினமும் நவீனமும் உள் நுழைகின்றன. வெண்முரவு ஆசிரியரின் வர்ணனைகள் அவளை தீட்டி திரட்டி கூர் வாளென நம் முன் வைக்கிறது. சரியாக கையாளவிடில் வெட்டி விடும் அபாயமுமுண்டு. துல்லியத்தாலும் தீவிரத்தாலும் விரைவாலும் வெற்றியாலும் அன்பாலும் பகையாளும் பாரதவர்ஷமெங்கும் பரவியிருந்த கிருஷ்ணனை போல நிமிர்வாலும் செருக்காலும் பெருங்கனவாலும் பேரரசியெனும் நிலையாலும் கிருஷ்ணையும் பாரதவர்ஷமெங்கிலும் ஊடுருவியிருந்தாள். இருவருமே எண்ணவியலாததையும் எழுப்பி நிறுத்துபவர்கள். கருநீலனிடன் கருமைக் கொண்டவள் உரிமைக் கொள்கிறாள். பாண்டவர்களின் நண்பன் அவளுக்கும் உற்றவனே. புதுநகரின் உருவாக்கலுக்கு அவள் அவனிடம் செல்வம் கோரியிருந்தாள். அது பெருஞ்செல்வமெனினும் பாண்டவர்களிடமிருந்து பெற்ற படையுதவியும் கருவூல உதவியும் யாதவனின் பெருவளர்ச்சியின் முதல் தொடக்கமென்பதை அவள் அறியாதவளல்ல. தமையனான திருஷ்டத்யும்னனை செல்வத்தை பெற்று வரவும் அவன் விழி வழியே நகர நிர்மாணத்தை அறிந்துக் கொள்ளவும் அஸ்தினபுரியின் துாதனாக துவாரகைக்கு அனுப்புவதன் வழியே கதை நகர்கிறது. இந்த அத்தியாயங்களுக்குள் திருஷ்டத்யும்னனின் காதல் கதை ஒன்று வருகிறது. இளவரசன், ஆண் என்ற அவனின் பெருநிலையை விறலியும் பெண்ணுமான சுஃப்ரையின் ஆளுமை கடப்பதும் அதை அவன் உணர்வதுமான அற்புதக்காதல் அது. 

அவன் துவாரகைக்கு வருகிறான். துவாரகை ஒரு பிரம்மாண்டத்தின் பிரமிப்பு. வீரம், தேசம், சேதம் என பாரதவர்ஷத்தில் வீரியம் கொண்டிருந்த ஷத்திரியத்தின் வாளையும் வில்லையும் இப்பிரம்மாண்டத்தின் வழியாகவும் வீரியமிழக்க வைக்கும் இளையயாதவனின் கருவிகள் அவனது மாற்றுச்சிந்தனை, கூர்நோக்கு, விரைவு, சூழ்ச்சி, அன்பு போன்றன. அதைதான் அதிமானுடம் என்பதா? அவனுடைய துவாரகை வெவ்வேறு குலத்தார் மட்டுமின்றி வணிகர்களாலும் கப்பல்களாலும் யாதவ பெருநம்பிக்கையாலும், ஏன் பெண்களாலும் கூட நிறைந்திருந்தது. அவர்கள் அனைவருக்குமான தேவையை, குறிப்பாக பெண்களுக்கான தேவைக்கும், தேடல்களுக்கும் கூட அவனிடம் பதிலிருந்தது. ஆழ்மனதில் கட்டற்றவர்களான பெண்களின் ஆழமறிந்தவன் அவன். உடல் கொண்டதல்ல காமம், அது உடலற்று ஒளியாகி காற்றாகி நிறைவது. பெண்கள் தங்கள் முன்னிருக்கும் ஆடியில் அவனை பதினாறாயிரத்தெட்டு முகங்களாக எண்ணிக் கொண்டனர். அவன் அழகு கொண்டு அனைத்தையும் நிறைத்திருந்தான். விடுதலையின் பேரழகை விழைவதனால் அவர்களும் பேரழகு கொண்டிருந்தனர். காற்றிலாடும் சித்திரங்களென்றிருந்தோர் உயிர் கொள்ளத் தொடங்கியிருந்தனர். பல்லாயிரம் பெண்களாலான பெண் உருகி உருகி ஒன்றாகி செந்தழலென்றாடி பின் அமைந்து நீலம் கொண்டு கார்குழலமர்ந்த பீலியும் நீள்விழிகளும் செவ்விதழ்களில் ஏந்திய நீங்கா புன்னகையும் கொண்ட அம்முகம் அவர்களின் அகத்திலிருந்து விலகாதவொன்று. 

பொதுவாக நுால் விமர்சனம் என்பது கதையை சொல்வதன்று. கதை கூறப்பட்டிருக்கும் விதத்தை சொல்வது. காவியங்கள் அதிலிருந்து விலக்கு பெற்றவை போலும். முழுமையான வாழ்வையே முன் வைப்பவற்றில் எதை எடுக்க? எதை விடுக்க? அதுவும் வெண்முரசு போன்ற நிகழ்காவியத்தின் (மறு ஆக்கம் எனினும்) மொழிநடைக்குள் எதைதான் விடுவது? கதை நிகழுமிடங்கள் சில சமயங்களில் ஒன்று போலிருக்கலாம். உதாரணமாக நீராட்டு அறை. ஆனால் நீராட்டுவது என்ற செயலின் பொதுமைக்குள் வெவ்வேறு வார்த்தையாடல்களும் செயல் நுணுக்கங்களும் உண்டு. நீராட்டுக்கு தேவைப்படும் பொருட்கள் முதல் சம்பந்தப்பட்டவர்களின் மனஉணர்வுகள், ஆற்றுப்படுத்தல், ஆற்றுப்படல் வரை ஒவ்வொன்றும் மற்றதிலிருந்து வித்தியாசப்படுகிறது. உடலைத் தொட்டு நீராட்டுபவன் கிட்டத்தட்ட உள்ளத்துக்கும் நெருக்கமானவனே. நீராட்டுவதற்கு உடலை கொடுப்பவன் நீராட்டுபவனை சந்தேகிக்கவே முடியாது. அரசவைக்காட்சிகளும் அடிக்கடி நிகழ்பவை. அவை நம் முன்கூடம் போல, நம் அலுவலகம் போல. அரசர்களை பற்றி பேசும்போது அரசவையும் வந்துதானே ஆக வேண்டும். அமர்ந்திருப்போரின் நிரல்கள், குலமூத்தோர், குடிமூத்தோரின் இருக்கைகள், அவர்கள் பேச்சுரிமைகள், ஆடைகள், அணிகலன்கள், விழி அசைவுகள், உடலசைவுகள், அணிச்சொற்கள், கட்டியம் கூறல் என அக்காட்சிகள் சுற்றி வளைத்தாலும் அவைகளற்று அவையை எங்ஙனம் கூட்ட இயலும்? ஒரு முழுமையான அரசவாழ்வு கண் முன்னால் விரித்தெடுக்கப்படுகிறது.  படபடப்பான வாசிப்பிற்கல்லவே காவியம். மேலும் மையத்தை அணுகுவதற்கு இஃவையனைத்தும் கூட்டுப்பொருட்களே. .இசைக்கூடங்கள் எந்நேரமும் காதலை இசைத்து, நடித்து, உண்மையென்றாக்கி கூத்தாக அள்ளி வைக்க களிப்பென்றே ஆகிறது. எவர் சொன்னது அவருக்கு தாய்மொழி தமிழன்றென? தமிழுக்கு நிறைய வார்த்தைகளை கொடையளிக்கிறது முரசம்.  

காளிந்தியின் கரையோர கிராமமொன்றில் குளிர்காலத்தின் முதல் பௌர்ணமியில் ஆயர்குடிகளின் பொதுமன்று கூடுகிறது. அப்போது மழைத் தப்பியிருந்தது.. நீரின்றி ஆநிரைகளும் மேய்ச்சல் நிலங்களும் ஓலமெழுப்பத் தொடங்கியிருந்தன. மழையின்மை என்பது மூதன்னையரின் தீச்சொல்லோ? யாதவர்கள் மனம் பதறுகின்றனர். அரசு, அதிகாரம் என்றெல்லாம் பெரிதும் அறியாத அவர்களில் ஒருவனான மதுராபுரியை ஆளும் கம்சன், தன் உயிருக்கும் பதவிக்கும் ஆபத்து உண்டாக்குபவனென அறியப்படும் தன் சகோதரியின் மகன் கிருஷ்ணனை குழவியிலேயே கொன்று விட எண்ணுகிறான். குழந்தை அவனிடமிருந்து மறைத்து வளர்க்கப்படுகிறது. அதனை தேடுமவன் அவ்வயதுடைய சிறுகுழவிகளையெல்லாம் குழவியென்றும் தன் குலமென்றும் பாராது கொன்றழிக்கிறான். அவன் மனைவியர் இருவரும் மகதம் என்ற பெரும்நிலையின் அரசனான ஜராசந்தனின் மகள்கள் என்பது கூடுதல் பலம். அவனை அடக்கவோ அழிக்கவோ முயலாமல் திகைத்து விறைத்த விழிகளோடு வெட்டுண்டு கிடந்த அச்சிறு உயிர்களை கண்டும் உயிர் பொத்தி ஒடுங்கியிருந்த தங்கள் கீழமையே மழையற்று போனதன் காரணம் என்று யாதவர்கள் எண்ணம் கொள்கின்றனர். ஆனால் சிற்றெறும்புகள் கூடி சிம்மத்தை என்ன செய்து விட முடியும்?

தான் சிற்றெறும்பல்ல, சிம்மமேதான் என்று விஸ்வரூபம் கொள்கிறான் இளைஞனான கிருஷ்ணன். அப்போது யாதவ அரசுகளாக நிலை பெற்றிருப்பவை கம்சன் ஆளும் மதுராபுரி, தேவகரின் உத்தரமதுராபுரி, சூரசேனரின் மதுவனம், குந்திபோஜரின் மார்த்திகாவதி, சத்ராஜித்தின் களிந்தகம் மற்றும் ஹ்ருதீகரின் சதபதம் இவைகளே. இதில் குந்திபோஜர் சூரசேனரிடம் மகள் கொண்டவர். அஸ்தினபுரிக்கு அம்மகளை அளித்தவர். அவ்வகையில் சற்று பலம் பொருந்தியவர். களிந்தகம் சத்ராஜித்திடமும் சதபதம் கிருதவர்மனிடமும் இருந்தது. தேவகர் தன் தமையனின் மைந்தனான கம்சனிடம் அச்சமும் பகைமையும் கொண்டிருந்தார். கிருஷ்ணன் தேவகரின் மகளான தேவகியின் வயிற்றில் பிறந்தவன். 

தெளிவற்றும் நம்பிக்கையற்றும் பூசல்களோடு முற்றான முடிவெடுக்க தயங்கும் அவையினர் மத்தியில் எல்லாமும் கொண்டவனாக கிருஷ்ணன் எழுகிறான். அவையோரேநான் கம்சனை கொல்வேன். ஆயர்குடி கொண்ட பழி தீர்ப்பேன்அவன் வார்த்தைகளின் பிசிறில்லை. யார் உதவியையும் அவன் கோரவுமில்லை. நேரடியாகவே அறிவிக்கிறான், நான் யாதவர்களின் முழுமுதல் மன்னன். என் சொல்லுக்கு எதிர்ச்சொல் எதனையும் ஏற்கப் போவதில்லை. மதுராவை வென்று கம்சனை கொல்வேன். என்னுடன் நிற்பவர்கள் நண்பர்கள். எதன் பொருட்டானாலும் என்னுடன் நிற்காத எவரும் என் எதிரிகளே. அவர்கள் எக்குலத்தார் எனினும் வேருடன் அழிப்பேன். அவர்களின் குடியின் ஒரு நினைவு கூட எஞ்ச விட மாட்டேன்சிம்மத்தின் முன் சிறு சலசலப்பும் எழவில்லை. யாதவனுடன் இணைவதை தவிர யாருக்கும் வேறு வழியும் இருக்கவில்லை.

இறுகிய தோள்களும் விரிந்த மார்பும் முகமென்று ஆன புன்னகையும் வெண்பற்கள் வெண்சங்கென ஒளிர இந்திரநீலம் விழியென சுடர பொதுமன்றில் கலந்துக் கொள்ள தமையனுடன் வந்த அவனை கண்டு மீளவியலாது தவித்த விழிகளை சிரமத்துடன் பிரிக்க முயன்றபோதுதான் தன் இதயம் அங்கு ஒட்டிக் கொண்டதை உணர்ந்தாள் அவள். பிரித்தெடுப்பது பிய்ந்தெடுப்பதே. உடலிலிருந்து இரத்தத்தை தனியே வடித்தெடுப்பதே. தோலிருந்து சதையை கிழித்தெடுப்பதே. 

தென்மதுராபுரி என்றழைக்கப்பட்ட யாதவப்பெருநகரை ஆண்ட சத்வத குலத்து கிரிராஜரின் எட்டாவது மைந்தர் வீரசேனர். எட்டு வயது வரை விழியிழந்திருந்த அவன் எப்போதும் ஒளி தொட்டிராத சியாமாந்தகம் என்னும் ஆழ்குகையில் சியமந்தகம் என்ற மணியை கண்டடைகிறான். கண்கள் கொள்கிறான். கண்ணொளி நல்கிய கதிரவனை தவிர பிறரை தொழேன் என்ற உறுதியோடு குலதெய்வமான இந்திரனை வணங்க மறுத்து தன் குடிகளுடன் அங்கிருந்து வெளியேறுகிறான். அவர்கள் காளிந்தியின் கரையில் அஸ்வபாதம் என்ற இரட்டை மலையடிவாரத்தை கண்டடைய, அங்கே ஹரிணபதம் அமைகிறது. அந்தகக் குலம் தழைக்கிறது. அக்கொடிவழி வந்த சத்ராஜித் மதுராபுரி செல்ல எண்ணம் கொள்ள, அவர் தந்தை தனது ஆசிகளோடு மகனுக்கு சியமந்தகமணியும் அளித்தனுப்புகிறார். கூடவே இளவல் பிரசேனனும் செல்கிறான். மதுராபுரியில் உச்ரசேனரின் படையில் சேருமவன் படிபடியாக உயர்ந்து களிந்தகம் என்ற சிற்றரசை அமைக்கிறான். அது அந்தக யாதவர்களின் தலைநகரம் என்றாகிறது. அங்கே கதிரவனுக்கு ஆலயம் அமைத்து, ஆண்டுக்கொருமுறை சூரியன் விஷுவராசியில் அமையும் நன்னாளில் கதிரொளியென மின்னும் சியமந்தகத்தை வணங்குகின்றனர். சத்ராஜித்துக்கும் மாலினிக்கும் பிறந்தவளே சத்யபாமை. 

அவனுடைய பெண்மை கலந்த மென்குரல் புல்லாங்குழல் இசைப்பது போன்றொலிக்கிறது. மெய்யின் நிறம் நீலமானது எங்ஙனம்? மலரையொத்த பாதங்கள். புலரிமழையென குளிர்ந்திருக்குமா அவை? அதனை அள்ளி்த் துாக்கி மைந்ததெனன மடியில் வைத்துக் கெண்டாள். தன்னில் சேர்ந்த அனைத்தையும் அவனுக்கே அவியாக்கினாள். அவனை அடுத்தவர் கண் நோக்கவிடாது தான் செல்லும் ஆழங்களில் அவனை புதைத்து அவனையே விதைத்து அவனே முளைத்தெழ விழைந்தாள். அவனுக்கு நிகரென அமர்ந்தாள். அவன் அடைந்தவற்றுக்கெல்லாம் பாதியாகும் உரிமைக் கொண்டாள். அவன் மறைந்தபின் எஞ்சும் விழிநீர் இறுதி வைரமென்றாகி தன்னுள் நிறைகையில் அதை விண்ணுக்கு எடுத்துச் சென்று அவனுக்கே படையலிட்டு அவன் சார்ந்த குலத்தோரின் அன்னையென்றும் பெருந்தெய்வமென்றும் ஆகும் பெருவிழைவுக் கொண்டாள். மாயை அழகானது. காதலென்னும் மாயை. நெஞ்சில் விழுந்த நீலத்திற்காக நீலனை கூட இழக்க தயாராகியிருந்தாள். பிரக்ஞையின் மையம் அவனென்றானபோது எதுவும் புகவோ வெளியேறவோ வாய்ப்பில்லை.

துவாரகையில் நடக்கும் கால்கோள் விழாவில் கலந்துக் கொள்ள மனைவி மகள்களோடும் இளவலோடும் செல்லும் சத்ராஜித்தின் கழுத்தில் சியமந்தகம் கோத்த மணியாரம் ஊஞ்சலாடுகிறது. அது யாதவக்குடிகளில் அவரையும் அவர் சார்ந்த அந்தகக்குடியையும் உயர்த்துவது. அங்கு வைத்து மூத்தவரான அக்ரூரர் பாமையை இளைய யாதவனுக்கு பெண் கேட்க, சொல் கொடுத்து சொல் மீண்ட பெருந்தகுதியோடு அந்தகக்குலம் அரசவை வருகிறது. ஆனால் விழா முடிவில் நடத்தப்பட்ட சடங்கொன்றில் சத்ராஜித் மற்ற யாதவ அரசர்களை போல தன்னை முழு சரணாகதியாக்க விரும்பாமல் அங்கிருந்து வெளியேறுகிறார். இதன் பின்னில் பிரசேனரின் பங்கு முக்கியமானது. இது சத்ராஜித்தின் ஆணவமா அல்லது களிந்தகத்தின் அரியணையில் அமர எண்ணும் பிரசேனரின் விழைவா?  புற்றரவு ஓசையற்றது. பாமையின் குறுக்கே திருமண சொல்லென்னும் கரும்புவில் தடையென்றிருக்க, அவளோ கன்யாசுல்கம் பெற்றுக் கொண்டு தன்னை கன்யாதானமாக அளிக்கும்வரை தான் சத்ராஜித்தின் மகளாக மட்டுமே இருக்க முடியும் என்று தந்தையுடன் களிந்தகம் புறப்பட்டு விடுகிறாள். 

காலம் கரைந்துக் கொண்டேயிருக்க, வெயில் பட்டால் ஒளி விடும் இந்த கல்லை வைத்திருப்பது நாய் பெற்ற தெங்கம்பழமே என சத்ராஜித் தளர்ந்துப் போகிறார். பிழையொன்றை புரிந்து அதை பிழையால் களையும் வீம்பு வந்தமர்கிறது பிரசேனருள். தமையனறியாது பிரசேனர் பாமாவுக்கு மணத்துாது அனுப்புகிறார்.   ஆனால் அவள் குறுநிலத்தின் எளிய யாதவ அரசி என்ற தகுதியே ஷத்திரியர்கள் முன் நிற்பது. இறுதியாக சேதுநாட்டின் தமகோஷனுக்கும் சுருதமதிக்கும் பிறந்த சிசுபாலன் அவளை தனது ஏழாவது மனைவியாக்கிக் கொள்ள ஒப்புதல் அளிக்கிறான். பதிலாக சியமந்தக மணியும் அதோடு பனிரெண்டாயிரம் பொன்னும் அளிக்க வேண்டுமென நிபந்தனையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. செருக்கும் ஆணவமும் துணைக்கொள்ள சிசுபாலன் களிந்தகம் வருகிறான். அந்தகர்களை பீடித்த சனி இன்னும் விலகவில்லை. சித்தம் கலங்கி வலிப்பு கண்டு விழுந்த சிசுபாலனின் உடல்நிலைக்கு களிந்தகம் அளித்த உணவே காரணம் என்ற பழி அவர்கள் மேல் வந்து விழுகிறது. இப்போது துவாரகையோடு சேதி நாடும் பகைமை பட்டியலுக்கு வந்தாயிற்று. 

பகையின் வலிமையைக் கருதி சிறு சிறு குழுக்களென்றிருக்கும் யாதவ அரசுகள் மீண்டும் கூடுகின்றன. அவர்கள் இதுவரை நட்பு நாடாத அஸ்வபாதமலைக்கப்பால் களிந்தசிருங்கம் வரையிருக்கும் ஊஷரர், பிங்கலர், சியாமர், கராளர், கன்னர், தசமுகர், ஜாம்பவர் என்ற ஏழு மலைக்குடிகளின் உதவியை கோரும் எண்ணம் கொள்கின்றனர். அவர்களுள் ஊஷரக்குடி தலைவர் சிருங்ககாலர் மட்டுமே ஓரளவு அணுகக்கூடிய நிலையிருப்பவர். அணுகுவதற்கு யவனமதுவே துாது, துருப்புச்சீட்டு. ஊஷரக்குடி மயங்கியது. மடங்கியது. அழைப்பு விடுத்தது. பிரசேனர் கிளம்புகிறார். தந்தை தனக்களித்தை போல  தனயன் தன் இளவலுக்கு சியமந்தகமணியை அளித்தனுப்புகிறார். காடுகளை அறியாத ஆயர்குடிகளின் கானகப்பயணம் அது. அறியாத ஆழம். அறிந்திராத மக்கள். செலுத்தும் விசையென்றிருப்பது ஆணவமே. ஆனால் காடு, தான் கொள்ளாதவர்களை கொள்வதில்லை. சிம்மமும் காடென்பதே. பிரசேனரைக் கொன்ற பழி வெவ்வேறுவர் பெயரில் விழுந்தாலும் சியமந்தகம் இருப்பது இளையயாதவரிடமே என சேதிகள் சென்று முடிந்தன. பாமை அதை நம்புபவளல்ல., அன்றிலிருந்து பதினான்காம்நாளான நிறைநிலவு நாளுக்குள் சியமந்தக மணியுடனும் அதை கவர்ந்தவனுடனும் இளையயாதவர் இங்கு வர வேண்டும். அம்மணியையே கன்யாசுல்கமாக கொடுத்து என்னை மணமுடிக்க வேண்டும். அதுவரை ஊணுறக்கம் ஒழியேன் என்று நீலகடம்பின் அடியில் அமர்ந்துக் கொள்கிறாள். அது வெஞ்சினம் அல்ல, தவம். அவன் அழைத்தால் வருபவன். 

இக்காவியத்தை தனிதனி நாவல்களா என்றால் ஆம் என்பதற்கும் வாய்ப்புண்டு. ஒவ்வொரு பகுதியும் அதனதனுடன் முடிவடைந்து நாவலென்றும் தொடர்ச்சி கொண்டு காவியமென்றும் மாறும் வித்தை அறிந்தது. கொலையுண்ட கம்சன் இதில் உயிர் கொண்டு இறக்கிறான்.  கண்ணன் கணிக்க இயலாதவன். யாதவன் வயதறியாதவன். நீலத்தில் ராதையை நிறைக்கும் அவன் இந்திரநீலத்தில் எங்கோ இருக்கும் மாயனென உறைகிறான். காதலாக மயக்குமவனே அரசனாக மிரட்டுகிறான். அன்பென குழைகிறான். கொலைக்களத்தில் நர்த்தமிடுகிறான்.  காதலனென அவன் நுழையும் இடந்தோறும் அவனுக்கு முன்னமே கவிதை சென்றமர்ந்து விடுகிறது. கன்னியரின் இமையா விழிகள் பல்லாயிரமெனினும் அனைத்தையும் உணர்பவன். அனைத்துள்ளும் உறைபவன். பாமையின் மொழிகளையும் அவனறிவான். களிந்தகம் வருகிறான். தன்னுடன் தான் வென்றடக்கிய ஜாம்பவனத்தின் தலைவனான ஜாம்பவானையும் அழைத்து வருகிறான். ஜாம்பவான் சிம்மத்தின் குகையில் தான் கண்டெடுத்த மணியை வென்றெடுத்தவர் இவரென்று சான்றுரைத்து அதை சத்ராஜித்திடம் நீட்ட, அதனை கொடையென கொள்வது குலதாழ்ச்சியென சத்ராஜித் மறுக்க, அதனை கன்யாசுல்கமென கொள்க என மாயன் இயம்ப, அது மணமகன் அளிப்பதல்லஅவன் தந்தையால் கொடுக்கப்படுவதென சத்ராஜித் எதிர்க்க, அத்தருணத்தில் ராகவராமனும் கிருஷ்ணனும் இணைகின்றனர்.  ஜாம்பவானின் குல மூத்தவரை தன் தந்தை தசரதனுக்கு இணை வைத்த ராகவராமனின் சொல்லிலிருந்து மறு சொல்லெடுத்து அவ்வழி வந்த அம்முதிய ஜாம்பர் குல தலைவனை, ராகவனே நான் என கொள்கஎன் தந்தை என்ற வடிவில் நின்றருள்க என கிருஷ்ணன் வணங்கி நிற்க, தந்தையென்றாகி அவர் சியமந்தகத்தை சத்ராஜித்திடன் அளிக்க, காளிந்தி வாழ்த்த கடம்பம் மலர் துாவ பாமை கண்ணனுக்குள் இணைகிறாள். அமைகிறாள்.

பொற்கால் அரியணையில் வைரமுடி சூடி அமர்ந்திருக்கும் கண்ணனால் மனிதருக்குரிய இயல்பான உடல்மொழியுடன் அரியணையில் அமர முடியும். வீட்டு முற்றத்தில் அமர்ந்து மண்ணள்ளி விளையாடும் சிறு குழந்தையென்றும் கன்று ஓட்டி புல்வெளி சேர்ந்தபின் யாதவ சிறுவனென கரை மர நிழலில் நின்று குழலுாதவும் முடியும். கள்மயக்கு நிறைந்திருப்பினும் அனல் விழித்திருக்க நாடாளவும் தெரியும். பாமையின் தகப்பனாரிடம் இருக்கும் சியமந்தகத்தை கைப்பற்ற கூர்மபதத்தின் தலைவன் சததன்வா விழைவதும் வென்றால் மகதமும் காசியும் போட்டியாளனென மற்றொரு யாதவனை உருவாக்கி விடும் என்றறிந்தும் அர்ஜுனனை இணைத்துக் கொண்டு அஸ்தினபுரி செல்ல பயணத் திட்டமிடுகிறான் கிருஷ்ணன். ஆனால் அவன் வகுத்து வைத்திருக்கும் சூக்கும களத்தின் காய்களென மூத்த யாதவர் அக்ரூரர், இளையயாதவனின் ஊழிப்பேராற்றலில் மயங்கி அவருடன் இணைந்துக் கொண்ட கிருதவர்மன், அவனே அனைத்துமென தொழும்பனாக துணிந்த சாத்யகி, இவர்களோடு பாஞ்சால இளவரசனும் காய்களே. ஆடல்களேஆராய்தல்களே

பாமைக்கு பிறகு அவன் கொள்வது கலிகை. அவள் ஜாம்பவான்களின் காளநீல காட்டு இளவரசி. அன்று காட்டுக்குள் இளைய யாதவர் ஜாம்பவானை நிலத்தோடு சேர்த்து வென்று நின்றபோது ஜாம்பவான் தன் தலையணியை அவன் முன் வைத்து பணிந்து நீ என்னை கொல்ல உரிமைக் கொண்டவன் என்கிறார். யாதவன் சியமந்தகமணியை பெறுவது மட்டுமே என் நோக்கம், நிலமோ கொலையோ நோக்கன்று என்றியம்ப, கொண்ட பொருளை திரும்ப அளிக்கவியலாது, கொன்றே அதை பெற முடியும், ஆகவே கொல்கஎன ஜாம்பவர் பணிய,. கிருஷ்ணன் மறுக்க, இறுதியில் குலப்பெண்ணை மணந்து பெண்செல்வமாக அம்மணியை திரும்ப பெறலாம் என்ற தங்களின் குலவழக்கத்தை முன் வைக்க, அவனும் மணியை பெற்றுக் கொண்டு வளர்பிறை மூன்றாம் நாளில் கலிகையுடன் மணநிகழ்வை குறித்து விட்டு பாமையிடம் வருகிறான். விஷயமறிந்த பாமை பதறி குதற, அருமணியை அறிய பிறிதொரு வழியை அறிந்திலேன் என்று கிருஷ்ணன் குனிய, உன் உள்ளம் அவளை விழையவேயில்லையா என அவள் ஆழம் பார்க்க, அவனோ பசப்பில் பாதாளம் பாய்கிறான். கலிகை இணைகிறாள். 

இளையயாதவன் பாமைக்கும் முன்பாக மணந்தது விதர்ப்பத்தின் இளவரசி ருக்மணியை. பாமைக்கு யமுனை என்றால் ருக்மணிக்கு வரதா. அதன் கரையோரத்தில் அமைந்த கௌண்டின்யபுரியில் விதர்ப்ப அரசர் பீஷ்மகருக்கும் சுஷமைக்கும் மகளாக பிறந்து வாழ்ந்து வருமவளின் உள்ளத்தை இளைய யாதவன் கொழுநன் என ஆட்கொள்கிறான். இங்கும் சிசுபாலனின் குறுக்கீடு உண்டு. அவன் ருக்மணியின் தமையனான ருக்மியின் உயிர் நண்பன். தங்கையை சிசுபாலனுக்கு மணம் செய்விப்பதில் தீவிரம் கொள்கிறான் ருக்மி. பிடிவாதம் கொள்கிறாள் ருக்மணி. அரசக்குடும்பத்து திருமணங்கள் அரசியல் இலாபத்துக்கானவை. காதலோ அரசியல் கணக்குகளை தலைகீழாக்குபவை. விதர்ப்பம் மகதத்தின் சிற்றரசு. ஆனால் அவள் மாலையிட விரும்புவதோ மகதத்தின் பகைவனுக்கு. இரண்டு கூர்வாட்கள் போரிடும்போது ஊடே கடந்து செல்லும் காற்றை போல பொருந்தாத அரசியலுக்குள்ளிருக்கும் இரு இதயங்களுக்குள் காதல் நுழைந்து விடுகிறது. ஆடிமாதத்து இறுதிப் பெருக்கு நாளில் கொற்றவை ஆலய விழாவின்போது அவளை கவர்ந்து செல்ல வருவதாக பாணனின் பாடல்கள் வழியே வந்து சேரும் தகவல்களை அவளால் கிரகித்துக் கொள்ள முடியும். ஏனெனில் விழைவு நீர் போன்றது. தனக்குரிய பாதையை கண்டடையும் விழிகளை கொண்டது. ருக்மணியும் இணைகிறாள்.

நீலமும் இந்திரநீலமும் மாயமென்றும் கனவென்றும் மயக்கென்றுமான சொற்களாலானவை. அக்கனிமரத்தில் உவமைகள் ஊஞ்சலாடும் சிறுமிகளென விளையாடுகின்றன. பாமையின் இளையவள் சத்யசேனை துயின்று கொண்டிருக்க, அவளருகே படுத்திருந்த மூதன்னையின் கை சுனை தேடி வந்த மரத்தின் வேரென நீண்டு கிடந்தது. மழை அறைந்த கதவு போல உலை நீரேற்றிய அண்டாவின் மூடி விசும்பி விரசலிட்டு ஆவியை உமிழ்கிறது, விண்ணில் பறக்கும் தேவக்குழந்தையென சித்ரபானு துயின்றாள், மழைக்கால மலைகள் அருவிகளை அணிந்திருப்பதை போல அவள் நகைகள் மட்டுமே அணிந்திருந்தாள், அம்பு உருவப்பட்டதும் கோழியின் வாய் என திறந்திருக்கும் புண், அலை பின் வாங்கிய சேற்றில் நண்டுவளைகள் போல சிறு குமிழிகளாக குருதி வெடித்து வெளியேறியது போன்று காவியமெங்கும் ஏராளமான புத்தம்புது உவமைகள் நிரல் வகுக்கின்றன.

பால்ஹிக நாடுகளில் ஒன்று மத்ரம். சல்யரும் த்யுதிமானும் அதன் வாரிசுகள். இளையவரான த்யுதிமானின் நாடாளும் ஆசையால் மத்ரம் இரண்டாக பிரிக்கப்பட்டு தட்சிணம் சல்யரிடமும் உத்தரம் த்யுதிமானின் அரியணையின் கீழும் வருகிறது. அதுவரை த்யுதிமானின் அரண்மனையில் இளவரசரென அமர்த்தி வைக்கப்பட்டிருந்த சல்யனின் மாமன் மகனும் சிறந்த வீணை இசைக்கலைஞருமான பிருஹத்சேனர் அங்கிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்.  இதற்கிடையே மகதம் மத்ரத்தை தனது வணிகதேவைக்காக ஆக்ரமித்து அதனை உத்ரமத்ரம் என்றாக்கி பிருஹத்சேனரை அதில் அரசராக அமர்த்துகிறது. நாடாளும் ஆசை கொண்டளவுக்கு திறமை கொண்டவரல்ல அவர். அவருக்கு சௌவீர இளவரசி மிலிந்தை மணமகளாகிறாள். அவர்களின் மகளே லஷ்மணை என்னும் சாருஹாசினி. இசையின் முழுமையறிந்தவள். வீணைக்கலையில் தேர்ந்தவள். மகதத்தின் தயவால் ஆட்சியில் அமர்ந்திருக்கும் உத்ரமத்தர இளவரசியை மகதத்தை மீறி யாரும் மணவுறவு கொள்ள அணுக முடியாது என்ற நிலையில் சல்யரை சரணாகதி அடைய இயலாத இறுக்கத்தில், அவள் மச்சனுக்கு உறுதியாகி, ஒருகட்டத்தில் ஜராசந்தனே மணமகன் என்ற நிலை உருவாக, அது குடிமக்களின் ஒத்திசைவை நாடி மண தன்னேற்பாக ஒருங்கு செய்யப்படுகிறது. ஆனால் அவளின் நீலநயனங்கள் நீலனுக்கானவை. அவனே வெல்கிறான். 

இந்திர நீலம் – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)

நீலமே நீலன். சியமந்தகமணி என்பது விழைவு. அவ்வைரக்கல்லை வைத்து நீலன் ஆடும் ஆட்டமே இந்திரநீலம் சியமந்தகம் கருணையற்றது. அமமணிக்கென்று தனியாக ஒளியேதுமில்லை. அதனை கொள்வோரின் விழைவெனும் விழிகளே அதன் ஒளி. காண்போர் கண்களில் தெரியும் மாயையே உலகு என்கிறது வேதாந்தம். வீரசேனனுக்கு அது கண் கொடுத்த மணி என்பதால் அதையே கருத்தாக்கி, அனலனை இறையாக்கி வணங்குகிறது அந்தக குலம். பிரசேனனுக்கு அது அரியணை மேல் கொள்ளும் விழைவு. அவ்வாசைக்கு தன்னையே பலி கொடுக்க, அவர் அணிந்திருந்த மணி ஜாம்பாவான் கையில் சென்றதும் இளம்பெண்ணின் அணியாகிறது. அதை மீட்க ஒருவன் வரும்போது அது உயிரை விட மதிப்புக் கொண்டாதாகிறது. அதை பெற்றும் அளித்தும் மனைவியரை கொண்டதும் அது கனிந்த பழமென இனிக்க, அதனை வண்டென குடைந்தெடுக்கிறான் சததன்வா. தேனையும் பறிக்கொடுத்து தேனீயையும் இழந்து நிற்கிறது அந்தகக்குலம். சியமந்தகம் மண்ணில் அமைந்திருக்கும் பல கோடி கற்களின் ஆழத்தின் அழுத்தத்தை அறிந்தது. அந்த அறிதலே அதன் ஒளி. நீலனை அணுக அவனை அறிவதே வழி. அக்ரூரர் அதனையே முயல்கிறார். கிருதவர்மனின் பற்றோ பாமையின் மீது. அவனை பாஞ்சாலன் துரத்துகிறான். அக்ரூரர் தன் தாயின் நாடான காசியில் மறைகிறார். கண்ணன் உணராதது ஏதுமன்று. காசிக்கு நட்புமுகமாக சென்று அவரை மறைமுகமாக உலுக்க, அவர் அங்கிருந்து வெளிப்படுகிறார். பாஞ்சாலன் கிருதவர்மனை கண்டுபிடித்து தேரில் கட்டி அழைத்து வருகிறான். வஞ்சகன் என்றாலும் கிருதன் குலத்தால் யாதவன், குறிப்பாக அந்தகன். பாஞ்சாலனோ ஷத்திரியன். குடிகளின் ஆதரவில்லை பாஞ்சாலனுக்கு. நிலைகுலைந்த தன்னை பாமை பார்த்து விட கூடாது என்பதே கிருதவர்மனின் ஒரே வேண்டுதல். ஆனால் அதை பாஞ்சாலன் நிறைவேற்றவில்லை. எதை பார்க்ககூடாது என கிருதன் விழைந்தானோ அதை பாமையின் கண்கள் நோக்கி விட்டன. உயிருடன் இறந்துப் போகிறான். அது பீஷ்மரால் அம்பை அடைந்த அவமானம். துரோணரால் துருபதன் அடைந்த அககுலைவு. துருபதனின் மகனால் கிருதவர்மன் அச்சிறுமையை அடைய நேரிடுகிறது. உயிர்ப்புடனிருந்த கிருதவர்மனின் பிரக்ஞை தனது பிரக்ஞையோடு நெருங்கியது என்பதை பாஞ்சாலன் உணர்ந்துக் கொண்டேயிருக்கிறான். 

அவந்தி நாடாளும் ஷத்ரியத் தொல்குடி மாமன்னர் ஜெயசேனருக்கும் மதவனத்து யாதவக்குடித் தலைவர் சூரசேனரின் இளைய மனைவி சித்திதாத்ரியின் மகள் ரஜதிதேவிக்கும் பிறந்த மகளான மித்ரவிந்தை மற்றொரு மனைவி. அவளை தன் தங்கை சுபத்ரையோடு சென்று செடியிலிருந்து மலர் கொய்வது போல அழைத்து வருகிறான். யாதவனின் விழிகளுக்காக காத்திருந்த அவள் அவனோடு விழி சேருகிறாள். கோசல மன்னர் நக்னஜித்தின் மூத்தமகளான நக்னஜித்தியின் மணத்தன்னேற்பு விழாவில் ஏழு பெருங்காளைகளை அடக்கி அவளை அடைகிறான். கேகய நாட்டு மன்னர் திருஷ்டகேதுவுக்கும் சுருதகீர்த்திக்கும் மகளாக பிறந்த பத்ரையை மணந்தபோது நுாறு யானைகள் அவளுக்கான மகள் செல்வத்தை சுமந்து வந்தன. தமையன்கள் முத்தாரம் சுற்றி முடிசூடி பொற்தேரேறி நகரை வலம் வந்து மணமக்களை அரண்மனை சேர்த்தனர். யமுனைக்கரையின் மச்சகுலச் சிற்றரசர் சூரியனுக்கும் சரண்யுவுக்கும் பிறந்த காளிந்தி என்ற கனகை யமுனைக் கரையிலிருந்த களிந்தகம் என்னும் சிறு நாணல் தீவில் ஏழு வருடங்கள் தவமிருக்க, அவளை கன்யாசுல்கமென நீலமலரை அளித்து மனைவியென ஏற்கிறான் இளைய யாதவன். 

இக்காதல்களில் கடைசியானதை போல முக்கியமானது பர்சானபுரி ராதையின் காதல். அக்காதலை இசை, நிலவு, வசந்தம் என பெண்கள் தங்களின் இளம்இளமையில் அடையும் இனிய உணர்வுகளின் திரட்டென்றும் சொல்லலாம். சூதனும் விறலியும் ராதாமாதவம் நிகழ்த்தும்போது எழுதப்பட்ட வார்த்தைகள் இத்தனை உன்னதம் கொள்ளுமா என்ன?

 

 

வாயிலுக்கு அப்பால் வந்து கண்ணன் அவள் பெயர் சொல்லி அழைத்தான். ‘ராதைஎன்ற குரல் கேட்டு அவள் ஓடிச்சென்று தாழ்திறந்தாள். கதவைத் தட்டி உலுக்கியது மழைக்காற்று என்று அறிந்தாள். அவள் பெயர் சொல்லி அழைத்தது முற்றத்தில் நின்ற பாரிஜாதம். சோர்ந்து கதவைப் பற்றிக்கொண்டு உடல் தளர்ந்து சரிந்து ஏங்கி அழுதாள். எங்கோ எழுந்தது வேய்ங்குழல் நாதம். தூண்டில்கவ்விய மீன் எனத் துடித்தாள். அவளைச் சுண்டி தூக்கி மேலெழுப்பியது தூண்டில் சரடு.

திருமணத்துக்கு முன் இளவரசிகளெல்லாம் அவரவர் நாடுகளில் ஆற்றிலும் அருவியிலும் மலையிலும் சோலையிலும் நிலவிலும் பனியிலும் வெளியிலும் ஒளியிலுமாக தங்களை தொலைக்கும் கவிஞர்களுக்குரிய மனநிலைக் கொண்டவர்களே. நல்வாய்ப்பாக துவாரகையில் அணங்குகளாகும் வாய்ப்பில்லை. கணவன் ஒவ்வொரு பெண்ணாக மணப்பதும் அதற்கு அவர்களின் அனுமதியை நோகாமல் பெறுவதையும் அவர்கள் அறியாதவர்களல்ல. கணவனின் வார்த்தைகளை வெறும் பசப்பு என்றும் பெண்களின் உள்ளங்களை வைத்து ஆடும் பகடை என்றும் உணர்வுகளை எரிய வைத்தும் அணைய வைத்தும் தன் விழைவுக்கேற்ப கையாளும் கயவன் என்றும் அவனை செல்லமாக நொந்துக் கொள்கிறார்கள். ஆடலின் போது வெளிப்படும் அவனது முழுத்தோற்றமே தங்களின் விழைவென வழிபடுகின்றனர். அவனது எட்டு அரசியரில் யாதவகுலத்து பாமை, கான்வேடர் குலத்து ஜாம்பாவதி, மச்சர் குல காளிந்தி. மத்ர அரசி லகஷ்மணையை தவிர மீதமிருக்கும் கோசல அரசி நக்னஜித்தியும், அவந்தி அரசி மித்ரவிந்தையும், கேகயத்து அரசி பத்ரையும், விதர்ப்ப அரசி ருக்மணியும் ஷத்திரியர் குலமென்று அமைகின்றனர். ருக்மணி உள்ளத்தால் அன்னலட்சுமி, பாமை செல்வத்தால் தனலட்சுமி, கலிகை உருவத்தால் கஜலட்சுமி, காளிந்தி மைந்தர்வளத்தால் சந்தான லட்சுமி, நக்னஜித்தி வெற்றியை கொண்டு வருபவளெனும் விஜயலஷ்மி, தான்யலட்சுமி என்றழைக்கப்படும் மித்ரவிந்தை, இசையரசியான சாருகேசியே வித்யாலட்சுமி, இருதோள்களிலும் சங்குசக்கரம் அமையப் பெற்ற கைகேயி வீரலகஷ்மி என அவர்கள் அட்டலக்ஷ்மிகளென அறியப்படுவது புராணக்கதை என்றாலும் அவ்வெண்வரும் அடைவதெவையும் அவரவர் மீள்கைக்கே.  

வெண்முகில் நகரத்தில் பூரிசிரவஸ் என்றெண்ணுகையில் முதிராத இளைஞனாக உணர்ச்சிகளுக்குள் அடங்கியவனாக அன்புக்கு கட்டுப்பட்டவனாக புரவியில் வலம் வரும் ஒரு வெண்ணிற இளைஞனின் சித்திரம் மனதிற்குள் வந்து போகும். இந்திரநீலத்து திருஷ்டத்யும்னனும் இளைஞன் என்றாலும் சற்றே சற்றே முதிர்ந்த உள்ளத்தவன். ஷத்திரியனுக்குரிய அரசியல் சூழ்ச்சிகளை அறிந்தவன். காதலியென்று சுஃப்ரயை மனதில் சுமந்தாலும் அரசனுக்கு உரியவள் அரசக்குலத்தை சார்ந்தவளாக இருப்பதே சரி என்ற நிலைப்பாடெடுத்து பின் சுஃப்ரையே உகந்தவன் என தெளிகிறான். அது மாயக்கண்ணனின் அருகாமை அளிக்கும் தெளிவு. சாத்யகி இவனது ஆப்தன். இவனுக்கும் சாத்யகியே ஆப்தன். 

போர் காட்சிகள் மெய்யென்றே உணருமளவுக்கு துல்லியமானவை. மற்போர், விற்போர், சொற்போர். கதாயுத போர், நீரில் நிகழ்வன, நிலத்தில் எழுவன என எவையும் அதனதன் தொழிற்நுட்பங்களோடும் அதற்கான வார்த்தைகளோடும் குறிப்பிடப்படுவது பிரமிக்க வைக்கிறது. சததன்வாவின் கிருஷ்ணவபுஸின் அழிவு உளம் நடுங்க வைப்பது. அது யாதவனின் கருணையற்ற முகமென துலக்கம் கொள்கிறது. போர்க்களத்தில் அவன் மானுடன் அல்ல. நெருப்பு போல, புயல்போல, கொடு நோய் போல பேரழிவு மட்டுமே தான் என திரள்பவன். அங்கு இறப்பு என்பதே இலக்கு, அது நோக்கு சூழல் தருணமென அனைத்திற்கும் அப்பாற்பட்டது. ஒரு உடல் கொண்டு வந்து தன்னை நிகழ்த்துவது. இப்புவியை சமைத்து நிற்கும் அடிப்படைகளுள் ஒன்று என உலகிற்கு அறிவிக்கிறான். காதலனும் அவனே. மோனனும் அவனே. முகமே புன்னகையென கொண்டு அரியணையில் அமர்ந்திருப்பவனும் அவனே. மண்ணில் ஆழ அடிபரப்பி நின்றிருக்கும் மலைகளை நிமிர்ந்து நோக்கினால் அவை முகில்சூடி விண்ணின் பகுதியாக நின்றிருக்கும். எது மையம்? எது தொடக்கம்? எது முடிவு? அவன் காவியத்துக்கு அப்பால் எங்கோ இருப்பவன். இப்புவியில் நிகழும் கோடானுகோடி வஞ்சங்களை சினங்களை விழைவுகளைக் கண்டு அவை ஒன்றையொன்று நிகர் செய்து உருவாக்கும் ஏதுமின்மையில் நின்றிருப்பவன். முற்றிலும் தனித்தவன். அவ்வகையினனே இறைவன் என்கின்றனர் யோகிகள். 

கலைச்செல்வி எழுத்தாளர்

யமுனையின் விழிகளைத் தேடி கண்ணனும் பார்த்தனும் மலைகள், நதிகள், பாறைகள், பனிப்பாளங்களை கடந்து செல்கின்றனர். தொடக்கம் எதுவும் மையமே என்கிறான் கிருஷ்ணன். அதை அறிய விழைகிறான் பார்த்தன். அவர்கள் நெடும்பயணத்துக்கு பிறகு பனிப்பாளத்தின் நடுவே நீல விழியொன்று திறந்திருப்பதை காண்கிறார்கள். அது களிந்தத்தின் விழி. நிறைந்து வழிந்த அந்த நீலக்கோடு வளைந்து சரிந்து இறங்கி மறுபக்கம் காளிந்தியென பாறை வளைவுகளில் பெருகிச் சென்றது. அந்நீலவிழிக்கப்பால் பிறிதொரு வளையமென கருமேகத்தீற்றல் ஒன்று எழுந்து பனி மூடிய மலைகளைக் கடந்து வானில் எழுந்து அப்பால் இறங்கியிருந்து. அது கடலிலிருந்து வரும் முகில். நீரள்ளிய முகில் என்பது மண் தொடாத நதி. நதி விண்ணில் வழிந்து மண்ணில் பெய்து களிந்த விழியை நிரப்பி காளிந்தி என்றாகி கடலை அடைகிறது. கடலும் நீலம். நீலம் செறிவு கொண்டது. கடல் போன்று ஆழமானது. தன்னை தன் ஒளியாலே மறைத்துக் கொள்ளும் நீரின் மாயமென தோன்றுவது. முகில் வளைவு களிந்த விழியில் இறங்கி நதி நெளிவென ஆகி நீண்டு சென்று தொடுவானத்தை தொட்டு ஒரு மாபெரும் வட்டத்தை உருவாக்குகிறது. பார்த்தன் கண்டுக் கொள்கிறான், தொடக்கம் எதுவும் மையமே. சுபத்திரை இயல்பாக எழுந்து வந்து சியமந்தகத்தை அந்த நீலவெளியின் ஆழத்துக்குள் எறிகிறாள்.  

குழல் சூடிய பீலி விழி வானை நோக்கி விழித்திருக்கிறது.

***

முந்தைய கட்டுரைThe eye is the ear!
அடுத்த கட்டுரைதெணியான்