படுகளம், வாசிப்பு

படுகளம் வாங்க

ஆசிரியருக்கு வணக்கம்,

தங்கள் தளத்தில் தினமும் வெளியாகி இன்றுடன் முழுமையடைந்த படுகளம் நாவலின் அத்தியாயங்கள் வித்தியாசமான வாசிப்பனுபவத்தை கொடுத்தது. இது ஏதேனும் திரைப்படம் அல்லது OTT தொடருக்காக எழுதப்பட்ட கதையா என்று தெரியவில்லை. ஆனால் வாசிப்பின் பொழுது, திரைக்கதை முழுமைபெற்ற சுவாரசியமான ஒரு திரைப்படத்தின் அனுபவத்தை உணர முடிந்தது.

எட்டாவது அத்தியாயத்தை முடித்த போது, உண்மையில் மிகப்பெரிய சோர்வை அடைந்திருந்தேன். அடுத்து முற்றிலும் எதிர்பாராமல் கதை நாயகனின் அம்மா குடுத்த தீர்வைத் தவிர வேறு எந்த தீர்வையும் என்னால் யோசித்து அடையமுடிவில்லை.

ஆனால் அதன்பின் நடந்தவைகள் எல்லாம், எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போல சென்றது. கதை இன்று முழுமையடைந்த போதுசெந்தில்ராஜ், இன்றளவில் அந்த படுகளத்தில் தன்னால் அடையக்கூடிய ஒரு உச்சபட்ச வெற்றியை அடைந்திருக்கிறான்

காசிலிங்கத்துடனான முதல் சந்திப்பிற்கு பிறகு, அவன் என்ன செய்தேனும் வெற்றி பெற வேண்டும் என்றே தோன்றியது. எத்தகைய அறமீறலையும் கையாளுவற்கான காரணங்களை அவன் கொண்டிருப்பதாகவே நினைத்தேன். ஆனால் இன்று கடைசி அத்தியாயத்தை முடித்த போது, ஏதோ ஒரு கட்டத்தில் அவன் ஒரு சிறு சறுக்கலையாவது சந்தித்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அல்லது ஆசை எஞ்சியுள்ளது.

இதற்காக காரணம்  இன்னும் தெளியவில்லை. ஒருவேளை தொடர்ந்து தராசு ஒரு பக்கமாகவே சாய்ந்ததனால் இருக்கலாம் அல்லது தொடர்ந்து வெல்பவர்களின் சரிவை காண்பதற்காக மனதில் நம்மையறியாமல் எழும் ஒரு ஆசையா என்று தெரியவில்லை. ஆனால் அவன் நிறுத்த முடியாத ஒரு சுழற்சியை தொடங்கி விட்டதாகவே தெரிகிறது. அதில் ஏற்றமும், இறக்கமும் சகஜம் என்பதையும் அவன் அறிந்திருப்பதாகவே தெரிகிறது. ஒரு திரைப்படத்தின் முடிவுபோல Part- 2 விற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருக்கின்றது.

எனது அம்மாவிற்காக மீண்டும் முதல் அத்தியாயத்தில் இருந்து தினமும் ஒன்று என வாசித்து காட்ட ஆரம்பித்துள்ளேன். அந்த மறுவாசிப்பில் மேலும் திறப்புகளை அடைவேன் என நம்புகிறேன். நல்லதொரு வாசிப்பனுபவம் வழங்கியமைக்கு நன்றிகள்.

நன்றி,

சரவணன் கிருஷ்ணமூர்த்தி

முந்தைய கட்டுரைஎழுதுபவனும் ஆசிரியனும்
அடுத்த கட்டுரைகஸகிஸ்தான், கடிதம்