அன்புள்ள ஜெ,
இது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். இந்த கடிதத்தின் மூலம் என் நன்றிகள் மற்றும் உங்கள் மீதுள்ள உள்ளாழந்த உணர்வுகளை முழுவதும் வெளிப்படுத்துவது இயலாத காரியம். உங்களை இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் சந்தித்து பேசியது என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று.
படுகளம் அதிபுனைவு வாசிப்பனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டி எழுதும் கடிதம் இது. கற்றலில் உள்ள இன்பத்தை நான் உங்கள் எழுத்தின் மூலம் தான் முதலில் உணர்ந்தேன். படுகளம் வாசிப்பு எனக்கு தந்த உணர்வெழுச்சிகள் மற்றும் என் கவனத்தை அது ஈர்த்த விதம் ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்த அனுபவத்தை காட்டிலும் பல மடங்கு பெரியது. என் பார்வை நோக்கில், இது உங்கள் முந்தைய அதிபுனைவு படைப்பான “ஆலம்“மை விடவும் அதிக ஈர்ப்பு உள்ளது. இது திரைப்படம் ஆவதற்கான எல்லா அம்சங்களும் உள்ளன.
இவ்வளவு சுவாரஸ்ய அம்சங்களுடன் அதில் இலக்கிய அம்சங்களான வாழ்க்கை பற்றிய தரிசனம் மற்றும் அவதானிப்புகளை சரியான கலவையில் சேர்த்தது உங்கள் படைப்பாற்றலின் உச்சம். உதாரணமாக, மனிதனுக்கு தனது அன்றாடங்களின் மீது உள்ள பற்று, மற்றும் ஏற்றத்தாழ்வின் பொழுது வரும் மனித உணர்ச்சிகள் என அதில் உள்ள ஆழ்ந்த பார்வைகள் வாசகனுக்கு எந்த சலிப்பும் அடையாமல் கடத்தும் முயற்சி மிக நன்று. இப்படி ஒரு படைப்பை இலவசமாக படிக்க கிடைக்க வைத்தமைக்காக என் ஆழ்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்ற படைப்புகள் மூலம் தமிழில் வாசிப்பு கனிசமாக கூடும் என நான் நம்புகிறேன்.
படைப்பு மற்றும் படைப்பாளிக்கு கொடுக்க வேண்டிய மரியாதை பற்றியும் உங்களிடம் இருந்து தான் கற்றுக்கொண்டேன். இலவசமாக கிடைத்த இந்த படைப்பை நூலாக பெற விஷ்ணுபுரம் பதிப்பகத்தில் அதற்கான தொகையை செலுத்திய பிறகு தான் ஒரு ஆனந்தம் வந்தது. உங்களின் இந்த சேவைக்கு மனமார்ந்த நன்றி.
அன்புடன்,
முத்துராமன்,
வேலூர்.