வெண்முரசு அனைத்து நூல்களும் வாங்க
பெருமதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,
வணக்கம்.
வாசிக்கும் ஆர்வத்துடன் இலக்கிய உலகில் நுழையும் ஆரம்ப கட்ட வாசகியான எனக்கு முதல் வாசிப்பாக வெண்முரசு அமைந்தது பூவை தேடித் சென்றவளுக்கு, பூந்தோட்டமே பரிசாக கிடைத்தது போல இருந்தது.எனது முதற்கனல் நாவல் வாசிப்பனுபவத்தை இத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
தங்களது மணிமஞ்ச இரவில் “உங்கள் உடல்நிலையில் என்ன பிழை?” என்று கேட்கும் அம்பிகைக்கு “என் உடலின் அநாகதத் தாமரையில் அனலில்லை. அங்கே என் பெருந்தாயார் சுனந்தையின் குளிர்ந்த கண்ணீர் தேங்கிக்கிடக்கிறது” என்கிறான் விசித்திரவீரியன்.முதற் கனலின் நீலத் தழல் சுனந்தையின் விழிநீர். அதுவே குருவம்சத்தின் மேல் விழும் முதற்பொறி.
சிபி நாட்டு இளவரசியான சுனந்தையை அஸ்தினபுரியின் அரசர் பிரதீபர் படை கொண்டு மீட்டு மணக்கிறார். சிபி நாட்டின் பாலை வெயிலுக்காக ஏங்கும் சுனந்தை, கோடைகால நதி போல வற்றி மெலிந்து பின் தன் தளர்ந்த முதிய வயதில் சூரிய வெளிச்சத்திற்கு அஞ்சும் தேவாபியையும், நோயாளியான சந்தனுவையும், யானையின் பலம் கொண்ட பால்ஹிகனையும் பெறுகிறாள்.தேவாபி மீது பேரன்பு கொண்டிருந்த பால்ஹிகன் தேவாபிக்கு இளவரசன் பட்டம் மறுக்கபட்டு அவன் கானேகிய பின் பட்டமேற்கும் சந்தனுவை வெறுக்கிறான். “எந்த நோய்க்குறையால் என் அண்ணன் அவமதிக்கப்பட்டானோ அதே நோய் என்றும் உன் குலத்தில் இருக்கட்டும். ஆணை! ” என்று சந்தனுவின் மேல் தீச்சொல்லிடுகிறான். இது இரண்டாம் பொறி.
தீச்சொல்லுக்கு அஞ்சிய சந்தனு, ஆரோக்கியமான சந்ததியைப் பெற வலிமையான கங்கர் குலத்தில் பிறந்த கங்காதேவியை மணந்து தேவ விரதனை மைந்தனாகப் பெற்றும் அவன் மூலம் சந்ததியை உருவாக்க முடியாமல் போவதற்கு அவன் சத்தியவதியின் மேல் கொண்ட பெருங்காமம் காரணமாகிறது. அதுவே மூன்றாம் பொறி.
சந்தனுவின் உயிர் பிரியும் வேளையில், “குருவம்சத்தின் முடிவு தொடங்கிவிட்டது. வெற்று இச்சை வீரியத்தை கோடைக்கால நதிபோல மெலியச்செய்கிறது. பலமிழந்த விதைகளை மண் வதைக்கிறது” என்று நிமித்திகனின் கூற்றாக அது மொழியப்படுகிறது.
பிறவி நூலில் யோனிகட்டமே இல்லாத சித்ராங்கதன், மருத்துவக்குடில்களிலேயே வாழும் விசித்திரவீரியன் ஆகிய சந்தனுவின் இரு மைந்தர்களின் மறைவுக்குப் பின் குரு வம்சம் முடிவுற்றது என்னும் நிலையில் மீண்டும் வம்சம் தழைப்பதற்கு காரணமாய் அமைகிறது, மச்சகுலத்துக் குருதி இன்னும் பல தலைமுறைகளுக்கு இந்த அரியணையில் இருந்து ஆளவேண்டும் என்ற பேரரசி சத்தியவதியின் பெருங்கனவு. ஆம். அதுவே முதற் கனலின் நான்காம் பொறி.
முதல் மூன்று தழல் பொறிகளும் குரு வம்சத்தின் அழிவிற்கு வித்திட்டன. ஆனால் நான்காம் பொறியோ, சக்ரவர்த்தினியின் கனவு. பாரதவர்ஷத்தை ஆயிரம் வருடங்களை முன்னோக்கிச் சென்று பார்க்கும் கண்கள் அவளுடையது.அதுவே மாவீரர்களையும் அறத்தின் தலைவர்களையும் குருவம்சத்தில் பிறப்பிக்கிறது.மீண்டும் துளிர்க்கும் குரு வம்சத்தின் வித்தாக அமைவது வியாசரின் காமமும் அகங்காரமும். இதுவே இறுதிப்பொறி.அது திரண்டு முதிர்ந்து முத்தாகி உதிர்ந்து விதையாகி முளைத்த வனமே குருஷேத்ரம். குருஷேத்ரத்தில் நடந்து கொண்டிருந்தது மானுடத்தின் மீதான மாபெரும் வெற்றியின் உண்டாட்டு.
ஆம். இவ்வாறு குருவம்சத்து மன்னர்களின் வாழ்க்கை என்னும் நிகழ்வு, காமம் அகங்காரம் என்னும் ஆதிப் பெரும் விசை அவர்களுடன் நிகழ்த்திய பகடையாட்டமே என்பதாக முதற்கனல் நாவல் விவரிக்கிறது.இந்நாவலில் பேரரசி சத்யவதி, மஹா வியாசர், பிதாமகர் பீஷ்மர்,கொற்றவை அம்பாதேவி,ஆகியோர் முக்கியமான கதை மாந்தர்களாக வருகிறார்கள்.
மச்சகுலத்துக் குருதி குரு வம்சத்தை ஆளவேண்டும் என்ற மாபெரும் கனவுடன் அரசர் சந்தனுவை மணந்து பாரதவர்ஷத்தின் விதியை சமைக்க விழைகிறாள் பேரரசி சத்யவதி.தன் மூத்த மைந்தன் சித்ராங்கதனின் மறைவுக்குப் பின் ஆட்சி பொறுப்பை ஏற்கும் சத்யவதி, நோயாளியான தன் இளைய மைந்தன் விசித்திரவீரியனை அரியணை ஏற்ற காசி நாட்டு இளவரசிகளை கவர்ந்து வர பீஷ்மரை பணிக்கிறாள்.
உயிர் ஆற்றல் குறைந்து இருக்கும் விசித்திர வீரியனை அவன் மனைவி அம்பிகையுடன் கூட ஆணையிடுகிறாள். “உங்களுக்கு நான் யார்? சந்தனுவின் வம்சத்தை ஏற்றிச்செல்லும் வாகனம் மட்டும்தானா?” என்று கேட்கும் மைந்தனிடம் “ஆம், அது மட்டும்தான். நீ வெறும் விந்தின் ஊற்று மட்டும்தான். உன்னிலிருந்து எவ்வகையிலேனும் ஒரு சிறுமைந்தனைப் பெறவேண்டுமென்பதற்கு அப்பால் இன்று நீ எனக்கு எவ்வகையிலும் பொருட்டல்ல” என்று கொடுஞ்சொல்பேசுகிறாள்.
பின் விசித்திரவீரியன் மறைவுக்குப் பின் பீஷ்மரிடம் ” என் மகன் விசித்திரவீரியன் அன்றி எவரையும் நான் ஆணாக எண்ணியதில்லை. அவன் புன்னகையை அன்றி எதையும் நான் எனக்குள் கனவாக நிறைத்துக்கொண்டதுமில்லை” என்று அன்னையாக மனமுருகுகிறாள்.மீண்டும் குருவம்சம் தன் குருதி வழி தழைக்க, பராசர முனிவருக்கு தன்னில் பிறந்த வியாசரை அழைக்கிறாள். குலம் மீண்டும் தழைக்கிறது.
குருகுல வம்சத்தை நீடிக்கச் செய்து, அதன் விளைவாக நிகழ்ந்த குருச்சேத்ர போரின் தாக்கங்களிலிருந்து விலக முடியாமல் பாரதவர்ஷமெங்கும் அலைந்து திரிந்து குமரிமுனையில் நெடுந்தவ அன்னையின் ஒற்றைக்காலடி படிந்த பாறையுச்சியில் யோகத்திலமர்ந்து
‘மா’ என்ற முதற்சொல்லை கண்டடைந்து பின், தன் அகத்திலிருந்த ஒற்றைச்சொல்லில் இருந்து மீதி அத்தனை சொற்களும் பிறந்து வந்து அவர் சித்தத்தை நிறைக்க, ஓங்காரமே முதல்சொல்லாகவும் கடைசிச்சொல்லாகவும் அமையப்பெற்ற ‘ஸ்ரீஜய‘ எனும் பெருங்காவியத்தை இயற்றி மானுட குலத்திற்கு அளிக்கிறார் மகா வியாசர்.
பாரதவர்ஷத்தின் பெரும் சக்ரவர்த்தினியான அஸ்தினபுரியின் தேவயானிக்கு நிகரானவள் என்று நாவலில் அறிமுகம் கொள்கிறாள் அம்பா தேவி.நெய்யுண்ட வேள்விச்சுடர் போல சுயம்வரப் பந்தலில் தோன்றும் அம்பை, சால்வனுக்கு மாலையிட காத்திருந்த வேளையில், பீஷ்மரால் அஸ்தினபுரிக்கு கவர்ந்து செல்லப்படுகிறாள்.காசியிலிருந்து அஸ்தினபுரிக்கு பயணிக்கும் வேளையில், கனலாக கொதித்தெழும் அம்பை, தான் சால்வனை விரும்புவதால், தன்னை விடுவிக்க கோரி பீஷ்மரிடம் சண்டையிட்டு சௌப நாட்டிற்கு திரும்புகிறாள்.சால்வன் அவளை ஏற்க மறுத்து, ‘நீ விரும்பினால் என் அந்தப்புரத்தில் வாழமுடியும்‘ என்று சொல்ல
மிதிபட்ட ராஜநாகம்போல சீறும் அம்பை, பொன்னிற நாகமென சொடுக்கிச்சுழன்று தாய் நாடான காசிக்கு செல்கிறாள். அம்பையை தந்தையும் ஏற்க மறுக்க, பீஷ்மர் மேல் தான் காதல் கொண்ட தருணத்தை விருஷ்டி எனும் தேவதை மூலம் உணரும் அம்பை மெல்லிய நடையும், உடல்பூத்த சலனங்களும், செவ்வாழைமெருகும் கொண்டவளாக அஸ்தினபுரி நோக்கி பயணிக்கிறாள்.பீஷ்மர் அவளை உறுதியாக மறுக்க,கழுத்து வெட்டுண்ட சடலம்போல தள்ளாடியவவளாக மெல்ல திரும்பி நடக்க, அவளுக்குப்பின்னால் சிதையில் இதயம் வேகும்போது எழுந்தமரும் பிணம்போல பீஷ்மர் மெல்ல அசைய, அதன் ஒலியிலேயே அனைத்தையும் உணர்ந்தவளாக, காதல் பெண்ணில் உருவாக்கும் அனைத்து அணிகளையும் அணிந்தவளாக, அவளுடைய கன்னியழகின் உச்சகணத்தில் அங்கே நிற்க, ஒரு மெல்லிய ஏளனச்சுழிப்பு பீஷ்மர் உதடுகளில் நிகழ்கிறது.
அதைக்கண்டதும் வெண்பனி நெருப்பானதுபோல, திருமகள் கொற்றவையானதுபோல உருமாறும் அம்பை, “இம்மண்ணிலுள்ள மானிடர்களிலேயே கீழ்மையானவன் நீ. உன் முன் இரந்து நின்றதனால் இதுவரை பிறந்தவர்களிலேயே கீழ்மகள் நான். ஆயிரம் கோடி முறை ஊழித்தீ எரிந்தாலும் இக்கணம் இனி மறையாது.” என்று சன்னதம் கொண்டெழும் மயான சாமுண்டியின் பேரோலத்துடன், கிளம்பிச் செல்கிறாள்.
வனம் சென்று தவத்தில் ஆழ்ந்திருந்த பரசுராமரிடம் பீஷ்மரை வீழ்த்த உதவி கோருகிறாள்.பரசுராமரால் பீஷ்மரை வீழ்த்த முடியாமல் போகவே,ஒற்றைக்கால் விரலில் நின்று தவம் செய்து பீஷ்மனைக்கொல்லும் வரம் கேட்டு மும்மூர்த்திகளின் வாசல்களையும் முட்டுகிறாள்.தன் நுனிவிரலால் காட்டை எரித்து ஐந்துதிசை நெருப்புக்கு நடுவே நின்று சிவனை நோக்கி தவம் செய்கிறாள்.அவள் தவம் கண்டு இறங்கிவந்த சிவனும் ” உன் கனலை முற்றிலும் பெறுபவன் எவனோ அவனால் பீஷ்மன் கொல்லப்படுவான்’ என்று அவளுக்கு வரம் அளிக்கிறார்.
உடலே சிதையாக ஆன்மா எரிய அம்பை அங்கிருந்த மலைமீதேறிச் செல்லுகிறாள். அவள் கால்பட்ட இடங்களெல்லாம் கோயில்கள் எழுகின்றன. அவள் வந்த கோட்டைவாயில்களில் விழித்த கண்களும் செந்நிற உடலுமாக வராஹிக்குமேல் ஆரோகணித்து காவல்தெய்வமாக நின்றிருக்கிறாள்.
பீஷ்மரின் அழிவை நிகழ்த்த உருக்கொண்ட கனல் அம்பை. தாட்சயணியின் ஒரு துளி. அவளது கனலை முழுவதுமாக ஏந்தி பீஷ்மரை அழிப்பதையே ஒற்றை இலக்காகக் கொண்டு தொடர்கிறான் சிகண்டி.
ஒரு கணமேனும் தன்னைப்பற்றி நினையாதவர்களுக்கு மட்டுமே உரிய, கருணை நிறைந்த புன்னகை கொண்டிருக்கும் மனிதராக பீஷ்மர் அறிமுகம் கொள்கிறார்.ஷத்ரிய தர்மமே தன் தர்மம் என வாழ்ந்து தந்தையின் நலனுக்காகநைஷ்டிக பிரமச்சாரியம் ஏற்று தவசீலர்களுக்குரிய வாழ்க்கையை வாழுகிறார்.நாட்டு மக்களின் நலனுக்காக, சிற்றன்னையின் ஆணையை மறுசொல் இல்லாமல் ஏற்று மானுட தர்மத்தை மீறி அரண்மனை சிறுமிகளை கவர்ந்து வந்து மன உளைச்சலுக்கு ஆளாகிறார்.அம்பை தன் மனதை விரித்து, தாகத்தை விரித்து தன் முன் நிற்கும் போது, அவரது உள்ளுக்குள் இருந்த ஆமை கால்களையும் தலையையும் இழுத்துக்கொண்டு கல்லாகிறது.
குழந்தையின் உள்ளும் புறமும் அறிந்த அன்னையாக அம்பை நின்றிருக்க, முற்றிலும் திறந்தவராக அவள் முன் ஒரு கணம் நிற்கிறார். அதற்குள் பழகிய அகந்தை சுண்டப்பட்டு கீழே விழும் நாணயம் இறுதிக்கணத்தில் திரும்புவதுபோல நிலைமாறி அவளை மறுக்கிறார்.பின் இமய மலை அடிவாரத்தில், சப்த சிந்துவின் கரையில் அமைந்த ஒரு சிறு கிராமத்தில் தன்னை மணக்க விழைந்த பெண்ணிடம்
“பெண்ணின் அன்பைப்பெறாதவன் பிரம்மஞானத்தால் மட்டுமே அந்த இடத்தை நிறைத்துக் கொள்ளமுடியும். நான் இரண்டுக்கும் தகுதியற்றவன். பழிசூழ்ந்தவன்” என்கிறார்.பிரியதர்ஷினி நதியில் அவரது மூத்தோர் எட்டு பேரைக் கண்டபின் அவரது தனிமை எட்டுமடங்கு அழுத்தம் கொண்டதாக மாறுகிறது.தன் சுயத்தை முழுவதுமாக அழித்து, அன்னையும், தந்தையும், குலமும், தேசமும், தான் கற்ற நெறிகளும் இணைந்து தன்னை வடிவமைக்க அனுமதித்து, அதன் வழியாக தான் புனைந்த வாழ்க்கையை மட்டுமே வாழ்கிறார் பீஷ்மர்.தன் தியாகத்தை தானே மெச்சிக் கொண்டு அனந்தன் எனும் யானத் தைலத்தில் தன் பிம்பமாக புருவை பார்க்க விழைந்து யயாதியை கண்டபோது உண்மையில் தான் யார் என்பதை அறிந்து கொள்கிறார்.
வியாசரை சென்று சந்திக்கும் வேளையில் முதல்முறையாக தன்னைச்சூழ்ந்திருந்த அழியாத்தனிமை முற்றிலும் கரைய, இன்னொரு மனித உயிரிடம் பேரன்பை உணர்கிறார். ஆம். அவர் தன் கவசம் அனைத்தையும் கழற்றி வைத்து விட்டு தான் மட்டுமே ஆகி இருந்த ஒரு தருணம் அது.
உணர்வு கொந்தளிப்புகளுக்கு இடம் கொடாது தெளிவும் உறுதியும் தொலை நோக்கு பார்வையும் கொண்ட பேரரசி சத்யவதி, அனலை கழலென அணிந்த பாய் கலை பாவை கொற்றவை அம்பாதேவி, தியாகத்தின் பெரு உருவாகத் திகழ்ந்த பிதாமகர்
பீஷ்மர் போன்ற பெரும் கதை மாந்தர் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்த கதா பத்திரம் விசித்திர வீரியனே.
இரவுக்குள் உயிர் துறப்பது உறுதி என்று அறிந்ததும், தன் அன்னையை, தன் தமயனை அணு அணுவாக பார்த்து, தான் உண்ட இனிய உணவுகளை, பார்த்த அழகிய மலர்களை, கேட்ட இனிய இசையை ஒவ்வொன்றாக எண்ணிக்கொண்டு ஓவ்வொரு கணமாக செலவிடும் அந்த நான்கு வயது குழந்தை.
பின் அந்த இரவு கடந்ததும் ‘நான் இருக்கிறேன்‘ என்பதையே ஆப்த வாக்கியமாகக் கொண்டு ஞானத்தில் கனிந்து, மேலும் ஒரு நாள், மேலும் ஒரு நாள் என்று ஒவ்வொரு நாளும் அகம் நிறைந்து பதினான்கு வருடம் மரணத்தைக் கண்டு அஞ்சாது வாழும் சிறுவன் .
அம்பை நகர் நீங்கிய செய்தி அறிந்து அவளைத் தேடிச் சென்று “என் குலம்செய்த பெரும்பிழைக்காக என்னை பலிகொள்ளுங்கள் அன்னையே!” என்று தலை தாழ்த்தும் இளைஞன்.
அம்பையை எற்றுக்கொள்ளாது அவமானப்படுத்திய பீஷ்மரை கொல்ல விழைந்து, உருவிய வாளுடன் அவரின் ஆயுத சாலைக்குள் நுழையும் வீரன்.
பின் “இல்லை எந்தக் கொலையையும் என்னால் செய்யமுடியாது. உயிரின் மதிப்பென்ன என்று தெரிந்தவன் என்னைவிட வேறு யார் இருக்கிறார்கள், என் தாதனை எப்படி கொள்வேன்?” என்று மனமுருகும் பித்தன்.
“இந்த மெலிந்த தசைகளில் நின்று துடிக்கும் உயிரின் நோக்கம்தான் என்ன? இதன் வழியாக சென்றுகொண்டிருக்கும் ஆன்மாவின் இலக்கு என்ன? ” என்று தன் உடல் அனைத்து உயிர் ஆற்றலையும் இழந்து விட்ட நிலையிலும் வீரியம் கொண்ட உள்ளத்துடன் உயிர் துடிக்கக் கேட்கும் ஆன்ம சாதகன்.
ஆண்களின் கண்களில் எப்போதும் எரியும் வேட்கை, அதன் சுவாலை விலகினால் தெரியும் புறக்கணிப்பின் ஏளனம் என இவை இரண்டும் இல்லாத, தாய்மை நிறைந்த விழிகள் கொண்டவன்.
அதனால் ஆடைகளைக் கழற்றிவிட்டு அருவிக்குக் கீழே நிற்பவள்போல அம்பிகையை தன் முன் அகம் திறந்து நிற்க வைத்தவன்.
அம்பிகையுடன் கூடினால் உயிர் துறப்பது உறுதி என்று அறிந்தும் அன்னையின் ஆணைக்கு அடி பணிந்து, அம்பிகையை அணைந்து மஞ்சத்திலேயே உயிர் துறந்தவன்.விரல்நுனியில் ஒற்றியெடுத்த பனித்துளி, நிலையற்று ஒளிவிடுபவன், தூயவன், அரியவன். இந்நாவலின் நாயகன் அவனே.
முதலும் முடிவுமற்ற கற்பனையும் கனவும் ஊழ்கமும் எட்டமுடியாத பெரும் வளையமாக தன் வாலை தன் வாயால் விழுங்கி அசைவற்று கிடைக்கும் அந்த இருள் நாகத்தின் அகத்தில் எழும் விழைவு, அதன் ஒளிமிக்க கண்களான அந்த ஆதிப்பெரும் விசை, அதன் விளையாடலே இப்பிரபஞ்சம் என்பதாகத் தொடங்கும் இந்நாவல்,
நாகங்கள் காமம் அகங்காரம் என்னும் ஆதி இச்சைகளின் பருவடிவங்கள் என்பதை அறிந்து, அமைதியை வேண்டி நாகங்களை அழிக்க விழைந்து குரு குலத் தோன்றல் ஜனமேஜெயன் நடத்தும் சர்பசத்ர வேள்வியில் அனைத்து நாகங்களும் அவியளிக்கப்பட்ட பின்னும் ஆஸ்திக முனியின் வேள்விக் கொடையாக எஞ்சும் தட்சன்
பாதாளத்தின் இன்மையின் மையத்தில் தட்சககியுடன் ஒன்பது யோக நிமித்தங்களுடன் சங்கமிக்க, அங்கிருந்து இருள் மீண்டும் பெருநதிகளாகக் கிளம்பி, விண்ணின் ஒளியுடன் கலந்து பின்னி பெருவெளியை நெய்து, நிழல்களாக உயிர்களைத் தொடர்ந்து, கனவுகளாக உயிரில் கனத்து, இச்சையாக எண்ணங்களில் நிறைந்து, செயல்களாக உடலில் ததும்பி, சிருஷ்டியாக பரவுகிறது என்பதாக நிறைவு கொள்கிறது.
நன்றியுடன்,
அருணா.