அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்
சென்ற வருடம் தூரன்விருது விழாவிற்காக ஈரோடு வழக்கறிஞர் செந்தில் அவர்களுக்கு சொந்தமான கல்யாண மண்டபத்திற்கு சென்றிருக்கையில் மண்டபத்துக்கு நேர்எதிரில் மிக அழகிய நடுத்தர உயரத்திலான ஒரு மரம் நின்றது.. அதை முதன் முதலாக அன்றுதான் பார்த்தேன் . அது Conocarpus lancifolius என்னும் சோமாலியாவை சேர்ந்த மரம்.
அதன் கனிகள் ஒரு கூம்பைப்போல அமைந்திருப்பதால் அதற்கு கோனோகார்பஸ் என்று பேரினப்பெயர். கார்பஸ் என்றால் கனிகள் என்று பொருள் கோன் போல கனிகள் என்ற பொருளில் இருக்கும் இந்த பேரினத்தில் இரண்டே இரண்டு சிற்றினங்கள் தான் இருக்கின்றன . லேன்சிஃபோலியஸ் மற்றும் எரெக்டஸ். லேன்சிஃபோலியஸ் என்பது நீளமான கூர் நுனிகொண்ட இலைகளை குறிக்கிறது. எரெக்டஸ் என்றால் நேராக நிமிர்ந்து வளர்கின்ற என்று பொருள் இது சதுப்பு நிலங்களில் வளரும் பல தண்டுகளை கொண்ட அடர்த்தியான புதர்ச்செடி
கோனோகார்பஸ் லேன்சிஃபோலியஸ் மரத்தை நேற்று பெங்களூரில் தருண் இன்னும் இரண்டுவருடம் படிப்பின் பொருட்டு இருக்கப்போகும் ஒரு அடுக்கத்தின் வாசலிலும் மேலும் அதிக இடங்களிலும் பார்த்தேன் பெங்களூர் முழுக்க இதை அலங்கார செடியாக வளர்க்கிறார்கள்.. கற்பகம் பல்கலைக்கழகத்திலிருந்து துவங்கும் சேலம் பெங்களூர் பைபாஸ் சாலையில் இருக்கும் ஒரு உணவகத்தின் வாசலிலும் ஏராளமான மரங்கள் நட்டு வளர்க்கப்படுகின்றன
இந்த கோனோகார்பஸ் போல மிக வேகமாக வளரும் அயல்நாட்டு தாவரங்கள் இயல் மரங்களுக்கும் சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலை அளிப்பவை. இப்படித்தான் நமக்கு ஆகாயத்தாமரை பிரிடிஷ் இந்தியாவில் அறிமுகமானது இப்படித்தான் உண்ணிச்செடி என்னும் லண்டானா அறிமுகமாகி இப்போது அழிக்கவே முடியாத ஆக்கிரமிப்பு களையாகி விட்டிருக்கிறது இப்படியேதான் நெய்வேலி காட்டாமணக்கும், சீன கரிசலாங்கண்ணியும் இன்னும் பலவும் ஆக்கிரமிப்பு களைகளாகி விட்டிருகின்றன
ஈரோடு மலை தங்குமிடத்தில் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் என் மாணவிகளுடன் நான் அங்கு அடிக்கடி செல்கிறேன். சில வருடங்களாக அந்த பிரதேசம் முழுக்க மிக அதிகமாக பல்கிப்பெருகி கொண்டிருகிறது சீமைக்கொன்றை எனப்படும் Senna siamea மரம். இதன் இலைகளை விலங்குகள் உண்ணுவதில்லை என்பதை விஷ்ணுபுரம் குழுவில் இருக்கும் கால்நடை மருத்துவர் பவித்ரா தெரிவித்தார். இதன் கனிகள் ஏராளமான விதைகளுடன் வெடித்து பரவி சூழலில் பெரும் அச்சுறுத்தலாக உருவாகிக் கொண்டிருக்கிறது. நம்மால் கட்டுப்படுத்த முடியாத பார்த்தீனியத்தை போல இதுவும் இன்னும் சில வருடங்களில் உருவெடுக்கப் போகிறது
இந்த கோனோகார்பஸ் மரத்திலிருந்து கொஞ்சம் கோந்தும் பார்பிக்யூ அடுப்புகளுக்கான் கரிக்கட்டையும் கிடைக்கின்றது பார்க்க அழகிய தோற்றம் கொண்டிருக்கிறது. அவ்வளவுதான், ஆனால் இதன் ஏராளமான மகரந்தங்கள் மனிதர்களுக்கு சுவாசக்கோளாறுகளையும் மேலும் பல ஒவ்வாமைகளையும் உண்டாக்குகின்றன. இவற்றின் வேர்கள் நிலத்தடி நீரை வெகுஆழம் வரைசென்று உறிஞ்சுகின்றன. பல வளைகுடா நாடுகளிலும் குஜராத்திலும் இதன் ஆபத்தை உணர்ந்து இதை வெட்டி அகற்றி கொண்டிருக்கிறார்கள்.ஆனால் இந்தியாவின் பல பகுதிகளில் இதை வாங்கி நட்டுவைத்து நீரூற்றி வளர்த்து கொண்டிருக்கிறார்கள்
அரசு இதுபோன்ற அதீத வளர்ச்சி கொண்ட தாவரங்களை இறக்குமதி செய்வதை ,அவற்றின் பரவலை, வளர்ச்சி வேகத்தை எல்லாம் தாவரவியலாளர்களின் குழுவொன்றை அமைத்து கட்டாயம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்தாவரங்களின் பரவலை சட்டபூர்வமாக தடுக்கும் குவாரண்டைன் இந்தியாவில் மிக மெத்தனமாக தான் நடக்கிறது.
இந்தியாவில் இந்த botanical illiteracy இப்போது மிக அதிகமாக இருக்கிறது. ஒரு மரம் வேகமாக வளரும் என்றால் அதை உடனே தருவித்து அலங்கார மரமாக வளர்க்க தொடங்கிவிடுகிறார்கள். அயல்மரங்களை வளர்க்கும் முன்பாக அதன் தாவரவியல் பண்புகளை அறிந்துகொள்வது மிக மிக அவசியம்.கவலையளிக்கிறது இந்த மரங்களின் பரவல்.
அன்புடன்
லோகமாதேவி