வணக்கம் ஜெ
கடந்த மார்ச் மாதம். தமிழ் விக்கியில் என்னைப்பற்றியான கட்டுரையை நேரம் எடுத்து வெளியிட்டுள்ளார் நண்பர் அ பாண்டியன். எந்த தனிபட்ட விருப்பு வெறுப்பு இல்லாமல் தமிழ் விக்கி பயணிக்கும் என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள், அதை நானும் நம்பி இருந்தேன். ஆனால், கட்டுரைக்கு கீழே, வல்லினத்தில் என்னைத் தாக்கி எழுதப்பட்ட விமர்சன இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
ஒருவரின் சிறந்த செயல்பாடுகளை முழு கட்டுரையிலும், இணைப்பில் தனிப்பட்ட ஒருவரின் இணைப்பை வைக்க வேண்டிய அவசியம் என்ன ? என்னப்பற்றி இணையத்தில் பல நல்ல செய்திகளும் இடம்பெற்றுள்ளன. அதனைச் சேர்த்து இணைத்திருக்கலாமே ?
நான் மலேசியத் தகவல் அமைச்சில் 20 ஆண்டுகளாகப் பணி புரிகிறேன். அரசியலில் இருந்திருக்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்தின் வழி, இளைஞர்கள் எழுத, வாசிக்கப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். அதன் இணைப்புகளையோ அல்லது, நாங்கள் மதுரைத் தமிழ்ச்சங்கத்தோடு நடத்திய மலேசிய அறிமுக எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு விழாவைப் பற்றியோ இணைப்பைக் கொடுத்திருக்கலாம்.
என் தந்தையார் கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி, அவர் காலத்தில் பல கவிஞர்களை உருவாக்கினார். மூத்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் மறைவிற்குப் பின்னர், மலேசிய எழுத்துச்சூழலில் புதிய அல்லது அறிமுக எழுத்தாளர்கள் உருவாகி 20 ஆண்டுகளாகி விட்டன. இதற்கு காரணம் தனிமனித தாக்குதல் நிறைந்த விமர்சனங்கள்.
பல தமிழ் விக்கி, கட்டுரைகளில் ஏன் வல்லினப்பக்கத்தின் விமர்சங்கள் அல்லது கட்டுரைகள் மட்டும் மேற்கோளாக வைப்படுகின்றன என்பது எனக்கு விளங்கவில்லை.
அன்பின் ஜெ. எனக்கென்று ஒரு சுயமரியாதை உள்ளது. தயவு செய்து உங்கள் தமிழ் விக்கியில் உள்ள எனது கட்டுரையை நீக்கவும். நன்றி.
பொன் கோகிலம்
அன்புள்ள பொன் கோகிலம்,
உங்கள் கடிதம் இப்போதுதான் என் கவனத்துக்கு வந்தது. பயணங்களில் இருந்து இன்றுதான் மீண்டு வந்தேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
தமிழ் விக்கிக்கு சில கொள்கைகள் உள்ளன. அவற்றை தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறோம். அதிலொன்று எங்களுடையது ‘தானியங்கி’ தன்மை கொண்ட ஒரு தகவல்வலைத்தளம் அல்ல என்பதுதான். விக்கிப்பீடியா பொதுவான தகவல்வலைத்தளங்கள் அப்படித்தான் செயல்படுகின்றன. அவற்றில் அவற்றுக்கென ஓர் அளவுகோல், மதிப்பீடு இருக்க முடியாது. ஏனென்றால் அவை பொதுவானவை. ஆகவே அவற்றில் தகவல்கள் எப்படி எவரால் அளிக்கப்பட்டாலும் வெளியாகும். அவை வெளியிடுபவரின் நோக்கம், மதிப்பீடு சார்ந்தவையாக இருக்கும். விக்கிப்பீடியாவில் இன்னொருவர் வந்து அதை மாற்றியமைக்கவும் முடியும்.
பெரும்பாலும் இத்தகைய தானியங்கித் தளங்களில் நாம் எப்படி நம்மைப் பற்றி நினைக்கிறோமோ அப்படி நாமே எழுதி வெளியிடலாம். ஆகவேதான் அவை பெரும்பாலானவர்களால் ஏற்கப்படுகின்றன. ஆனால் நுகர்வோருக்கு அதனால் பயனில்லை. ஏனென்றால் எல்லாருக்கும் அதிபுகழ்ச்சிதான் அதில் இருக்கும். அல்லது வெறும் தகவல்கள் இருக்கும்.ஒருவர் எந்த தளத்தில், எந்தவகையான பங்களிப்பை ஆற்றியுள்ளார் என்பதற்கான ஒரு புரிதலை அடைய முடியாது.அந்த புரிதல் அமையாவிட்டால் அந்தப் பதிவால் அறிவியக்கத்தில் இருப்பவர்களுக்கு பயனில்லை.
பொதுவான தரவுத்தளங்கள் போதும் என நினைப்பவர்கள் உண்டு, அவர்கள் அவற்றை பயன்படுத்தலாம். கூடுதலாக ஒரு புரிதல் வேண்டும் என விரும்புபவர்களுக்காகவே தமிழ்விக்கி தொடங்கப்பட்டது. அவ்வாறே நடைபெற்று வருகிறது. ஆர்வமிருந்தால் இதிலுள்ள பிற பதிவுகளை நீங்கள் பார்க்கலாம். அவற்றிலுள்ள முழுமையான பார்வை, முழுமையான தரவுகள், தெளிவான மதிப்பீடு உங்களுக்குத் தெரியவரும்.
இது நீங்கள் உங்களைப் பற்றி நினைப்பதை அப்படியே உங்கள் கோரிக்கைப்படி பதிவுசெய்யும் தளம் அல்ல. அனைவருக்கும் பொதுவான ஓர் அளவுகோல் தமிழ்விக்கிக்கு என உண்டு. தமிழ்விக்கியில் ஓர் ஆசிரியர் குழு உள்ளது. ஒரு நிபுணர் மதிப்பீடுக்குப் பின்னரே கட்டுரைகள் வெளியாகின்றன. அவை ஒரு மதிப்பீட்டை முன்வைக்கின்றன. இந்த மதிப்பீட்டை ஏற்பவர் இந்த தளத்தை பயன்படுத்தலாம். மற்றவர்கள் இதை நிராகரிக்கலாம். நாங்கள் ஏன் அறிவியல், வரலாறு சார்ந்த தரவுகளை வெளியிடவில்லை என்றால் இன்னும் அத்துறைகளில் எங்களுக்கு நிபுணர்குழு இல்லை என்பதனால்தான்.
எங்கள் அளவுகோலை ஓர் அரசியல் பார்வை, ஒரு சமூகவியல் பார்வை, ஒரு அழகியல் மதிப்பீடு சார்ந்து அமைத்துக் கொள்ளவில்லை. அதையே ‘சார்பின்மை’ என குறிப்பிடுகிறோம். எங்கள் அளவுகோல் அறிவியக்கத்துக்கான பொதுவான பங்களிப்பு, படைப்பிலக்கியப் பங்களிப்பு, சமூகப்பணி பங்களிப்பு ஆகிய மூன்றின் அடிப்படையில் அமைகிறது. இவற்றை மதிப்பிட அறிவியக்கத்தின் முதன்மைத்தரப்புகள் (peer circle) என்ன சொல்கின்றன என்பதை கருத்தில்கொண்டு எங்கள் நிலைபாட்டை எடுக்கிறோம்.
இந்தத் தளத்தில் வெளிவந்துள்ள பதிவுகளை பார்க்கலாம். சுந்தர ராமசாமி குறித்த மிகவிரிவான பதிவு உள்ளது. அவருடைய பங்களிப்பு முதன்மையாகச் சொல்லப்படுகிறது கா.சிவத்தம்பி அவருக்கு நேர் எதிரான நோக்கு கொண்டவர். அவருக்கும் அதேபோல விரிவான பதிவு, மதிப்பீடு உள்ளது. இவர்கள் இருவருக்கும் நேர் எதிரான தரப்பைச் சேர்ந்த இலக்குவனார் அதேயளவுக்கு இடம்பெறுகிறார். இதுதான் எங்கள் விருப்பு வெறுப்பின்மை.
ஆனால் சுந்தர ராமசாமி வேறு ஆர்வி வேறு என்ற தெளிவு எங்களுக்கு உண்டு. ஆர்விக்கும் சுந்தர ராமசாமியை போற்றுவதுபோல ஒரு பதிவு தேவை என்று ஆர்வி தரப்பினர் சொன்னால் அதை எங்களால் ஏற்க முடியாது. உறுதியான மறுப்பே எங்களிடமிருந்து வரும். ஆர்வி வணிக எழுத்தாளர் மட்டுமே. கல்கி பற்றிய விரிவான செய்திகள், அவருடைய எல்லா நாவல்களைப் பற்றிய குறிப்புகள், அவருடைய தேசிய இயக்க பங்களிப்பும் இதழியல் தலைமைத்துவமும் பதிவாகியுள்ளபோதே அவருடைய இலக்கிய இடமும் மதிப்பிடப்பட்டுள்ளதை பார்க்கலாம்.
இலக்குவனார் எவரும் அதிகம் அறியாத ஆளுமை, அவருக்கு தமிழ் விக்கி அளிக்கும் இடம் அதே தரப்பைச் சேர்ந்த எஸ்.எஸ்.தென்னரசுவுக்கு அளிப்பதில்லை, தென்னரசு முக்கியமானவர், ஆனால் அவருடைய பங்களிப்பு ஒரு படி குறைவானதே. இந்த நுணுக்கமான மதிப்பீடுதான் இன்று அறிவியக்கத்தில் செயல்படவேண்டிய ஒருவர் அறியவேண்டியது. இருவருக்கும் ஒரே வகையான பொத்தாம்பொதுவான வரிகள் அல்ல. உங்கள் தந்தை பற்றிய உணர்வுகளை புரிந்துகொள்கிறேன், மகளுக்கு அறிவியக்கவாதியான தந்தை மீதிருக்கும் இத்தகைய மதிப்பு தமிழ்ச்சூழலில் அரிதானது. ஆனால் இக்கோணத்தில் பின்னராவது யோசிப்பீர்கள் என நினைக்கிறேன்.
தமிழ்ச்சூழலில் அனைவரும் அஞ்சுவது மதிப்பீட்டைத்தான். எந்தவகையான மதிப்பீடும் இங்கே வெறுக்கப்படுகின்றன. புகழ்மொழிகள் அன்றி எதுவுமே ஏற்கப்படுவதில்லை. தமிழ்விக்கி மீது இருக்கும் அச்சமும் ஒவ்வாமையும் எங்கள் மதிப்பீடுகளால்தான். ஆனால் எங்கள் மதிப்பீடுகளே எங்கள் பங்களிப்பு. ஆகவே அந்த ஒவ்வாமைக்குரல்களை நாங்கள் பொருட்படுத்தவில்லை.
இந்த மதிப்பீட்டில் மூன்று மேலதிக விளக்கங்கள் உண்டு.
அ. மையக்கட்டுரையில் மட்டுமே எங்களுடைய பார்வையும் மதிப்பீடும் இருக்கும். எங்கள் மதிப்பீட்டுக்குழு அதையே ஆய்வு செய்யும். இணைப்புகளில் இங்குள்ள சூழலில் என்னென்ன பேசப்பட்டுள்ளன என்பதை பொதிவாகத் தொகுத்து அளிக்கிறோம். அவை பலநூறு பக்கங்கள் நீள்பவை. இது பொதுவான மேலதிக வாசிப்புக்காக. இணைப்புகளிலுள்ளவை எங்கள் கருத்துக்கள் அல்லது எங்களுக்கு ஏற்புடைய கருத்துக்கள் அல்ல. சில கட்டுரைகளுக்குக் கீழே நூற்றுக்கும் மேல் இணைப்புகள் உள்ளன. ஆனால் இந்த இணைப்புகளில் பொருட்படுத்தத் தக்க இணையப்பக்கங்களே கருத்தில் கொள்ளப்படும். வெறுமே வம்புச்சண்டைகளில் ஈடுபடும் தரப்புகளை கருத்தில் கொள்வதில்லை.
ஆ. கட்டுரையில் ‘விவாதங்கள்’ என்னும் பகுதி உண்டு. அவற்றில் இலக்கியம், அறிவியக்கம் சார்ந்த விவாதங்களையே கருத்தில்கொள்வோம். தனிநபர் விவாதங்கள், வசைபாடல்கள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. அறிவியக்கவாதி ஒருவர் அறிந்துகொள்ளவேண்டிய விவாதங்கள், எதிர்காலத்திலும் வாசகர்களுக்கு முக்கியமானவை அப்பகுதியில் இருக்கும். உதாரணமாக எஸ்.வையாபுரிப் பிள்ளை பற்றிய கட்டுரையில் அவருக்கு வந்த எதிர்ப்புகள் விவாதங்களில் பதிவாகியுள்ளன. ஏனென்றால் அவை வரலாற்றுப்பதிவுகள்.
ஈ. இளைய படைப்பாளிகளைப் பற்றிய பதிவுகளில் அவர்களைப் பற்றிய அறுதி மதிப்பீடு அல்லது மிகக்கறாரான மதிப்பீடு இடம்பெறாது. பரிந்துரை அளவிலேயே மதிப்பீடு இடம்பெறும். ஏனென்றால் அந்த மதிப்பீடு அவர்களின் எதிர்காலச் செயல்பாடுகளுக்கு இடர் அளிப்பதாக அமையலாகாது.
இவற்றை பதிவிடுபவர்களுக்கு தெளிவாகவே அறிவுறுத்தியிருக்கிறோம். அவை கடைப்பிடிக்கவும் படுகின்றன. அரிதாக அதில் பிழைகள் நிகழ்ந்தால் , சுட்டிக்காட்டப்பட்டால் திருத்திக் கொள்கிறோம்.
இனி, உங்கள் கருத்து சம்பதமாக:
அ. உங்களைப் பற்றிய பதிவு எங்கள் தமிழ்விக்கி கொள்கைப்படி, இளம்படைப்பாளிகள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு எழுதப்படும் பதிவுகளின் மரபுப்படியே அமைந்துள்ளது. அதை மதிப்பீடும் செய்தபின்னரே வெளியிட்டோம். இணைப்புகளில் உள்ளவை உங்கள் சூழலில் நிகழும் விவாதங்கள். அவற்றை முழுமையாக நாங்கள் அறிய முடியாது.
ஆ. இணைப்புகளில் அளிக்கப்பட்ட கட்டுரைகள் வல்லினம் போன்ற மலேசியச் சூழலில் முக்கியமான இலக்கிய இதழில் வெளிவந்தவை. வல்லினம் இதழின் பங்களிப்பு, மதிப்பு பற்றி எங்களுக்கு எந்த ஐயமும் இல்லை. அவற்றை எழுதியவர்களும் முக்கியமானவர்களே. அவர்களின் இலக்கியப்பார்வையின் தரமும், செயல்பாடுகளின் வீச்சும் வெளிப்படையானவை.
இ. இந்த கடிதம் வழியாக நிங்கள் சுட்டிக்காட்டிய விவாதப் பதிவுகளை உள்நுழைந்து பார்த்தோம். அவை மலேசியச் சூழலில் சில மதிப்பீடுகளை முன்வைப்பவை என்ற வகையில் முக்கியமானவையே. ஆனால் எதிர்கால இலக்கிய வாசகனும் கவனிக்கவேண்டிய நிரந்தரமான விவாதங்களா, கலைக்களஞ்சியத்திற்கு உரியவையா என்று பார்த்ததில் அவ்வாறு அல்ல என்று தோன்றுகிறது. ஆகவே உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்கிறோம். அவற்றில் உணர்ச்சிகரமான எதிர்வினைகள், வெறும் பூசல்கள் என தோன்றியவை நீக்கப்பட்டுள்ளன.
வல்லினம் கட்டுரைகள் அவர்கள் நம்பும் விழுமியங்களை வலுவாக முன்வைப்பவை. அத்தகைய எதிர்மதிப்பீடுகள் முக்கியமானவை, அவையே ஒரு சூழலில் ஒரு தரப்பினரை இன்னொரு தரப்பினர் சரிசெய்ய உதவுபவை. ஆனால் அவை சில சமயம் உள்ளூர் பூசல்களில் மிகையான உணர்ச்சிநிலைபாடு எடுக்கின்றன என நான் எண்ணுகிறேன். அதை அவர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளேன். அது எங்குமுள்ள வழக்கமும் கூட. அதில் நாங்கள் தலையிட ஏதுமில்லை.
தனிப்பட்ட முறையில் உங்களிடம் மேற்கொண்டு சொல்வதற்கு எனக்குச் சில உண்டு. நீங்கள் கருத்தில் கொள்ளலாம். அல்லது நிராகரித்தால் உங்கள் விருப்பம்
அ. நீங்கள் வெளியிடும் நூல்கள் பற்றிய மதிப்பீடுகளை எழுத உங்களிடம் அனுமதி பெறவேண்டும் என நீங்கள் அறிவித்தமையும் அதன்மீதான விவாதங்களும் கண்டேன். தமிழ்விக்கி பதிவில், எதிர்கால வாசகர்களுக்காக பதிவுசெய்யவேண்டியவை அல்ல அவை. ஆகவே அவை நீக்கம் செய்யப்படுகின்றன. ஆனால் அவ்வாறு நீங்கள் அறிவித்தமை மாபெரும் முதிர்ச்சியின்மை. உலக வரலாற்றிலேயே நூல்களை விமர்சனம் செய்ய பதிப்பாளரின் அனுமதி தேவை என அச்சிட்ட முதல் பதிப்பாளர் நீங்கள் என எண்ணுகிறேன்.உங்கள் அறியாமையையே அது காட்டுகிறது.
ஓர் அறிவார்ந்த சூழலில் விமர்சனங்கள் எழவே செய்யும். சிலசமயம் அவை அவதூறு, வசை என்னும் அளவில்கூட சென்றுவிடும். ஆனால் விமர்சனத்திற்கே அனுமதி பெறவேண்டும், மாற்றுக்கருத்துக்குச் சட்டநடவடிக்கை எடுப்பேன் என்பதெல்லாம் எவ்வகையிலும் ஏற்புடையவை அல்ல. அத்துடன் எந்த தேசத்திலும் அப்படியெல்லாம் கருத்துக்களுக்கு எதிராகச் சட்டநடவடிக்கை எடுக்க முடியாது. சில தேசங்களில், எதிர்க்கருத்துக்களை மதநிந்தனை, இனவெறுப்பு, தேசத்துரோகம் என்றெல்லாம் திரித்து புகார் சொல்லி சட்டநடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அது இருபுறமும் கூர் கொண்ட கத்தி. புகார் செய்பவரும் அதே சிக்கலுக்கு ஆளாகலாம். ஏனென்றால் நீங்கள் அதைச் செய்தது வழியாகவே உங்களுக்கு எதிராகவும் அதைச் செய்ய அனுமதி அளித்தவர் ஆகிறீர்கள்.
இந்தவகையான சட்டவழக்குகளில் பெரும்பாலான தருணங்களில் புகார்சொல்பவர்தான் மீளமுடியாத சிக்கல்களுக்கு ஆளாவார். எங்கும் சட்டநடவடிக்கைகளில் வழக்கு தொடுப்பவரின் சுமைதான் மிகுதி. தண்டிக்கப்பட்டால்கூட வழக்கு தொடுக்கப்பட்டவர் மிக எளிய அபராதத்துடன் சென்றுவிடுவார். வழக்கு தொடுத்தவர் பல ஆண்டு அலையவேண்டும். ஆகவே அந்தவகையான இளமைப் பிரமைகளில் இருந்து வெளிவாருங்கள் என ஓர் இளைய படைப்பாளியாகிய உங்களிடம் மூத்தவனாக நான் சொல்ல விரும்புகிறேன்.
நீங்களே பார்க்கலாம், என்னைப்பற்றி எத்தனை அவதூறுகளும் வசைகளும் சூழலில் உள்ளன என்று. ஒருமையில் பேசுபவர்கள், கெட்டவார்த்தைகளை எழுதுபவர்கள் பலநூறு பேர். (நீங்களே அவற்றில் பலவற்றை வரவேற்று எழுதியுள்ளீர்கள் என அறிந்தேன். அது உங்கள் விருப்பம் மற்றும் நிலைபாடு. அது சட்டபூர்வமான குற்றம் எனினும் நான் அதை பொருட்படுத்துவதில்லை) நான் அவற்றில் பொருட்படுத்தத் தக்க ஏதேனும் கருத்து சொல்லப்பட்டிருந்தால் மட்டும் அவற்றுக்கு விளக்கம் அளிப்பதுண்டு. மற்றவற்றை முழுமையாக நிராகரிப்பதே என் வழக்கம்.
ஆ. நீங்கள் உங்கள் நம்பிக்கைப்படி, திட்டங்களின்படி செயல்படுகிறீர்கள். அதுவே சரி என்று இல்லை. அதை வல்லினம் குழுவோ பிறரோ கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள் என்றால் அது அவர்களின் நிலைபாடு. அதற்கு நீங்கள் பதிலளிக்கலாம், அவர்கள் சொல்வதில் ஏதேனும் சரி உண்டு என்று தோன்றினால் பரிசீலிக்கலாம், அல்லது கடந்து செல்லலாம். உங்கள் செயல்பாடுகளின் வெற்றி அவர்களின் விமர்சனம் பிழை என்பதை நிரூபிக்கட்டுமே. நீங்கள் இளையவர், நம்பிக்கையுடன் செயல்படுபவர் என்றால் ஏன் பதற்றமோ எரிச்சலோ கொள்ளவேண்டும்? அது உங்களை பலவீனப்படுத்தும். நிதானமாக, துணிவாகச் செயல்படுங்கள். உங்கள் விமர்சகர்களை நேரில் சந்தித்தால் இனிய புன்னகையுடன் கைகுலுக்க முடிந்தால் மட்டுமே நீங்கள் உங்கள் செயல்களை நம்புகிறீர்கள் என்று பொருள். என்றும் என் வழி அதுவே.
இ. கலைக்களஞ்சியத்தில் ஒருவர் பற்றிய பதிவு வேண்டுமா வேண்டாமா என அவர் சொல்ல முடியாது. அது ஒரு வரலாற்றுப் பதிவு. அதில் பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டலாம். திருத்திக்கொள்ளவேண்டும் என்றால் அதை எடுத்துக் காட்டலாம். ஆனால் கலைக்களஞ்சியம் அதில் இடம்பெறுபவர்களின் அனுமதிபெற்று உருவாக்கப்படுவதில்லை. அதில் இடம்பெறுபவர்கள் அதை தீர்மானிக்கவும் முடியாது. சட்டபூர்வமாகவும் சரி, அறம் சார்ந்தும் சரி.
உங்கள் செயல்பாடுகளிலுள்ள நம்பிக்கை, ஈடுபாடு மேல் மதிப்பு எனக்கு உண்டு. உண்மையைச் சொல்லப்போனால் இந்த விவாதம் வழியாக மேலும் கூர்ந்து உங்களை அறிய என்னால் இயன்றது. அது நல்ல விஷயம்தான். அரசியலிலும், இலக்கியத்திலும் உங்கள் முயற்சிகள் வெல்ல வாழ்த்துகிறேன்.
ஜெ